Sunday, 16 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-51

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-51

இவ்வாறு உயர் உணர்வு நிலைகளிலும் ஜபம், தியானம். விரதங்கள் இவற்றிலுமாக அன்னையின் நாட்கள் கழிந்தன. சுமார் ஓராண்டுகாலம் பிருந்தாவனத்தில் தங்கியிருந்தார்அன்னை.பிருந்தாவனம் கோயில்களாலேயே அமைக்கப்பட்ட நகரம். எங்கு பார்த்தாலும் கோயில்கள்.அன்னை அங்கு  தங்கிய ஓராண்டுக் காலத்தில் அங்குள்ள கோயில்கள்  அனைத்திற்கும் சென்று பலமுறை வழிபட்டார். ராதாரமணரின் கோயிலுக்குச் சென்று கண்களில் நீர் மல்க , ஓ பகவானே!பிறரிடம் குறை காணும் பழக்கத்தை என்னிடமிருந்து முற்றிலும் நீக்கிவிடு. என்றுமே நான் பிறரிடம் குற்றம் காணாதிருக்க அருள் செய்.என்று மனமுருகி வேண்டினார்.அதைப்பற்றி  பின்னாளில் கூறினார். பிறரிடம் கற்றம் காணும் பழக்கம் முன்பெல்லாம் என்னிடமும் இருந்தது. அந்தக் குணம் என்னைவிட்டு நீங்க வேண்டும் என்று இறைவனிடம் மனமுருகிப் பிராத்தனை செய்தேன். அதன் பின்னரே அந்தப் பழக்கம் என்னை விட்டு நீங்கியது. ஒருவனுக்கு நாம் ஆயிரம் நன்மைகளைச் செய்திருக்கலாம். ஆனால் தப்பித் தவறி ஒரு தீமை செய்தோமானால்  உடனே அவன் கோபித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்வான். பிறருடைய குற்றத்தை மட்டுமே பார்ப்பது மனிதனின் குணம். ஆனால் பிறரிடம் இருக்கும் நல்ல குணங்களையும் கண்டு பாராட்டும் குணத்தை நாம் பழகிக்கொள்ள வேண்டும். மனித வாழ்க்கையில் தவறுகள் நேராதிருக்காது.ஆனால் அவனது அந்தத் தவறை மட்டுமே நாம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. இடைவிடாமல் பிறரிடம் குறை காண்பவனுக்கு எங்கு பார்த்தாலும் குறைகள் மட்டுமே தெரியும். ஒரு நாள் யோகின்மாவிடம், யோகின் ! நீ பிறருடைய குறைகளையே பார்த்துக் கொண்டிருக்காதே. அப்படிச் செய்தால் உன் கண்கள் தூய்மையை இழந்துவிடும் என்று கூறினார்.
சம்பிரதாயப்படி பிருந்தாவனத்தை வலம் வரவும் செய்தார் அன்னை. கண்ணனின் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ள இடங்கள் பல மைல் தூரம் பரவி இருந்தன. அந்த எல்லா இடங்களையும் நடந்தே வலம் வருவது ஒரு  புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது. வாதநோய் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இதனை மேற்கொண்டார் அன்னை. அவ்வாறு வலம் வந்த போது, வழியில் அங்கங்கே திடீரென்று சிறிது நின்று,சுற்றிலுமுள்ள இடங்களை மிக உன்னிப்பாக ப்பார்த்தார்.ஒரு வேளை சில சூழ்நிலைகள் அவருக்கு உயர்ந்த ஆன்மீக அனுபவங்களை அளித்திருக்கலாம். ஆனால் அது பற்றி பக்தர்கள் கேட்டபோது, அவர்களை மேலே நடந்து போகும் படி மட்டுமே கூறினார்.
இவ்வாறு மிகவுயர்ந்த ஆன்மீக ப் பேருணர்வு நிலைகளில் திளைக்கின்ற நாட்களைவிட அன்னை குருவாகத் தன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள உகந்தவேளை வேறு எதுவாக இருக்க முடியும்? எனவே ஒரு நாள் குருதேவர் அன்னையின்  முன் தோன்றி யோகினுக்கு மந்திர தீட்சை தருமாறு கூறினார். ஒரு நாள் குருதேவர் என் முன் தோன்றி யோகினுக்கு மந்திரதீட்சை அளிக்கும்படி கூறினார். எனக்கு பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது. இதென்ன இதற்குள் அன்னை சீடர்களைச் சேர்க்கத் தொடங்கிவிட்டார். என்றல்லவா மற்றவர்கள் எண்ணுவார்கள் என்ற வெட்கம் வேறு. எனவே நான் தீட்சை அளிக்கவில்லை. ஆனால் குருதேவர் மூன்று நாட்கள் தொடர்ந்து காட்சி தந்து நான் யோகினுக்குத் தீட்சை கொடுக்கவில்லை. அதை நீ இப்போது நிறைவேற்று என்று மீண்டும் மீண்டும் கூறினார். அதோடு அவனுக்குரிய மந்திரத்தையும் கூறினார். நான் அதுவரை யோகினுடன் பேசியது கூட இல்லை. இதனால் யோகினின் (யோகின்மா) துணையுடன்  தீட்சை அளிக்கும்படியும் கூறினார்.நான் அவளிடம் இதைத் தெரிவித்தேன். அவள் யோகினிடம் விசாரித்தபோது, குருதேவர் தனக்கு தீட்சையளிக்கவில்லை என்பதைத் தெரிவித்தான் அவன். அது மட்டுமல்ல அவர் சமீபத்தில் அவனுக்குக் காட்சி தந்து என்னிடம் தீட்சை பெறுமாறு கூறியதாகவும்,இதை எவ்வாறு என்னிடம் தெரிவிப்பது என்று தயங்கிப் பேசாமல்  இருப்பதாகவும் சொன்னார். இப்படி எங்கள் இருவருக்குமே குருதேவரின் உத்தரவு கிடைத்ததால் நான் அவனுக்கு மந்திர தீட்சை அளித்தேன்.
தீட்சையன்று அன்னை தம் அறையில் பூஜை செய்தார்.பிறகு யோகினுக்குச் சொல்லி அனுப்பினார். அவர் வந்ததும் அருகில் அமரச் சொன்னார். பூஜை செய்து கொண்டிருக்கும் போது சமாதியில் ஆழ்ந்தார். அந்த நிலையிலேயே தீட்சை அளித்தார். அவர் மந்திரத்தை உரக்கக் கூறியது அடுத்த அறையில் இருந்த யோகின்மாவிற்குக் கூட கேட்கும்படியாக இருந்ததாம்.
இவ்வாறு அன்னையின் அவதாரப் பணிகளுள் ஒன்றான மந்திர தீட்சை, பக்தி நிலமான பிருந்தாவனத்தில் தொடங்கியது.
-
பிருந்தாவனத்தில் ஓராண்டு தங்கிய பிறகு, அன்னையும்  மற்றவர்களும் அங்கிருந்து ஹரித்வார் சென்றனர்.அங்கே  புனிதத் தீர்த்தமாகிய பிரம்ம குண்டத்தில் குருதேவரின் அஸ்தியில் ஒரு பகுதியை அன்னை கரைத்தார். மலைமீதுள்ள சண்டி கோயிலுக்கும் சென்று வழிபட்டார். பிறகு ஜெய்ப்பூர்,புஷ்கரம்,ஆகிய இடங்களைப் பார்த்துத் திரும்பினார்.வழியில் புனித கங்கையும் யமுனையும்  சேர்கின்ற அலகாபாத்தில் தங்கி,திரிவேணி சங்கமத்தில் குருதேவரின் தலைமுடியை அர்பணித்தார். இது பற்றி அன்னை கூறினார்.சங்கமத்திற்கு  நான்  சென்ற போது நீர்ப்பரப்பு  அமைதியாக இருந்தது. சங்கமத்தில் சேர்ப்பதற்காக  குருதேவரின் தலைமுடியைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு நின்றேன். அப்போது திடீரென்று ஓர் அலை எழுந்து கைகளில் இருந்த முடியைப் பறித்துக் கொண்டு சென்றது. அந்தத் தீர்த்தம் குருதேவரின் தலைமுடியைால் மேலும் புனிதமாவதற்கு ஓடி வந்தது போல் இருந்தது.
விதவையான லட்சுமி அங்கே சம்பிரதாயப்படி மொட்டை அடித்துக் கொண்டார். அன்னை அப்படிச் செய்து கொள்ளவில்லை. கணவர் இறப்பே இல்லாதவராகவும்  மாற்றமே அடையாதவராகவும் இருக்கும் போது அவர் எப்படி விதவையாவார்? அவர் நித்திய சுமங்கலி அல்லவா?
1887-இல் அனைவரும் கல்கத்தா திரும்பினர்.

-
தொடரும்...
-



No comments:

Post a Comment