அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-36


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-36


ஒரு முறை லட்சுமி, சிவராம் மற்றும் பலருடன் அன்னை காமார்புகூரிலிருந்து தட்சிணேசுவரத்திற்கு வந்தார். எல்லோரும் ஆரம்பாகை அடைந்தனர். இரவாக இன்னும் நேரம் உள்ளது. அதற்குள் தெலோபேலோ வெளியைக் கடந்து விடலாம் என்று  அவர்கள்  இரவில் அங்கே தங்காமல்    மேலே நடந்தனர். நடந்து , நடந்து அன்னை மிகவும் சோர்வுற்றிருந்தார். ஆனாலும் தொடர்ந்து நடந்தார். நான்கு மைல் சென்ற போது, நடக்க இயலாமல் பின் தங்க ஆரம்பித்தார். உடன் வந்தவர்கள் சற்றுக் காத்திருந்து அன்னை வந்து சேர்ந்ததும், விரைவாக நடக்கும் படி கூறிவிட்டு விரைந்தனர். அந்த வெளியின் நடுப்பகுதிக்கு வந்தபோது அன்னை மிகவும் பின் தங்கி விட்டார். அதைக்கண்ட அவர்கள் மீண்டும் அன்னைக்காகக் காத்திருந்து அவர் வந்ததும், இப்படி மெதுவாக நடந்தால் இருட்டுமுன் இந்த வெளியைக் கடக்க முடியாது, எல்லோரும் கொள்ளையர் கையில் சிக்கிக் கொள்வோம்.என்று கூறினர். பிறருக்குத் தொல்லையும் அச்சமும் உண்டாகத் தாம் காரணமாகி விட்டதை உணர்ந்த அன்னை அவர்களிடம், தமக்காகக் காத்திருக்க வேண்டாம் என்பதைத் தெரிவித்து விட்டு, நீங்கள் நேராக தாரகேசுவரம் சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.முடிந்த அளவு விரைவில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன், என்று கூறினார். நேரமாகிக் கொண்டிருப்பதைக் கண்ட அவர்கள் அன்னை கூறியதை  ஏற்று விரைந்து நடக்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் அன்னையின் கண்களிலிருந்து மறைந்தனர்.

அன்னை தம்மால் இயன்றவரை வேகமாக நடந்தும், கூட களைப்பின் காரணமாக அவரால் விரைந்து செல்ல முடியவில்லை. வெட்டவெளியின் நடுப்பகுதியை அடைந்த சிறிது நேரத்திற்குள் இருட்டத் தொடங்கியது. என்ன செய்வது என்ற கவலையுடன்  அவர் நடந்து கொண்டிருந்த போது கன்னங்கரேலென்ற நெடிய மனிதன் ஒருவன் தோளில் ஒரு தடியுடன் தம்மை நோக்கி வேகமாக வருவதைக் கண்டார். அவனுக்குப் பின்னால் சற்று தொலைவில்  அவனது கூட்டாளி போல் வேறொரு நபரும் வருவது தெரிந்தது. ஓடுவதோ கூச்சல் இடுவதோ சிறிதும் பயனளிக்காது என்று கண்ட அன்னை சற்றே படபடக்கும் மனத்துடன் அசையாமல்  நின்றார்.

சிறிது  நேரத்திற்குள் அந்த மனிதன் அன்னையின் அருகில் வந்து ஏய், யாரது? இந்த நேரத்தில் இங்கே ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? என்று கரகரத்த குரலில் கேட்டான். அன்னை அவனை தஞ்சம் அடைந்து , அவனை தந்தையாக பாவித்து அப்பா என்னுடன் வந்தவர்கள் முன்னால் சென்று  விட்டார்கள், நான் வழியையும் தவறவிட்டுவிட்டேன் என்று தோன்றுகிறது.

நீங்கள் என்னை அவர்களிடம் கொண்டு சேர்த்து விடுங்களேன்! உங்கள் மருமகன் தட்சிணேசுவரத்தில் ராணி ராசமணியின் கோயிலில் வசிக்கிறார். நான் அவரிடம் தான் சென்று  கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை அங்கு அழைத்துச் சென்றால் அவர் மிகவும் மகிழ்வார்.என்று கூறினார். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே பின்னால் வந்தவரும் நெருங்கிவிட்டார். அது ஆண் அல்லபெண். அந்த மனிதரின் மனைவி என்பதை அன்னை அறிந்துகொண்டார்.

ஒரு பெண்ணைப்பார்த்தவுடன் அன்னைக்கு ஆறுதல் உண்டாயிற்று. உடனே சென்று  அவளது கையைப்பிடித்துக் கொண்டு அம்மா, நான் உங்கள் மகள் சாரதா. என்னுடன் வந்தவர்கள் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். ஆபத்தில் விழ இருந்தேன். நல்ல வேளை நீயும், அப்பாவும் இங்கு வந்தீர்கள், இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியாது. என்று கூறினார்.

அன்னையின்  எளிமை, கள்ளங்கபடமின்மை, நம்பிக்கை இனிய பேச்சு இவை கொள்ளைக் காரனையும் அவன் மனைவியையும் நெகிழச் செய்தது. 

சமுதாயக்கட்டுப் பாடு ஜாதி வேறுபாடு போன்றவற்றை மறந்து அவர்கள் அன்னையைத் தங்கள் சொந்த மகளாகக் கருதி  ஆறுதல் கூறினார்கள்.அன்னை களைத்துப் போயிருப்பதை கண்டு, அவரை மேலும் நடக்க விடாமல் தேலோபேலோ கிராமத்திலுள்ள  ஒரு சிறிய கடைக்கு அழைத்துச் சென்று இரவு அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர் கொள்ளைக்காரனின் மனைவி தன்துணி முதலியவற்றை விரித்துப்படுக்கை தயார் செய்தாள். கொள்ளைக்காரன் பொரிவாங்கி வந்து உண்ணக் கொடுத்தான். இவ்வாறு தாய்தந்தை போல் மிகுந்த அன்புடன் கவனித்துக் கொண்டதுடன்  அன்னையைத் தூங்கச் சொல்லிவிட்டு இரவு முழுவதும் காவலும் இருந்தனர். அதிகாலையில் அவரை எழுப்பி கூட்டிக்கொண்டு பொழுது புலரும் வேளையில் தாரகேசுவரத்தை அடைந்தனர். அங்கே ஒரு கடையில் சிறிது ஓய்வெடுக்கும்  படியும் கூறினர். அந்தப்பெண் தன் கணவனிடம் என் மகள் நேற்றிரவு ஒன்றும் சாப்பிடவில்லை. தாரகேசுவரரைக் கும்பிட்டுவிட்டு வரும்போது மீனும் காய்கறியும் வாங்கி வா. இன்று அவளுக்கு நல்ல உணவு கொடுக்க வேண்டும் என்றாள்.

 கொள்ளைக்காரன் சென்ற சிறிதுநேரத்தில் அன்னையுடன் வந்தவர்கள் தேடித் தேடி அங்கு வந்து சேர்ந்தனர். அன்னை எவ்வித ஆபத்துமின்றி நலமாக வந்ததைக்கண்டு அவர்கள் மிகவும்  மகிழ்ந்தனர். அப்போது அன்னை தமக்கு முந்தின நாள் புகலிடம் கொடுத்த தாயையும், தந்தையையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி இவர்கள், மட்டும் நேற்றிரவு என்னைக்காப்பாற்றியிராவிட்டால் என் கதி என்ன ஆகியிருக்கும் என்றே தெரியாது என்றார். வழிபாடு, சமையல் உணவு எல்லாம் முடிந்தபின் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டார்கள். பிறகு எல்லோரும் வைத்தியவாடியை நோக்கிப் புறப்பட்டனர். அன்னை அந்தத் தம்பதிகளிடம் தம் அளப்பரிய நன்றியைத் தெரியப்படுத்தி விடை கொடுக்கும் படி வேண்டினார்.
-
தொடரும்...



Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?