Friday, 21 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-69

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-69

ஒரு முறை ராஞ்சியைச் சேர்ந்த பக்தர்  ஒருவர்  அன்னையைத் தங்கள் ஊருக்கு வருமாறு அழைத்தார்.
அன்னை-சரத்திற்கு இது தெரியுமா?
பக்தர்-தெரியாது
அன்னை-அப்படியானால் என்னால் வர முடியாது. நான் கல்கத்தா செல்கிறேன். அவன் சரியென்றால் பிறகு பார்க்கலாம்.
பக்தர்-அம்மா,தாங்கள் தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.
அன்னை-எனக்குத் தெரிவிக்காமல் ஏன் செய்தீர்கள்?
அன்னை மிகவும் உறுதியாக இருப்பதைக் கண்ட பக்தர் வேறு வழியின்றி புறப்பட்டார். அவர் சென்ற பின் அன்னை அங்கிருந்த பக்தை ஒருவரிடம் கூறினார்., இதோ பாரம்மா என்னை அழைத்துச் செல்வது என்பதைச் சாமானியமாக எண்ணுகின்றனர். எனக்குத் தெரிவிக்காமலே டாக்காவில் ஒரு முறை நான் போவதாக நோட்டீசே அச்சடித்து விளம்பரப்படுத்தி விட்டனர். நாலுபேர் சேர்ந்து கூட்டம் போட்டு ஆரவாரப்படுத்தினால் எல்லாம் ஆகிவிட்டது என்பது அவர்களின் எண்ணம். இரண்டுமூன்று நாட்கள் எல்லோரும் சேவை செய்து விடலாம்.ஆனால் என் பொறுப்பைஏற்றுக் கொள்வது எளிதா என்ன? சரத்தைத்தவிர வேறு யாராலும் அது முடியாது. அவன் என் வாசுகி.ஆயிரம் தலைகளாலும் அவன் எவ்வளவு பணிகளில் ஈடுபட்டுள்ளான்.எங்கு நீர் சொட்டினாலும் குடையுடன்அவன் தயாராக இருப்பான்.
ராமகிருஷ்ண மடத்திலுள்ள தறவிகளுக்கும் பிரம்மசாரிகளுக்கும் மற்ற பக்தர்களுக்கும் ஆசி வழங்குவதற்காக அன்னை அவ்வப்போது கல்கத்தா செல்வதுண்டு. அங்கு அவர் தங்குவதற்கு நிலையான இடம் எதுவும் இல்லை.அவருக்கு ஒரு வீடு கட்ட மிகவும் விழைந்தார் சுவாமிகள். மடத்தின் பொருளாதார நிலைமை மோசமாக இருந்தது. ஆனாலும் கடன் வாங்கியாவது அன்னைக்கென வீடு கட்ட வேண்டும் என்று தீர்மானித்தார். அவ்வாறே தமது சொந்தப் பொறுப்பில் கடன் வாங்கி வீடு ஒன்றைக்கட்டினார். புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் மாடி அன்னைக்கென ஒதுக்கப்பட்டது. 1909 மே 23-ஆம் நாள் அன்னை அந்த வீட்டிற்கு முதன்முறையாக வந்து அருள்புரிந்தார். மடத்தின் வங்க மொழிப் பத்திரிக்கை ”உத்போதன்” அதன் காரியாலயத்திற்கும்  அதிக இடம் தேவைப்பட்டது. எனவே பத்திரிகை அலுவலகம் புதிய கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் இயங்கத்தொடங்கியது. அந்த வீடு பக்தர்களால் ”மாயேர் பாடி” (அன்னையின் வீடு) என்று அழைக்கப்படுகிறது. பொதுமக்கள் அதை உத்போதன் என்று அழைக்கின்றனர். வீடு கட்டி முடித்த பின்னர் கடனை அடைப்பதற்காக குருதேவரின் வரலாற்றை எழுதி வெளியிட்டார் சுவாமிகள்.
தாம் வங்க மொழியில் எழுதிய” சக்தி வழிபாடு” என்ற நூலை அன்னைக்கே சமர்பணம் செய்து யாருடைய அருளால் எல்லா பெண்களிலும் ஆதி பராசக்தியை உணரும் பேற்றினை இந்த  நூலாசிரியர் பெற்றாரோ, அந்த அன்னைக்கு இந்த நூல் ஆழ்ந்த பக்தியுடன் சமர்பிக்கப்படுகிறது என்று எழுதினார்.
 தமது இறுதிநாட்களில் அன்னை ஒரு நாள், இந்த வாழ்வில் நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன். நான்  போக விரும்புகிறேன்.என் மகன் சரத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டு நான் போகும் உலகங்களுக்கெல்லாம்  அவனையும் எடுத்துச் செல்லப்போகிறேன்.என்று கூறினார். எதற்கும் கலங்காத சவாமிகள், பின்னர் இதைக்கேள்விப்பட்ட போது குழந்தையைப்போல் நெடுநேரம் உட்கார்ந்தபடி விம்மிவிம்மி அழுதார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின்  இந்தத்துறவிச் சீடர்களோடு அவரது சிஷ்யைகள்  பலரும் அன்னையின் வாழ்நாள் முழுவதும் அவருக்குத்துணையாக இருந்தனர். இவர்களுள் கோலாப்மா,யோகின்மா,கௌரிமா,லட்சுமிதேவி,கோபாலேர்மா முதலியோர்  முக்கியமானவர்கள்.இவர்களுள் துறவறம் பூண்ட கௌரிமாவைத் தவிர பிறர் விதவையர். அவர்கள் அனைவருமே ஜபம், தியானம்,சேவை என்று புனிதமான வாழ்வு வாழ்ந்தார்கள்.
கோலாப்மா அன்னைக்குத் துணையாக இருந்ததோடு அவருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தார்.ஏறக்குறைய  முழுநேரப்பாதுகாவலராகவே விளங்கினார் எனலாம்.அவர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் ஏழை பிராமண குலத்தவர். பணக்காரக் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்த தன் ஒரே மகள் இறந்த துக்கத்தைப் பொறுக்க முடியாமல் குருதேவரைச்சரணடைந்தார்.இவரை குருதேவர் அன்னையிடம் அறிமுகப்படுத்தி,”இவளைக் கவனமாகப் பார்த்துக்கொள்.வாழ்நாள் முழுவதும் இவள் உன்னோடு இருப்பாள் என்று கூறினார். குருதேவர் கூறியதற்கு ஏற்பவே கோலாப்மா அன்னை எங்கு சென்றாலும் அவருடைய நிழல் போல்  தொடர்ந்து அவருடனே வாழ்ந்தார். அன்னை மேற்கொண்ட புனிதபயணங்கள் அனைத்திலும் அவர் பங்கு கொண்டார். அன்னை கல்கத்தாவில்  இருக்கும் போது அவருடனே தங்கி வீட்டுப் பொறுப்புகள்  அனைத்தையும்  மேற்கொண்டார்.அதோடு அன்னைக்குத் தொந்தரவு  கொடுக்கும் அறிவற்ற பக்தர்களிடமிருந்து அன்னையைக் காப்பாற்றுபவராகவும் இருந்தார்.
-
தொடரும்...
-

No comments:

Post a Comment