Sunday, 16 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-54

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-54

குருதேவர்  இருக்கும் போதே ஹிருதயன் அவரை அவமதித்தது நமக்குத் தெரியும். ராம்லால் அர்ச்சகரான பின் குருதேவரையே மதிக்காதவன். இத்தகைய உறவினர்கள் காமார்புகூரரில் எப்படிப்பட்ட வரவேற்பை அளிப்பார்கள் என்பதைப்புரிந்து கொள்ள முடியாதவர் அல்ல அன்னை.காசிப்பூர் நாட்களில் ஒருநாள் குருதேவர் ராம்லாலிடம் இதோ பார் உன் சித்தி காமார்புகூரில் தங்குமாறு கவனித்துக் கொள். என்றார். அதற்கு ராம்லால் அவர் எங்கு வேண்டுமானாலும் தங்கட்டும் என்று  விட்டேற்றியாக பதிலளித்தார். அவன் கூறியதன் பொருளைப் புரிந்து கொண்ட குருதேவர் என்ன பேச்சு பேசுகிறாய்?நீயெல்லாம் ஒரு மனிதனாகப் பிறந்திருக்கிறாயே? என்று வேதனையுடன் கூறினார்.காமார்புகூர் நாட்களைப்பற்றி அன்னைக்கு ஏதாவது சந்தேகம் இருந்தாலும் ராம்லாலின் பதிலைக்கேட்ட பின்னர் அதுவும் தீர்ந்து விட்டிருக்கும். அன்னையைப் பொறுத்த வரை குருதேவரின் மறைவைவிட ஒரு பெரிய துன்பம் அவர் வாழ்வில் வரப்போவதில்லை.எனவே பிருந்தாவனத்தில் மிகவுயர்ந்த ஆன்மீக அனுபவங்களைப் பெற்ற அன்னை துன்ப நாட்களாகிய தவவாழ்வை ஏற்றுக் கொள்ளத் தயாரானார்.
அன்னை பிருந்தாவனத்திலிருந்து வருவதற்குள்ளாகவே ராம்லால் தன்னால் ஆனதைச் செய்துவிட்டான். மதுர்பாபுவும் ராணிராசாமணியும் செய்த ஏற்பாட்டின்படி குருதேவர் மாதந்தோறும் சம்பளமாக ஏழுரூபாய் பெற்று வந்தார் என்பது நமக்குத்தெரியும். குருதேவரின் மறைவிற்குப் பிறகு , அது அன்னைக்குக் கொடுக்கப்பட்டு வந்தது. ராம்லாலும் கோயில் நிர்வாகியான தீனநாத்தும் சேர்ந்து அன்னையை குருதேவரின் பக்தர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். எனவே அவருக்குப் பணம் தேவையில்லை என்று கூறி அந்தப் பணத்தை நிறுத்திவிட்டார்கள். அன்னை இதைக்கேள்விப்பட்டபோது சிறிதும் கவலைப்படாமல் நிறுத்தினால் நிறுத்தட்டும். அவரே போய்விட்டார். பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது! என்று கூறினார்.
ஆனால் நரேந்திரர் இதை அறிந்தும் கோயில் நிர்வாகிகளிடம் சென்று, அந்தத் தொகை தொடர்ந்து முன்போல் அன்னைக்குஅளிக்கப்பட  வேண்டும்.என்று எவ்வளவோ  மன்றாடிக்கேட்டார். ஆனால்  நிறுத்தப்பட்ட பணம் பிறகு கொடுக்கப்படவே இல்லை. அதன் பின் குருதேவரின் பக்தர்கள் ஒன்று சேர்ந்து மதந்தோறும் பத்துரூபாய் அன்னைக்குக் கொடுப்பதென முடிவு செய்தனர்.ஆனால் அதுவும் ஏனோ நடைபெறவில்லை.
பிருந்தாவனத்திலிருந்து கல்கத்தா வந்து சுமார் ஒரு வாரம் பலராம் போஸின் வீட்டில் தங்கிவிட்டு. அன்னை காமார்புகூருக்குப் புறப்பட்டார். யோகின்மா,கோலாப்மா, யோகின், மற்றும் ஓரிரு பக்தர்கள் அவருடன் சென்றனர். போகுமுன் அன்னை தட்சிணேசுவரம் சென்று காளி தேவியையும் மற்ற தெய்வங்களையும்  வழிபட்டார். குருதேவர் வாழ்ந்த அறை நகபத்,பஞ்சவடி என்று எல்லா இடங்களையும் சென்று பார்த்தார். துன்பத்தின் நிழல்படிந்த எத்தனை இன்ப நினைவுகள் அவர் மனத்தில் எழுந்து மறைந்திருக்கும்! நீங்கா நினைவுகளுடன் அங்கிருந்து விடைபெற்றார். இன்ப நாட்களில் அவருடன் இருந்த லட்சுமி இப்போது தமையன்களுடன்  தட்சிணேசுவரத்தில்  தங்கி விட்டாள். தன் நிழல் மட்டுமே துன்பத்தில் துணை என்பது எத்துணை உண்மை.!
பர்த்வான் வரை அனைவரும் ரயிலில் சென்றனர். அதுவரை செல்லத்தான் பணம் இருந்தது. அதன் பின்னர் நடைப் பயணம் தான். முதற்கட்டமாக பதினாறு மைல் நடந்து உச்சலன் என்னும் இடத்தை அடைந்தனர். அன்னை மிகவும் களைத்து விட்டார். எனவே அங்கு சற்று இளைப்பாறினார். கோலாப்மா செய்த கிச்சடியை மிகவும் ருசித்துச் சாப்பிட்டார்.பின்னர் எல்லோருமாக காமார்புகூரை அடைந்தனர். கோலாப்மாவைத் தவிர மற்றவர்கள் மூன்று நாட்கள் அன்னையுடன் தங்கிவிட்டுக் கல்கத்தா திரும்பினர். கோலாப்மா ஒருமாத காலம் அங்குத்தங்கினார்.

-
தொடரும்...
-


No comments:

Post a Comment