Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-81

-
இறைவனின் குருஆற்றலே தம்மூலம் வெளிப்படுவதை அன்னை தெளிவாக உணர்ந்திருந்தார். தம்மிடம் தீட்சை பெற்ற ஒரு பெண்ணைக்குறிப்பிட்டு அன்னை, அவள் சில வாரங்களுக்கு முன் என்னிடம் தீட்சை பெற்றுக்கொண்டாள். ஏற்கனவே இன்னொருவரை குருவாக ஏற்றிருந்தாள். அவரிடம் தீட்சை பெற்றது தவறு என்பதைப் பின்னர் உணர்ந்த அவள் என்னை நாடினாள். நான் அவளிடம்,”எல்லாம் குருக்கள் ஒருவரே, ஒரே இறைவனின் ஆற்றல் தான் அவர்கள் எல்லோர் மூலமும் வேலை செய்கிறது. என்று எவ்வளவோ எடுத்துச்சொன்னேன்.அவளால் அதைப்புரிந்து கொள்ள முடியவில்லை,என்று கூறினார்.தட்சிணேசுவர நாட்களிலேயே அன்னையிடம் குருநிலை வெளிப்பட்டிருந்ததைக் கண்டோம். இப்போது முதல் அதாவது அன்னையின் இறுதி இருபது வருடங்களில் அது பூரண நிலையில் பொலிந்தது. இந்தக்காலத்தில்  அன்னையிடம் தீட்சை பெற்றவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது.
 மந்திர தீட்சை என்ற இந்த மாபெரும் பாதையின் மூலம் ஒருவரையேனும் தெய்வீகத்தை நோக்கி அழைத்துச் செல்லாத நாளை வீணாகவே கருதினார் அன்னை. புதிய பக்தர்கள் யாரும் வராத நாட்களில் அன்னை குருதேவரிடம் இன்றைய பொழுது வீணாகப்போய் விட்டது.ஒரு பக்தர் கூட வரவில்லை. தினமும் யாருக்காவது சிறிதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நீங்கள் என்னிடம் சொன்னீர்களே,ஆனால் இன்று யாரும் வரவில்லையே, என்று புகார் செய்வார். பிறகு வீட்டிற்கு வெளியே வந்து யாராவது வருகிறார்களா? என்று ஆர்வத்தோடு பார்த்தபடி நெடுநேரம் நிற்பார்.மீண்டும் குருதேவரிடம் சென்று கண்கள் இரண்டிலும் நீர் மல்க,ஓ பகவானே இப்படி ஏன் நடக்கிறது.இந்த நாள் வீணாகப்போக வேண்டியது தானா? என்று வேதனையுடன் கேட்பார்.யாராவது பக்தர்கள் வந்துவிட்டால் அளவற்ற மகிழ்ச்சி அடைவார்.
மந்திர தீட்சை விஷயத்தில் அன்னை வேறு யாரையும் குறுக்கிட விடுவதில்லை.யார் பேச்சைக்கேட்பதும் இல்லை.அது அவரது அவதாரப்பணி என்பதைவிட இதயத்துடிப்பு போல் ஓர் உணர்வுத் துடிப்பாகவே அவரிடம் இருந்தது.ஒரு முறை ஜெயராம்பாடியில்  இருந்தபோது அவருக்கு மலேரியா காய்ச்சல்  கண்டிருந்தது. அந்த நேரத்தில் யாரையுமே அன்னையிடம் தீட்சைக்காக அனுப்பக்கூடாது என்று சுவாமி சாரதானந்தர் கூறியிருந்தார்.அப்போது அன்னையைக் காண பெரிதும் ஆவலோடுஒரு பக்தர் வந்தார்.சீடர்கள் அவரை உள்ளே அனுப்பமறுத்தனர். வந்தவரோஅன்னையைக்காண்பதில் பேரார்வம் காட்டினார்.சீடர்கள் மறுக்க அவர் உள்ளே போக எத்தனிக்க அங்கே சிறிது சலசலப்பு எழுந்தது. அதனை கேட்ட அன்னை எழுந்து வந்து,ஏன் அவரை உள்ளே அனுப்ப மறுக்கிறாய்? என்று கேட்டார்.சுவாமிசாரதானந்தரின் கட்டளையை அறிந்ததும்,அன்னை கண்டிப்பான குரலில் இந்த பணிக்காக அல்லவா நான் பிறந்திருக்கிறேன்.இவர்களைத் தடுக்க சரத் யார்? என்று கூறி விட்டு,அந்த பக்தரிடம் மகனே ஏதாவது சாப்பிடு.நாளைக்கு தீட்சை அளிக்கிறேன் என்றார்
கதிரவனின் ஆற்றலால் இந்த உலகம் இயங்குகிறது. ஏன் கதிரவன் இல்லையெனில் உலகில் இயக்கமே இல்லை எனலாம். ஆனால் அவன் எந்தச் செயலிலாவது நேரடியாக ஈடுபடுகிறானா என்றால் இல்லை. அவனைப் பொறுத்தவரை எந்தப்பாகுபாடுமின்றி உலகின் மீதுதன் செங்கதிர்களைப் பாய்ச்சிக்கொண்டே இருக்கிறான். ஆனால் மனிதன் ,மிருகம்,பறவை.தாவரம் என்று ஜீவராசிகள் ஒவ்வொன்றிலும் என்னென்ன மாறுதல்களை ஏற்படுத்தி விடுகிறான்.! அன்னையின் அவதாரப் பணியும் அவ்வாறே நடைபெற்றது.நான் குரு இவர்களுக்கு வழிகாட்டப் போகிறேன். என்றெல்லாம் ஓருபோதும் அவர் செயல்பட வில்லை. அவரைப்பொறுத்த வரையில் வாழ்ந்தார்,தாம்ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற அவதார புருஷரின் அருள்சக்தி என்ற அளவில் ,அவர் தம்மிடம் நிறைத்துச்சென்ற ஆன்மீக ஆற்றலின் ஒரு சுரங்கமாக விளங்கினார். அவரிலிருந்து பரவித்தவழ்ந்த அருளாற்றல்  எங்கெங்கே என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமோ அவற்றை ஏற்படுத்தியது.
எனவே மந்திர தீட்சை அளிப்பது தமது அவதாரப்பணி. தம் வாழ்க்கையில் அங்கமாகிவிட்ட ஒரு செயல் என்பதை அன்னை உணர்ந்திருந்தாலும் தாமாக அவர் யாரையும் நாடவில்லை. என்னிடம் வர வேண்டுபவர்கள் உலக பந்தங்களை வெட்டியெறிந்து விட்டு தாங்களாகவே வந்து சேர்வார்கள். நான் அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டியதில்லை என்பார் அவர். அவர் ஒதுங்கியே வாழ்ந்தார். மிகச்சிலர் மட்டுமே அவரை அறிந்திருந்தனர். அவரைப் பொறுத்த வரை குருதேவரேஉண்மை குரு.தமது வேலை பக்தர்களை குருதேவரிடம் சேர்ப்பிப்பது, அவ்வளவு தான். குருதேவர் அவர்களை அனுப்புகிறார். என் பங்கு இதில் எதுவும் இல்லை. அவர் தாம் இவர்களைஆசீர்வதிக்கிறார்.நான் அவரது கருவி மட்டுமே என்பார் அவர்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்

No comments:

Post a Comment