Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-97

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-97
-
அன்னை வீட்டின் தலைவி. பிரம்மசாரிகளும் துறவியரும் பெண்களும் அவருடன் வாழ்ந்தனர். ஆனால் துறவியரின் வாழ்வில் பெண்களோ இல்லறத்தாரோ குறுக்கிடாமல் இருப்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். ஒரு நாள் உத்போதனில் ராது கொலுசை அணிந்துகொண்டு வேகமாக ஓடினாள். அதைக்கண்ட அன்னை,ஏ ராது, உனக்கு நாணம் என்பதே இல்லாமல் போய்விட்டதா? கீழே என் துறவிப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.அவர்கள் வெறும் விளையாட்டுக்காக இங்கே வந்து வாழவில்லை.ஆன்மீக சாதனைகள் செய்வதற்காக வீடுவாசலைத்துறந்து வந்திருக்கிறார்கள். அவர்களின் விரதம் குலைந்தால் அதன் விளைவு என்னவாகும் தெரியுமா? நீ என்னடாவென்றால் சலங்கைகட்டிக்கொண்டு ஓடியாடுகிறாய்.அவர்கள் என்ன நினைப்பார்கள்? அவற்றை உடனே கழற்று, என்று கண்டிப்பாகக் கூறினார். ராது வேறு வழியின்றி கொலுசைக் கழற்றி வீசி எறிந்தாள்.
ஒரு முறை பக்தை ஒருத்தி நடந்து செல்லும் போது அவளது சேலைத்தலைப்பு பிரம்மசாரி வரதரின் மீது பட்டது. அதைக்கண்ட அன்னை அந்தப்பெண்ணிடம் என்னம்மா இது! இவ்வளவு கவனக்குறைவாக நடக்கிறாய்? அவர்கள் பிரம்மசாரிகள் ,வணங்கப்பட வேண்டியவர்கள். அவனை வணங்கு,என்று கூறி அவள் அவரை வணங்குமாறு செய்தார்.
அது மட்டுமல்ல பெண்கள் அடிக்கடி துறவியர் வசிக்கின்ற மடத்திற்குச் செல்வதையும் அன்னை விரும்பவில்லை.மகளே உன் மனத்தில் தீய எண்ணம் எதுவும் இல்லாதிருக்கலாம். ஆனால் அவர்கள் மனத்தில் உன் காரணமாக ஏதாவது சஞ்சலம் எழுமானால் அதற்கு நீயும் பொறுப்பு என்பதை மறவாதே!என்று கூறுவார்.
இவற்றில் எல்லாம் துறவின் பெருமையை அன்னை எப்படி கட்டி காத்தார் என்பதை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. கோலாப்மா அன்னையுடன்வாழ்ந்து அவருடைய சேவையில் ஈடுபட்டிருப்பவர் என்பதைக் கண்டோம். அவர் ஒரு முறை பிரம்மசாரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகக்கோபம் கொண்டு அவன் இங்கே இருந்தால் நான் இருக்கப்போவதில்லை.நான் போகிறேன் என்று கூறி விட்டு,செல்வதற்கான ஆயுத்தங்களில் ஈடுபட்டார்.இந்த விஷயம் அன்னைக்குத் தெரிவிக்கப்பட்டது.உடனே அன்னை சற்று உரத்த குரலில், அவள் யார்? வெறும் குடும்பப்பெண்.வேண்டுமானால் அவள் போகட்டும். அந்த பிரம்மசாரி எனக்காக அனைத்தையும் துறந்து விட்டல்லவா என்னுடன் வாழ்கிறான் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
அதனால் துறவியர் என்ன செய்தாலும் அன்னை ஏற்றுக்கொண்டார் என்பது இதன்  பொருளல்ல. துறவியருக்கும் அவர் முதலில் அன்னை, பிறகே குரு என்பது உண்மை. ஆனால் தாயின் பரிவுடன் தந்தையின் கண்டிப்பும் சேர்த்தே அவர்களை  வழிநடத்தினார். சாதனை விஷயத்தில் பொதுவாக சாதாரண பக்தர்களிடம்  காட்டுகின்ற சலுகைகளை அவர்  துறவிகளிடம் அரிதாகவே காட்டினார். சாதாரண பக்தர்களிடம் சொல்வதுபோல், உன்னால் முடிந்த அளவு சாதனைகள் செய், என்றெல்லாம் பொதுவாக அவர் துறவிப்பிள்ளைகளிடம் கூறுவதில்லை. துறவிகளும் அவரது அன்புப் பெருக்கில் நனைவர், அவர்களுக்கும் அபயம் அளிப்பார்.ஆனால் அவர்கள் சிறிதளவாவது எப்போதும் முயற்சியில் ஈடுபடுமாறு பார்த்துக்கொள்வார்.ஒரு முறை அன்னையின் துறவிச்சீடர் ஒருவர் ரிஷிகேசம் சென்று தவ வாழ்வில் ஈடுபட்டார். அங்கிருந்து அவர் அன்னைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அம்மா, நான் குருதேவரின் காட்சியை உரிய காலத்தில் பெறுவேன் என்று கூறியிருந்தீர்களே, ஆனால் எனக்கு இன்னும் அந்தப்பேறு கிடைக்கவில்லையே, என்று ஆதங்கப்பட்டிருந்தார். அதற்கு அன்னை தம் சீடர் ஒருவரிடம் கூறினார். அவனுக்கு உனக்காகவோ இல்லை, நீ அங்கே  போயிருக்கிறாய் என்பதற்காகவோ,குருதேவர் ரிஷிகேசத்திற்குப் போக முடியாது? என்று எழுது. அவன் ஒரு துறவி கடவுளைத்தேடி சாதனைகளில் ஈடுபடுவதைத் தவிர அவனுக்கு வேறென்ன வேலை? கடவுள் விரும்பும்போது பக்தனுக்குத்தம்மை அறிவித்து அருள்வார்.


--
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment