Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-77

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-77

1906-இல் சியாமா சுந்தரி காலமானபின் அன்னையே குடும்பத்தின் தலைவியாகி ஒவ்வொரு காரியத்தையும் செய்தாக    வேண்டிய பொறுப்பும் கட்டாயமும் ஏற்பட்டது.இத்துடன்  தம்பிகளுக்கும் குழந்தைகள்  பிறந்ததால்  ஒவ்வொருவருடைய குடும்பமும் பெரிதாகிவிட்டது. இயல்பிலேயே தன்னலமிக்க அவர்களின் ஆசையும் பற்றும் குழந்தைகள் பிறந்தபின் இன்னும் அதிகரித்தது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பநலத்தையும் வளர்ச்சியைப்பற்றியுமே கருத்து செலுத்தினர். இதனால் சண்டையும் பூசலும் ஓயாமல் எழலாயிற்று.பொதுவாக குடும்பநலன்  பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஆரம்ப நாட்களில் சாதாரணமாக இருந்த இந்தச்சண்டை நாளாக நாளாக அன்றாட நிகழ்ச்சியாகியது.ஒவ்வொரு சிறிய காரியத்திற்கும் அன்னையின் தம்பிகள்  அடிதடியில் இறங்கினார்கள். அன்னை எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார்.ஒன்றும் முடியாத நிலை ஏற்படவே குடும்பச் சொத்துக்களைப் பிரித்து அவர்களைத் தனித்தனி குடும்பமாக்க முடிவு செய்தார். அதற்காக சுவாமி சாரதானந்தருக்குக் கடிதம் எழுதிக் கல்கத்தாவிலிருந்து வரவழைத்தார்.
சாரதானந்தர் 1909 மார்ச் 23-ஆம் நாள் ஜெயராம்பாடி வந்தார். இத்தகைய குடும்பத்தில்  அவ்வளவு எளிதாகப் பாகப்பிரிவினை செய்து விட முடியுமா என்ன? சாரதானந்தரைப்போன்று உலகப்போக்கும் மனித இயல்பும்  தெரிந்தவர்களால் மட்டுமே  இத்தகைய காரியத்தைச் சிக்கலில்லாமல் செய்து வைக்க முடியும். அது தெரிந்ததே. அன்னை அவரை வரவழைத்தார். அவரும் அதை அன்னையின் பேராசியாக ஏற்றுக்கொண்டார்.
மகான்கள் ஒரு பிரச்சனையை அணுகும் விதமே அலாதியானது. ஜெயராம்பாடி வந்த சாரதானந்தர் உடனடியாகப் பிரிவினை வேலையை ஆரம்பிக்க வில்லை. மாறாக பெரும் பாலான நேரம் அன்னையின் தம்பியருடன் குருதேவரைப்பற்றிப் பேசினார். தாம் அப்போது பதிப்பிக்க த் துவங்கியிருந்த சுவாமி விவேகானந்தரின் ஞானயோக நூலின் வேலையிலும் ஈடுபட்டார். அதே வேளையில் குடும்பத்தினரின் மனப்போக்கை நன்கு கவனித்தார். அதனை ஓரளவுக்கு தெரிந்து கொண்டபின் பாகப்பிரிவினை வேலையைத் தொடங்கினார்.
நிலங்களைப் பிரிக்கும் வேலை துவங்கியது  தான் தாமதம் கடுமையான சண்டை மூண்டது.ஒரு நாள் அந்தச்சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தது. நிலம் சம்பந்தப்பட்ட பத்திரங்கள் காளியின் பொறுப்பில் இருந்தன.பிரசன்னரோ  அந்தப் பத்திரங்களில் தனக்கும் சமவுரிமை இருப்பதாகக் கூறி காளியின் கையிலிருந்த எல்லாப் பத்திரங்களையும் பிடுங்க எத்தனித்தார். இரண்டு பேருக்கும் சண்டை தொடங்கியது. சுவாமி சாரதானந்தர் இடையில் புகுந்து ,இருவரையும்பிரித்து அமைதியுறச் செய்தார். இவ்வாறு பலவிதமான சண்டை சச்சரவுகளுக்கு இடையிலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் படியாக சாரதானந்தர் சொத்துக்களைப்பிரித்தார்.நிலம், வீடு முதலியப்பொருட்கள் எல்லாம் எல்லோருக்கும் மனநிறைவு தரும் படி பங்கிடப்பட்டன. இத்தனை குழப்பத்திலும் அன்னையின் அமைதி சாரதானந்தரை வெகுவாகக் கவர்ந்தது. அதனை அவர் ஒரு பிரம்மசாரியிடம், பார், இவர்களின் சண்டையால் நாம்  ஆத்திரப்படுகிறோம். அன்னையைப்பார் அவரது சகோதரர்கள் என்னென்ன பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்! ஆனால் அவர் சிறிதாவது பதட்டம் அடைகிறாரா? என்ன சமநிலை, என்ன அமைதி! என்று கூறினார்.
பாகப்பிரிவினை முடிந்த பின் அன்னையிடம் இனி மேல்  நீங்கள் எங்கே தங்குவீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அன்னைகுரு தேவர் எலிகள் தோண்டிய வளைகளில் பாம்புகள் வாழ்க்கை நடத்தும். என்று அடிக்கடிச்சொல்வார். எனக்கென்று தனிவீடு எதற்கு? பிரசன்னரின் வீட்டிலும் காளியின் வீட்டிலுமாகத் தங்கிக்கொள்கிறேன் என்றார். அவருக்கென்று 1915-ஆம் ஆண்டு தனியாக ஒரு வீடு கட்டப்படும் வரையில், ஜெயராம்பாடிக்கு வந்தபோதெல்லாம் பிரசன்னரின் வீட்டிலும் காளியின் வீட்டிலுமே மாறி மாறி தங்கினார். ஆனாலும் பிரசன்னரின் வீட்டில் தங்குவதையே வழக்கமாகக் கொண்டார். ஏனென்றால் நளினி, மாக்கு என்னும் இரண்டு பெண் குழந்தைகளை விட்டுவிட்டு பிரசன்னரின் மனைவி இறந்து போனாள். பிரசன்னர் இரண்டாம் முறையாக சுவாசினி என்ற  பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அந்தப்பெண் சிறுவயதினளாக இருந்தாள். அவளால்  அந்த இரண்டு பெண்களையும் பொறுப்போடு  வளர்க்க முடியவில்லை. தாயற்ற அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் ஏற்று அன்னை பிரசன்னரின் வீட்டிலேயே தங்கினார்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்

No comments:

Post a Comment