Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-101

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-101
-
ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்களுள்  கூட மனக்கசப்புகளும் பூசல்களும்  சகஜம். வேறுபட்ட இனம்,மொழி, மற்றும் பழக்கவழக்கங்களைச் சார்ந்த பலர்  சேர்ந்து வாழும் போது கருத்து வேற்றுமைகள் எழுவதில் வியப்பில்லை தான். ஆனால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போகவில்லை என்றால் சங்கத்தின் ஒற்றுமை குலையும், வளர்ச்சி தடைப்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத்தேவை அன்பு. அன்னை இதை மிகவும் வலியுறுத்தினார். ஒரு முறை கோயால்பாரா ஆசிரமத்தின் தலைவரான சுவாமி அன்னையிடம் வந்து, அம்மா ஆசிரமத்துறவியர் முன்பெல்லாம் நான் சொன்னபடி கேட்டு நடந்தார்கள். இப்போது அப்படியில்லை.நான் ஏதாவது சொன்னால் உடனே உங்களிடமோ சாரதானந்தஜி மகராஜிடமோ அடைக்கலம் புகுந்து விடுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு நல்ல சாப்பாடும் போடுகிறீர்கள். நீங்கள் இருவரும்  அவர்களை வைத்துக்கொள்ளாமல் நல்ல புத்திமதி கூறி என்னிடமே திருப்பி அனுப்பினால் தான் நான் அவர்களை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.என்றார். இதைக்கேட்ட அன்னை அதிர்ந்து போய், உனக்கு என்ன ஆகிவிட்டது?என்ன பேசுகிறாய் என்பதை யோசித்துத்தான் பேசுகிறாயா? அன்பே சாரமானது.நமது சங்கம் அன்பு ஒன்றினால் மட்டுமே வளர்ந்து வருகிறது.நான் அவர்களின் தாய். அவர்களுக்கு நான் சாப்பாடு போடுகிறேன் என்று என்னிடமே வந்து சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை? கண்டிப்பிலும் கட்டுப்பாட்டிலும் ஆசிரமத்தை எப்படி வளர்க்க முடியும்? இப்படித்திட்டினால் உன் சொந்தப்பிள்ளையாக இருந்தாலும் கூட ஓடி விடுவார்களே! என்று கண்டித்து அறிவுரை கூறினார்.
மற்றொரு முறை அந்த சுவாமி அதே போன்ற புகாருடன் வந்தார். அவர் சொல்வதைக் கேட்காமல் வருபவர்களுக்கு அன்னை தம்மிடம் மட்டுமல்ல வேறெந்த ஆசிரமங்களிலும்  இடம் கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அன்னையால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆத்திரத்துடன் அவரிடம், என்னிடமே என் பிள்ளைகளைப்பற்றி இப்படிப்பேச உனக்கு என்ன தைரியம்? அவர்களுக்கு எங்கும் புகலிடம் கிடைக்காது என்று நான்  சொல்லவேண்டும்- இது தானே நீ வேண்டுவது? அப்படி ஒரு போதும் என் வாயிலிருந்து வராது. ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள். அவர்கள் என் பிள்ளைகள். குருதேவரிடம் தஞ்சம் புகுந் திருப்பவர்கள். அவர்கள் எங்கு போனாலும் அவர் அவர்களைப் பாதுகாப்பார். என்று கூறினார். அன்னை இதைக்கூறும்போது அவரது முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்ததாம். அவ்வளவு கோபமாக இருந்தார் அவர். தன் தவறை உணர்ந்த சுவாமி அன்னையின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு வேண்டினார். மடத்தின் தலைவரும் சரி, பிறரும் சரி, ஒருவரையொருவர் அனுசரித்துப்போக வேண்டும். எல்லா சூழ்நிலைகளிலும் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.  அதுவே பெரிய தவம் என்பதை மிகவும் வலியுறுத்துவார் அன்னை.
மடத்தில் சேர்ந்த இளைஞர்கள் பலர் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சுவாமிஜியை மேலோட்டமாகப் படிக்கின்ற பலருக்கும் எழுகின்ற குழப்பம் தான் அது. சுவாமிஜி தனி மனிதனுக்கு ஒரு நாட்டிற்கு என்றில்லாமல் மனித குலத்திற்கே ஒரு செய்தியுடன் வந்தவர். எனவே அவரது உபதேசங்கள் மனிதனுக்கு மனிதன், நாட்டிற்கு நாடு மாறுபடக்கூடும்.இந்த இளைஞர்களும் அவரது தேசபக்திமிக்க,எழுச்சியூட்டக்கூடிய சொற்பொழிவுகளைப் படித்துவிட்டு மடத்திற்கு வந்தனர். ஆனால் மடத்தில் சேர்பவர்களுக்கோ சுவாமிஜி ஆன்மஅனுபூதி என்பதை லட்சியமாக வைத்திருந்தார். இது பலரிடம் ஏன், குருதேவரின் பிற சீடர்களுக்கிடையில் கூட குழப்பத்தை விளைவித்திருந்தது.சுவாமி சாரதானந்தரே ஒரு முறை யோகானந்தரிடம் யோகின்,நரேனை  அவ்வப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பல விஷயங்களை அவன் சொல்கிறான். ஒன்றைச் சொல்லும் போது அது மட்டுமே உண்மை என்பது போல் அவ்வளவு அழுத்தமாகக் கூறுகிறான். அந்த நேரத்திற்கு அவன் கூறிய மற்ற விஷயங்கள் பொருளற்றவை போல் தொனிக்கின்றன என்று தமது மனப்போராட்டத்தைத் தெரிவித்தார். அதற்கு யோகானந்தர் சரத் உனக்கு ஒன்று சொல்கிறேன்.நீ அன்னையைப் பின்பற்று .அவர் சொல்வது எப்போதுமே சரியாக இருக்கும் என்றார்.
--
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment