Saturday, 22 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-16


கதாதரன் சிறுவயதில் பரவசநிலையை அடைந்த ஒரு நிகழ்ச்சி
-
கிராமத்தில்( காமார்புகூரில்) குழந்தைகளுக்குச் சிறு கூடைகளில் பொரி கொடுப்பது வழக்கம். கூடைகள் இல்லாத வீடுகளில், குழந்தைகள் உடுத்தியிருக்கும் துணிகளிலேயே பொரியை முடிந்து கொடுத்து விடுவார்கள். சிறுவர்கள் பொரியைத் தின்றபடியே வயல்வெளிகளில் சுற்றித் திரிவார்கள். எனக்கு ஆறு ஏழு வயதிருக்கும் .
ஒரு நாள் காலைப்பொழுதில் கூடை ஒன்றில் பொரியை வைத்துத் தின்றவாறே வயல்வரப்பு வழியாக நடந்து கொண்டிருந்தேன். அது வைகாசி அல்லது ஆனி மாதமாக இருக்கலாம். வானத்தின் ஒரு பகுதியிலிருந்து மழைமெகங்கள் திரளத் தொடங்கின. நான் அந்தக் கருமையின் அழகில்ஈடுபடலானேன். சிறிது நேரத்தில் வானம் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்துவிட்டன. அந்தக் கருமைப் பின்னணியில் பால்போன்ற வெண்ணிற நாரைகள் சில அமைதியாகப் பறந்து சென்றன. என்ன அற்புதமான காட்சி அது! அதன் அழகில்  என்னையே நான் மறந்து விட்டேன். அப்படியே அதில் லயித்து புறவுலகை நினைவை இழந்து கீழே விழுந்தேன். கையிலிருந்த பொரி வயலில் விழுந்து சிதறியது. எவ்வளவு நேரம் அங்கே கிடந்தேனோ தெரியாது. நான் வீழ்ந்து கிடப்பதைக் கண்டவர்கள் என்னை வீட்டிற்குத் தூக்கிச் சென்றார்கள். புறவுலக நினைவை இழந்து நான் பரவச எய்தியது இது தான் முதல் தடவை.

குருதேவரின் பிறந்த ஊரான காமார்புகூருக்கு வடக்கே ஏறக்குறைய இரண்டு மைல் தொலைவில் ஆனூர் என்ற சிற்றூர் இருக்கிறது.
அந்தச் சிற்றூரில் கோயில் கொண்டருளும் விசாலாட்சி விழிப்புற்ற தெய்வம். அக்கம்பக்கத்து கிராம மக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு விசாலாட்சிக்கு வழிபாடும் காணிக்கைகளும் செலுத்துவதாக வேண்டிக்கொள்வார்கள். வேண்டுதல் நிறைவேறியவுடன் கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடன்களைச் செலுத்துவர். இந்தக்கோயிலுக்கு ஆண்களை விடப் பெண்களே அதிகமாக வருவது வழக்கம். பலர் நோய்கள் நீங்குவதற்காக வருபவர்களே, தற்போதும் கூட கிராமத்தின் உயர்குடி பெண்கள் கூட்டம் கூட்டமாகக் கோயிலுக்குச் சென்று தேவி விசாலாட்சி முதன்முதலில் அங்கு எழுந்தருளிய விதம் பற்றியும் அவளது அருள் வெளிப்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றியும்  கதைப்பாடல்களைப் பாடுவதுண்டு. அன்னை அங்கு குடி கொண்டுள்ளதால் அவ்வழியில் மக்கள் அச்சமின்றிச் சென்றனர். தற்போதைய நிலையை விட குருதேவரின் காலத்தில் காமார்புகூர் கிராமம் மக்கள் தொகை மிக்கதாகவும் செல்வ வளம் பெற்றதாகவும் இருந்தது. இன்று நாம் அங்கு காண்கின்ற  இடிந்துபோன செங்கற்கட்டிடங்கள்  , அவற்றைச் சூழ்ந்து மண்டிக் கிடக்கின்ற புதர்கள், சிதிலமான கோயில்கள் பாழ்பட்ட மண்டபங்கள்  எல்லாம் இதற்குச் சான்றாக உள்ளன.
ஆகவே  அந்தக்காலத்தில் ஆனூர் விசாலாட்சி கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டமும் மிகுதியாக இருந்திருக்கும் என்று ஊகித்துக்கொள்ளலாம்.
வயல்களின் நடுவில் திறந்த வெளியில் தேவி எழுந்தருளியிருக்கிறாள். அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் தேவியின் மீது மழையோ வெயிலோ படாதிருக்கஆண்டுதோறும்               புற்கூரை வேய்வார்கள். அங்கு தற்போது காணப்படுகின்ற இடிபாடுகளைப் பார்க்கின்றபோது ஒரு காலத்தில் அங்கே  செங்கற்களால் கட்டப்பட்ட நல்லதொரு கோயில் இருந்திருக்கும் என்பது                  தெரிகிறது. இதைப்பற்றி ஆனூர் மக்களிடம் நாங்கள் கேட்ட போது, தனக்குக்கோயில்  எதுவும் வேண்டாம் என்று தேவியே கோயிலை இடித்து விட்டதாகக் கூறினர். அவர்கள் சொன்னார்கள்.
கிராமத்தின் இடைச்சிறுவர்கள் தேவிக்கு மிகவும் பிரியமானவர்கள். அவர்கள் காலையில் மாடுகளுடன் வந்து அவற்றை மேயவிட்ட பின்னர் அங்கு அமர்ந்து கதை, பாட்டு, விளையாட்டு என்று நேரத்தைக் கழிப்பார்கள். காட்டு மலர்களைப் பறித்து தேவிக்கு அலங்காரம் செய்து மகிழ்வார்கள். யாத்திரிகர்களும் வழிப்போக்கர்களும் தேவிக்குக் காணிக்கைச் செலுத்துகின்ற பணத்தையும் இனிப்புகளையும் அந்தச் சிறுவர்களே எடுத்துக் கொள்வார்கள். கள்ளங்கபடமற்ற அந்தச் சிறுவர்களின் சின்னச்சின்னக் குறும்புகளை தேவி அன்புடன் ஏற்றுக்கொண்டாள். அவற்றை அவள் விரும்பவும் செய்தாள். அப்போது அந்தக் கிராமத்துச் செல்வந்தர் ஒருவர், தம் பிராத்தனை நிறைவேறியதால் ஒரு கோயில் கட்டி அதில் தேவியைப் பிரதிஷ்டை செய்தார். பூஜாரி நாள்தோறும் காலையிலும் மாலையிலும் வந்து பூஜை செய்வார். பூஜை முடிந்ததும் கோயிலை மூடிவிட்டுச் சென்றுவிடுவார். பூஜை நேரங்கனைத் தவிரமற்ற நேரங்களில் வருகின்ற பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை சாளரம் போன்ற கதவுகளின் வழியாக உள்ளே செலுத்திவிட்டுச் சென்று விடுவார்கள். இதனால் சிறுவர்களுக்குப் பணம் கிடைக்கவில்லை. இனிப்புகள் வாங்கி தேவிக்குப் படைத்து உண்ணவும் மகிழ்ச்சியாக விளையாடவும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று. மனம் வருந்திய அவர்கள் தேவியிடம் அம்மா! எங்களுக்குத் தின்பண்டங்கள்  இல்லாமல் செய்து விட்டாயே! நீ கொடுக்கும் பணத்தால்  நாங்கள்  தினமும் இனிப்புகள் வாங்கி உண்டு மகிழ்ந்தோம்.இனி யார் எங்களுக்குத் தின்பண்டங்கள் எல்லாம் கொடுப்பார்கள்? என்றுகண்ணீருடன் கேட்டனர்.
கள்ளங்கபடமற்ற அந்தச் சிறுவர்களின் பிராத்தனைக்குச் செவிசாய்த்த  தேவி கோயில்  சுவரில் அன்றிரவு ஒரு பெரிய விரிசலை உண்டாக்கினாள். அடுத்த நாள் காலையில் இதனைக்கண்ட பூஜாரி கோயில் இடிந்து விடுமே என்று பயந்து தேவியின் திருவுருவத்தை வெளியில் கொண்டு வந்து விட்டார்.
அதற்குப்பின் கோயிலைப் பழுது பார்க்கவும் புதுப்பிக்கவும் பலர் முயன்றனர். ஆனால் தேவி அவர்கள் கனவில் தோன்றியும் வேறு பல வழிகளிலும் அது தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டாள். அதையும் மீறி கோவிலைப் புதுப்பிக்க முயற்சித்த பலரது கனவில் தொன்றி, வயல்களின் நடுவில் திறந்த வெளியில் அந்தச் சிறுவர்களுடன் வாழ்வதைத்தான் நான் விரும்புகிறேன். என்னைக்கோவிலுக்குள் வைத்து சிறைபடுத்த முயன்றால் உன்னை அழித்து, உன் வம்சத்தையும் வேரறுத்து விடுவேன். விட்டுவைக்க மாட்டேன் என்று அச்சுறுத்தியதாகவும் கிராம மக்கள் எங்களிடம் கூறினர்.

கதாதரனுக்கு எட்டுவயதிருக்கும்  போது நடந்த நிகழ்ச்சி இது
-
அப்போது ஒரு நாள் அவனது குடும்பத்தைச்சேர்ந்த ஓரிரு பெண்களும் ஜமீன்தாரான தர்மதாஸ் லாஹாவின் விதவைப்பெண் பிரசன்னாவும் மற்றும் பல உயர்குடிப்பெண்களும் விசாலாட்சி கோயிலுக்குச் சென்றனர். பிரசன்னா, தூய்மை, அன்பு, எளிமை, தெய்வபக்தி ஆகிய பண்புகளைப் பெற்று கதாதரனின் மதிப்பிற்குரிய ஒருத்தியாக இருந்தாள்.

 பல விஷயங்களிலும் பிரசன்னாவின் அறிவுரையைக்கேட்டு நடக்கும் படி பிற்காலத்தில் அன்னை சாரதாதேவிக்கு குருதேவர் கூறியது உண்டு. பக்தைகளுக்கும் அடிக்கடி அவர் பிரசன்னாவைப் பற்றி கூறுவதுண்டு.
பிரசன்னாவுக்கு கதாதரனிடம் உள்ளார்ந்த அன்பு இருந்தது. அவள் அவனைக் கடவுளாகவே கருதினாள்.
கள்ளங்கபடமற்ற உள்ளம் கொண்ட அவள்  அவனிடமிருந்து கதைகளையும் பக்திப்பாடல்களையும்  கேட்டுப் பரவசம் அடைந்தாள். அடிக்கடி அவள் கதாதரா! அடிக்கடி நீ ஏன் எனக்குக் கடவுளாகவே தோன்றுகிறாய்? ஆம் உண்மையிலேயே நான் அவ்வாறு தான் உணர்கிறேன்” என்று சொல்வாள். இதைக்கேட்கும் போது கதாதரன் எதுவும் கூறாமல் புன்னகை செய்வான். அல்லது வேறு  விஷயங்களைக்கூறிப் பேச்சைத் திருப்ப முயல்வான். ஆனால் பிரசன்னாவோ நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள், என்னைப்பொறுத்தவரை நீ சாதாரணமானவன் அல்ல என்று சொல்வாள். அவளது பக்தியைப் பற்றியும் குருதேவர் புகழ்ந்துகூறுவார்.

.விசாலாட்சி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த பெண்களிடம் கதாதரன் ” நானும் உங்களுடன் வருகிறேன்” என்று சொன்னான்.  அவன் வெகுதூரம் நடக்க வேண்டியிருக்குமே என்று கவலையுற்ற அந்தப்பெண்கள்  அவனைத்தடுத்தனர். கதாதரன் அவர்களின் சொல்லைக் கேளாமல்          அவர்களுடன் நடக்கத் தொடங்கினான். அந்தப் பெண்களும் மகிழ்ந்தனர். துருதுருவென்று எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்     குழந்தையை யார்தான் விரும்ப மாட்டார்கள். அவன் பாடுவதைக் கேட்கவும் அவர்கள்  விரும்பினர். அப்படியே அவனுக்கு பசியெடுத்து விட்டால் கூட, கோயிலிலிருந்து திரும்பி வரும் போது பால் முதலிய பிரசாதங்கள் இருக்கவே செய்யும்.ஆகவே கதாதரன் தங்களுடன் வருவதை அவர்கள் ஏன் மறுக்கவேண்டும்? ஏன் கோபப்பட வேண்டும்? இதைப்பற்றியெல்லாம் சற்று யோசித்த பின் அந்தப்பெண்கள் தயக்கமின்றி கதாதரனையும் அழைத்துச் சென்றனர். கதாதரனும் அவர்கள் எதிர்பார்த்தபடியே கதைகள் கூறுவதும் பாடுவதுமாக உற்சாகத்துடன் சென்றான்.

விசாலாட்சியைப் பற்றிய கதாதரனின் பாடல்களைக்கேட்டவாறே எல்லோரும் வயல்வெளியைக் கடந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. கதாதரனின் பாடல் திடீரென்று நின்றது. அவன் சிலை போல் நின்றுவிட்டான். அவனது உடல் விறைத்து உணர்ச்சியற்று விட்டது.விழிகளிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அந்தப் பெண்கள் அவனைப் பலமுறை அழைத்துப்பார்த்தனர். அவனிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது? ஏன் நேர்ந்தது? எதுவும்  அவர்களுக்குப் புரியவில்லை.
ஒரு வேளை நீண்ட தூரம் நடந்து பழக்கமில்லாத பிஞ்சுப் பாலகன் வெயிலில் இவ்வளவு தூரம் நடந்ததால் களைத்து மயக்கமடைந்து விட்டானோ என்று அஞ்சிய அவர்கள், குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவன் தலையிலும் முகத்திலும் சிறிது தெளித்துப்பார்த்தனர். ஆனாலும் அவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை.
அந்தப்பெண்களின் கவலை அதிகமாயிற்று. இவன் மூர்ச்சை தெளிவதற்கு என்னவழி? இவனது நினைவு திரும்பாவிட்டால் கோவிலுக்கு சென்று தேவிக்கான நேர்த்திக்கடனைச் செலுத்த முடியாது. அந்தப் பெண்கள் குழம்பினர். இந்த நிலையில்  அவனை எவ்வாறு வீட்டுக்குக்கொண்டு போவது? நேர்த்தி கடனையே  மறந்து விட்டு எல்லாப் பெண்களும் கதாதரனைச்சுற்றி அமர்ந்து விசிறுவதும் தண்ணீர் தெளிப்பதும் மீண்டும் மீண்டும் அவன் பெயரைச் சொல்லி அழைப்பதுமாக இருந்தனர். இவ்வாறு சிறிது நேரம் சென்றது.

அப்போது பிரசன்னாவின் உள்ளத்தில் கள்ளங்கபடமற்ற தூய உள்ளம் படைத்த ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கு தேவியின் அருளால் பரவச நிலை ஏற்படும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். தூயவனான கதாதரனின் நிலையும் ஏன் அத்தகைய பரவச நிலையாக இருக்கக்கூடாது. என்ற எண்ணம் எழுந்தது. உடனே தன் கருத்தை மற்றப்பெண்களுக்கும் தெரிவித்தாள். பின்னர் எல்லோரிடமும், கதாதரனை அழைப்பதை விட்டுவிட்டு மனஒருமைப்பாட்டுடன் தேவி விசாலாட்சியின் திருநாமத்தை உச்சரிக்கும் படிக் கூறினாள்.

தூய நற்பண்புகள் கொண்ட பிரசன்னாவை அனைவரும் மதித்தனர். ஆகவே அவளது சொற்களில் நம்பிக்கை வைத்து அந்தப்பெண்கள் கதாதரனையே தேவியாக எண்ணி, தாயே! விசாலாட்சி! கருணை காட்டி எங்களைக் கைதூக்கிக் கரை சேர்ப்பாய்! என்று பிரார்த்திக்கத் தொடங்கினர்.

விந்தையிலும் விந்தை! தேவியின் திருப்பெயரை அவர்கள் சில முறை கூறியவுடனேயே கதாதரனின் முகத்தில்  புன்னகை அரும்பியது. புறவுலக நினைவு திரும்பத் தொடங்கியது. தேவியின் மீது கொண்ட பக்திப் பரவசத்தினால் தான் கதாதரன் இத்தகைய நிலைக்கு உள்ளானான் என்பது அவர்களுக்கு நிச்சயமாயிற்று.அவர்கள் அவனையே தேவியாக பாவித்து பல முறை வணங்கிப் பிரார்த்தித்தனர்.
கதாதரன் சிறிதுநேரத்தில் இயல்பான நிலையை அடைந்தான். அவனிடம் எந்தவித உடற்சோர்வோ களைப்போ தென்படவில்லை.
பின்னர் அனைவரும் உற்சாகத்துடன் விசாலாட்சி கோயிலை அடைந்தனர். பூஜையை முடித்துக்கொண்டு வீடுதிரும்பிய பின்னர் நடந்தவற்றை அந்தப்பெண்கள் சந்திராதேவியிடம் கூறினர்.  செய்தியைக்கேட்ட அவள் மிகவும் அச்சமடைந்தாள்.

கதாதரனின் நலம் வேண்டிஸ்ரீரகுவீரருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்தாள். அன்னை விசாலாட்சிக்கும் நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொண்டாள்.

தொடரும்..

No comments:

Post a Comment