Saturday, 22 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-17

அவ்வப்போது கதாதரன் பரவச நிலை அடைந்ததற்கு வேறொரு நிகழ்ச்சியையும் இங்கு குறிப்பிடலாம்.
காமார்புகூருக்குச் சற்று தென்மேற்கில்பொற்கொல்லர்கள் வசித்து வந்தனர். பைன்கள் எனப்பட்ட இவர்களின் குடும்பம் அந்தக் காலத்தில் மிகவும் செல்வ வளம் கொண்டதாக இருந்தது. செங்கற்களால் அழகுற அவர்கள் கட்டியிருக்கின்ற சிவன் கோவிலே இதற்குச் சான்று.
அந்தக்குடும்பத்தைச்சேர்ந்த ஒரிருவர் தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் வீடுகள் இடிந்து சிதிலமாகி விட்டன. அது பெரிய குடும்பம். அவர்கள் சிறந்த விவசாயிகளாகவும் விளங்கினர். ஏராளமான ஆடுமாடுகளும் பரந்த விவசாய நிலமும், விவசாயக்கருவிகளும் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன.வியாபாரத்திலிருந்தும் அவர்களுக்கு  நல்ல வருவாய் கிடைத்தது. ஆனாலும் கிராம  ஜமீன்தார்களைப்போல பைன்கள் அவ்வளவு செல்வந்தர்கள் அல்லர். அவர்கள் நடுத்தரக்குடும்பங்களைச்சேர்ந்தவர்களே.
பைன் குடும்பத்தலைவர் மிகுந்த சமயப்பற்றும் பக்தியும் கொண்டவர். நல்ல நிலையிலிருந்தும் கூட அவர் செங்கல் வீடு கட்டிக்கொள்ள முயற்சி செய்யவில்லை. மண்ணால் கட்டப்பட்ட இரண்டடுக்கு வீட்டிலேயே அவர் வசித்து வந்தார். ஆனால் கோயிலைச் செங்கற்களால் அழகுறக் கட்டியிருந்தார். சீதாநாத் பைன் என்பது அவரது பெயர். அவருக்கு ஏழு பிள்ளைகளும் எட்டு பெண்களும் இருந்தனர்.
திருமணம் நடைபெற்றிருந்தும்  எல்லாப் பெண்களும் தந்தையின் வீட்டிலேயே வாழ்ந்து வந்தனர். இதற்கான காரணம் தெரியவில்லை. குருதேவருக்குப் பத்து அல்லது பதினொரு வயதான போது சீதாநாத் பைனின்  கடைசிப்புதல்வி கன்னிப்பருவம் அடைந்திருந்தாள். புதல்விகள் அனைவரும் அழகாக இருந்ததுடன்  கடவுளிடமும் பிராமணர்களிடமும் பக்தி கொண்டிருந்தனர். அனைவரும் கதாதரனை மிகவும் நேசித்தனர். பக்திமிக்க அந்தக் குடும்பத்துடன் கதாதரனும் நீண்ட நேரம் கழித்தான்.
 பைன் குடும்பத்துடன் கதாதரன் இருந்தபோது பரவசநிலையில் அவன் புரிந்த தெய்வீகச் செயல்களைப்பற்றி இன்றும் கிராம மக்கள் சொல்கின்றனர். நாம் தற்போது விவரிக்க இருக்கும் நிகழ்ச்சியை குருதேவரே எங்களிடம் கூறினார்.
வைணவர்களும் சைவர்களும் தங்களுக்குள் எந்தவிதமான மனவேறுபாடுமின்றிக் காமார்புகூரில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். தற்போதும் ஆண்டுதோறும் எழுபத்திரண்டு மணிநேர விஷ்ணு பஜனை வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. காமார்புகூரில் விஷ்ணு கோயில்களை விட சிவன் கோவில்கள் அதிகமாக உள்ளன. பெரும்பாலான பைன்கள் தீவிர வைணவர்களாக இருந்தனர். உத்தாரண் தத்தருக்கு நித்யானந்தர் மந்திரோபதேசம் செய்து அவரை உலகப் பற்றுக்களிலிருந்து விடுவித்த நாளிலிருந்து அவர்கள் வைணவர்களாக இருந்து வந்தனர்.
காமார்புகூரைச் சேர்ந்த பைன் குடும்பத்தினர் அவ்வாறின்றி விஷ்ணுவையும் சிவனையும் ஒருங்கே வழிபட்டு வந்தனர். பைன் குடும்பத்தின் மூத்த தலைவர் நியதிப்படி தினசரி மூன்று முறை ஹரிநாம ஜபம் செய்வார்.
 சிவ பிரதிஷ்டை செய்து ஆண்டு தோறும் சிவராத்திரி விரதமும் இருப்பார்.சிவராத்திரியன்று கண்விழிப்போருக்காக அந்த சிவன் கோவிலில் நாடகம் ஏற்பாடு செய்யப்படும்.
ஒரு முறை சிவராத்திரியின் போது இத்தகைய நாடகம் ஒன்று நடைபெறுவதாக இருந்தது.
பக்கத்து கிராமத்தைச்சேர்ந்த யாத்ரா குழுவினர் அதனை நடத்துவதாக இருந்தனர். சிவபெருமானின் திருவிளையாடல்களை விவரிக்கின்ற அந்த நாடகம் அந்தி நேரத்திற்கு அரைமணி நேரம் கழித்து ஆரம்பமாக இருந்தது.
அப்போது அந்த நாடகத்தில்  சிவனாக நடிக்க வேண்டிய சிறுவனுக்கு எதிர்பாராத விதமாக கடுமையான நோய் ஏற்பட்டு நடிக்க  முடியாத  நிலை ஏற்பட்டுவிட்டது. அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கத் தகுதியான யாரும் கிடைக்கவில்லை. யாத்ரா குழுவின் உரிமையாளருக்கு நாடகத்தை நடத்த முடியும் என்ற நம்பிக்கையே போய்விட்டது.
நாடகத்தை ஒத்திப்போடுவதைத் தவிர வேறு வழியில்லை. என்று பணிவுடன் கூறினார் அவர். என்ன செய்வது, கண்விழிக்கும் பக்தர்கள் வேறு எந்த வழியில்நேரத்தைச் செலவிடுவது?
அங்குக் கூடியிருந்த பெரியவர்கள் ஆலோசித்தனர். சிவவேடம் பூண்டு நடிக்கத் தகுந்த ஒருவர் கிடைத்தால் நாடகத்தை நடத்த இயலுமா? என்று அந்த நாடக குழுவின் உரிமையாளரை அவர்கள் கேட்டபோது அவர் அதற்கு இசைந்தார். கிராமத்துப்பெரியவர்கள், சிவனாக யாரை நடிக்கச் சொல்வது என்று மீண்டும் சிந்தித்தனர். தகுந்த நபராக அவர்கள் எண்ணியது கதாதரனைத் தான். அவன் சிறுவனாக இருந்தாலும் சிவனைப் பற்றிய பல பாடல்கள் அவனுக்குத் தெரியும்.
சிவவேடம் ஏற்பதற்குரிய தோற்றமும்  அவனுக்கு இருந்தது. ஆகவே கதாதரனைக்கேட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. அவன்பேச வேண்டிய சில வசனங்களை எப்படியோ தான் சமாளித்துக் கொள்வதாக நாடகக்குழுவின் உரிமையாளர் சொன்னார்.
அனைவருடைய ஆர்வத்தையும் கண்ட கதாதரன் சிவனாக நடிக்க ஒப்புக்கொண்டான். குறித்த நேரத்தில் நாடகம் தொடங்கிற்று.
ஜமீன்தாரான தர்மதாஸ் லாஹாவின் மூத்த மகன் கயாவிஷ்ணுவும் கதாதரனும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததை முன்பே கண்டோம். கதாதரன் சிவனாக நடிக்க இருப்பதை அறிந்த கயாவிஷ்ணுவும்  நண்பர்களும் கதாதரனுக்கு ஒப்பனை செய்யத் தொடங்கினர்.
சிவவேடம் தரித்த பின்  கதாதரன் ஒப்பனை அறையில் அமர்ந்து சிவபெருமானைச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் மேடையில் தோன்ற வேண்டிய நேரம் வந்தது. அவனை மேடைக்கு அழைத்துச் செல்ல நண்பன் ஒருவன் வந்தான். கதாதரன் சிவ நினைவுகளில் ஆழ்ந்து மூழ்கியவனாய் வேறு எங்கும் பார்க்காது மெல்ல நடந்து மேடைக்கு வந்தான். வந்தவன் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று விட்டான். சடை முடியும், வெண்ணீறும், தெய்வீக ஒளிவீசும் முகமும், அகமுகப்பட்ட பார்வையும், இதழ்களில் முகிழ்ந்த புன்முறுவலும் கண்டால் சாட்சாத் சிவபெருமானே அங்க வந்து நிற்பது போல இருந்தது.
தங்களை மறந்த நிலையில் பக்தர்கள் ஹரிஹரி என்று கூவினர்.  பெண்களுள் சிலர் குரவையிட்டனர். சிலர் சங்குகளை முழங்கத் தொடங்கினர். இவ்வாறு பார்வையாளர்களிடம்  பெரும் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த நாடகக்குழுவின் உரிமையாளர், சிவபெருமான் மீது துதிகளைப் பாடத் தொடங்கினர். கூட்டத்தில் பரபரப்பு சற்றுக்குறைந்தது. இருப்பினும் கூட்டத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்து,ஆகா! கதாதரன் அவ்வளவு அழகாக இருக்கிறான்! சிவபெருமானின் வேடம் இவனுக்கு இவ்வளவு சிறப்பாகப் பொருந்தும் என்று நினைக்கவே இல்லை. எப்படியாவது இவனை வைத்து நாம் யாத்ரா குழுவை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்று பேசிக்கொண்டனர்.
இந்த அமர்க்களம் எதையும் கதாதரன் அறியவில்லை. அவன் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தான். அவனது கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது. மேலும் சிறிது நேரம் சென்றது.
கதாதரன் எதுவும் பேசவுமில்லை. அசையவும் இல்லை. அதன் பின் நாடகக்குழுவின் உரிமையாளரும் இன்னும் ஓரிரு பெரியவர்களும் கதாதரனின் அருகில் சென்று பார்த்தனர். அவனது கைகளும் கால்களும் விறைத்துக் கிடந்தன.
அவன் புறவுலகை நினைவையிழந்து பரவசநிலையில் இருந்தான்.கூட்டத்தில் பரபரப்பும் ஆரவாரமும் மிகுந்தன.  தண்ணீர்” முகத்தில் தண்ணீர் தெளியுங்கள். அவனுக்கு விசிறுங்கள். சிவபெருமான் அவன் மீது எழுந்தருளியிருக்கக் கூடும், சிவநாமத்தை ச் சொல்லுங்கள் என்ற கூக்குரல்களும் இந்தப்பையன் நாடகத்தையே கெடுத்துவிட்டான், இனிமேல் எங்கே நாடகம் நடக்கப்போகிறது? என்பது போன்று முணுமுணுப்புகளும் எங்கும் எழுந்தன. என்ன செய்தும் கதாதரன் சுயநினைவு பெறவில்லை. கூட்டம் கலைந்தது.அவனைத்தோள் மீது தூக்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்.பல்வேறு முயற்சிகள் செய்தும் அன்று இரவு  முழுவதும் அவனுக்குச் சுயநினைவு திரும்பவில்லை. வீட்டில் ஒரே குழப்பமும் துயரமும் நிலவியது. அடுத்த நாள்  சூரிய உதயத்திற்கு பின் தான் கதாதரனுக்குச் சுய நினைவு திரும்பிற்று.

தொடரும்..

No comments:

Post a Comment