Saturday, 22 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-5
-
மூன்று நான்கு மாதங்கள் கழிந்தன. நாற்பத்தைந்து வயதைத் தாண்டிய சந்திராதேவி மீண்டும் கருவுற்றிருப்பது அனைவருக்கும் தெரியவந்தது.

கருவுற்றிருக்கும் போது பெண்கள் வழக்கத்தை விட அழகாக இருப்பார்கள். இந்தத் தடவை சந்திரா மேலும் அழகாகக் காணப்படுகிறாள் என்று தனியும் பிற பெண்களும் சொன்னார்கள்.
செய்தி பரவியது.சிலர் இந்த வயதில் கருவுற்றும் எத்தனை அழகாகத் திகழ்கிறாள்! பிரசவத்தின் போது ஒருவேளை அவள் இறந்துகூட போகலாம் என்று சந்தேகிக்கவும் செய்தனர்.
நாட்கள் செல்லச்செல்ல கருவுற்ற சந்திராவின் தெய்வீகக் காட்சிகளும் அனுபவங்களும் அதிகரித்தன.  தேவதேவியரின் காட்சிகள் அவளுக்கு அன்றாட நிகழ்ச்சியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த தேவர்களின் உடலிலிருந்து பரவும் நறுமணம் வீடு முழுவதும் நிறையும். அவர்களது இனிமையான குரல்கள் அவளை வியப்பில் ஆழ்த்தும்.
இந்தச் சமயத்தில் தேவதேவியரின்  மீது அவளுக்கு ஆழ்ந்த தாயன்பு தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தான் பெற்ற காட்சிகளையும் அனுபவங்களையும் கூதிராமிடம் கூறி அவற்றிற்கான காரணத்தைக்கேட்பாள் சந்திரா. கூதிராம் பல விளக்கங்கள் கூறி அவளது ஐயங்களைப்போக்குவார்.

ஒரு முறை சந்திரா கூதிராமிடம் கூறினாள். இதோ பாருங்கள்.! சிவன் கோவிலில் அந்த ஒளியைப் பார்த்த நாளிலிருந்து எண்ணற்ற தேவதேவியர் என் முன் தோன்றுகின்றனர்.
பலரை இதற்கு முன்னால் நான் படத்தில்கூடப் பார்த்தது கிடையாது.இன்று ஒரு தேவன் அன்னப் பறவையின் மீது அமர்ந்து வந்தான்.முதலில் நான் பயந்து விட்டேன். வெயிலின் கடுமையினால் அவனது முகம் சிவந்திருந்தது. என் மனம் இளகி விட்டது. நான் அவனை அழைத்து அன்ன வாகன தேவனே! வெயிலினால் உன் முகம் இப்படி உலர்ந்து விட்டதே! கொஞ்சம் பழைய சோறு இருக்கிறது.வா சிறிது உண்டு இளைப்பாறு! என்று கூறினேன்.
அவன் புன்னகை புரிந்தவாறே காற்றில் கரைந்தது போல் மறைந்து விட்டான். அதன் பிறகு அந்த தேவனை நான் காணவில்லை.
இத்தகைய தேவர்கள் பலரை நான் காண்கிறேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தக்காட்சிகள் எல்லாம் வழிபாட்டு வேளை,தியான வேளை என்றில்லாமல் காலை,இரவு  எந்த நேரத்திலும் தோன்றுகின்றன.
சில வேளைகளில் அவர்கள் மனித வடிவில்  என் முன் வருகிறார்கள். அருகில் வந்ததும் காற்றில் கரைந்து விடுகிறார்கள்.
நான் ஏன் அவர்களை யெல்லாம் காண்கிறேன்? இது ஏதேனும் நோயாக இருக்குமோ? கோசாயியின் ஆவி(இறந்துபோனவனின் ஆவி) என்னைப் பிடித்திருக்குமோ என்று கூடச் சில வேளைகளில் தோன்றுகிறது.

இதனைக்கேட்ட கூதிராம் கயையில் அவளிடம் கூறினார். அவளுக்கு தெய்வீகக் காட்சிகளை அளிக்கின்ற அந்தப் பரம்பொருளையே வயிற்றில் சுமப்பதற்கு அவள் மாதவம் செய்திருக்க வேண்டும். என்பதைச்சுட்டிக்காட்டினார்.

கணவன் மீதிருந்த முழுநம்பிக்கையின் காரணமாக அவரது சொற்கள் சந்திராவின் இதயத்தை ஆழ்ந்த பக்தியால் நிரம்பின. புதிய வலிமை பெற்ற அவள் கவலைகளிலிருந்து விடுபட்டாள்.

காலம் உருண்டது.
கூதிராமும் அவரது அன்பு  மனைவியும் ஸ்ரீரகுவீரரிடம்  முற்றிலுமாகச் சரண் புகுந்தனர்.
எந்தப் பரம்பொருளின் புனிதமான காட்சிகள் இப்பொழுதே அவர்களது வாழ்க்கையை பக்தியால் நிரப்பியுள்ளதோ, அந்தப் பரம்பொருளையே தங்கள் மகனாகப் பார்க்கும் நல்ல நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

தெய்வக் குழந்தையின் திருஅவதாரம்.
-
காலத்தின் சுழற்சியால் தான் எத்தனை மாறுதல்கள்! இலையுதிர் காலத்தைத் தொடர்ந்து பனிக்காலமும் அதன் பின்னர் குளிர்காலமுமாக பருவங்கள் வந்து போய் கொண்டே இருந்தன.
பரிவாரங்களைத் தொடர்ந்து அரசன் வருவதைப்போல வசந்த காலம்  வந்தது.
அதிக உஷ்ணமோ கடுமையான குளிரோ இல்லாத மாசி மாதம்  அது. தண்மை பொதிந்த மென்மையான காற்று உடலை மட்டுமின்றி மனங்களையும் வருடியபடி வீசிற்று. படைப்பு முழுவதிலும் ஏதோ ஒரு புதிய உயிர்துடிப்பு பரந்து கலந்து நின்றது.
எங்கும் ஆனந்தம்! அன்பின் அலைகள் எங்கும் சுழன்றடிப்பது போல் இயற்கை புத்துணர்வுடன்  பொலிந்தது.
இயற்கையினுள்ளும்  மனித உள்ளங்களிலும் ஆனந்த வடிவாகி நிற்பது இறைவன் தான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே, அந்த ஆனந்தம் முழுவதையும் அப்படியே அள்ளித் தெளித்திட இயற்கையன்னை துடிப்பது போல் தோன்றியது.
இப்படி வானும் நிலமும் கலந்து குதூகலிப்பதால் தானோ என்னவோ வசந்த காலம் மற்ற பருவங்களை விட தெய்வீகமாகக் கூறப்படுகிறது.

சந்திராதேவி பிரசவிக்கும் நாள் வந்தது.

அன்று அவளது மனம் கரைகடந்த  மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. ஆயினும்  உடல் சோர்வு வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. ஸ்ரீரகுவீரருக்கான நைவேத்திய உணவு தயாரிக்கும் போது அவளது உள்ளத்தில் எந்த நொடியிலும் பிரசவம்  நேரலாம்.அப்படி ஏதாவது நிகழ்ந்தால் நைவேத்தியம் தயாரிக்க வீட்டில் யாரும் இல்லையே! என்ற எண்ணம் தோன்றியது.
கணவரிடமும் அவள் அதனைத் தெரிவித்தாள். அதைக்கேட்ட கூதிராம் அவளிடம்
அஞ்சாதே! உன் வயிறிறில் இருக்கின்ற அந்த தெய்வ புருஷன்,ஸ்ரீரகுவீரரின் பூஜைக்கும் சேவைக்கும் தடையாக வந்து நிச்சயமாகப் பிறக்க மாட்டான். கவலைப்படாதே உன்னால் இன்று எல்லாவற்றையும் சமாளிக்க முடியும்.
நாளை முதல் இவற்றைச் செய்வதற்கு வேறு ஏற்பாடுகள் செய்துவிட்டேன். இன்றிலிருந்து இரவு வேளைகளில் தனி உன்னுடன் இருப்பாள்  என்று கூறிச் சமாதானப்படுத்தினார்.
சந்திராவும் மன நிறைவுடன் கடமைகளில் ஈடுபட்டாள்.

கூதிராம் சொன்னது போலவே நடந்தது.
ஸ்ரீரகுவீரரின் மதிய, மாலை நைவேத்தியங்களுக்கும் பிற சேவைகளும் எவ்விதத் தடையுமின்றி நிறைவேறின.
கூதிராமும் ராம்குமாரும் இரவு உணவிற்குப் பின் உறங்கச் சென்றனர்.
தனி வந்து சந்திராவுடன் படுத்துக்கொண்டாள். பூஜையறையைத் தவிர புற்கூரை வேய்ந்த இரு சிறிய அறைகளும் ஒரு சமையல் அறையும் அந்த வீட்டில் இருந்தன.
மற்றொரு சிறிய அறையில் ஒரு புறம் நெல்குத்தும் எந்திரமும் மறுபுறம் நெல்லை வேகவைக்கும் அடுப்பும் இருந்தன.
வேறு நல்ல இடம் இல்லாததால் கூரை வேய்ந்த இந்த அறைதான் சந்திராவின் பிரசவத்திற்காகத் தயார் செய்யப்பட்டது.

பிரம்ம முகூர்த்தத்திற்குப் பத்து நிமிடங்களுக்கு முன் பிரசவத்தின் முதல்வலியை  சந்திரா உணர்ந்தாள்.
 உடனே அவளை மேற்கூறிய அறைக்கு இட்டுச் சென்றாள் தனி. சென்ற சிறிது நேரத்தில் சந்திரா ஆண்மகவு ஒன்றை ஈன்றாள்.
தாய்க்குத் தேவையான பணிவிடைகளைச் செய்த பிறகு குழந்தையைப் பார்க்கத் திரும்பினாள் தனி.
திரும்பியவள் திடுக்கிட்டாள் அவள் கிடத்திய இடத்தில் குழந்தை இல்லை!
அச்சம் மேலிட விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு அங்கும் இங்குமாகத் தேடினாள்.
என்ன ஆச்சரியம்! அந்த அதிசயக்குழந்தை நழுவி உருண்டு அருகிலிருந்த அடுப்பினுள் கிடந்தது.

உடலில் ஒட்டிக்கிடந்த  ரத்தமும் கோழையும் அடுப்புச் சாம்பலுடன் கலந்து அதன் உடல் முழுவதும் திருநீறு பூசியது போன்ற காட்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
வியப்பினால் விழிகள் விரிய இந்த அபூர்வக் காட்சியைப் பார்த்த தனிக்கு அந்தக்குழந்தை அழாதது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
உடனே கழந்தையைக் கையில் எடுத்து,குளிப்பாட்டி வெளிச்சத்தில் அதனை நன்றாகப் பார்த்தாள். அதன் அழகும் உருவமும் அவளை பிரமிக்கச் செய்தது.
ஆறு மாதக்குழந்தையைப்போலப்பொலிந்தான் அந்த பாலகன்.! விவரம் அறிந்த பிரசன்னா முதலிய தோழிகள் அங்கு குழுமினர். குழந்தையைக் கண்ட அனைவரும் ஆச்சரியப் பட்டனர்.

இயற்கை முழுவதும் இனிய அமைதி தவழ்கின்ற அந்த வைகறைப்பொழுதில் கூதிராமின் எளிய குடிசையிலிருந்து எழுந்த  சங்கநாதம்  தெய்வக் குழந்தையின் திருஅவதாரத்தை உலகிற்குத் தெரிவித்தது.
சோதிடத்தில் நிபுணரான கூதிராம் அந்த பாலகன் இந்த பூமியில் வந்துதித்த நேரத்தையும் ராசிநிலைகளையும் கொண்டு அவனது ஜாதகத்தைக் கணித்தார். அவன் பிறந்த வேளை மிகவும் சுபவேளையாக இருந்தது.

அது வங்க ஆண்டு 1242, சக ஆண்டு 1757.மாசி ஆறாம் நாள்.
அதாவது கி.பி 1836, பிப்ரவரி 17,புதன் கிழமை சூரியோதத்திற்கு சரியாகப் பன்னிரண்டு  நிமிடங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
வளர் பிறை இரண்டாம் நாளும் பூரட்டாதி நட்சத்திரமும் இணைந்த அபூர்வ சேர்க்கையின் யோக வேளை அது.
 ஜன்ம ராசியில் சூரியனும் புதனும் சந்திரனும் ஒன்று கூடியிருந்தன. சுக்கிரனும் செவ்வாயும் சனியும் உச்சநிலையில் இருந்தன.
இது அந்தக்குழந்தை வாழப்போகும் மகத்தான வாழ்க்கையைக் காட்டியது.
ராகுவும் கேதுவும் உச்சத்தில் மேன்மை பொருந்திய நிலையில் இருந்தன என்று பராசர முனிவரின் நூலில் படியுள்ள கணக்கீடுகள் காண்பித்தன.
எல்லாவற்றிற்கும் மேலாக, உச்சத்தை நோக்கி சஞ்சரிக்கத் தொடங்கியிருந்த குருவின் ஆதிக்கம்  அந்தக் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கப்போவதை உறுதி செய்தது.

ஜாதகத்தைச்சோதித்த பிரபல சோதிடர்களும் அந்தக்குழந்தை பிறந்த ராசி மங்கலகரமானது என்றே கூறினர் .இந்த  ராசியில் பிறந்தவர்கள் நற்பண்புகள் மிக்கவராகவும் இருப்பார். எல்லோராலும் வணங்கப்பெறுவார். நற்செயல்களையே செய்வார். பல சீடர்கள் சூழக் கோயில் ஒன்றில் வாழ்வார்    தலைமுறை தலைமுறையாகச் சமயத்தைப் பரப்புவதற்கான அமைப்பு ஒன்றை நிறுவுவார்.
இவர்  நாராயணனின் அம்சமாகப் பிறந்தவர். உலகம் முழுவதாலும் வணங்கப்பெறுவார். என்று அவர்கள் உறுதிப்படுத்தினர்.

கூதிராம் கயையில் தான் கண்ட கனவை ஒரு கணம்  எண்ணிக்கொண்டார்.
அந்த தெய்வீகக் கனவு நனவானதை உணர்ந்த அவரது உள்ளம் பேருவகையாலும் நன்றியுணர்வாலும் நிறைந்தது. 
 மகப்பேற்றுச் சடங்குகளை முறையாக நிறைவேற்றிய பின்னர் ராசிக்கணக்கின் படி அந்த பாலகனுக்கு சம்பு சந்திரன் என்று பெயரிட்டார் அவர்.
ஆயினும் கயையில் கனவில் தோன்றியருளிய கதாதரப்பெருமானின் நினைவாக கதாதரன் என்னும் பெயரால் அழைக்க முடிவு செய்தார்.
அந்த பாலகனும் பின்னாளில் கதாதரன் என்றே அழைக்கப்பட்டான்.

அழகான அந்தக் குழந்தையின் முகத்தைக் கண்டும் அவனது சிறந்த  எதிர்காலத்தை நினைத்துப்பெருமை கொண்டும்.தங்கள்   நற்பேற்றினை எண்ணியும் கூதிராமும் சந்திரமணியும் மகிழ்ந்தனர்.

முதல் முறையாக க் குழந்தையை வெளியே கொண்டு செல்லும் சடங்கு நிறைவுற்றது. குழந்தையை மிகவும் கவனத்துடன் வளர்க்க முயன்றனர். அந்தத் தெய்வக்குழந்தையின் தெய்வீகப்பெற்றோர்.
-
தொடரும்

No comments:

Post a Comment