Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-109

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-109

1911 ஜீன் 10-ஆம் நாள் ராதுவிற்கு த் திருமணம் நடைபெற்றது. பன்னிரண்டு வயதான அவள் பதினைந்து வயதான மன்மத சட்டர்ஜியை மணந்தாள். சுவாமி சாரதானந்தர் திருமணத்திற்காக, ஏராளமான பணம் செலவழித்தார். மன்மதன் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் பெரிதாக எவ்வித த்திறமையும்  இல்லாதவன். எனவே திருமணம் முடிந்த பிறகும் ராது கணவன் வீட்டிற்கு ப் போகவில்லை. அவளும்  அவள் கணவனும் பெரும்பாலும் அன்னையுடனே தங்கியிருந்தார்கள். காலம் கடந்ததே தவிர ராதுவின் நடவடிக்கைகள்  எந்த விதத்திலும் திருந்தவில்லை. அன்னை ஒரு முறை தம் சீடரிடம்,”சிறு வயதில் அவள் எவ்வளவோ பரவாயில்லை.இப்போது திருமணம் முடிந்து விட்டது .ஆனால் அவளது குணம் சிறிதும் மாறவில்லை. அதனுடன் விதவிதமான நோய்கள் வேறு. பைத்தியத்தின் மகளாகிய இவளும் எங்கே பைத்தியமாகி விடுவாளோ, என்று பயமாக இருக்கிறது. அந்தோ, நான்  ஒரு பைத்தியக்காரியையா வளர்த்து வருகிறேன் என்று வருத்தத்துடன் கூறினார்.
 புகுந்த வீட்டிற்குப் போகவில்லையே தவிர, ராது கணவனிடம் மிகுந்த  பற்றுக் கொண்டிருந்தாள். மனமதன் வெளியில் சென்றால் நிலைகொள்ளாமல் தவிப்பாள். ஒரு நாள் அவள்  இவ்வாறு பரபரப்படைவதைக் கண்ட அன்னை, குருதேவரின் திருவிளையாடலைப்பார் .என் தாயின் குடும்பம் எத்தனை உன்னதமானதாக இருந்தது. இப்போது என்னுடன் இருப்பவர்களை என்னவென்று சொல்வது? ராதுவைப் பற்றியோ சொல்ல எதுவும் இல்லை. வாசல் நூணைப்பிடித்துக்கொண்டு கணவனின் வரவுக்காகக் காத்திருக்கிறாள். அதோ,அந்த வீட்டில் பாட்டு கேட்கிறதே, அங்கே அவன் நுழைந்து விடுவானோ என்ற பயம் அவளுக்கு.! எனவே இரவும் பகலும் அவனைக் கண்காணிக்கிறாள். என்ன ஒருபற்றுதல் ! இவள் இப்படி ஆவாள் என்று நான் கனவிலும் கருதவில்லை என்றார்.
நோய்கள், பைத்தியக்காரத் தனம்,பிடிவாதம் இவற்றுடன்  எப்படியோ அபின் பழக்கத்திற்கும் அடிமையாகி விட்டிருந்தாள் ராது. அதனை மாற்ற அன்னை எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாயின. ஆனால் அன்னை வேண்டுமென்றே அவளுக்கு அபின் கொடுத்து அவளைத் தம் கட்டுக்குள் வைத்திருப்பதாகப் புலம்பினாள் சுரபாலா.அன்னை அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.ஒரு நாள் வழக்கம்போல் சுரபாலா அன்னையை ஏசிக்கொண்டிருந்தாள். வெகு நேரமாகியும்  அவள் நிறுத்தாததைக் கண்ட அன்னை,இதோ பார், நான் உன் மகளை மறைத்தா வைத்திருக்கிறேன்? இதோ கிடக்கிறாள் அவள், கூட்டிச் செல் என்று கூறினாள். இதைக் கேட்டது தான் தாமதம், சுரபாலாவிற்கு எங்கிருந்து தான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ! ஏதேதோ! திட்டியவாறே அடுப்பாங்கரைக்கு ஓடினாள். எரிந்து கொண்டிருந்த விறகுக்கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு அன்னையை அடிக்கவந்தாள். இதனைச்சற்றும் எதிர்பார்க்காத அன்னை, ஆ! இந்தப்பைத்தியம் என்னைக் கொல்லப் போகிறதே! என்று அலறினார். அன்னையின் குரல் கேட்டு விரைந்தார் பிரம்மசாரி வரதர்.அவர் ஒரு கணம் தாமதித்திருந்தால்  கூட நிலைமைவிபரீதமாகியிருக்கும். அன்னையின் மீது அடி விழுவதற்குள் அவர் ஓடிச் சென்று,சுரபாலாவின் கையிலிருந்து விறகுக் கட்டையைப் பிடுங்கியெறிந்தார். அவளையும் வாசலுக்கு வெளியே விரட்டிவிட்டு அன்னையிடம் வந்தார். அன்னை அப்போதும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள வில்லை. அந்த நிலையிலேயே,அடி பைத்தியக்காரி,என்ன செய்யத் துணிந்தாய் நீ? உன் கைகள்  உடம்பில் தங்குமா? என்ற வார்த்தைகள் அவரையும் மீறி அவரது உதடுகளிலிருந்து வெளிவந்தன. ஆனால் மறுகணமே தம் வாயிலிருந்த இத்தகைய சாபம் வெளிவந்ததை உணர்ந்த அவர் துவண்டு விட்டார். ஆ! எம்பெருமானே என்ன செய்து விட்டேன். இனி என்ன தான் செய்வேன்! இது வரை  யாரையும் புண்படுத்தாத  என் நாக்கு இன்று ஒரு சாபத்தையே கொடுத்து விட்டதே! இனியும் நான் வாழத்தான்  வேண்டுமா? என்று இதயமே வெடிப்பது போல் அழுது அரற்றினார்.

No comments:

Post a Comment