Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-94

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-94

சாதாரண குருக்கள் மற்றும் சாதுக்களைப் பொறுத்த வரை மந்திரம்,தந்திரம், கிரியை என்று எந்த வழியைப் பின்பற்றி தாங்கள் அனுபூதி பெற்றார்களோ, அந்த வழியைப் பிறருக்கு உபதேசிக்க முடியும். அவ்வளவு தான். அவர்கள் தங்கள் புனித வாழ்க்கையின் மூலம் ஒருவனை நல்வழிக்கு ஈர்க்க முடியும். உலகத் தளைகளில் சிக்குண்டு உழல்கின்ற அவனிடம், இவ்வாறு செய், அவ்வாறு செய், என்று உபதேசிக்கவும் முடியும்.ஆனால் பாவம் ,அவன் நிர்கதியான நிலையில் ,நீங்கள் சொல்வது சரி நீங்கள்  சொல்வதை நான் எப்படிச் செய்து முடிப்பது?அதற்குரிய ஆற்றலையும் அளித்தால் செய்கிறேன் என்று இவர்களையே திரும்பிப்பார்க்கிறான். அத்தகையோருக்கு உதவ சாதாரணகுருவால் முடியாது. ஆம், உனது தீய செயல்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். உன் செயல்கள் அனைத்தின் பலனையும் ஏற்கிறேன் என்று தைரியமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் கூறவோ, அவ்வாறு செய்யவோ முடியாது. ஆன்மீக உயர்வு குறையும்போது கருணைக்கடலான இறைவன் அவதரிக்கிறார். மனிதனின் தீய செயல்களின் பலனை அவனுக்காக அனுபவிக்கிறார். தளைகளிலிருந்து அவனை விடுவிக்கிறார். அவர் மட்டுமே இதனைக்கூற முடியும்.அவர் கூறும் போது மட்டுமே மனிதன் அதனை  நம்புகிறான். அன்னையிடம் சென்ற  ஒவ்வொருவரும் இத்தகைய அபாய நிலையை உணர்ந்தனர். தங்களின் இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமல்ல, மறவுலக  வாழ்க்கையிலும் தன்னைக் காக்க வல்லவர் அன்னை என்ற உணர்வு அன்னையின் சீடர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது. அன்னை உன்னை ஆசீர்வதித்தால் அந்தக் கணமே உன் தலைவிதி மாற்றி எழுதப்பட்டுவிட்டது என்று பக்தர் ஒருவருக்கு எழுதுகிறார் சுவாமி சுபோதானந்தர்.
தீட்சை பெற்றுக் கொண்டோருள் பலரும் தங்களால்  முறையாக ஜபம் செய்ய முடியவில்லை என்று அன்னையிடம் வந்து முறையிடுவர். அப்போதெல்லாம் அவர்களிடம் அன்னை, பயப்படாதே உன்னால் முடிந்த அளவுஜபம் செய்.குருதேவரைச் சரணைந்துவிடு. உனக்கொரு அம்மா இருக்கிறாள் என்பதை மறவாதே,என்று கூறுவார். அவர்களால் பெரிதாக சாதனை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதற்காக அவர்களுக்கு அபயம் அளித்து, அவர்களுக்காக ஜபதியானங்கள் செய்வார்.அன்னையின் சீடர் ஒருவர் எழுதிய நினைவுக் குறிப்பிலுள்ள உரையாடல் பகுதி இதனைத் தெளிவாக விளக்குகிறது .அதனை இங்கே காண்போம்.

அந்தச்சீடர் குடும்பப் பிரச்சனைகள் மன உளைச்சல் போன்றவற்றின் காரணமாக வேதனையின் விளிம்பிற்கே சென்று விட்டிருந்தார்.ஒரு நாள் அன்னையிடம் சென்றுதன் மனத்துயரை எல்லாம் கண்ணீருடன் கூறினார். அதனைக் கேட்ட அன்னையின் கண்களும் குளமாயின. அனைத்தையும் கூறிய பின்னர் அந்த பக்தர் அம்மா அழிந்து போவது தான் என் விதியா? என்று வேதனை வெடிக்கக் கேட்டார்.
அன்னை-என்ன சொல்கிறாய் மகனே நீ! என் பிள்ளையான நீ அழியமுடியுமா? இங்கு வருகின்ற அனைவருக்கும் என்  பிள்ளைகள் அனைவருக்கும் முக்தி உரியதாகி விட்டது. கடவுள் கூட என் பிள்ளைகளை எதுவும் செய்ய முடியாது.
சீடர்- அம்மா, இப்போது நான் என்ன செய்யட்டும்?
அன்னை- என் மீது பாரத்தை வைத்துவிட்டுஅமைதியாக இரு.உரிய காலத்தில் உங்கள் அனைவரையும்  முக்திப் பேரானந்தத்திற்கு அழைத்துச் செல்ல க்கூடிய ஒருவர் உன்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதை நினைவுகொள்.
சீடர்- இங்கே இருக்கும்வரை ஆனந்தமாக இருக்கிறது.வீடு சென்றால் மறுபடியும் குழப்பமும் கெட்ட எண்ணங்களும் தான்.
அன்னை- இது முன்வினைப் பயன்களால் ஏற்படுவது.பலவந்தமாக அவற்றை விரட்ட முடியுமா? சத்சங்கத்தை நாடு. தூய்மையாக வாழ முயற்சி செய். படிப்படியாக எல்லாம் சரியாகும். குருதேவரிடம் பிராத்தனை செய். நான் உன்னுடன் இருக்கிறேன். இந்தப் பிறவியிலேயே நீ முக்தி பெற்று விட்டாய். ஏன் பயப்படுகிறாய்? உரிய காலத்தில் அவர் உனக்காக எல்லாவற்றையும் செய்வார்.
இத்தகைய அபய வாக்கினைச் சாதாரண மனிதர் இன்னொருவரிடம் கூற முடியுமா? அப்படியே கூறினாலும்  அதை அவர் தான் நம்பி விடுவாரா?
இந்த அத்தியாயத்தில் அன்னையின் குருநிலை என்ற பரிமாணத்தில்  அவர் ஒரு தனிமனிதனுக்கு எவ்வாறு குருவாக இருந்தார் எனபதை மட்டுமே இங்கு கண்டோம்.அவர் துறவியருக்கு எப்படி வழிகாட்டினார். ராமகிருஷ்ண மிஷனை எவ்வாறு வழிநடத்தினார் என்பவற்றை இனி காண்போம்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment