Sunday, 16 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-44


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-44
-
அன்னைக்குத் தெளிவாக ஒன்று புரிந்தது. குருதேவர் இன்னும் அதிக நாட்கள் இருக்க மாட்டார். அதை உறுதி படுத்தவது போல் சில அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டன. காசிப்பூர்த் தோட்டத்தில் ஒரு மூலையில் பேரீச்சை மரம் ஒன்று நின்றது. ஒருநாள் மாலை வேளையில் நிரஞ்ஜன் முதலான பக்த இளைஞர்கள்  பேரீச்சை ரசம் குடிப்பதற்காக அதை நோக்கிச் சென்றனர்.அப்போது குருதேவர் தமது படுக்கையில் படுத்திருந்தார். தாமாக எழவோ அமரவோ முடியாத அளவுக்கு அவர் பலவீனமாக இருந்த வேளை அது. ஆனால் திடீரென எழுந்து விர்ரென்று  கீழே இறங்கி ஓடினார். அன்னை தற்செயலாக அதைக் கண்டுவிட்டார். குருதேவர் எழுந்து ஓடியதை நம்ப முடியாத அவர், எதற்கும் அவரது அறையில் போய் பார்த்து விடலாம் என்றெண்ணி அங்குச் சென்றார். அங்கே குருதேவர் இல்லை. ஆனால் சிறிது நேரத்திற்குள் வந்து எதுவுமே நடக்காதது போல் படுத்துக் கொண்டார். எல்லாவற்றையும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த அன்னை அவரிடம் சென்று விவரத்தைக் கேட்டார். அவரோ தாம் படுக்கையை விட்டு எழுந்து சென்றதையே மறுத்து, நானாவது எழுந்து போவதாவது. எல்லாம் உன் மனப்பிரமை. அடுப்பங்கரையில் நின்றுநின்று உன் மூளை கொதிப்படைந்துவிட்டது என்று கூறினார்.அன்னை விடவில்லை. வற்புறுத்திக் கேட்டபோது நிரஞ்சன் முதலானோர் சென்ற இடத்திலுள்ள பேரீச்சை மரத்தில் நல்லபாம்பு ஒன்று இருந்ததாகவும் அதை விரட்டவே தாம் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்கே படுத்திருந்த அவர் எப்படி தோட்டத்திலிருந்த பாம்பைக் கண்டார்? அப்படியானால் தாம் விரும்பினால் இந்த நோயை விலக்க அவரால் முடியும்.தாமாகவே இதனை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று அன்னையின் சிந்தனை சுழன்றது. சில நாட்களுக்குமுன் அன்னையிடம் எவ்வளவு துன்பம் உண்டோ, அவ்வளவையும் நான் அனுபவித்து விட்டேன். நீங்கள் யாரும் இத்தகைய துன்பங்களை அனுபவிக்க வேண்டாம். உலகிலுள்ள அனைவருக்காகவும் நான் துன்பப்படுகிறேன் என்று கூறினார். அதன் உண்மைப் பொருளை அன்னை அன்று கண்கூடாகக் கண்டு கொண்டார்.
 மற்றொரு நாள் அன்னை இந்த எண்ணங்களில் ஆழ்ந்தவராய் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்குக் காட்சி ஒன்று கிடைத்தது. நீண்ட கூந்தலையுடைய கருநிறப்பெண்ணொருத்தி தோன்றி  அன்னையின் அருகில் அமர்ந்தாள். காளிதேவியே அவள் என்பதைப் புரிந்து கொண்டார் அன்னை. ஆனால் காளியின்  கழுத்து சற்று வளைந்திருந்தது. அதைக் கண்ட அன்னை , உன் கழுத்துக்கு என்ன ஆயிற்றம்மா? என்று கேட்டார்.
காளி-என் தொண்டையில் புண் வந்துள்ளது.
அன்னை-ஓ கடவுளே, குருதேவருக்குத்தான் தொண்டையில் புண், உனக்கும் வந்து விட்டதே!
காளி-ஆம்
இவ்வாறு குருதேவரும் காளியும் வேறல்ல என்பது அன்னைக்கு உணர்த்தப்பட்டது. காளியே தனக்குப் புண் வந்துள்ளதாகக் கூறினால்  அவள் அதை குணப்படுத்தப் போவதில்லை என்று தானே பொருள். அன்னைக்குத் தெளிவாகி விட்டது-இனி எந்த வழியும் இல்லை.
தன் குங்குமத்திற்கு ப் பங்கம் என்றால் பெண்ணுள்ளம் தவிக்கின்ற தவிப்பை அளந்து சொல்ல முடியாது. குருதேவரின் மறைவு உறுதி என்பது தெரிந்தும் அன்னையின் உள்ளம் அதனை ஏற்க மறுத்தது. கடைசி முயற்சியாக தாரகேசுவரத்தில் உள்ள சிவபெருமான் கோயிலுக்குச் சென்று அங்கே ஒரு நாள் முழுவதும் உணவும் நீரும் அருந்தாமல் சிவபெருமான் சன்னிதியில் வீழ்ந்து தவம் கிடந்தார். அதைப்பற்றி பின்னாளில் அன்னை கூறினார்,இரண்டாம் நாள் பகல் கழிந்தது. அன்றிரவு நான் கண்ணயர்ந்திருந்த பொழுது பானைகளை வரிசையாக அடுக்கி வைத்து ஒரே அடியில் அவற்றை அடித்து நொறுக்குவது போன்றதோர் ஓசை கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும் நான் திடுக்கிட்டு எழுந்தேன். அப்போது என் மனத்தில் கணவன் யார்? மனைவி யார்?யார் உற்றார்? யார் உறவினர், என்ற கேள்விகள் அலையலையாக எழுந்தன. எல்லாமே மாயை என்ற தெளிவு பிறந்தது. குருதேவர் மீது எனக்கு இருந்த பற்று மறைந்தது. எல்லாவற்றையும் துறந்து, மிக உயர்ந்த நிலைக்கு என் மனம் சென்றது. இருட்டில் தட்டுத் தடுமாறிக் கொண்டே சென்று சிவபெருமானுடைய அபிஷேக தீர்த்தத்தை எடுத்து முகத்தைத் துடைத்தேன். சிறிது தண்ணீரைக் குடித்து என் தாகத்தையும் தணித்துக் கொண்டேன். புத்துணர்ச்சியுடன் மறுநாள் காலையில் காசிப்பூர் வீட்டை அடைந்தேன். என்னைக் கண்டதும் குருதேவர் விஷமச்சிரிப்புடன் என்ன! ஏதாவது கிடைத்ததா? எல்லாம் மாயை, அப்படித்தானே” என்றார்.
 அன்னையின் மனம் தெளிவுற்றது. இந்த வேளையில் தான் குருதேவர் ஒரு நாள் அன்னையை அழைத்து ” இதோ பார்,நான் ஒரு கனவு கண்டேன். எனக்கு மருந்து தேடி யானை ஒன்று சென்றது. மருந்தைப் பெறுவதற்கான முயற்சியில்  அது பெரிய பள்ளம் ஒன்றைத் தோண்டியது. ஆனால் முடிவு தெரியுமுன் நான் விழித்து விட்டேன். ஆமாம். நீ இப்படி ஏதாவது கண்டாயா? என்று கேட்டார். தாம் காளி தேவியை க் கண்டது பற்றி அன்னை தெரிவித்தார்.
மற்றொரு நாள் அன்னையை அழைத்து, இப்போதெல்லாம் என் மனம் எப்போதும் பிரம்மத்தைப் பற்றிய சிந்தனைகளிலேயே ஆழ்கிறது. இதன் காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லைஉனக்குத்தெரியுமா?என்று கேட்டார்.இரண்டற்ற ஒன்றேயான பரம்பொருளில் கரையும் நேரத்தை அவர் நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அன்னை புரிந்துகொண்டார். ஆனால் அதை எப்படிச் சொல்வார்.? ஓரிரு ஆறதல் வார்த்தைகள் மட்டும் கூறிவிட்டு பொங்கி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்தியவாறு அங்கிருந்து அகன்றார்.
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்




No comments:

Post a Comment