அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-63
குருதேவர் தமது இளஞ்சீடர்களைத்துறவிகளாக்கி, பிச்சையேற்று வரப்பணித்த போது முதல் பிச்சையளித்து, சங்கத்திற்கான பிள்ளையார் சுழி போட்டது அன்னை. இப்போது தமது பிராத்தனை மூலம் சங்கத்திற்கு உருக்கொடுப்பதும் அன்னை தான். இவை மட்டுமல்ல , இயக்க வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் அன்னையே வழிகாட்டிச் சென்றார். இக்காரணம் பற்றியே அவர் ”சங்க ஜனனி” அதாவது சங்கத்தின் தாய் என்று போற்றப்படுகிறார்.
புத்த கயையிலிருந்து அன்னை கல்கத்தா சென்றார்.
தவ ஆற்றலே ராமகிருஷ்ண சங்கத்தின் ஆதாரம் என்று கண்டோம். குருதேவரின் வரலாறு காணாத தவத்தில் சங்கம் தோன்றியது. அன்னையின் தவத்தில் அது முளைவிட்டு வளரத்தொடங்கியது.அதனை உலகிற்கே நிழல் தரும் மரமாக வளர்கின்ற பொறுப்பு குருதேவரின் தலைமைச் சீடரான நரேந்திரரைச் சார்ந்ததாக இருந்தது. அன்னையிடம் பணியை ஒப்படைத்தது போலவே குருதேவர் காசிப்பூர் நாட்களில் நரேந்திரரிடமும் அவருக்குரிய பணியை ஒப்படைத்திருந்தார். தமது பணியை முடிப்பதற்கான ஆற்றலைப்பெறும் பொருட்டு தீவிரமான தவ வாழ்வில் ஈடுபடுவதற்காக இப்போதும் இமயமலைக்குப்புறப்பட்டார் நரேந்திரர். விடைபெறுவதற்காக ஒரு நாள் அவர் அன்னையிடம் வந்தார். அன்னையை வணங்கி அம்மா நான் புறப்படுகிறேன்.ஓர் உண்மை மனிதன் ஆக முடிந்தால் உங்களை மீண்டும் காண்பேன்.இல்லையெனில் இதுவே நான் உங்களைக் கடைசியாகச் சந்திப்பது” என்றார் .நரேந்திரர் கூறியதைக்கேட்டதும் துடித்துவிட்டார் அன்னை. மகனே நீ ஏன் இப்படிச் சொல்கிறாய் என்று இடை மறித்தார். அதற்கு நரேந்திரர், ஆமாம் நான் அப்படிச் சொல்லக் கூடாதுதான்.ஏனெனில் உங்கள் அருளால் விரைவில் நான் திரும்பிவருவேன். என்று கூறினார். அவருடன் கங்காதரர் செல்வதாக இருந்தது. தாயுள்ளம் நரேந்திரருக்கு விடையளிக்கத் தயங்கினாலும் பணியின் பொறுப்பு அதற்குத்தடை விதித்தது.கங்காதரரை அழைத்து, மகனே என் பொக்கிஷத்தையே உன்னிடம் ஒப்படைக்கிறேன். இமய மலையில் எத்தகைய சூழ்நிலை நிலவும் என்பது உனக்குத் தெரியும்.நரேன் உணவின்றி வாட நேராமல் பார்த்துக்கொள் என்று கூறி அவர்களை வழி அனுப்பினார் அன்னை.
குருதேவரின் குருவரர் என்ற பரிமாணத்தை அன்னை இரண்டு நிலைகளில் நிறைவு செய்ததாகக்கண்டோம். அவர் தொடங்கிய துறவியர் சங்கத்திற்கு ஒரு வடிவம் கொடுத்தது. அன்னையின் முதல்கட்டப் பணிக்கான பூர்வாங்கம் ஆகும்.இப்போது அவர் மந்திர தீட்சை என்ற அடுத்த பணியைத் தொடங்கத் தயாரானார். அதற்குமுன் தம்மை பஞ்ச தவம் என்ற ஒரு கடுமையான தவத்திற்கு உள்ளாக்கினார்.
பஞ்ச தவம் என்பது ஐந்து நெருப்புகளுக்கு இடையில் அமர்ந்து செய்யும் தவமாகும். சுற்றிலும் நான்கு திசைகளில் ஆறடி இடைவெளிகளுக்கு இடையே நான்கு இடங்களில் பெருந்தீயை மூட்டுவார்கள்.கொதிக்கின்ற வெயிலில் அந்த நெருப்புக்களின் நடுவே அமர்ந்து தலைக்குமேல் காய்கின்ற சூரியனை ஒரு நெருப்பாகக் கொண்டு ஜபமும் தியானமும் பிராத்தனையும் செய்வார்கள்.
அன்னை 1893-இல் நீலாம்பர் முகர்ஜியின் வீட்டில் தங்கியிருந்தபோது இந்தக்கடுமையான தவத்தை மேற்கொண்டார். அவருடன் யோகின்மாவும் இந்தத் தவம் புரிந்தார். அன்னை அதனைப்பற்றி பின்னாளில் கூறினார்.
நான்கு பக்கங்களிலும் ஆறு அடி இடைவெளியில் வரட்டிகளைக் கொண்டு தீ மூட்டப்பட்டது. மேலே சூரியனின் கடுமையான கதிர்கள் காய்ந்து கொண்டிருந்தன. காலையில் குளித்து முடித்துவிட்டு நெருப்பருகே வந்தேன். கொழுந்து விட்டு அது பயங்கரமாக எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் சற்று பயமாகத் தான் இருந்தது. இப்படிக் கடுமையான எரியும் நெருப்பின் நடுவே புக முடியுமா? சூரியன் மறையும் வரை உட்கார்ந்திருக்க முடியுமா? என்று தயங்கினேன். பிறகு மனத்தை தைரியப்படுத்திக்கொண்டுஅந்த நெருப்பின் நடுவே சென்று உட்கார்ந்து குருதேவரின் திருநாமத்தை ஜபம் செய்ய ஆரம்பித்தவுடன் நெருப்பின் வெப்பம் மறைந்தே விட்டது. இதை நான் ஏழு நாட்கள் செய்தேன். இதனால் தான் சிகப்பாக இருந்த என் நிறம் இப்படிக் கரிபோல் கறுத்துவிட்டது.
தமது ஆன்மீகப் பேரரசின் எல்லை விரிய இருக்கிறது, எத்தனையோ பேர் வந்து தம்மிடம் மந்திரதீட்சை பெற்று உய்வடையப்போகிறார்கள் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார்அன்னை. அவர்களின் நன்மைக்காகவே அவர் இந்தத் தவத்தை மேற்கொண்டார். பின்னாளில் ஒருமுறை பக்தர் ஒருவர் அவரிடம், அம்மா நீங்கள் ஏன் அத்தகைய தவத்தில் ஈடுபடவேண்டும்.என்று கேட்டார். அதற்கு அன்னை , ஏன் சிவபெருமானைஅடைவதற்காக பார்வதியே தவம் செய்ய வேண்டியிருந்தது. தவம் என்பது இன்றியமையாத ஒன்று இல்லாவிடில் அவள் என்ன நம்மைப்போல் தான்உண்கிறாள், உறங்குகிறாள் என்று கூறுவார்கள். விரதங்களைப்போல் இதுவும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. குருதேவரும் எவ்வளவு தவம் செய்தார்! மகனே, இவையெல்லாம் உலக நன்மைக்காகவே செய்யப்படுகிறது என்று கூறினார்.
மற்றொரு முறை இதே கேள்வியைக்கேட்டபோது, மகனே, உங்கள் அனைவருக்காகவும் தான் நான் அந்தத் தவத்தை மேற்கொண்டேன். பிள்ளைகள் இத்தகைய கடுமையைத் தாங்கிக்கொள்ள முடியுமா? அதனால் தான் நான் செய்தேன், என்று கூறினார் அன்னை.தவிரவும் ஆவி ஒன்றின் தொந்தரவிலிருந்து விடுபடுவதற்காகவும் அன்னை இந்தத் தவத்தைச் செய்ததாகத் தெரிகிறது.அவர் காமார்புகூரில் வாழ்ந்த போது பத்துபன்னிரண்டு வயதுள்ள பெண்ணின் ஆவி ஒன்று எப்போதும் அவரைத் தொடர்ந்தது. காவியுடை உடுத்தி, ருத்திராட்ச மாலை அணிந்து, விரித்த கூந்தலுடன் சில வேளைகளில் தமக்கு முன்னாலும் சிலவேளைகளில் பின்னாலும் அந்த ஆவி தொடர்வதை அன்னை கண்டார். அவர் காசி சென்றபோது ஆவிகளைப்பற்றிய சாஸ்திரங்களில் சிறந்த ஞானம் பெற்ற நேபாள நாட்டு சன்னியாசினி ஒருவரைச் சந்தித்தார். அவர் பரிகார உபாயமாக பஞ்ச தவம் செய்யும்படிக் கூறினார். சில நேரங்களில் நீண்ட தாடியுடைய துறவி ஒருவரும் தோன்றி அன்னையைப் பஞ்ச தவம் செய்யும்படி வற்புறுத்துவார்.இதைப்பற்றி யோகின்மாவுடன் கலந்து ஆலோசித்தார் அன்னை .இறுதியில் இருவரும் பஞ்ச தவம் செய்வது என்று முடிவு செய்து அதில் ஈடுபட்டனர். இதற்குப் பிறகு அந்தப்பெண்ணோ சன்னியாசியோ தோன்றவில்லை.
-
தொடரும்...
No comments:
Post a Comment