Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-118

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-118

அன்னை கூறியதை யோகின்மாவிடமும் சாரதானந்தரிடமும் தெரிவித்தாள்சரளா. யோகின்மா அன்னையிடம் விரைந்து சென்று அம்மா ராதுவை ஏன் போகச் சொல்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அன்னை யோகின் இனிமேல் அவள் ஜெயராம்பாடியில் தான் வாழ்ந்தாக வேண்டும். அவளை அங்கே அனுப்பிவிடு. அவளிடமிருந்து என் மனத்தைத் திருப்பி விட்டேன். இனி அவர்கள் தேவையில்லை, என்றார். இதைக்கேட்ட யோகின்மா அம்மா அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்? ராதுவிடமிருந்து உங்கள் மனத்தைப் பிரித்து விட்டீர்களானால் எங்களுக்கெல்லாம், யார் கதி? என்று கலக்கத்துடன் கூறினார். ஆனால் அன்னையோ உறுதியான குரலில், யோகின் என் பற்றினை எல்லாம் வெட்டிக்கொண்டு விட்டேன். இனி இந்தப்பேச்சே வேண்டாம் என்று கூறிவிட்டார்.யோகின்மா அனைத்தையும் சாரதானந்தரிடம் கூறினார். அவர் சொல்வதை அமைதியாக கேட்ட சுவாமிகள் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார். பின்னர் வேதனையுடன், அப்படியானால் அன்னையை இனி அதிக  நாட்கள் உயிரோடு பார்க்க முடியாது. ராதுவிடமிருந்து அவர் தம்மைப் பிரித்துவிட்டாரானால் வேறு எந்த வழியும் இல்லை.என்றார்.
பின்னர் அருகில் நின்ற சரளாவைப்பார்த்து நீ அதிகமான நேரம் அன்னையின் அருகில் இருக்கிறாய், அன்னையின் மகத்தை ராதுவிடம் திருப்ப முயற்சி செய், என்றார். சரளாவும் பல வழிகளில் முயன்றாள். ஆனால் அவளுடைய முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.மாறாக அன்னை ஒரு நாள் அவளிடம் நீ என்னதான் முயன்றாலும் திரும்பிய மனம் மீண்டும் கீழே வராது. இதைப் புரிந்துக்கொள் என்றார்.சரளாவும் தன் முயற்சிகளைக் கைவிட்டாள்.
ராதுவிடமிருந்து மட்டுமல்லாமல் நளினி, மாக்கு அவர்களுடைய பிள்ளைகள் என்று எல்லோரிடமிருந்தும் அன்னை தன் மனத்தைப் பிரித்துக்கொண்டார். எல்லோரையுமே ஜெயராம்பாடிக்கு அனுப்பிவிடச் சொன்னார். அவர்கள் பார்வையில் பட்டாலே எரிச்சல் அடைந்தார். இதனால் நளினி அன்னையின் பார்வையில் படுவதற்கே பயந்தாள். ஒரு நாள் அவள் தனிமையில் தேம்பித்தேம்பி அழுதவாறே நாங்கள்  இங்கே இருப்பதில் அன்னை இவ்வளவு வேதனை அடைகிறார் என்றால் போய்விடுகிறோம். ஆனால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? அன்னை நோயுற்றுக் கிடக்கின்ற இந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக இல்லாமல், இங்கு வந்துவிட்டார்கள் என்றல்லவா பேசுவார்கள்? என்றாள். சுவாமி சாரதானந்தரும் அன்னையிடம் அவர்களுக்காகப் பரிந்து பேசினார். அம்மா, நீங்கள் இப்படி நோயுற்றிருக்கையில் உங்களைவிட்டுச்செல்ல அவர்களுக்கு மனவருத்தம் இருக்காதா? உங்கள் உடல்நிலை சற்று த்தேறியதும் அவர்கள் சென்று விடுவார்கள்.அப்போது அன்னை உறுதியுடன் இப்போதே அவர்களை அனுப்பிவிடுவது நல்லது, இல்லையென்றால் அவர்கள்  என் அருகில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களின் நிழல்கூட என் மீது படுவதை நான் விரும்பவில்லை என்றார்.
அந்த உறுதியை வெளிப்படுத்துவது போல் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் அன்னை தரையில் படுக்கையை விரித்துப் படுத்திருந்தார். ராதுவின் கைக்குழந்தையான வன விஹாரி தவழ்ந்தபடியே சென்று அன்னையை நெருங்கினான். அப்போது அன்னை அந்தக் குழந்தையிடம் உன்னிடமிருந்த பற்றை விலக்கிவிட்டேன், போய்விடு.இனியும் என்னை உன்னால் பந்தப்படுத்த முடியாது” என்று கூறிவிட்டு அருகிலிருந்த சீடரிடம் இந்தக்குழந்தையை எடுத்துச்செல் அதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையும் இல்லை என்றார்.
இவையெல்லாம் நடந்தபோது ராதுவுக்கு எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு காலம் பாசத்தைப்பொழிந்த அன்னை இப்போது இப்படிச் செய்வதை அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.? எனவே ஓருநாள் தயங்கியபடியே அன்னையின் அருகில் சென்றாள், மாறாத உறுதியுடன் அவளிடம், அன்னை இதோ பார் (என் மனத்தைத்) தறியிலிருந்து அவிழ்த்துவிட்டுவிட்டேன்.இனி நீ என்னை என்ன செய்ய முடியும்? நான் வெறும் மனித ஜீவனா என்ன? என்று கூறினார். ராதுவுக்கு எதுவும் பெரிதாகப்புரியவில்லை. என்றாலும் தாம் அருகில் செல்வதை அன்னை விரும்பவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. எனவே கலங்கிய மனத்துடன் விலகினாள்.இதுவே அன்னை ராதுவுடன் கடைசியாகப்பேசியது.
நாட்கள் மிகுந்த வேதனையுடன் நகர்ந்து கொண்டிருந்தது. ஜீன் மாதத்தில் ஒர நாள் அன்னை சீடர் ஒருவரை அழைத்து அறையிலிருந்த குருதேவரின் படத்தை வேறு அறைக்கு மாற்றி விடும்படிக்கூறினார். காரணம் கேட்ட போது அவர்களிடம், இனி என்னால் எழுந்து நடமாட முடியாது.சுத்தமில்லாத இந்த நிலையில் உன் அறை பூஜையறையாகவும் இருப்பது சரியல்ல என்றார். அதோடு இவ்வளவு நாட்கள் கட்டில்மீது இருந்த தமது படுக்கையையும் தரையில் போடச்செய்தார். தரை மீது படுத்தபடி தான் உயிர் பிரிய வேண்டும் என்ற சாஸ்திர நியதியை நினைத்துக்கொண்டாரோ என்னவோ!

No comments:

Post a Comment