Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-91

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-91

கொடுக்கல் வாங்கல் என்பது இயற்கையெங்கும் காணப்படும் நியதி.சீடனின் ஆன்மீக வாழ்வைவளப்படுத்துவதற்காக குரு தனது ஆற்றலை அளிக்கிறார். அதே வேளையில் அவனது பாவங்களை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவனுக்கு உண்மையிலேயே நன்மை செய்யும்போது குருவின் ஆற்றல் குறைவதுடன் அவர்  அவனது பாவங்களின் பலனையும் அனுபவிக்க நேர்கிறது. தவ ஆற்றல்  மிக்க குருவினால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். இதன் காரணமாகத்தான் சாதாரண குருவினால் மிகச் சிலருக்கே உண்மையாக நன்மை செய்ய இயலும் .அன்னை நூற்றுக்கணக்கானோருக்கு அருள் புரிந்தார். அது எவ்வளவு கடினமானது என்பதை உணர்வதற்கு அன்னை ஒருவருக்கு தீட்சை தந்த போது கூறியவற்றை நினைவிற்குக் கொண்டுவருவது போதுமானது, குருவின் ஆற்றல் அவர் அளிக்கின்ற மந்திரத்தின்  மூலம் சீடனுள் பாய்கிறது. அதே வேளையில் சீடனின் பாவங்களை குரு தன்னிடம் ஏற்றுக்கொள்கிறார். அதன் பலனாக அவர் நோய்களால் பாதிக்கப்படுகிறார். குருவாக இருப்பது மிகமிகக் கடினம்.பாவங்களுக்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது பொல் நல்ல சீடனால் அவர் இதம் பெறவும் செய்கிறார். சிலர் வேகமாக முன்னேறுகிறார்கள். சிலரது வளர்ச்சி மெதுவாக உள்ளது. அது அவரவர் முன்வினைப்பயன்களால் அடைந்துள்ள மனப்பக்குவத்தைப் பொறுத்தது. அதனால் தான்  ராக்கால் தீட்சையளிக்க த் தயங்குகிறான். அவன் என்னிடம் அம்மா! தீட்சையளித்த மறுகணமே  எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. மந்திர தீட்சை என்றாலே என் உடல் தகிக்கத்துவங்கி விடுகிறது என்று கூறினான்.
பெரும்பாலும் மேற்கூறிய காரணத்துக்காக சுவாமி பிரம்மானந்தர் அவ்வளவு எளிதாக யாருக்கும் தீட்சை கொடுக்க மாட்டார். மிகப்பலரை அன்னையிடம் அனுப்பி விடுவார். ஆனால் அன்னையைப் பொறுத்த வரையில் அவரது எல்லையற்ற தாய்பாசமும் கருணையும்,தீட்சை தருவதால் உடலுக்கு ஏற்படும் துன்பங்களை மறக்கச் செய்தன. எல்லோருக்கும் அவர் தீட்சை தந்தார். அன்னையின் இந்த மகோன்னதமான குணத்தைக் கண்ட சுவாமி பிரேமானந்தர்,எங்களால் விழுங்க முடியாத விஷங்களை  எல்லாம் தாங்கள் அன்னையிடம் அனுப்பிக்கொண்டிருக்கிறோம். அவரோ எல்லோருக்கும் அடைக்கலம் தந்து, அனைவருடைய பாவங்களையும்  ஏற்று அவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
அன்னையைப் புனிதத்தின் திரண்ட வடிவம் என்று வர்ணிக்கிறார் சுவாமி அபேதானந்தர்.அவரது எண்ணம் சொல்,செயல் அனைத்திலும் புனிதத்தின் பேரமைதி ஒன்றே தவழ்ந்தது.எனவே புனிதமற்ற பாவமிக்க ஏதாவது ஒன்றுடன் தொடர்பு கொள்ள நேரும் போது அவரது உடல் வேதனையால்  துடித்தது. தூய்மையற்ற மனமும் பாவச் சிந்தனைகளும்  உடைய சிலர் அவரது பாதங்களைத் தொடும் போது இதை நேரிடையாகவே காண முடிந்தது. அத்தகையோர் அன்னையின் பாதத்தைத் தொட்டால் அவரது பாதங்கள் தானாகப் பின்னுக்கு இழுத்துக் கொள்ளும். தூய்மையில்லாத மனிதர்கள் இப்படி அவரது திருவடிகளைத் தொட்ட போது அன்னை எவ்வளவு வேதனையை அனுபவித்தார் என்பதை அவரது சீடர்கள் நேராகவே கண்டிருக்கிறார்கள்.
1916-ஆம் ஆண்டு பேலூர் மடத்தில் கொண்டாடப்பட்ட  துர்க்கா பூஜையில் அன்னை கலந்து கொண்டார். அப்போது கணக்கற்றோர் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினர். சிறிது நேரம் சென்ற பின் அன்னை தம் இரண்டு பாதங்களையும் கங்கை நீரால் நெடுநேரம் கழுவினார். இதைக்கண்ட யோகின்மா,அம்மா என்ன காரியம் செய்கிறீர்கள்?இப்படி கழுவிக்கொண்டே இருந்தால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளப்போகிறது என்றார். அதற்கு அன்னை நீ சொல்வது சரிதான் யோகின்.ஆனால் நான் ஏன் இப்படிச் செய்கிறேன் என்பதை உனக்கு எவ்வாறு விளக்குவேன்.சிலர் என் கால்களைத் தொட்டு வணங்கும்போது எனக்கு இதமாக இருக்கிறது. ஆனால் வேறு சிலர் தொடும் போதோ நெருப்பைக் கொட்டினாற்போன்ற எரிச்சல் உண்டாகிறது. குளவி கொட்டியது போல் வலிக்கிறது. கங்கை நீரால் கழுவும் போது தான் சிறிதாவது நிவாரணம் கிடைக்கிறது என்றார்.
-
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment