அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-30
அன்னையின் வாழ்க்கையையும், தேவைகளையும் குருதேவர் அறிந்திருந்தது போலவே குருதேவரின் உயர் ஆன்மீக நிலைகளை அன்னையும் உணர்ந்திருந்தார்.
ஒரு முறை குருதேவர் அன்னையிடம் அறை படுக்கை முதலியவற்றைச் சுத்தம் செய்யும்படி கூறிவிட்டு காளிகோயிலுக்குச் சென்றார்.
அவர் திரும்பி வருவதற்குள் வேலையை முடித்து விட வேண்டும் என்று அன்னை விரைவாக வேலையில் ஈடுபட்டார். ஆனால் குருதேவர் சீக்கிரமே திரும்பி விட்டார். வரும்போது மிதமிஞ்சிக் குடித்தவர் போல் கண்கள் சிவந்து,நடைபின்ன, தள்ளாடிக் கொண்டே வந்தார்.வந்தவர் பின்னாலிருந்து திடீரென அன்னையைத் தொட்டுத் தள்ளியவாறே, ஆமாம் சாரதா, நான் என்ன மது அருந்தியிருக்கிறேனா? என்று வாய் குளறியபடியே கேட்டார். குருதேவர் அருகில் வரும்வரை அன்னை அவரைக் கவனிக்கவில்லை.
திடீரென அவரது குரலைக் கேட்டதும் அதிர்ந்து போனார் மறுகணமே தம்மைச் சுதாரித்துக் கொண்டு ஏன் நீங்கள் எதற்காக மது குடிக்க வேண்டும், என்று கேட்டார்.
அதற்கு குருதேவர் பின் நான் ஏன் தள்ளாடுகிறேன்? ஏன் என் வாய் குளறுகிறது.? ஒரு வேளை கொஞ்சம் குடித்திருப்பேனோ? என்றார்? இல்லவே இல்லை. நீங்கள் ஏன் குடிக்க வேண்டும். அன்னை காளியின் அன்பெனும் அழுதை அல்லவா நீங்கள் நீங்கள் பருகியுள்ளீர்கள்? என்றார்அன்னை.
இந்தப்பதில் குருதேவருக்கு மிகுந்த திருப்தியை அளித்தது. தன் உண்மை நிலையை அன்னை புரிந்து கொண்டிருப்பதை எண்ணி உள்ளம் பூரித்தவராய் உண்மை தான், நீ சரியாகச் சொன்னாய் என்று கூறினார்.
மற்றொரு முறை குருதேவர் பக்தர்களுடன் பாணிஹாட்டி என்ற ஊரில் நடைபெறுகின்ற பிரபலமான திருவிழாவிற்குச் செல்வதாக இருந்தார். ஆண்களும், பெண்களுமாக மூன்று படகில் எல்லோரும் புறப்படத் தயாராயினர். அன்னையும் உடன் செல்ல விரும்பினார். தமது ஆவலை ஒரு பக்தையின் மூலம் குருதேவருக்குத் தெரிவித்து அனுமதி கேட்டார். அதற்கு குருதேவர்” அவள் விரும்பினால் வரட்டும்” என்று கூறினார். இதனை அந்த பக்தை வந்து அன்னையிடம் தெரிவித்தார். குருதேவரின் வார்த்தைகளைக் கேட்ட அன்னை தமது விருப்பத்தை மாற்றிக்கொண்டவராய் ஓ! இங்கிருந்து பலர் போகின்றனர். அங்கேயும் பெருங்கூட்டமாக இருக்கும். இதில் நான் வந்துத் திருவிழாவைப் பார்ப்பது கடினம். நான் வரவில்லை என்று அந்த பக்தையிடம் கூறி போகாமல் இருந்துவிட்டார். மற்ற எல்லோரும் சென்று இரவில் திரும்பினர். வந்த பின்னர் குருதேவர் ஒரு பக்தையிடம் அவள் வராதது நல்லதாக போயிற்று. என்ன கூட்டம்! எனது பரவச நிலைகளின் காரணமாக எல்லோர்பார்வையும் என்மீதே இருந்தது.அவளை என் அருகில் பார்த்திருந்தால் ஹம்சரும் ஹம்சியும் வந்திருக்கிறார்கள் என்று கேலியாகப் பேசியிருப்பார்கள். அவள் அபாரமான நுண்ணுணர்வ பமைத்தவள். அதனால் தான் இங்கேயே இருந்து விட்டாள் என்று கூறினார். இதைப்பற்றிக் கேட்டபோது அன்னை நான் போவதை அவர் விரும்பவில்லை என்பதை அவர் பதில் கூறிய விதத்திலிருந்தே புரிந்து கொண்டேன். மனமார அவர் விரும்பியிருந்தால் தாராளமாக வரட்டுமே” என்று சொல்லியிருப்பார். ஆனால் அவள் விரும்பினால் வரட்டும்” என்று கூறி முடிவை என்னிடம் விட்ட போது போகாமலிருப்பதே உசிதம் என்று நான் முடிவு செய்துவிட்டேன் என்றார்.
குருதேவரின் மனநிலை பாலகனின் இயல்பை ஒத்தது.குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்களே, அது அவர் விஷயத்தில் முற்றிலும் உண்மையாக இருந்தது. குழந்தையான அவரை, ஒரு மனைவி என்ற நிலையைவிட தாயாக இருந்தே அன்னை கவனித்துக் கொண்டார். தானும் தன் ஏழு தலைமுறையும் சேர்த்து நினைத்தாலும் முடியாது என்று தெரிந்தும் குழந்தையை ச் சாப்பிடச் செய்வதற்காக ”நிலாவைப் பிடித்துத் தருகிறேன் ” என்று தயங்காமல் பொய் சொல்கின்ற அந்தத் தாயுள்ளத்துடனேயே குருதேவரைப் பேணினார் அன்னை. ஆறுதல் மொழி, கண்டிப்பு, இணக்க வார்த்தை என்று பல வழிகளில் குருதேவரின் வாழ்வை வளப்படுத்துவதைக் குறியாகக் கொண்டிருந்தார் அவர். ஓரிரு நிகழ்ச்சிகளை அன்னையே பின்னாளில் கூறினார்.
ஒரு முறை குருதேவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. குமார் தோலியிலுள்ள கங்காபிரசாத் சேன் என்ற டாக்டரை அழைத்து வந்தார்கள். அவர் சில மருந்துகளைக் கொடுத்து விட்டு பத்தியமாக, தண்ணீர் குடிக்கக் கூடாது என்று கூறினார்.அவ்வளவு தான் குருதேவர் ஒவ்வொருவரிடமும் தண்ணீரே குடிக்கக் கூடாதாமே! என்னால் அப்படி இருக்க முடியுமா,? என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஐந்து வயது குழந்தையைக்கூட விட்டு வைக்கவில்லை. எல்லோரும் உங்களால் முடியும், என்றே கூறினார்கள். பின்னர் என்னிடமும் இது முடிகின்ற காரியமா? என்று கேட்டார் . நான், முடியும், உங்களால் நிச்சயம் முடியும், என்றேன். உடனே என்னிடம் அது சரி மாதுளம் பழ முத்துக்களைக் கழுவித் தரும் போது கூட ஒரு துளி தண்ணீரும் இல்லாமல் நன்றாகத் துடைத்து விடு. அப்படித் தர முடியுமா? என்றார். காளி தேவியின் அருளால் எல்லாம் சாத்தியமாகும் நம்மால் முடிந்த வரை முயல்வோம்என்று நான் சொன்னேன். அதன் பின் மருந்து தீரும் வரை தண்ணீரே உட்கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்தார். அவ்வாறே அவர் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்கவுமில்லை.
தினமும் அவருக்கு மூன்று நான்கு லிட்டர் பால் கொடுப்பது வழக்கம். மெள்ளமெள்ள ஐந்தாறு லிட்டர் என்று கொடுக்க ஆரம்பித்தேன். கோயில் பசுக்களைக் கறப்பவன் எனக்கு நிறைய பால் தருவான். இவ்வளவு பாலையும் பூஜாரிகளிடம் கொடுத்தால் வீட்டிற்கு எடுத்துச் சென்று யார்யாருக்கோ கொடுப்பார்கள். உங்களிடம் கொடுத்தால் அதை குருதேவர் அல்லவா பருகுவார். என்பான் அவன். அவன் நல்லவன், பக்தி மிகுந்தவன் . நான் அவனுக்கு இனிப்புகள் கொடுப்பேன். பாலை வாங்கி சுண்டக் காய்ச்சி கால்பாகமாகக் குறைத்து விடுவேன். இது எவ்வளவு பால் என்று குருதேவர் கேட்டால் ஒன்றும் அதிகமில்லை ஒன்று ஒன்றரை லிட்டர் தான்” என்று கூறுவேன். ஆனால் அவருக்குச் சீக்கிரத்தில் நம்பிக்கை வராது. சுண்டக் காய்ச்சியதால் மிதக்கின்ற கனமான ஏடைப் பார்த்து விட்டு, பால் சற்று அதிகமாக இருக்கும் போல் தோன்றுகிறதே என்பார்.
No comments:
Post a Comment