Sunday, 9 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-29

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-29

 கணவனின் சிறு சிறு பாராட்டுக்கள் மனைவிக்கு மிகப் பெரும் ஆக்கமாகவும்  ஊக்கமாகவும் அமைவதுண்டு. அன்னை இனிமையாகப் பாடுவார் என்று கண்டோம். ஒரு நாள் இரவு அன்னையும் லட்சியும் சேர்ந்து பாடிக் கொண்டிருந்தனர். பாடலின் கருத்தில்  ஆழ்ந்து அவர்கள் பாடியது கேட்பவர்களை உயர்நிலைக்கு இழுத்துச் செல்வதாக இருந்தது.அத்துடன்  குரலின் குழைவும் சேர்ந்து, கேட்பவர்களுக்கு இன்ப அனுபவத்தை அளித்தது. குருதேவர்  அந்தப் பாடலைச் செவிமடுத்துக் கேட்டார். மறுநாள் அன்னையிடம் நேற்றிரவு அந்தப் பாடலை மிகவும் லயித்துப் பாடினாய். மிக நன்றாக இருந்தது என்று கூறினார்.
சிலவேளைகளில் காளிதேவிக்கு அன்னை மாலை கட்டிக் கொடுப்பதுண்டு. ஒரு நாள் மல்லிகை மொட்டுக்களையும் சிவப்பு அரளி மொட்டுக்களையும் அடர்த்தியாகச் சேர்த்துக் கட்டினார். சிறிது நேரம் தண்ணிரில் வைத்துவிட்டு அரும்புகள் மலரத் தொடங்கியதும் கோயிலுக்கு அனுப்பினார். பூஜாரி அதைக் காளிக்குச்  சாத்துவதற்கும் குருதேவர் அங்கே செல்வதற்கும்  சரியாக இருந்தது. கறுப்புச் சலவைக் கல் உருவத்தின் மீது  வெண்மையும் சிவப்பும் இணைந்த அந்த மாலை மிக அழகாகக் காட்சியளித்தது, ஆ! என்ன அற்புதம், பிரமாதம் என்று பாராட்டினார் குருதேவர்.
அன்னை தான் அந்த மாலையைக் கட்டியவர் என்று தெரிந்ததும், ஆகா யாராவது அவளை அழைத்து வாருங்கள் அவளும் இந்த அழகைக் காணட்டும் என்று கூறினார். வேலைக்காரி பிருந்தையுடன் அன்னை அங்கு வந்தார். பக்தர்கள் சிலர் அங்கிருந்ததைக் கண்டதும் பிருந்தையின் பின்னால் மறைந்தவாறே பின்புறமாகச் சென்று படிகள் இல்லாத ஓரிடத்தில் ஏற முயன்றார்.
அதைக்கவனித்த குருதேவர், அப்படி ஏறாதே. அந்த மீனவப்பெண் அன்று இவ்வாறு ஏறியதில் தான் கீழே விழுந்து மரணமடைய நேர்ந்தது. படி வழியாக ஏறி வா என்றார். இதைக் கேட்டவுடன் அன்னை வருவதை அறிந்து பக்தர்கள்  விலகிக் கொண்டனர். அன்னை முன்புறப் படி வழியாக ஏறி, காளி தேவியின் கழுத்தில் தாம் கட்டிய மாலை அணி செய்வதைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்.
 என்னை “துயீ” என்று அழைக்காத ஒருவரை மணக்கின்ற பேறு பெற்றேன் நான். ஒரு மலரை எறிந்துகூட என்னை வேதனைப்படுத்த எண்ணாதவர் அவர் என்று அன்னை பெருமைப்படுகின்ற அளவுக்கு குருதேவர் அன்னையின் நலம் பேணினார்.
ஒரு முறை அன்னை குருதேவருக்காக உணவு கொண்டு வைத்து விட்டுச் சென்றார்.வந்தது லட்சுமி என்று நினைத்து குருதேவர் “துயீ”(நீ)  என்ற சொல்லை உபயோகித்து, கதவைச் சாத்திவிட்டுப்போ என்று கூறினார். அன்னை சரி என்று சொன்னபோதுதான் வந்தது லட்சுமி அல்ல என்பது அவருக்குத் தெரிந்தது. அவ்வளவு தான் தாம் ஏதோ அவமரியாதை செய்துவிட்டது போல் ஆ நீயா . லட்சுமி என்று நான் நினைத்து விட்டேன். பொறுத்துக்கொள் என்று மீண்டும் மீண்டும் அன்னையிடம் வருத்தத்துடன் கூறினார். அத்துடன் நின்றதா?மறுநாள் பொழுது விடிந்ததும் நகபத் வாசலில் சென்று இதோ பார், நான் அப்படிச் சொல்லியதை எண்ணியெண்ணி என்னால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை என்று கூறினாராம். அது மட்டுமல்ல, அன்னை அவருக்கு எண்ணெய் தேய்த்தோ, கால்களைப்பிடித்துவிட்டோ பணிவிடைகள் செய்தால் அதன் பின்னர் அவரைக் கைகூப்பி  வணங்குவாராம் அவர்.
அன்னையின்  வார்த்தைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் குருதேவர். பல விஷயங்களில் அவர் அன்னையுடன்  கலந்தாலோசித்த பின்னரே எதையும் செய்வார்.
ஒரு முறை எங்கோ ஓரிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று குருதேவர் எண்ணியிருந்தார். அன்னையிடம் கேட்டபோது வேண்டாம் என்று அன்னை தடுத்துவிட்டார். இதைக் குறிப்பிட்டு குருதேவர் பின்னாளில்  வேடிக்கையாக அவள் வேண்டாம் என்றதும் நான் போகாமலிருந்து விட்டேன் என் நிலைமையே இப்படியென்றால் சாதாரண இல்லறத்தார்களின் கதி என்னவாக இருக்கும் என்றார்.
அன்னையின் ஆன்மீக உயர்வை அறிந்திருந்த குருதேவர் தாம் அவருக்கு மரியாதைக் காட்டியதுடன், பிறரும் அவ்வாறே காட்ட வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தார். அன்னையை அவமதிப்பவர்கள் எவ்வளவு கடுமையான விளைவுகளை அனுபவிக்க நேரும் என்பதை அவர் தெளிவாக அறிந்திருந்தார்.
ஒரு முறை குருதேவரின் முன்னிலையிலேயே ஹிருதயன் அன்னையை மரியாதைக் குறைவாகப் பேசினான்.. அன்னை அதைப் பொறுத்துக் கொண்டார். ஆனால் ஹிருதயனது செயலின் விளைவை அறிந்திருந்த குருதேவர், இதோ பார், நீ என்னை எவ்வளவோ நிந்தனை செய்கிறாய்! ஆனால் அவளிடம் மட்டும் விளையாடாதே. எனக்குள் இருக்கும் சக்தி சினைந்தாலும் ஒரு வேளை நீ பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் அவளிடம் இருக்கும் சக்தி சீறி எழுந்தால் பிரம்மா, விஷ்ணு, மகேசுவர்கள் வந்தாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது என்று அவனை எச்சரித்தார்.
 தம்மாலும் அன்னையின் மனம் எந்த விதத்திலும் புண்பட்டுவிடாதபடி குருதேவர் எச்சரிக்கையாகவே இருந்தார். குடும்ப விஷயத்திலும் சரி, வேறு எதிலும் சரி, தன் விருப்பம் இது தான் என்பதை அன்னை உறுதியாகச் சொல்லிவிட்டால் அவருடைய விருப்பத்தை எதிர்க்கவோ அதற்கு மாறாக நடக்கவோ அவர் முயல மாட்டார்.
 அந்தக்காலத்தில் குருதேவரைக் காண வரும் பக்தர்கள் அவருக்கு ஏராளமான பழங்களும் இனிப்புகளும் கொண்டு வருவார்கள். அன்னை அவற்றில் ஒரு சிறு பகுதியை குருதேவருக்காக  எடுத்து வைத்து விட்டு, மற்றதையெல்லாம் அங்கு வரும் பக்தர்களுக்கும் அண்டை அயலில் உள்ள குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துவிடுவார். எதையும் மிச்சமாகவே வைக்க மாட்டார்.
 ஒரு நாள் அன்னை இவ்வாறு வாரி வழங்குவதைக் கண்ட குருதேவர், இவ்வாறு கண்டபடி செலவு செய்தால் நீ எப்படிக் குடும்பம் நடத்துவாய்? என்று கேட்டார். பொதுவாக அன்னை தமது உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவர் அல்ல.ஆனால் குருதேவர் இப்படிக்  கேட்டதும் அவரது முகம் வாடிவிட்டது. பசித்துத் தன்னிடம் வருபவர்களுக்குப் பசி தீர ஏதாவது கொடுக்கின்ற தம் தாய் உணர்ச்சிக்கு குருதேவர் இப்படித் தடை விதிக்கிறாரே என்று நினைத்து மனம் வாடினார். ஆனால் எதுவும் கூறாமல் நகபத்திற்குச் சென்றுவிட்டார்.
 அன்னையின் மனநிலையை குருதேவர் உடனே புரிந்து கொண்டார். அருகிலிருந்த ராம்லாலைப் பரபரப்போடு அழைத்து ” டேய் ராம்லால், உன் சித்தி கோபித்துக் கொண்டு போய்விட்டாள்.ஓடு, ஓடு! ஓடிப்போய் அவளை சமாதானப்படுத்து. இல்லையென்றால் என்பாடு அவ்வளவு தான்! என்று அன்னையைச் சமாதானம் செய்ய ராம்லாலை அனுப்பி வைத்தார்.

தொடரும்...

No comments:

Post a Comment