அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-24
குருதேவர் பாலகனின் இயல்பை ஒத்த நிலையை உடையவர். . குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்களே அது அவர் விஷயத்தில் முற்றிலும் உண்மையாக இருந்தது . குழந்தையான அவரை ஒரு மனைவி என்ற நிலையைவிட தாயாக இருந்தே அன்னை கவனித்தக் கொண்டார் . தானும் தன் ஏழு தலைமுறையும் சேர்ந்த நினைத்தாலும் முடியாது என்று தெரிந்தம் , குழந்தையைச் சாப்பிடச் செய்வதற்காக ‘ நிலாவை பிடித்தத் தருகிறேன் ’ என்று தயங்காமல் பொய் சொல்கின்ற அந்த தாயுள்ளத்துடனேயே குருதேவரைப் பேணினார் அன்னை . பொய், ஆறுதல் மொழி, கண்டிப்பு, இணக்கவார்த்தை என்று பல வழிகளில் குருதேவரின் வாழ்வை வளப்படுத்துவதைக் குறியாகக் கொண்டிருந்தார் அவர்.
-
ஓரிரு நிகழ்ச்சிகளை அன்னையே பின்னாளில் கூறினார். ஒரு முறை குருதேவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. குமார் தோலியிலுள்ள கங்கா பிரசாத் சேன் என்ற டாக்டரை அழைத்து வந்தார்கள். அவர் சில மருந்துகளைக் கொடுத்து விட்டு பத்தியமாக தண்ணீர் குடிக்கக் கூடாது என்று கூறினார் அவ்வளவு தான் , குருதேவர் ஒவ்வொருவரிடமும் தண்ணீரே குடிக்கக் கூடாதாமே என்னால் அப்படி இருக்க முடியுமா? என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஐந்து வயது குழந்தையைக் கூட விட்டு வைக்கவில்லை. எல்லோரும் உங்களால் முடியும் என்றே கூறினார்கள். பின்னர் என்னிடமும் இது முடிகின்ற காரியமா? என்று கேட்டார். நான் முடியம், உங்களால் நிச்சயம் முடியும் என்றேன். உடனே என்னிடம் ” அது சரி மாதுளம்பழ முத்துக்களைக் கழுவித் தரும் போது கூட ஒரு துளி தண்ணீரும் இல்லாமல் நன்றாக துடைத்து விடு. அப்படித் தரமுடியுமா? என்றார். காளி தேவியின் அருளால் எல்லாம் சாத்தியமாகும். நம்மால் முடிந்தவரை முயல்வோம் என்று நான் சொன்னேன். அதன் பின் மருந்து தீரும் வரை தண்ணீரே உட்கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.அவ்வாறே அவர் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்கவுமில்லை. தினமும் அவருக்கு மூன்று நான்கு லிட்டர் பால் கொடுப்பது வழக்கம். மெள்ள மெள்ள ஐந்தாறு லிட்டர் என்று கொடுக்க ஆரம்பித்தேன். கோயில் பசுக்களைக் கறப்பவன் எனக்கு நிறைய பால் தருவான். இவ்வளவு பாலையும் பூஜாரிகளிடம் கொடுத்தால் வீட்டிற்கு எடுத்துச்சென்று யார்யாருக்கோ கொடுப்பார்கள். உங்களிடம் கொடுத்தால் அதை குருதேவர் அல்லவா பருகுவார் என்பான் அவன். அவன் நல்லவன் பக்தி மிகுந்தவன் நான் அவனுக்கு இனிப்புகள் கொடுப்பேன் . பாலை வாங்கி சுண்டக்காய்ச்சி கால்பாகமாகக் குறைத்து விடுவேன்.இது எவ்வளவு பால்? என்று குருதேவர் கேட்டால் ஒன்றும் அதிகமில்லை ஒன்று ஒன்றரை லிட்டர் தான் என்று கூறுவேன். ஆனால் அவருக்குச் சீக்கிரத்தில் நம்பிக்கை வராது. சுண்டக் காய்ச்சியதால் மிதக்கின்ற கனமான ஏடைப்பார்த்துவிட்டு பால் சற்று அதிகமாக இருக்கும் போல் தோன்று கிறதே என்பார். ஒரு நாள் கோலாப் உண்மையைக்கூறிவிட்டாள். அதைக் கேட்டதும், ஆ.. நான் தினமும் இவ்வளவு பாலையா குடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் எனக்கு அஜீரணம் ஏற்படுகிறது என்று கூறிவிட்டு எங்கே அவளைக் கூப்பிடு அவளைக்கூப்பிடு என்று பதட்டத்தோடு கத்தினார்.இது காதில் விழுந்ததும் நான் அவரது அறைக்குப் போனேன். பாலைப்பற்றி கோலாப்கூறியதை என்னிடம் சொன்னார். அதற்கு நான் , அவளுக்கு என்ன தெரியும் ? பால் வாங்குவது நான். எவ்வளவு எடுத்துக் கொள்கிறேன் உங்களுக்கு எவ்வளவு கொண்டு வருகிறேன் என்பதெல்லாம் அவளுக்கு எப்படித் தெரியும்? அவள் உளறியதை நீங்களும் உண்மையென்று எடுத்துக் கொண்டீர்கள் என்று அவரைச் சமாதானம் செய்தேன். அவர் விட வில்லை.மற்றொரு நாள் கோலாப்பிடம் எல்லாவற்றையும் விளக்கமாகக் கேட்டார். அவளும் ஒரு குவளைப் பால் கோயிலிலிருந்து வருகிறது.பால் காரனும் தனியாக இன்னொரு குவளைக் கொடுக்கிறான் என்பதைச் சொல்லிவிட்டாள். உடனே என்னை அழைத்து வரச் சொன்னார். நான் எவ்வளவு பால் வாங்குகிறேன் என்று கேட்டு விட்டு சரியான அளவைக்கூறும்படிச் சொன்னார். அதற்கு நான் இதெல்லாம் எதற்கு? யாருக்கு இந்தக் கணக்கெல்லாம் தெரியும்? நீங்கள் பால் சாப்பிட வேண்டும் என்பது மட்டும் தான் எனக்குத் தெரியுமே தவிர இந்த உழக்கு ஆழாக்கு கணக்கெல்லாம் எனக்குத் தெரியாது என்று கூறினேன் .என் பதில் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இவ்வளவு பால் குடித்தால் எனக்கு எப்படி ஜீரணம் ஆகும்? எனக்கு அஜீரணம் ஏற்பட்டு நிச்சயம் உடம்பு கெடப்போகிறது என்று கூறினார். இந்த எண்ணம் அவர் மனத்தில் எழுந்ததும் உண்மையாகவே அவருக்கு அஜீரணம் ஏற்பட்டு விட்டது. அன்று இரவு சிறிது பார்லிக் கஞ்சி மட்டும் தான் அவர் குடிக்க நேர்ந்தது. பின்னர் கோலாப் என்னிடம் அம்மா உண்மையை நீங்கள் முன்னமே என்னிடம் சொல்லியிருக்கலாமே என்னால் அவரது இரவு உணவு தடைப்பட்டுவிட்டதே என்றாள். உணவு விஷயத்தில் சிறிது பொய் சொல்வதில் தப்பில்லை. இப்படியெல்லாம்செய்து தான் நான் அவரை உண்ணச்செய்கிறேன் என்றேன் நான். எப்படியோ அவரது நோய் நீங்கி உடல் நிலை தேறியது.
-
குருதேவரது பெருவாழ்வின் உட்பொருளைப் பலர் பல்வேறு விதமாகக் கணிக்கிறார்கள்.ஆனால் அன்னையைப் பொறுத்த வரை அவரது வாழ்க்கை துறவின் மேன்மையையும் தியாகத்தின் பெருமையையும் போதிப்பதாக அமைந்தது ஆகும். இதனைப் பலமுறை அன்னை வெளிப்படுத்தியுள்ளார்.பின்னாளில்சீடர் ஒருவர்“ அன்னையிடம் குருதேவர் தாம் எத்தகையதோர் இணையற்ற கருத்தை உலகிற்கு வழங்கியுள்ளார். எல்லா மதங்களும் இறைவனை அடைவதற்கான பாதைகளே என்பதை எவ்வளவு அற்புதமாகக் காட்டிவிட்டார். என்றுகூறினார்.அதற்கு அன்னை , மகனே நீ சொல்கின்ற சர்வ சமய சமரசக் கருத்து உண்மை தான்.ஆனால் இந்த உண்மையைப் போதிப்பதற்காகத்தான் அவர் பல்வேறு மதங்களைப் பின்பற்றினார். என்று எனக்குத் தோன்ற வில்லை. இரவு பகலாக அவர் இறை எண்ணங்களில் தோய்ந்து , பரவச நிலைகளில் ஆழ்ந்து கிடந்தார். இந்து மதத்தின் பல நெறிகள் மூலமும் கிருஸ்தவ மற்றம் இஸ்லாம் சமயங்கள் மூலமும் அவர் பல்வேறு விதங்களில் அந்த ஒரே பரம்பொருளை உணர்ந்து மகிழ்ந்தார். என்னைப் பொறுத்த வரை குருதேவரின் சிறப்புப் பண்பு துறவு தான். இப்படியோர் இயல்பான துறவை வேறு யாரிடமாவது காண முடியுமா? துறவே அவரது அணிகலன் என்று கூறினார். அந்த அற்புதத் துறவைத் தம் வாழ்விலும் இயல்பாகக் கொண்டிருந்தார் அன்னை.
-
அவர் குருதேவரிடம் கொண்டிருந்த அன்பு ஈடிணையற்றது.இதை நாள்தோறும் அவர் குருதேவரிடம் காட்டுகின்ற பாசத்திலும் அவருக்குச்செய்கின்ற சேவைகளிலும் மட்டும் காட்டவில்லை. தம் எண்ணங்களையும் ஆசைகளையும் அவருடைய வாழ்க்கை லட்சியத்தோடு இணைத்துக் கொண்டு அதற்காகப் பாடுபடுவதிலும் அதை வெளிப்படுத்தினார். ஒரு மகானுடைய மனைவி அவரிடம் தனக்குள்ள அன்பையும் மரியாதையும் காட்டுவதற்கு அந்த மகான் கொண்டுள்ள லட்சியம் நிறைவேறுவதற்காகப் பாடுபடுவதை த் தவிர வேறு எந்த உயர்ந்த வழி இருக்க முடியும்? அன்னையின் இத்தகைய பண்பினை வெளிப்படுத்துகின்ற ஓரிரு நிகழ்ச்சிகளைக் காண்போம்.
-
தொடரும்..
No comments:
Post a Comment