Sunday, 9 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-22

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-22
-
ஒரு முறை குருதேவரின் திருமுன்னர் போட்டி  ஒன்று நடந்தது. போட்டியாளர்களுள்  குருதேவரும் ஒருவர். அவ ருக்கு போட்டியாக கலந்து கொண்ட  இன்னொருவர்  பக்தர். இரண்டு பேருமே பொன் நிறம். யார் அதிக நிறத்துடன்  இருக்கிறார்கள் என்பது தான்  போட்டி. நடுவர் யார்? அன்னை தான்.பஞ்சவடியின் அருகில் இருவரும் அன்னை காணும் படி நடந்து காட்டினார்கள். அன்னை இருவரின்  நிறத்தையும் தொலைவில் இருந்த படி கண்டார். நடுநிலை தவறாத அவர் இறுதியில் பக்தரின் மருமகன் குருதேவரை விட ஒரு மாற்று அதிக நிறமுடையவர் என்று தீர்ப்பளித்து அவரே வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
-
தம் துணைவியின் பிற்கால நலனுக்காகப் பணமும் சேர்த்து வைத்தார் குருதேவர். பணத்தையே தொடமுடியாத அந்தத்துறவி செய்த இந்தச் செயலே அவர் தம் மனைவியிடம்  கொண்டிருந்த  ஆழ்ந்த  உறவின் உன்னத வெளிப்பாடாகத் திகழ்கிறது. அன்னை கூறினார் குருதேவர் துறவு என்ற  சொல்லுக்கு  இலக்கணமாக விளங்கினார் என்றாலும் என்னைப் பற்றிய கவலை அவருக்கு இருந்தது. ஒரு நாள் அவர் என்னிடம் ” உன் செலவிற்கு மாதம் எவ்வளவு பணம் தேவைப்படும்? என்று கேட்டார். ஐந்தோ ஆறோ ரூபாய் போதும் என்றேன் நான். பிறகு சரி இரவில் எத்தனை சப்பாத்திகள்  சாப்பிடுவாய் ? என்று கேட்டார். வெட்கத்தால் குன்றி ப்   போனேன் நான். இதற்கு எப்படிப் பதில் சொல்வது  என்று புரியாமல்  தவித்தேன். ஆனால் அவரோ  மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். வேறு வழியில்லாமல் ஐந்து அல்லது ஆறு சாப்பிடுவேன் என்று கூறினேன். அன்னை கூறியதை மனதில் வைத்துக் கொண்டு குருதேவர்  சுமார் 600 ரூபாய்  முதல் இருந்தால்  வரும் வட்டியில்  அன்னையால் சிரமமின்றி  வாழ முடியும் என்று கணக்கிட்டார். அவ்வாறே அந்தத் தொகையை  பலராம் போஸிடம்  கொடுத்து வைத்தார். அவர் அதனைத் தன்  எஸ்டேட்டில் முதலீடு  செய்து  வட்டி பணமாகிய  ரூபாய் முப்பதை ஆறுமாதத்திற்கு  ஒரு முறை அன்னைக்கு அனுப்பி வைக்க  எண்ணினார். 
-
கணவனின் சிறுசிறு பாராட்டுகள் மனைவிக்கு  மிகப்பெரும் ஆக்கமும் ஊக்கமாகவும்  அமைவதுண்டு . அன்னை  இனிமையாகப் பாடுவார்.  ஒருநாள் இரவு அன்னையும் லட்சுமியும் சேர்ந்து  பாடிக் கொண்டிருந்தனர் .  பாடலின் கருத்தில்  ஆழ்ந்து அவர்கள் பாடியது  கேட்பவர்களை உயர்நிலைக்கு  இழுத்து செல்வதாக இருந்தது .  அத்துடன் குரலின் குழைவு சேர்ந்து  , கேட்பவர்களக்கு  இன்ப அனுபவத்தை  அளித்தது  . குருதேவர்  அந்தப்   பாடலைச் செவிமெடுத்துக் கேட்டார் .  மறுநாள் அன்னையிடம்  ,  ‘ நேற்றிரவு  அந்தப் பாடலை  மிகவும்   லயித்துப் பாடினாய்  . மிக  நன்றாக இருந்தது  ’ என்று கூறினார் . 
-
சிலவேளைகளில்  காளிதேவிக்கு  அன்னை மாலைகாட்டிக்  கொடுப்பதுண்டு .   ஒருநாள் மல்லிகை   மொட்டுகளையும் சிவப்பு அரளி மொட்டுகளையும்  அடர்த்தியாக சேர்த்துக்  கட்டினார் .    சிறிதுநேரம்   தண்ணீரில்  வைத்துவிட்டு  ,   அரும்புகள் மலரத் தொடங்கியதும்  கோயிலுக்கு  அனுப்பினார் .   பூஜாரி   அதைக் காளிக்கு சாத்துவதற்கும் குருதேவர்  அங்கே  செல்வதற்கும்  சரியாக  இருந்தது .  கருப்புக்  சலவைக் கல்  உருவத்தின்மீது  வெண்மையும்  சிவப்பும்  இணைந்து  அந்த  மாலை  மிக  அழகாகக்  காட்சியளித்தது  . ‘ ஆ ,  என்ன  அற்புதம்   பிரமாதம்  ’ என்று பாராட்டியார் குருதேவர் . அன்னைதான்  அந்த மாலையைக் கட்டியவர் என்று தெரிந்ததும்   , ‘ ஆகா , அவள் இந்த அழகைக் காணட்டும்  ’ என்று கூறினார் .    வேலைக்காரி பிருந்தையுடன்  அன்னை   அங்கு வந்தார் .  பக்தர்கள் சிலர் அங்கிருந்ததைக் கண்டதும்   , பிருந்தையின் பின்னால்     மறைந்தவாறே  பின்புறமாகச் சென்று   , படிகள்  இல்லாத ஓரிடத்தில்   ஏற முயன்றார் .  அதைக் கவனித்த குருதேவர்   ,  ‘ அப்படி ஏறாதே  .   அந்த மீனவப் பெண்   அன்று  இவ்வாறு ஏறியதில்தான்  கீழே  விழுந்து மரணமடைய  நேர்ந்தது  . படி  வழியாக ஏறி வா  ’  என்றார் .   இதைக் கேட்டவுடன் ,  அன்னை  வருவதை அறிந்து பக்தர்கள் விலகிக் கொண்டனர் .   அன்னை  பின்புறப்படி வழியாக  ஏறி ,  காளிதேவியின் கழுத்தில் தான் கட்டிய  மாலை  அணி செய்வதைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார் .
-
தொடரும்..

No comments:

Post a Comment