Sunday, 9 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-20

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-20
-
யாரும் சோம்பியிருப்பதை  குருதேவர்  விரும்புவதில்லை .   அதைப்பற்றி  அன்னை  பிற்காலத்தில்  ஒரு சிஷ்யையிடம்  கூறினார் .  ‘ குருதேவர்  என்னிடம்  ,   “ எப்போதும் சறுசுறுப்பாக இருக்க வேண்டும்  . ஏதாவது வேலை  செய்யாமல்  ஒருபோதும்  இருக்கக் கூடாது .  சோம்பலுக்கு  இடம் கொடுத்தால்   வேண்டாத எண்ணங்கள்தான்  மனத்தில்  தோன்றும்  ” என்று அடிக்கடி கூறுவார்
-
.  ‘ ஒருநாள்  கொஞ்சம்  சணல் நாரைக் கொண்டு வந்து  கொடுத்து , அதைத் திரித்து  உறி   ஒன்றைச்  செய்யும்படி கூறினார். சீடா்களுக்கு  கொடுப்பதற்காக அவா் தமது அறையில் வைத்திருக்கும் இனிப்புகளைப் போட்டுத் தொங்கவிடுவதற்கு அது தேவைப்படுவதாகக் கூறினார். குருதேவா் கூறியபடியே நானும் உறி ஒன்றைச் செய்தேன். எஞ்சியிருந்த நாரைக் கொண்டு ஒரு தலையாணை செய்து கொண்டேன். அப்போதெல்லாம் சாக்கை விரித்து, அதன் மேல் முரட்டுபாய் ஒன்றை போட்டுக் கொண்டு படுப்பேன் .  இந்தத்  தலையணையைத்தான்  தலைக்கு  வைத்துக் கொள்வேன் .  இப்போது இந்த  மெத்தைகளையெல்லாம்   பார்க்கிறீர்கள்  . ஆனால்  இன்று  இந்த   மெத்தையின்மேல்  உறங்குவது  போல்தான்   அன்றும்  நன்றாக  உறங்கினேனேன் . இதில் எனக்கு  ஒரு வித்தியாசமும்  தெரியவில்லை ”.  இத்தகைய  சமநிலை  வாய்க்கப் பெற்றவராக  இருந்தார்  அன்னை .
-
 எத்தகைய  அசௌகரியங்களிலும்  அவரது   சமநிலை  குலைந்ததில்லை  .  இந்தச் சமநிலை  வாய்க்கப்  பெற்ற  மனம்  அவரது  சேவை  - சாதனையின்  விளைவு  என்பது சொல்லாமலே  விளக்கக் கூடியது  அல்லவா ! 
-
அன்னையின் தட்சிணேசுவர   நாட்களைக் குறிப்பிட்ட  ஓர்  அற்புதக்  கருத்தைக்  கூறுகிறார்  சுவாமி தபஸ்யானந்தர்  ‘ இன்று அன்னையை நாம் ஒரு அவதாரப் பெண்ணாக  பக்திக் கண்ணுடன் பார்க்கிறோம் .  இதனால் அவர் தட்சிணேசுவர  நாட்களில் பட்ட சிரமங்களின் உண்மைப் பரிமாணத்தை  அறிய முடிவதில்லை .  இத்தனை  சிரமங்களுடன்  வாழ்ந்து  குருதேவருக்கு  சேவை  செய்ததன்  மூலம்  உயர்நிலை  பக்தியின்  ஓர்  உன்னத  லட்சிய  மாகத்  திகழ்கிறார்  அன்னை .  குருதேவரின்  வேறு எந்த பக்தரும்  இத்தகைய  சிரமங்களையும்   அசௌகரியங்களையும்  தாங்கியிருக்க மாட்டார்கள்.குருதேவரின் இறுதி  நாட்களில்   இரவம் பகலும் அவருடன் தங்கி  ,  சேவை  செய்துவந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தர் போன்ற  ஓரிருவரை வேண்டுமானால்  ஓரளவுக்கு நாம் சொல்ல முடியும் . 
-
அன்னையின் இந்த சேவை பக்தியே  - சாதனையாகிவிட்டது .  தான்  படுகின்ற  துன்பங்களும்  , தான் பக்தி  செய்கின்றவரின்  மகிழ்ச்சிக்காக  அல்லது நன்மைக்காகவே  என்பதை அறிகின்ற  பக்தனின்  மனம்  ஆனந்தப் பெரு வெள்ளத்தில்   திளைக்கிறது .
-
’ அன்னை  பின்னாளில் கூறினார் . ‘ அந்த நாட்களில்  எந்தத்  துன்பமும் எனக்குத் துன்பமாகவே  பட்டதில்லை .  குருதேவரின் சேவைக்காக என்னும்போது  , எந்த  அசௌகரியமும்  என்னைத் தொட  முடிந்ததில்லை .  சிரமங்களுக்கு  இடையிலும்  என் நாட்கள்  ஆனந்தமாகவும் அமைதியாகவுமே  கழிந்தன .... ஆ , என்ன  ஆனந்தம் அது !  அப்போதெல்லாம்   தட்சிணேசுவரம்  ஓர் ஆனந்தச் சந்தையாகவே திகழ்ந்தது . ’   பக்தர்கள் வருவதும் ஆடிப்பாடுவதும் பரவச  நிலைகளுமாக  குருதேவரின் அறை  ஆனந்தச் சந்தையாகவே  திகழும்  .  ஆனால் அவரையே  கணவரும் குருவும்  தெய்வமுமாகக் கொண்ட  அன்னையோ   அதில் கலந்துகொள்ள முடியாமல்  தவிப்பார்  ‘ நான் மட்டும்   பக்தர்களுள் ஒருவராக இருந்தால்   எப்போதும்  அவரது அருகிலேயே  இருக்க முடியும் ,  அவரது  அமுத  மொழிகளைக் கேட்டிருக்க முடியும் ’  என்று ஏங்குவார் .   
-
ஆனால் புல்லைவிடத் தாழ்ந்தவராக  , பூமியைவிடப் பொறுமையுடையவராகத் தன்னைக் கருதுகின்ற  உயர்நிலை பக்தையாகிய  அவர் தமது  ஏக்கங்கள் எதையம்  வெளிப்படுத்தியதில்லை . தமக்கென   எந்தத் தனி உரிமையைக் கோரவும் இல்லை .   குருதேவருக்கான சிறுசிறு பணிவிடைகளை அவ்வப்போது சென்று செய்து வருவதிலேயே  அவர் நிறைவு கொண்டார் .   அந்து வாய்ப்புகளுக்குப்  பங்கம்  வந்தபோதும் அவற்றை அமைதியாக ஏற்றுக் கொண்டார் .  ஒருநாள் ஒரு பெண் அன்னையிடம்  , ‘ நீ  ஏன் அடிக்கடி  குருதேவரிடம் போக வேண்டும் ?  ’  என்று கேட்டுவிட்டாள் .   இந்தக் கேள்வியால் அன்னை ஆத்திரப்படவில்லை . மாறாக   , இவள் குருதேவருக்கு சேவை செய்ய விரும்புகிறாள் போலும்   ’ என்று எண்ணியது   அவர் மனம் .   எனவே தாம் அங்குச் சென்று செய்ய வேண்டிய  பல வேலைகளை அந்தப் பெண்ணுக்காக விட்டுவிட்டார் .   உணவு எடுத்துச் செல்லும் நேரங்களில் மட்டுமே   இப்போது அன்னையால் குருதேவரின் அருகில்   இருக்க முடிந்தது .    ஒருமுறை கோலாப்மா தன் வெகுளிதனத்தால்   இந்த வாய்ப்பையும் பறித்துக் கொண்டு விட்டார் . குருதேவர் தன்னை உணவு  பரிமாறச் சொன்னதனைப் பெரிதாக எடுத்துக் கொண்டு  , தான்   பரிமாறினால் அவர் மிகவும்   மகிழ்வதாகச் சொல்லிக் கொண்டாள் .
 அதன்பின் தினமும் அவரே  நகபத்திலிருந்து   குருதேவருக்கு உணவு  கொண்டு செல்லத் தொடங்கினார் .   அன்னைக்கு இருந்த ஒரே ஒரு வாய்ப்பும்  பறிபோனது
-
தொடரும்..

No comments:

Post a Comment