Sunday, 23 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-45

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-45

குருதேவர் கூறினார், எந்த சாதனையிலும்  வெற்றி பெற எனக்கு மூன்று நாட்களுக்கு மேல் ஆனதில்லை. ஒரு சாதனையில் ஈடுபட்டு கொழுந்து விட்டெரியும் ஏக்கத்துடன் அந்த சாதனையில் வெற்றி பெற வேண்டி  அன்னையிடம் பிராத்தித்தால் மூன்று நாட்களுக்குள்  இலக்கை எட்டி விடுவேன், பொது துணையின்றி மிக்குறுகிய காலத்தில் வீர நிலை  சாதனைகளில் குருதேவர் வெற்றி கண்டதிலிருந்து வீர நிலை சாதனைகளுக்குப் பெண்துணையோ , மற்றும் பஞ்ச மகாரங்களோ இன்றியமையாதவை அல்ல என்பது தெளிவாகிறது.
சபல புத்தியால் சுயக்கட்டுப்பாட்டை இழந்த சாதகர்கள்  மட்டுமே பெண் துணையுடன்  சாதனை புரிகிறார்கள். தொடர்ந்து விடாமுயற்சியுடன்  சாதனைபுரிந்தால் அவர்களும் திவ்ய நிலையை அடைய முடியும், என்று தந்திரங்கள்  கூறுகின்றன. தந்திர சாஸ்திரங்களின் கருணைத் திறத்தையே இந்தச்சலுகை எடுத்துக்காட்டுகிறது.
புலனின்பப்பொருட்கள் மனிதனைக் கவர்ந்திழுத்து மீண்டும் மீண்டும் அவனைப் பிறவிச் சுழலில் பிணைக்கின்றன.இறைக்காட்சியோ ஆத்ம ஞானமோ அடைய இயலாதவாறு அவனைத்தடுத்தும் விடுகின்றன. மனக்கட்டுப்பாடு , விடாமுயற்சி, தொடர்ந்த பயிற்சி ஆகியவற்றின் மூலம் இவையும் இறைவனின் வடிவங்கள் என்பதை சாதகனுக்கு உணர்த்துவதே தாந்திரிக சாதனைகளின் நோக்கம்.சுயக்கட்டுபாடு எல்லா வற்றிலும் இறைவனைக்காணல் போன்ற பண்புகளில் சாதகர் களிடையே காணப்படுகின்ற வேறுபாட்டைக்கருத்தில் கொண்டு தான்   தந்திர சாஸ்திரங்கள் பசுநிலை, வீர நிலை , திவ்ய நிலை என்று படிப்படியான மூன்று நிலை சாதனைகளை வகுத்துள்ளன. இந்த நிலைகள் அனைத்திற்கும் அடிப்படை சுயக்கட்டுபாடு  என்பதையும், புலக்கட்டுப்பாட்டின் மூலம் மட்டுமே தாந்திரிக சாதகர்கள் தங்கள் முயற்சியில்  பலன்களை அடையமுடியும். என்பதையும் நாளடைவில் மக்கள் மறந்து விட்டனர். இதனைச்சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் சாதகர்களின் தவறுகளைத் தாந்திரிக சாதனைகளின் பேரில் சுமத்தி,, தந்திர சாஸ்திரங்களையே குறைகூறினர்.
அனைத்துப் பெண்களையும் அன்னையென பாவித்து இந்த சாதனைகளில் குருதேவர் அடைந்த வெற்றி உண்மையான சாதகர்களுக்கும், ஏன்  தாந்திரிக சாஸ்திரங்களுக்கும் ஒரு புதிய ஒளியைக் காட்டியுள்ளது. சாதகர்களின் வெற்றிக்கு அது சிறந்த வழிகாட்டியாகிறது.
தந்திர சாஸ்திரங்களின்  உண்மைப்புகழையும் சரியான பொருளையும் மீண்டும் வெளிக்கொணரவும்                                             வழிவகுத்தது.
தந்திர சாஸ்திரங்கள் கூறுகின்ற பலவிதமான ரகசிய சாதனைகளை  குருதேவர் இரண்டு மூன்று ஆண்டுகள் செய்திருந்தும், அவற்றைப்பற்றிய விவரங்களை  அவர் எங்களுள் யாரிடமும் முழுமையாகச் சொன்னதில்லை. சாதனைஆர்வத்தைத் தூண்டுவதற்காக அவ்வப்போது சில விவரங்களைச் சிலரிடம் கூறியிருக்கிறார்.
தகுந்த ஒரு சிலருக்கு அவரவர்   தேவைக்கேற்ப சில சாதனை முறைகளைக் கற்பிக்கவும் செய்தார்.
குருதேவரை நாடி பல்வேறு இயல்புடைய பக்தர்கள் வந்தனர். அவர் தாந்திரிக சாதனைகளைச்செய்து அபூர்வ அனுபவங்களைப்பெற்றிருக்காவிட்டால், அவர்களின் வெவ்வேறு மனநிலைகளை அறிந்து, அவற்றிற்கு ஏற்ப அவர்களுக்கு வழிகாட்டியிருக்க முடியாது.
இதற்காகத் தான் அன்னை பராசக்தி அவரைத் தாந்திரிக  சாதனைகள் மேற்கொள்ளச் செய்திருக்கவேண்டும். தம்மைச்சரணடைந்த பக்தர்களுக்கு குருதேவர் எவ்வாறு பல்வேறு சாதனை முறைகளில் வழிகாட்டினார். என்பதை வேறொரு பகுதியில் குறிப்பிட்டுள்ளோம் .அந்தப்பகுதியைப் படிக்கும் போது இதனைத் தெளிவாகப்புரிந்து கொள்ள முடியும்..
தாந்திரிக சாதனைகளின் போது தமது இயல்பு முன்பு இருந்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.என்று குருதேவர் கூறினார்.
மேலே குறிப்பிட்ட வற்றைத் தவிர இந்த சாதனைகளின் போது கிடைத்த பல காட்சிகளைப் பற்றியும் பல்வேறு அனுபவங்களைப் பற்றியும் அவ்வப்போது எங்களிடம் அவர் கூறியிருக்கிறார்.
அவற்றுள் சிலவற்றை இங்கு கூறுகிறோம். அன்னை சிலவேளைகளில் நரிபோல் உருவம் கொள்கிறான். பைரவரின் வாகனம் நாய் என்று கேள்விப்பட்ட அவர், அந்த விலங்குகள் உண்டபின் எஞ்சிய உணவைப் பிரசாதமாகக்கருதி துளிகூடத் தயக்கமின்றி உண்டார்.
உடல், உள்ளம், வாழ்க்கை அனைத்தையும் அன்னையின் தாமரைத் திருவடிகளில் முற்றிலுமாகச் சமர்பித்தபோது உள்ளும் புறமும் ஞானத்தீ கொழுந்து விட்டெரிந்ததைக் கண்டார்.
அவரது குண்டலினி சக்தி விழித்தெழுந்து சிரசை நோக்கிச் சென்றது.
மூலாதாரம் முதல் சஹஸ்ராரம் வரையிலுள்ள அனைத்து ஆதாரங்களிலும் கவிழ்ந்து கிடந்த தாமரைகள் அப்போது நிமிர்ந்து மலர்ந்தன.
ஒவ்வோர் ஆதாரத்திலும் அற்புதமான அனுபவங்கள் பல ஏற்பட்டன. தெய்வீகப்பேரொளியுடன் கூடிய ஒருவர் சுழுமுனை நாடியின் வழியாகச் சென்று, கவிழ்ந்து கிடந்த தாமரை மலர்களைத் தம் நாவினால் தொட்டார். உடனே அவை நிமிர்ந்து மலர்ந்தன.
சுவாமி விவேகானந்தர் ஒரு சமயம் தியானம் செய்ய அமர்ந்திருந்த போது, முக்கோணவடிவப் பேரொளி ஒன்று தோன்றிப் பிரகாசிப்பதைக் கண்டார். அது உயிருணர்வுள்ளதாக அவருக்குத்தோன்றிற்று.ஒரு நாள் அவர் தட்சிணேசுவரத்திற்கு வந்தபோது குருதேவரிடம் இதைப்பற்றிக்கூறினார். அதற்கு குருதேவர், நல்லது, நல்லது நீ பிரம்ம யோனியைப் பார்த்திருக்கிறாய்.
வில்வ மரத்தடியில் சாதனைகள் செய்த போது நானும் அதனைப்பார்த்தேன். ஒவ்வொரு வினாடியும் அதிலிருந்து கணக்கற்ற பிரம்மாண்டங்கள் தோன்றிக் கொண்டிருந்ததையும் கண்டேன் என்று சொன்னார்.
அனைத்து ஒலிகளும் ஒன்று திரண்ட பிரணவப்பேரொலி பிரபஞ்சம் முழுவதிலிருந்தும் தொடர்ச்சியாக எழுவதைக்கேட்டார் குருதேவர் . அந்த நாட்களில் அவரால் பறவை,விலங்குகளின் மொழிகளைக்கூடப்புரிந்து கொள்ள  முடிந்ததாகச்சிலர் கூறினர்.  அவர்களிடம் குருதேவரே இதைச்சொன்னாராம். இந்த நாட்களில் தான் யோனியில் அன்னை பராசக்தி வீற்றிருப்பதையும் அவர் பிரத்தியட்சமாகக் கண்டார்.
அந்தக் காலகட்டத்தின் பிற்பகுதியில் தம்முள் அணிமா போன்ற எட்டு சித்திகள் தோன்றுவதை அவர் கண்டார்.
ஹிருதயர் சொன்னதன் பேரில், ஒரு நாள் குருதேவர் அன்னையிடம் சென்று இந்த சித்திகளைப் பிரயோகிப்பதால் விளையும் பயன்களைப்பற்றி அறிய முற்பட்ட போது, அவை ஒரு விலைமகளின் மலத்தைப்போல் ஒதுக்கப்பட வேண்டியவை என்று அறிந்துகொண்டார்.
அதிலிருந்து சித்திகளைப் பற்றிக்கேட்டாலே தமக்கு வெறுப்பாக இருப்பதாக குருதேவர் கூறுவார்.
இந்தச் சமயத்தில் குருதேவர் பெற்றிருந்த சித்திகளைப் பற்றிய ஒரு செய்தி எங்கள் நினைவுக்கு வருகின்றது.
ஒரு நாள் அவர் சுவாமி விவேகானந்தரைத் தனியாகப் பஞ்சவடிக்கு அழைத்து, இதோ பார்! எட்டு சித்திகளும் என்னிடம் உள்ளன. அவற்றை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை என்று நெடுநாட்களுக்கு முன்பே நான் முடிவு செய்துவிட்டேன். அவற்றைப் பயன்படுத்த வேண்டிய தேவையும் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை.நீ சமயபோதனை போன்ற பல செயல்களைச் செய்ய வேண்டியிருக்கும். அதனால்  அந்த சித்திகளை உனக்குக்கொடுக்க நான் முடிவு செய்து விட்டேன்.இதோ அவை! என்று கூறி அவற்றை அளிக்கத் தயாரானார். அப்போது சுவாமிஜி, இந்த சித்திகள் கடவுளை உணர்வதற்கு எனக்கு உதவுமா? என்றுகேட்டார். அதற்கு குருதேவர் கடவுளை உணர இவை உதவா. ஆனால் சமயபோதனை போன்ற பணிகளில்  உனக்கு மிகவும் உதவியாக இருக்கும்,என்று சொன்னார். சுவாமிஜி அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். இதனால் குருதேவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக சுவாமிஜி பின்னாளில் கூறினார்.

தொடரும்..

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-44

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-44

கங்கை நதிக்கு வெகு தொலைவிலிருந்து மனிதன் உட்பட ஐந்து உயிரினங்களின் சுபாவங்கள்  கொண்டுவரப்பட்டன. தாந்திரிக சாதனைகளுக்கு உகந்தவாறு இரண்டு பீடங்கள் அமைக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று, கோயில் நந்தவனத்தின் வடக்கு எல்லையிலிருந்த வில்வ மரத்தின் கீழும், மற்றொன்று குருதேவர் தம் கையால்  நட்டு உருவாக்கிய  பஞ்சவடியிலும் இருந்தன. இவற்றுள் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து குருதேவர் ஜப தியானங்களில் ஈடுபடுவார். இரவும் பகலும் எவ்வாறு கடந்து செல்கின்றன என்பது பற்றிய நினைவின்றி இந்த அற்புத சாதகரும் அந்த உத்தம குருவும் ஓரிரு மாதங்களைக் கழித்தனர்.
குருதேவர் கூறுவார்., பகல் வேளைகளில் பிராம்மணி கோயிலிலிருந்து வெகுதூரம் சென்று, பல இடங்களில் தேடி தாந்திரிக சாதனைக்குத் தேவையான பல அபூர்வப்பொருட்களைத் திரட்டி வருவார். அவற்றை இரவு நேரத்தில் பஞ்சவடி அல்லது வில்வ மரத்தின் கீழ் வைத்துவிட்டு என்னை அழைப்பார்.
அந்தப்பொருட்களைக்கொண்டு அன்னையின் பூஜையை முறைப்படி செய்துவிட்டு,ஜப தியானங்களில் ஆழ்ந்து ஈடுபடுமாறு செய்வார். ஏனோ என்னால் ஜபத்தில் சிறிதும் ஈடுபடமுடியவில்லை. ஜபமாலையை உருட்டத் தொடங்கியவுடனேயே மனம் சமாதியில் மூழ்கிவிடும்.சாஸ்திரம் கூறுகின்ற பலன் உடனே அனுபவமாகிவிடும்.
காட்சிக்குப் பின் காட்சி அனுபவத்திற்குப் பின் அனுபவம் என்று அந்த நாட்களில் எத்தனையெத்தனை அற்புத அனுபவங்கள்! நான் கண்ட காட்சிகளும் பெற்ற அனுபவங்களும் எண்ணில் அடங்கா! விஷ்ணு கிராந்தி என்று நூலில் உள்ள அறு பத்துநான்கு தந்திரங்களில் கூறப்பட்ட சாதனைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக என்னை ஈடுபடுத்தினார் பிராம்மணி. அப்பப்பா எவ்வளவு கடினமான சாதனைகள்! அவற்றைச் செய்வதற்கு முயன்ற பல சாதகர்கள் வழிதவறி தோல்வியைத் தழுவினர். அன்னையின் பேரருளால் தான் நான் வெற்றி பெற முடிந்தது.
ஒரு நாள் இரவில் பிராம்மணி அழகிய இளம்பெண் ஒருத்தியைக்கூட்டி வந்தார். பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, தேவியின்ஆசனத்தில் அந்தப்பெண்ணை நிர்வாணமாக அமர்த்தி விட்டு என்னிடம் .
மகனே இவளை அன்னையாக எண்ணி பூஜை செய்“ என்று சொன்னார். பூஜைமுடிந்ததும், இவளை சாட்சாத் அன்னை பராசக்தியாக எண்ணி இவள் மடியில் அமர்ந்து ஒருமுகபட்ட மனத்துடன் ஜபம் செய், என்று கூறினார்.
எனக்கு பயம் வந்துவிட்டது அழுதுகொண்டே அன்னையிடம் அம்மா உன்னிடம் முற்றிலும் சரணடைந்துவிட்ட என்னை என்ன செய்கிறாய்?
இதற்குரிய சக்தி உனது இந்தக் குழந்தையிடம்   உள்ளதா? என்று முறையிட்டேன்.
இவ்வாறு நான் பிராத்தித்தது தான் தாமதம் தெய்வீக சக்தி என்னை ஆட்கொண்டது. ஆவேசம் வந்தவன் போல, மந்திரத்தைச்சொல்லிக்கொண்டே நான் என்ன செய்கிறேன் என்பதையே அறியாமல் அந்தப்பெண்ணின் மடியில் சென்று அமர்ந்தேன்.
அமர்ந்ததும் சமாதி நிலையில் ஆழ்ந்து விட்டேன்.சுய நினைவு வந்த பின்னர் பிராம்மணி என்னிடம் , மகனே  எல்லாம் நிறைவுற்றுவிட்டது.பிறரால் எவ்வளவோ சிரமத்தின் பேரில், ஏதோ சிறிது நேரம் ஜபம் மட்டுமே செய்யமுடியும். நீயோ சுயநினைவை இழந்து ஒரேயடியாக சமாதிநிலையில் மூழ்கிவிட்டாய்! என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இதைக்கேட்டதும் எனக்கு நிம்மதியாயிற்று. இத்தகைய கடினமான சோதனையை வெற்றிகரமாக க் கடக்க வைத்ததற்காக மீண்டும் மீண்டும் அன்னையை       இதயம் நிறைந்த நன்றியுடன் வணங்கினேன்.
ஒரு நாள் பிராம்மணி கபாலம் ஒன்றில் மீனைச் சமைத்து அன்னைக்குப் படைத்தார். என்னையும் அவ்வாறு செய்யும்படிச்சொல்லி, அந்த மீனை உண்ணும்படிச்சொன்னார். அவர் சொன்னபடியே நான் செய்தேன்.எவ்வித அருவருப்பும் எனக்கு ஏற்படவில்லை.
ஆனால் எல்லா அருவருப்பும் சேர்ந்து வரத்தக்கதான சம்பவம் இன்னொரு நாள் நிகழ்ந்தது. அன்று பிராம்மணி அழுகிப்போன மனித மாமிசத்துண்டு ஒன்றைக்கொண்டுவந்து நிவேதனம் செய்தபின் அதை என் நாக்கால் தொடச்சொன்னார். தாங்கமுடியாத அருவருப்பின் காரணமாக,சீச்சீ இது எப்படி முடியும்? என்று கூறிவிட்டேன்.
ஆனால் பிராம்மணியோ அமைதியாக இதில் என்ன இருக்கிறது, இதோ பார் நான் செய்கிறேன், என்று கூறியபடியே அந்த மாமிசத்துண்டை விண்டு சிறுபகுதியைத் தம் வாயினுள் போட்டுக்கொண்டார். பின்னர் என்னிடம், எதிலும் அருவருப்பு கொள்ள  க்கூடாது. என்று கூறிவிட்டு மறுபகுதியை என் முகத்திற்கு நேராக நீட்டினார்.
உடனே அன்னையின் பயங்கரமான சண்டிகை உருவம் என்னுள் கிளர்ந்தெழுந்தது. அம்மா, அம்மா என்று சொல்லிக்கொண்டே பாவ சமாதியில் மூழ்கிவிட்டேன். அதன் பின்னர் பிராம்மணி என் வாயில் மாமிசத்துண்டை வைத்தபோது எனக்கு எவ்வித அருவருப்பும் தோன்றவில்லை.
இவ்வாறு எனக்குப் பூர்ணாபிஷேகம் செய்து, எத்தனை யெத்தனை தாந்திரிகச்சடங்குகளைச் செய்வித்தார் பிராம்மணி. அவற்றிற்கு ஒரு கணக்கே இல்லை.
இப்போது எல்லாம் என் நினைவுக்கு வரவில்லை. ஒரு நாள் இளம் காதலர் இருவர் உறவில் ஈடுபட்டிருந்ததைக்கண்டேன். எனக்கு அது சிவ-சக்தியின் திருவிளையாடலாகவே தோன்றியது.
அந்த உயர்ந்த நினைவில் ஆழ்ந்து சமாதியில் மூழ்கிவிட்டேன். சுயநினைவு திரும்பியபோது என்னிடம் பைரவி, மகனே, நீ ஆனந்தாசனத்தில்  வெற்றி பெற்று திவ்ய நிலையை அடைந்து விட்டாய்! இதுவே வீர நிலையின் இறுதிசாதனை என்று கூறினார்.
சிறிது காலம் கழித்து நான் தாந்திரிக முறைப்படி விலைமாது ஒருத்தியை காளி கோயில் மண்டபத்தில் அனைவர் முன்னிலையிலும்  பகலில் பூஜித்தேன். குலாகார பூஜை எனப்படும் இந்தப்பூஜைக்கு உதவுவதற்காக பைரவி பிராம்மணி வேறொரு பைரவியை அழைத்து வந்திருந்தார்.
அந்தப்பூஜையு்டன் எனது வீரநிலை சாதனைகள் நிறைவுற்றன.
தாந்திரிக சாதனைக்காலத்தில் அனைத்துப்பெண்களையும் அன்னையாகக் காணும் மனநிலையைப்பெற்றிருந்தது  போல துளிகூட மது அருந்தாமலும் இருந்தேன்.
ஏனெனில் காரணம், என்ற சொல்லைக்கேட்டதுமே என்மனம் உலகின் காரணப் பொருளான அன்னையை எண்ணி, அதில் லயித்து நான் என்னை மறந்து விடுவேன்.
அது போல யோனி” என்ற சொல் மூட என்னை உலகின் யோனியான( மூலக்காரணமான) அன்னையை நினைவூட்டி சமாதியில் ஆழ்த்திவிடும்.
தட்சிணேசுவரத்தில் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் குருதேவர் தாம் வாழ்நாள் முழுவதம் பெண்களைத் தாயாக பாவித்து வந்ததைப்பற்றி எங்களிடம் கூறினார். அதனை விளக்க முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானைப்பற்றிய கதை  ஒன்றையும் சொன்னார்.ஞானியர்க்கும் சித்தர்களுக்கும் அதிபதியான அவரது மனத்தில் பெண்கள் அனைவரும் தாய் என்னும் எண்ணம் எப்படி வேரூன்றியது என்பதை விளக்குவது அந்தக் கதை.
அந்தக் கதையைக்கேட்டுமுன், பானை வயிற்றோனும் யானை முகனுமான பிள்ளையாரிடம் எங்களுக்கு மரியாதையோ பக்தியோ இருக்கவில்லை. குருதேவர் இந்தக் கதையைக்கூறிய பின்னர் தான் மற்ற தெய்வங்களுக்கு முன் வணங்கப்பட வேண்டியவர் விநாயகரே என்ற முடிவுக்கு வந்தோம்.
குழந்தைப்பருவத்தில் ஒரு நாள் விநாயகர் விளையாடிக்கொண்டிருந்தபோது ஒரு பூனையைத்துன்புறுத்த நேர்ந்தது. அடித்தும் கிள்ளியும்  அதனைக்காயப்படுத்தினார் அவர். அந்தப் பூனை சிறிது நேரத்திற்குப்பின் எவ்வாறோ ஓடிவிட்டது.
விளையாட்டு முடிந்தபின் அவர் அன்னை உமையிடம் வந்தார். அங்கே அன்னையின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதற்கான காரணத்தைக்கேட்டார்.உமாதேவி. இதற்கெல்லாம் நீ தான் காரணம். என்று கூறினார். இந்தப்பதில் விநாயகருக்கு ஆச்சரியத்தைக்கொடுத்தது. என்ன நான் காரணமா, நான் எப்போது உங்களைக் காயப்படுத்தினேன்.?
அல்லது நான் செய்த தவறுக்காக நீங்கள் இவ்வாறு துன்புறநேர்ந்ததா. அது எப்படி? என்று கேட்டார். உலகின் அன்னையான உமை. மகனே, இன்று ஏதேனும் உயிருக்கு நீ துன்பம் விளைவித்தாயா? நினைவு படுத்திப்பார் என்றாள். விநாயகருக்குப் பூனையின் ஞாபகம் வந்தது.ஆம். சற்று நேரத்திற்கு முன் நான் ஒருபூனையை அடித்தேன் என்று தயங்கியபடி சொன்னார். அந்தப் பூனையின் சொந்தக்காரன்  தான் அன்னையை இவ்வாறு அடித்திருப்பான் என்று எண்ணிய விநாயகர், தன் தவறால் அன்னை காயப்பட நேர்ந்ததை எண்ணி அழத்தொடங்கினார்.
அழுகின்ற பிள்ளையை அணைத்தபடி, மகனே, என்னை யாரும் அடிக்கவில்லை. அந்தப்பூனையில் இருப்பது நானே அல்லவா! உயிர்கள் அனைத்துமாக நானே அல்லவா நடமாடுகிறேன்! அதனால் பூனையை நீ அடித்த அடிகள் என் மேலும் விழுந்துள்ளன. நீ அறியாமல் செய்து விட்டாய், வருந்தாதே, பெண் வடிவங்கள் அனைத்திலும் நானும் , ஆண் வடிவங்களில் உன் தந்தையும் இருக்கிறோம் என்பதை மறக்காதே. சக்தி, சிவம் இரண்டையும் தவிர இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை என்பதைத்தெரிந்து கொள்! என்று கூறினார் உமாதேவி! இந்தச்சொற்கள் விநாயகரின் உள்ளத்தில் பதிந்துவிட்டன. பின்னர் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்துவிட்டார்.
அவர் அனனையை அல்லவா திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக பிரம்மசாரியாகவே வாழ்ந்தார். அண்டம் அனைத்தையும் சிவசக்தி வடிவாகவே கண்டதால் ஞானியருள் தலைசிறந்த ஞானியாகத் திகழ்கிறார் விநாயகர்.
பின்னர் விநாயகரின் அறிவுத் திறனைக் காட்டுகின்ற இன்னொரு கதையும் கூறினார் குருதேவர்.
ஒரு நாள் உமாதேவி தான் அணிந்திருந்த ரத்தினமாலையை விநாயகருக்கும் முருகனுக்கும் காட்டி, பதினான்கு உலகங்களைக் கொண்டிருக்கும் இந்த அண்டத்தைச்சுற்றி விட்டு முதலில் என்னிடம் வருபவனுக்கு இந்தமாலையைப் பரிசாகக்கொடுக்கிறேன். என்று கூறினாள். மயல்வாகனனும் தேவசேனாபதியுமானமுருகன் அண்ணனின் பருத்த உடம்பையும் பானைவயிற்றையும் அவனது வாகனமான மூஞ்சுறுவையும் நினைத்துப்பார்த்து ஏளனப் புன்னகையோடு தனது வெற்றி நிச்சயம்  என்ற நம்பிக்கையுடன் மயில்மீது அமர்ந்து அண்டத்தை வலம்வரத் தொடங்கினான். கந்தன் புறப்பட்டு வெகுநேரம் கழித்த பின்னர் விநாயகர் தம் இருக்கையிலிருந்து மெள்ள எழுந்தார். சிவசக்தி மயமான இந்த அண்டம் முழுவதும் பார்வதிபரமேசுவரர்களின்  உடலில் அடங்கியுள்ளது. என்பதைத் தம் ஞானக்கண்ணால் கண்டார் அவர். நிதானமாக அவர்களை வலம் வந்து வணங்கி அமர்ந்தார்.. சிறிது நேரத்தில் முருகனும் திரும்பி வந்து சேர்ந்தார். பார்வதிதேவி விநாயகரின் அறிவுக்கூர்மையையும் பக்தியையும் கண்டு ரத்தினமாலையை விநாயகரின்                  கழுத்தில் அணிவித்து அருள்பாலித்தாள்.
விநாயகரின் அறிவு நுட்பத்தையும் அனைத்துப்பெண்களையும் அன்னையாகக்கருதும் மனோபாவத்தையும்  இவ்வாறு விளக்கிய குருதேவர் ” நானும் பெண்களை இவ்வாறே காண்கிறேன்.அதனால் தான் நான் திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் அன்னையைக்கண்டு அவளை வழிபடவும் அவளது பாதங்களில் வீழ்ந்து வணங்கவும் செய்தேன் என்று கூறினார்.
அனைத்துப்பெண்களையும், அன்னையெனக்கொண்டு தந்திரங்கள் கூறும் வீர நிலை சாதனைகள் அனைத்தையும் செய்த இன்னொருவரை இதுவரை நாம் கேள்விப்பட்டதில்லை.
வீர நிலை சாதகர்கள் அனைவரும் மனைவியின் துணையுடன் சாதனை புரிவது தான் வழக்கமாக இருந்து வந்தது. பெண்துணையின்றி சாதனைபுரியும் சாதகன் தனது குறிக்கோளை அதாவது அன்னையின் அருளைப்பெற முடியாது என்றே அனைவரும் நம்பியிருந்தனர். இந்த நம்பிக்கையின் ஆதிக்கத்தாலும் சுய ஆசைகளின்  வேகத்தாலும் சாதகர்கள் தாந்திரிக சாதனைகளில் மற்றப் பெண்களையும் சேர்த்துக்கொள்ளலாயினர். இதனால் தந்திர சாஸ்திரங்கள் கூறும் வீர நிலை சாதனைகள் இழிந்தவையாகக்கருத படலாயின.
 யுகாவதார புருஷரான குருதேவர் இது விஷயமாக எங்களிடம் பலமுறை கூறியுள்ளார். கனவில் கூட அவர் ஒரு பெண்துணையை எண்ணிப்பார்த்ததில்லை. வாழ்நாள்  முழுவதும் பெண்களை அன்னையாக பாவித்த குருதேவரைத் தாந்திரிகம் கூறுகின்ற வீர நிலை சாதனைகளைச்செய்ய வைத்ததன் மூலம் எத்தனை மகத்தான உள்நோக்கத்தை வெளிப்படுத்திவிட்டாள் அன்னை காளி.

தொடரும்..

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-43

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-43

குருதேவர் ஓர் அவதார புருஷர் என்ற எண்ணம் பிராம்மணியின் உள்ளத்தில் இடையீடின்றி எப்போதும் நிலை பெற்றிருக்குமானால் அவர் குருதேவரை சாதனைகளில் ஈடுபடும்படித்தூண்டியிருக்க மாட்டார்.
ஆனால் நிலைமை அப்படியில்லை.குருதேவரை முதன்முதலில் சந்தித்ததிலிருந்து பிராம்மணி அவரை ஒரு குழந்தையாகக்கண்டு நேசித்து வந்தது, பற்றி ஏற்கனவே கூறியுள்ளோம். ஒருவரது பெருமையையும் கீர்த்தியையும் கருத்தில் கொள்ளாமல் அன்பு                                                                          செய்பவரின் நன்மை ஒன்றிற்காக மட்டும் செய்யப்படுவது தான் அன்பு.
இந்த அன்பைவிடச் சிறந்த ஒன்று உலகில் இல்லவே இல்லை. இத்தகையோர் அன்பினால் உந்தப்பட்டுதான் பைரவியும், சாதனைகள் மேற்கொள்ளுமாறு குருதேவரைத் தூண்டினார்.
எல்லா அவதார புருஷர்களின் வாழ்க்கையிலும் இதனை நாம் காண முடியும். அவதார புருஷர்களுடன் நெருங்கிய உறவு கொண்டவர்கள் அவர்களிடம் அசாதாரணமான ஆற்றல்களைக்கண்டு வியப்படைந்தாலும் அடுத்த கணமே அவற்றை மறந்துவிட்டு அவர்களிம் கொண்ட அளவற்ற அன்பினால் சாதாரண மக்களைப்போலவே அவர்களையும் எண்ணி, அவர்களின் நலத்திற்காகப் பாடுபடுவதைக் காண்கிறோம். பைரவியும் குருதேவரின் அற்புதமான நிலைகளையும் அசாதாரணமான சக்திகளையும் கண்டு அவ்வப்போது வியக்காமல் இல்லை.
ஆனால் அவரது செயற்கைத்தனம் கலவாதபக்தி, நம்பிக்கை, சரணாகதி போன்ற பண்புகள் பைரவியின் உள்ளத்தில் தாயன்பை வெளிப்படுத்தி மற்ற பெருமைகளை மறக்கச் செய்தது. எப்படி ஒரு தாய் தன் குழந்தையை மகிழ்ச்சியாக வைத்திருக்கத் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்வாளோ, அப்படியே பைரவியும் குருதேவரின் மகிழ்ச்சிக்காக எல்லாவகையிலும் முனைந்தார்.
தகுந்த சீடனுக்குக் கற்பிக்கும் வாய்ப்பு குருவுக்கு ஏற்படும் போது அவர் மனத்தில் நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. குருதேவரைப்போன்று உத்தம சீடரைப் பெறுவதில் பிராம்மணி அளவற்ற மகிழ்ச்சி அடைவது இயல்புதானே! அத்துடன் குருதேவரைத் தன் பிள்ளைபோல் நேசித்தார் பைரவி. ஆகவே தனது ஆன்மீக உறவு தவத்தின் பலன் ஆகியவை குருதேவருக்கு குறுகிய காலத்திலேயே கிடைக்க வேண்டும் என்று அவர் ஆர்வம் கொண்டதில் வியப்பு ஒன்றுமில்லை.
தாந்திரிக சாதனைகளைப் பயில வேண்டுவதன் தேவையையும் அவசியத்தையும் அன்னை காளியிடம் கேட்டுத் தெரிந்து அவளது அனுமதி பெற்ற பின்னரே தாம் அந்த சாதனைகளில் ஈடுபட்டதாக குருதேவர் பலமுறை கூறியுள்ளார்.
பிராம்மணியின் ஆர்வத்தாலும் தூண்டுதலாலும் மட்டுமே அவர் தாந்திரிக சாதனைகளில் ஈடுபட்டார் என்பதில்லை. சாதனைகளின் விளைவாக அவர் பெற்ற யோக திருஷ்டியும் அதற்குக் காரணமாக அமைந்தது. சாஸ்திரங்கள் கூறும் சாதனை வழி நின்று அன்னையின் அருட்காட்சி பெறுவதற்கான வாய்ப்பு தம்க்குத் தற்போது அமைந்துள்ளது என்பதை அவரது அகக்காட்சி அவருக்குக் காட்டிற்று .
அதனால் குருதேவரின் ஒருமைப்பட்ட மனம், பிராம்மணியின் ஆர்வத்தால் தூண்டப்பட்டு சாதனைப்பாதையில் முன்னேறியது.
நம்மைப்போன்ற சாதாரண மக்களால் அந்த ஆர்வத்தின் தீவிரத்தையோ ஆழத்தையோ புரிந்து கொள்ள முடியாது.
உலகின் பல்வேறு ஆசாபாசங்களில் கட்டுண்ட நம்மிடம் அந்த தெய்வீக உள்நோக்கும், ஒருமைப்பட்ட மனமும் எப்படி இருக்க முடியும்? வண்ண ஜாலங்களை அள்ளி வீசி, நுரை பொங்கி த் தவழும் அலைகளின் வனப்பிலும் வண்மையிலும் மகிழ்வதை விட்டுவிட்டு கடலின் ஆழத்தில் அமிழ்ந்து அதன் அடிப்பரப்பைத் தொட்டு பார்க்கின்ற தைரியம் நம்மிடம் எங்கே இருக்கிறது? உன்னுள் ஆழ்ந்து மூழ்கு, ஒரேயடியாக மூழ்கிவிடு, என்எறல்லாம் திரும்பத்திரும்பக்கூறி குருதேவர் நம்மை ஊக்குவிப்பரோ அதைப்போல உலகின் மீதும் உடலின் மீதும் உள்ள பற்றுக்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு ஆன்மீகம் என்ற அகண்ட கருவறையில் ஒரேயடியாக மூழ்குகின்ற திறமை நம்மிடம் எங்கே? இறைவனைக்காண முடியாததால் தீவிர ஆன்ம வேட்கையுடன், அம்மா உன் காட்சியைக்கொடு” என்று கதறியபடியே அவர் தமது முகத்தைப் பஞ்சவடியின் கங்கைக்கரை மணலில் தேய்த்துக்கொள்வார்.
இப்படி ஒரு நாளா, இரு நாட்களா? நாட்கள் தாம் கழிந்து கொண்டே போகும், இந்த மன ஏக்கம் மட்டும் தணியவே இல்லை. இந்தச்சொற்கள் எல்லாம் நம் செவிகளில் நுழைவது உண்மை தான், ஆனால் அவை நம்மில் எந்த மாற்றத்தையாவது ஏற்படுத்துகின்றனவா? இல்லையே! ஏன் தான் ஏற்படுத்த வேண்டும்? அன்னை நிச்சயம் இருக்கிறாள், எல்லாவற்றையும் துறந்து மன ஏக்கத்துடன் அவளைக்கூவியழைத்தால் , அவள் நம்முன் கண்டிப்பாக வருவாள், என்பதை த்தான் குருதேவரைப்போல முழுமையாக நாம் நம்புகிறோமா?
குருதேவர் காசிப்பூரில் தங்கியிருந்தபோது சாதனை நாட்களில் தமக்கிருந்த ஆன்ம தாகத்தின் தீவிரத்தைப் பற்றி ஒருநாள் கூறினார். எங்களுக்கு பிரமிப்பாகி விட்டது. நாங்கள் அதை எந்த அளவிற்கு வாசகர்களுக்குவிவரிக்க முடியும் என்று தெரியவில்லை.இருப்பினும் முயற்சி செய்கிறோம்.
கடவுளைக் காண்பதற்காக  சுவாமி விவேகானந்தருக்கு இருந்த தீவிர ஆர்வத்தை. காசிப்பூரில் வாழ்ந்த நாட்களில் நாங்கள் நேரடியாகக் கண்டுள்ளோம். சட்டத்தேர்வுக்குப் பணம் செலுத்தச் சென்ற வேளையில் அவருக்குத் திடீரென ஆன்மீக விழிப்பணர்வு உண்டாயிற்று. அதன் விளைவாகச்சுற்றுப்புற சூழ்நிலைகளை மறந்து பைத்தியம் பிடித்தவரைப்போல், உடலில் ஒரே ஓர் ஆடையுடன், வெறுங்காலுடன், நேராக குருதேவரிடம் ஓடினார். அவரிடம் தன் இதய தாகத்தைக்கொட்டி அருளைப்பெற்றார். அதன்பின் உணவு உறக்கம் துறந்து இரவும் பகலும் ஜபம், தியானம், பாடல்கள் ஆன்மீக விவாதம் என்றே கழித்தார். சாதனையில் அவர் கொண்டிருந்த அளவற்ற ஆர்வத்தின் காரணமாக அவரது இளகிய மனம் கூடக் கடினமாகி தாய் சகோதரர்கள் ஆகியோரின் துன்பங்களையும் பொருட்படுத்தாத நிலைக்கு வந்துவிட்டது. குருதேவர் காட்டிய பாதையில் ஒருமித்த மனத்துடன் தொடர்ந்து முன்னேறி. ஒன்றன் பின் ஒன்றாக தெய்வீகக் காட்சிகளைப்பெற்று நான்கு மாதங்களுள் நிர்விகல்ப சமாதியின் பேரின்பத்தையே பெற்றார். இவையெல்லாம் நமக்குத் தெரிந்த செய்திகளே.
இவையனைத்தும் எங்கள் கண்முன் நடந்தவை. எங்களை வியப்புறச் செய்தவை.இவற்றால் பெருமகிழ்ச்சியுற்ற குருதேவர் சுவாமிஜியின் அசாதாரண பக்தி இறைஏக்கம் சாதனையில் அளவற்ற ஆரை்வம் ஆகியவற்றைப்பற்றி தினமும் புகழ்ந்து பேசுவார். ஒருநாள் அவர் தமது ஆன்ம வேட்கையையும் விவேகானந்தரின் ஆன்ம வேட்கையையும் ஒப்பிட்டு, நரேன் பக்தியும் ஆர்வமும் உண்மையிலேயே அசாதாரணமானவை தாம்,ஆனால் இங்கு( தம்மைச்சுட்டிக்காட்டி)ஏற்பட்ட ஏக்கத்துடன்  ஒப்பிடும் போது அவனுடைய வேட்கை மிகவும் சாதாரணமானதே. எனக்கிருந்த வேட்கையில் அது நாவில் ஒரு பங்கு கூட இருக்காது, என்று கூறினார். வாசகர்களே, குருதேவரின் இந்தச்சொற்கள்  எத்தகைய உணர்ச்சிகளை எங்களுள் எழுப்பியிருக்கும் என்பதை முடிந்தால் நீங்களும் சற்று கற்பனை செய்து தான் பாருங்களேன்.
 அன்னையின் அருளாணைபெற்ற குருதேவர் பிற அனைத்தையும் மறந்து சாதனையில் மூழ்கினார். நுட்பமதியும் செயல்திறனும் ஒருங்கே அமையப்பெற்ற பிராம்மணி, தாந்திரிக சாதனைக்கு வேண்டிய பொருட்களைச்சேகரித்து அவற்றைப் பயன்படுத்துவது குறித்து எடுத்துக்கூறி குருதேவருக்கு உதவுவதில் ஈடுபட்டார்.

தொடரும்..

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-42

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-42

குருதேவருக்குக் கிடைத்த ஆன்மீக அனுபவங்கள் மற்றும் காட்சிகளைப் பற்றிக்கேட்டறிந்த பிராம்மணி இத்தகைய நிலைகள் அசாதாரணமான பக்தியால் மட்டுமே தோன்றும் என்ற உறுதியான முடிவுக்கு வந்தார்.
கடவுளின் ஆனந்த பரவசத்தில் ஆழ்வதையும் கடவுளைப் பற்றிய  உரையாடல்களின் போது அடிக்கடி பாவ சமாதியில் மூழ்கி தன்னினைவு இழப்பதையும் கண்டபைரவிக்கு குருதேவர் சாதாரண சாதகர் அல்லர்  என்பது உறுதியாயிற்று. சைதன்ய சரிதாமிருதம், பாகவதம் போன்ற நூல்களில் பல இடங்களில் சைதன்ய மகாபிரபு மக்களை உய்விக்க மறுபடியும் அவதரிப்பார் என்று கூறப்பட்டுள்ளதுடன் அதற்கான பல அறிகுறிகளும் குறிக்கப்பட்டுள்ளன. அவை  குருதேவரைக் கண்ட பின் பிரம்மணியின் மனத்தில் அடிக்கடி எழுந்தன. இந்த நூல்களில் சைதன்யர், நித்யானந்தர் ஆகியோரின் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவற்றுடன் குருதேவரின் நடைமுறைகள், அவர் பெற்ற காட்சிகள்  முதலியவற்றை ஒப்பு நோக்கி அவை ஒத்திருப்பதைக் கண்டார் அவர். சைதன்ய தேவரைப்போன்று பாவ சமாதியின் போது யாரையாவது தொட்ட மாத்திரத்திலேயே அவரிடம் ஆன்ம எழுச்சியைத்தோற்றுவிக்க வல்ல ஆற்றல் குருதேவரிடம் இருப்பதைக்கண்டார். கண்ணனின் விரக தாபத்தில் துடித்த வேளைகளில் எல்லாம் சைதன்யரின், உடலில் எரிச்சல் ஏற்பட்டது. அப்போது மலர் மாலைகள் சந்தனக்குழம்பு போன்றவற்றைப் பயன்படுத்தி அந்த எரிச்சல் தணிக்கப்பட்டது.
குருதேவருக்கு உடல் எரிச்சல் ஏற்படுகின்ற போது அதனைத் தணிக்க அதே வழிமுறைகளைக் கையாண்டு தக்க பலனைக் கண்டார் பைரவி. ஆகவே சைதன்யரும் நித்யானந்தரும் மக்களைக் கடைத்தேற்றுவதற்காக குருதேவரின் உடல், உள்ளம், ஆகியவற்றைப் பற்றிக்கொண்டு மறுபடியும் உலகில் அவதரித்துள்ளனர் என்ற திடநம்பிக்கை பைரவியின் மனத்தில் உண்டாயிற்ற.
சிகோர் கிராமத்திற்கு ஒருநாள் குருதேவர் சென்று கொண்டிருந்த போது அவரது உடலிலிருந்து இரு சிறுவர்கள் தோன்றிய காட்சிகளைப் பற்றி முன்னரே சொல்லியிருக்கிறோம்.
இந்தக் காட்சியைப் பற்றி குருதேவரிடமிருந்து கேட்ட பிரம்மணியின் நம்பிக்கை மேலும் திடமாயிற்று. இந்த முறை சைதன்யர், நித்யானந்தரின் உடலில் அவதரித்துள்ளார். என்று உறுதிபடக்கூறினார்.
இவ்வுலகில் யாரிடமிருந்தும் எதையும் பிராம்மணி எதிர்பார்த்ததில்லை. தான் உண்மையென்று உணர்ந்ததை எடுத்துச் சொல்வதால் பிறர் தன்னை நிந்திக்கவோ ஏளனம் செய்யவோ கூடும்  என்பது பற்றியும் அவர் கவலைகொள்ளவில்லை. எனவே ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றிய தனது கருத்தை எல்லோரிடமும் சொன்னார்.
ஒரு நாள் பஞ்சவடியில் குருதேவர் மதுர்பாபுவுடன் அமர்ந்திருந்தார்ஹிருதயரும் அருகில் இருந்தார். உரையாடலின் போது தம்மைக்குறித்து பிராம்மணி கொண்டுள்ள எண்ணம் பற்றி குருதேவருக்கு மதுரிடம் கூறினார். அவதார புருஷருக்குரிய அடையாளங்கள் யாவும் இந்த உடலிலும் மனத்திலும் (தம்மைச்சுட்டிக்காட்டி) இருப்பதாக பிராம்மணி கூறுகிறார். அவர் ஏராளமான சாஸ்திரங்களைப் படித்தவர். கைசவம் பல நூல்களையும் வைத்துள்ளார். அதற்குமதுர் சிரித்துக்கொண்டே அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் அவதாரங்கள் பத்துக்குமேல் இல்லையே‘ அப்படியிருக்க அவர் சொல்வது எப்படி உண்மையாகும்? ஆனால் அன்னைகாளியின் அருள் உங்களிடம் பரிபூரணமாக உள்ளது .இது உண்மை என்று கூறினார்.
இவவாறு பேசிக்கொண்டிருந்த போது அவர்களை நோக்கி சன்னியாசி ஒருவர் வருவதை மதுர் கண்டார்.
உடனே குருதேவரிடம் தாங்கள் குறிப்பிட்டது இவரைத் தானா? என்று கேட்டார். ஆம்  என்றார் குருதேவர். பிராம்மணி ஒரு தட்டு நிறைய இனிப்புப் பண்டங்களுடன் வந்து கொண்டிருந்தார். தம்மையும் சூழ்நிலையையும் மறந்து, அகமுகப்பட்ட ஓர் அசாதாரணமான நிலையில் அவர் காணப்பட்டார். கண்ணனுக்கு உணவூட்டச் செல்லும் யசோதையைப்போல் உள்ளத்தில் தாயன்பு பெருக குருதேவரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அருகில் வந்தபோது அங்கு மதுர்பாபு இருந்ததால் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஹிருதயரிடம் அந்தத் தட்டைத் தந்து, இனிப்புகளை குருதேவருக்குக் கொடுக்குமாறு கூறினார். குருதேவர் மதுர்பாபுவைச்சுட்டிக்காட்டி பிராம்மணியிடம் தாயே! என்னைப்பற்றி நீங்கள் சொன்னவற்றை இவரிடம் சொன்னேன்.இவரோ அவதாரங்கள் பத்துக்கு மேல் இல்லையென்று சொல்கிறார் என்றார்.
மதுரும் பைரவியை வணங்கி தாம் அவ்வாறு கூறியது உண்மையே என்றார். வணங்கியவரை ஆசீர்வதித்துவிட்டு ஏன் பாகவதத்தில் மகாவிஷ்ணுவின் இருபத்துநான்கு அவதாரங்களைப்பற்றியும் மேலும் எண்ணற்ற அவதாரங்களைப்பற்றியும் வியாசர் கூறவில்லையா? அது மட்டுமன்றி சைதன்யர் மீண்டும் அவதரிப்பது பற்றி வைணவ நூல்கள் கூறுகின்றன.இவரிடம்( குருதேவரைச்சுட்டிக்காட்டி) தோன்றுகின்ற பல அறிகுறிகள் சைதன்ய தேவரிடம் வெளிப்பட்டிருந்தது என்று தம் கருத்தைக்கூறினார்.
பிராம்மணி மெலும் பாகவதத்தையும் கௌடீய வைணவ ஆசாரியர்களின்  நூல்களையும் படித்த பண்டிதர்கள் இதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும், எந்த அறிஞரின் முன்னிலையிலும் வாதிட்டு தனது முடிவை விளக்கவும் தயார் என்றும் சொன்னார். பிராம்மணியின் பேச்சுக்கு என்ன சொல்வதென்று மதுர்பாபு மௌனமானார்.
குருதேவரைப் பற்றி பைரவி கூறிய அசாதாரணமான கருத்தை காளி கோயிலிலுள்ள அனைவரும் அறிந்தனர். அந்தச் செய்தி அவர்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. அது பற்றி வேறு பகுதிகளில் விரிவாகக்கூறியுள்ளோம். தம்மைத்திடீரென்று கடவுளின் நிலைக்கு உயர்த்தி பணிவையும் பக்தியையும் பிராம்மணி காட்டிய போதும், குருதேவரின் மனத்தில் எவ்வித மாற்றமும்ஏற்படவில்லை. ஆனால் அவரது கருத்தைக்கேட்டு பண்டிதர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை அறிவதில் ஒரு சிறுவனைப்போல் ஆர்வம் கொண்டு பண்டிதர்களின் சபை ஒன்றைக்கூட்டுமாறு மதுரிடம் கேட்டுக்கொண்டார்.
அந்த சபையில் கலந்து கொள்வதற்காகவே வைஷ்ணவசரண் முதலான பண்டிதர்கள் காளி கோயிலுக்கு வந்தனர். அவர்களிடம் பிராம்மணி எவ்வாறு தம் கருத்தை வலியுறுத்தினார் என்பதை வேறு பகுதியில் தந்துள்ளோம்.


குருதேவரின் தாந்திரிகசாதனை.
பிராம்மணி தனது அறிவுக்கூர்மையாலும் விவாதத் திறமையினாலும் மட்டுமே குருதேவர் ஓர் அவதார புருஷர் என்ற முடிவுக்கு வந்துவிடவில்லை. குருதேவர் உட்பட மூவரைச் சந்தித்து, அவர்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்ற அருளாணையை அன்னையிடம் பெற்றது பற்றி தமது முதல் சந்திப்பின் போது அவர் குருதேவரிடம் கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆகவே ஆன்மீக சாதனைகள் வாயிலாக பைரவி பெற்ற உள்ளுணர்வே அவரை தட்சிணேசுவரத்திற்கு வரவழைத்து, குருதேவரை இவ்வாறு புரிந்து கொள்ள உதவியது என்பதில் ஐயமில்லை. தட்சிணேசுவரத்திற்கு வந்து அவருடன் நெருங்கிப் பழகிய போது தாம் எந்த அளவுக்கு, எந்த வகையில் குருதேவரின் சாதனைகளுக்குத் துணை நிற்கவேண்டும். என்பது குறித்து அவர் நிர்ணயித்துக்கொண்டார்.
 எனவே பிறருக்கு குருதேவரைப்பற்றி ஏற்பட்ட தவறான எண்ணத்தை மாற்றுவதுடன் மட்டும் அவர் நின்றுவிடவில்லை.சாஸ்திரங்களில் கூறியுள்ள பல்வேறு ஆன்மீக சாதனைகளில் குருதேவரை ஈடுபடுத்தி, அன்னையின் பரிபூரணக் கருணைக்கு ஆளாக்கி திவ்ய நிலையில் நிலைபெறச்செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார்.
குருபரம்பரையில் வந்ததும்,சாஸ்திரங்களில் காணப்படுவதுமாகிய சாதனைகளைக் கடைப்பிடிக்காமல் தீவிர பக்தி ஒன்றின் துணையால் மட்டுமே இறைக்காட்சி பெற்றதால் தான் குருதேவரால் தமது உயர்ந்த ஆன்மீக நிலையை அறிந்துகொள்ள முடியவில்லை என்பதை அனுபவம் மிக்க சாதகியான பிராம்மணி புரிந்து கொண்டார். தாம் பெற்ற அற்புதமான காட்சிகளை மூளைக்கோளாறின்  விளைவுகள் என்றும், உடலில் ஏற்பட்டமாறுதல்கள் யாவும் நோயின் காரணமாகத்தோன்றியவை என்றும் அவ்வப்போது குருதேவரிடம் எழுந்த ஐயங்களைப்போக்குவதற்காக, அவரைத் தாந்திரிக சாதனைகளில்  ஈடுபடும்படி பிராம்மணி கேட்டுக்கொண்டார்.
எந்த சாதனைகளுக்கு என்ன பலன் கிட்டும் என்ற விவரங்கள் தந்திர சாஸ்திர நூல்களில் விளக்கப் பட்டுள்ளன. அந்த சாதனைகளைச் செய்து உரிய பலன்களைப்பெறும்போது சாதகனின் நம்பிக்கை திடமாகிறது. சாதனைகளின் உதவியால் உள்ளுலகின் உயர்ந்த நிலைகளை அடைகின்ற ஒருவன் சாதாரண மக்களிலிருந்து வேறுபட்ட உடலையும் மனத்தையும் பெறுகிறான் என்பதை அவன் புரிந்து கொள்ள முடிகிறது. குருதேவரைத் தாந்திரிக சாதனைகளில் ஈடுபடும்படி பிராம்மணி கூறியதற்கு இதுவே காரணம். எதிர்காலத்தில் எத்தகைய அசாதாரணமான அனுபவங்கள்  ஏற்பட்டாலும் மனம் கலங்காமல், அவை உண்மையானவை, சாதனைகளின் விளைவால் உண்டானவை  என்பதை அறிந்தால், தான் தாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி அமைதியாக குருதேவரால் செல்ல முடியும், என்பதை பிராம்மணி உணர்ந்திருந்தார்.
அது மட்டுமின்றி ஒரு சாதகன் தனது அனுபவங்களை சாஸ்திரங்களுடனும் குரு வாக்கியத்துடனும்  ஒப்பிட்டு அவற்றின் உண்மையை உணரும்படி சாஸ்திரங்கள் கூறுவதன் காரணமும் இதுதான் என்பதும் அவருக்குத் தெரிந்தே இருந்தது.
இங்கே ஐயம் ஒன்று எழலாம். குருதேவர் அவதார புருஷர் என்று தெரிந்திருந்தும் சாதனைகள் செய்யுமாறு அவரை பைரவி ஏன் தூண்ட வேண்டும்? இத்தகைய மகிமை பொருந்திய அவதார புருஷரை எல்லா நிலையிலும் முழுமையானவராகக்கொண்டு அவரைஏற்றுக்கொள்வது அல்லவா நியாயம்? இத்தகைய ஒருவர் சாதனைகளில் ஈடுபடுவது தேவையற்றது என்பது சொல்லாமலேயே விளங்கக்கூடியது அல்லவா? இதற்கான பதில்-

தொடரும்..

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-41

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-41

குருதேவரின் அறையில் நுழைந்த பைரவி அவரைக் கண்டதும் பேரானந்தமும் வியப்பும்மேலிட, கண்களில் கண்ணீர் பெருக, மகனே நீ இங்கா இருக்கிறாய்,! நீ எங்கோ கங்கைக் கரையில் இருப்பதை அறிந்து, நெடுநாட்களாக உன்னைத்தேடி வருகிறேன்.
இப்போது தான் காண முடிந்தது என்று சொன்னார். குருதேவர் பைரவியிடம் என்னைப் பற்றி எவ்வாறு நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு பைரவி, உன்னைப்போல் மூவரைச் சந்திக்க வேண்டுமென்று முன்பே அன்னையின் அருளால் நான் அறிந்துள்ளேன். கிழக்கு வங்காளத்தில் ஏற்கனவே இருவரைச் சந்தித்து விட்டேன். இதோ மூன்றாவதான உன்னை இப்போது சந்திக்கிறேன் என்றார்.
ஒரு குழந்தை தாயின் அருகில் அமர்ந்து எப்படித் தனது எண்ணங்களை மனம் திறந்து பேசுமோ அது போல குருதேவரும் பைரவியிடம் தம்மைப் பற்றிப்பேரானந்தத்துடன் கூறினார்.
தமக்குக் கிடைத்த தெய்வீக காட்சிகள், இறைவனைப் பற்றிப்பேசும்போதுபுறவுலக நினைவை இழந்துவிடுவது, உடலில்ஏற்படும் எரிச்சல், உறக்கமின்மை போன்ற அனைத்தையும் கூறிய பின்னர் அவர் பைரவியிடம், தாயே, இவை ஏன்               ஏற்படுகின்றன?
உண்மையிலேயே நான் பைத்தியமாகி விட்டேனோ? முழுமனத்துடன் அன்னையை அழைத்ததால் எனக்கு த்தீராத நோய் வந்து விட்டதா? என்று ஒரு குழந்தை போல் திரும்பத்திரும்பக்கேட்டார்.குருதேவரின்இந்த  வார்த்தைகள் பைரவியின் உள்ளத்தில் எத்தனையோ உணர்ச்சிகளை எழுப்பின. பெருமிதமும் மகிழ்ச்சியும் கருணையும் அவர் முகத்தில் மாறிமாறித்தோன்றி மறைந்தன. அனைத்தையும் கேட்ட பின் அவர் ஒரு தாயைப்போன்ற பரிவுடன் குருதேவரிடம், உன்னைப்பைத்தியம் என்று கூறுவது யார்?,
நீ பைத்தியம் அல்ல, நீ மகா பாவனை நிலையில் இருக்கிறாய். அதனால் தான் இவை உன்னிடம் தோன்றின. தோன்றிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலைகளை சாதாரணமாக யாராவது புரிந்து கொள்ள முடியுமா என்ன? முடியாததால் தான் அவர்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள்.ராதைக்கும் இந்த நிலைகள் ஏற்பட்டிருந்தன. அதே போன்று சைதன்யரிடமும் தோன்றியிருந்த இந்த நிலைகள் பற்றிய விளக்கம் பக்தி சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன.இதோ என்னிடம் உள்ள நூல்களிலிருந்து உனக்குப் படித்துக் காட்டுகிறேன். ஒரே மனத்துடன் யார் இறைவனை அடையத் துடிக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் இத்தகைய நிலைகள் ஏற்பட்டுள்ளன.என்று கூறினார். குருதேவரும் பைரவியும் நெருங்கிய உறவினர்கள் போலப்பேசிக் கொள்வதைக் கண்ட ஹிருதயர் விவரிக்க முடியாத திகைப்பில் ஆழ்ந்தார்.
உரையாடலில் காலைப்பொழுதின் நீண்டநேரம் கழிந்துவிட்டதை அறிந்த குருதேவர், தேவியின் பிரசாதப் பழங்கள், வெண்ணெய், கற்கண்டு ஆகியவற்றை பைரவிக்குக் காலை உணவாக வழங்கினார்.
குழந்தைக்குக் கொடுக்காமல் எந்தத் தாயும் உணவு கொள்வதில்லை. பைரவியைத் தாயாகக் கருதிய குருதேவர், தன்னை உண்பிக்காமல் பைரவி உண்ணமாட்டாள், என்பதைப்புரிந்து கொண்டு முதலில் தாமே சிறிது பிரசாதத்தை உட்கொண்டார்.கோயில் தரிசனமும் காலை உணவும் முடிந்தது.
பைரவியின் வழிபாடு  தெய்வம் ரகுவீரர். அவர் ரகுவீரர் சிலை  ஒன்றை எப்போதும் கழுத்தில் அணிந்திருப்பார். வழிபாடு நைவேத்தியம் எல்லாம் அந்த சிலைக்கே. கோயில் பண்டகசாலையிலிருந்து நைவேத்தியத்திற்கான மாவு, அரிசி ஆகியவற்றைப்பெற்று, பஞ்சவடியில் தனது  சமையலை ஆரம்பித்தார் பைரவி.
சமையல் முடிந்தது.நைவேத்தியத்தை ரகுவீரரின் திருமுன்னர் படைத்து விட்டு தியானத்தில் மூழ்கினார் பைரவி. சிறிது நேரத்தில் ஒர் அற்புதக் காட்சி பெற்று சமாதியில் ஆழ்ந்து புறவுணர்வை இழந்து விட்டார்.
அவரது கண்களில் நீர் பெருகி வழிந்தது. அப்போது குருதேவர் மனம் ஈர்க்கப்பட்டு வெளியுணர்வை இழந்தவராய் பஞ்சவடிக்கு வந்து சேர்ந்தார்.
தெய்வீக உணர்வால் ஆட்கொள்ளப்பட்ட அவர், பிராம்மணி தன் இஷ்டதெய்வத்திற்கு நிவேதனம் செய்த உணவை உண்ணத் தொடங்கினார். பிராம்மணி சுயநினைவு பெற்றுக் கண்களை விழித்தபோது இஷ்டதெய்வத்திற்கு நிவேதனம்  செய்திருந்தவற்றை வெளியுணர்வை முற்றிலும் இழந்த நிலையில் குருதேவர் உண்டு கொண்டிருந்ததைக் கண்டார்..
இதனைத் தாம் பெற்ற காட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்த பைரவி சொல்லிலடங்காத ஆனந்தத்தில் மூழ்கினார். சிறிது நேரத்தில் குருதேவர் சாதாரண நிலைக்குத் திரும்பினார்.
தாம் ஏன் இவ்வாறு நடந்து கொண்டோம் என்பது புரியாததால் செய்த செயலுக்கு நாணி அவர் பைரவியிடம் அம்மா! நான் ஏன் கட்டுப்பாட்டை இழந்து அவ்வாறு செய்தேன், எதுவும் புரியவில்லையே? என்று படபடப்புடன் கூறினார்.
ஆனால் பைரவி ஒரு தாயைப்போல  குருதேவரைத்தேற்றியவாறே மகனே! உகந்ததையே செய்தாய் நீ!
இதனை நீயாக ச் செய்யவில்லை.உன்னுள் இருப்பது யாரோ அவரே இதனைச் செய்தார். தியான வேளையில் நான் பெற்ற காட்சியில் இதைச் செய்தது யார், ஏன் இவ்வாறு செய்தார், என்பவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். எனக்கு இனிமேல் புறப்பூஜை அவசியமில்லை.
இத்தனை நாள் செய்த பூஜையின் பலன் எனக்குக் கைகூடிவிட்டது என்றார். இவ்வாறு சொல்லிக்கொண்டே பைரவி, எவ்விதத் தயக்கமும் இன்றி குருதேவர் உண்ட மீதத்தைப் பிரசாதமாக உட்கொண்டார். குருதேவரின் உடலிலும் உள்ளத்திலும் உயிருணர்வுடன் திகழும் தனது இஷ்ட தெய்வமான ரகுவீரரின் தரிசனத்தை இப்போது பெற்று விட்டார் அவர்! புறப்பூஜையின் பலனை அனுபவித்ததால் அன்புப்பேரானந்தப்பெருவெள்ளம் கண்களில் ஆறாகப்பெருக பல காலமாகப் பூஜித்து வந்த ரகுவீரரின் சிலையை கங்கையில் விட்டுவிட்டார்.!.
குருதேவருக்கும் பிரம்மமணிக்கும் இடையே தோன்றிய அன்பும் ஈர்ப்பும் நாளுக்குநாள் வளர்ந்தன. குருதேவரிடம் தாயன்பு கொண்டிருந்த பைரவி தட்சிணேசுவரத்திலேயே தங்கிவிட்டார். நாட்கள் எப்படிக் கழிந்தன என்பது இருவருக்குமே தெரியவில்லை.

குருதேவர் தாம் பெற்ற இறைக்காட்சிகளையும் அனுபவங்களையும் ஒளிவுமறைவின்றி பிராம்மணியிடம் கூறிவார். பல ஐயங்களை எழுப்புவார், பைரவி தாந்திரிக சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள் காட்டி, அவரது ஐயங்களை விலக்குவார்.பக்தியின் வேகத்தால் அவதாரபுருஷர்களின் உடல், உள்ளம் ஆகியவற்றில் எத்தகைய அறிகுறிகள் தோன்றுகின்றன. என்பதைப் படித்துக்காட்டி அவரது உண்மை நிலையை விளக்குவார்.
இவ்வாறு பஞ்சவடியில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.ஆறேழு நாட்கள் கழிந்தன. மேலும் பிராம்மணி அங்குத் தங்குவது நல்லதல்ல என்று குருதேவர் எண்ணினார். பொன்னாசை , பெண்ணாசை கொண்ட உலகியல் மக்கள் ஏதேதோ பேசி. தூயவரான அவரது வாழ்வில் களங்கம் கற்பிக்கக்கூடும் என்று கருதினார்.
இதை எடுத்துக்கூறியவுடனேயே பைரவியும் புரிந்து கொண்டார். அருகில் எங்காவது ஓரிடத்தில் தங்கி. நாள்தோறும் வந்து குருதேவரைப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் காளி கோயிலைவிட்டு அகன்றார்.
கங்கைக் கரையில் தட்சிணேசுவரக் கிராமத்திற்கு வடக்கே தேவ மண்டல் துறையில் தங்கினார் பைரவி. அந்த கிராமத்தின் பல பகுதிகளுக்குச்சென்று கிராமப்பெண்களுடன் பேசி அவர்களின் அன்பைப்பெற்றார்.
ஆகவே  தங்குமிடம், உணவு போன்ற விஷயங்களில் எந்தவிதப் பிரச்சனையும் அவருக்கு இருக்கவில்லை. மக்களின் ஐயத்திற்கு இடமளிக்கும் சூழ்நிலை இல்லாதவாறு நாள்தோறும் குருதேவரைச் சந்திக்கும் வாய்ப்பும் பைரவிக்குக் கிடைத்தது.
தினமும் சிறிதுநேரம் காளி கோயிலுக்குச்சென்று குருதேவருடன் பேசிவிட்டு வருவார்.
கிராமப் பெண்களிடம் பல்வேறு உணவுப்பொருட்களைப்பெற்று, சமைத்து குருதேவருக்கு அடிக்கடி அளிக்கவும் செய்தார்.

தொடரும்..

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-40

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-40

பைரவி பிரம்மணியின் வருகை.
குருதேவர் காமார்புகூரிலிருந்து தட்சிணேசுவரத்திற்கு 1861-ஆம் ஆண்டு திரும்பிவந்த பின் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவை குருதேவரின் வாழ்க்கையில் முக்கியத் திருப்பங்களை விளைவித்தவை. எனவே இவற்றைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம்.1861-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ராணிராசமணிக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஒரு நாள் ராணி திடீரென்று கிழே விழுந்து விட்டதாகவும், அதனால் காய்ச்சலும் உடல் வலியும் அஜீரணமும் வேறு  சிக்கல்களும் உண்டாகி படிப்படியாக அது வயிற்றுப்போக்கு  நோயாக மாறியதாகவும் சில நாட்களுக்குள் அது மிகவும் தீவிரமாகி விட்டதாகவும் குருதேவர் கூறினார்.
குருதேவர் கூறினார், ராணி ராசமணி உயிர் துறப்பதற்கு முன் காளிகட்டத்தில் ஆதிகங்கா பகுதியில் இருந்த தம் வீட்டில் சென்று வாழ்ந்தார். உயிர் பிரிவதற்குச் சற்று முன் அவரை கங்கை கரைக்குக்கொண்டு வந்தனர்.அங்கே பல விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்ட ராணி திடீரென, இவற்றை அணைத்துவிடுங்கள்.அப்புறப்படுத்துங்கள்.இவை எனக்குப் பிடிக்கவில்லை.என் அன்னை வந்துவிட்டாள்.அவளது திருமேனியிலிருந்து வீசிப்பொலிகின்ற அருளொளிதான் இந்த இடம் முழுவதையும் பிரகாசமாக அடித்துவிட்டதே! என்று தன்னை மறந்து கூவினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் , அம்மா, வந்துவிட்டாயா?, அம்மா? என்று மெல்லிய குரலில் கூறியபடியே அன்னையின் திருவடிகளில் மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டார். நரிகள் ஊளையிடும் மங்கலச்சத்தம் நாலாதிசைகளிலும் கேட்டது.
மதுர்பாபு நிர்வாகப்பொறுப்புக்களில் ராணியின் வலது கரமாகச் செயலாற்றி வந்தார். தட்சிணேசுவரக்கோயிலின் சொத்து மற்றம் அதன் நிதிநிலைமை பற்றி நன்கு அறிந்திருந்த அவர் கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் மிகவும் திட்டமிட்டு, ராணியின் விருப்பத்திற்கு ஏற்ப ஆலயப் பணிகள் எல்லாவற்றையும் நடத்திவந்தார்.ராணியின் மறைவிற்குப் பின்னரும் நிர்வாகப் பொறுப்பை அவரே கவனித்தார். குருதேவரின் பேரருளால்அவர் தூய பக்தி கொண்டவராக இருந்ததால் ராணியின் மறைவுக்குப்பின்னரும் கோயில் பூஜைப் பணிகள் எந்த வகையிலும் குறைவின்றி நடைபெற்றன.
மதுர்பாபுவுக்கும் குருதேவருக்கும் இடையே இருந்த அற்புதமான உறவைப் பற்றி வாசகர்களுக்கு முன்னரே சொல்லியிருக்கிறோம்.
எனவே மீண்டும் குறிப்பிட வேண்டியதில்லை. ஒன்றுமட்டும் இங்குக்கூறலாம். குருதேவர் தாந்திரிக சாதனையில் ஈடுபடுவதற்கு முன்னரே ராணி மறைந்தார். காளிகோயில் நிர்வாகம் அப்போது மதுர்பாபுவின் பொறுப்பில் இருந்தது. சாதனைகளைப் பொறுத்தவரையில் மதுர் குருதேவருக்கு உதவும் பெருவாய்ப்பைப் பெற்றிருந்தார். குருதேவருக்கு உதவி செய்யவே அவருக்கு இந்த நிர்வாகப்பொறுப்பு கிடைத்ததோ என்று எண்ணத்தோன்றுகிறது.ஏனெனில் குருதேவரை ஒரு தெய்வீக புருஷராக எண்ணி அவருக்குச்சேவை செய்வதையே தமது  தலையாய கடமையாகக்கொண்டு செயல்பட்டார் மதுர்.
உயர்ந்த ஒரு லட்சியத்தில் மாறாத மனத்துடன் நெடுங்காலம் நம்பிக்கை கொள்வது இறையருளால் மட்டுமே நிகழக்கூடியது.
ராணியின் பெரும் சொத்தைப்பெற்றும், தவறான பாதையில்  செல்லாமல் மனத்தை குருதேவரிடம் மதுர்பாபு செலுத்தியது, இறையருளால் அன்றி வேறெதனால் இருக்க முடியும்? நாளுக்குநாள் வளர்ந்த நம்பிக்கையுடன் நீண்ட பதினாரு வருடங்கள் அவர் குருதேவருக்குச் சேவை செய்தார். அவர் பெற்ற பெரும்பேற்றினை இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆன்மீக சாதகர்களைத் தவிர மற்ற யாராலும் குருதேவரின் உயர்ந்த நிலைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சாதாரணமக்கள்அவரைப் பைத்தியம் என்றே உறுதியாகக் கருதினர். எல்லா வகையான சுகபோகங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு மற்றவர் புரிந்து கொள்ள முடியாத ஏதோவொரு மனோநிலையில் ஆழ்ந்தவராய், சிலவேளைகளில் ஹரிநாமம், சிலநேரங்களில் ராமநாமம், மற்றும் சிலவேளைகளில் காளி, காளி என்று இவற்றிலேயே நாட்களைக் கழித்து வந்தார். குருதேவர். ராணி , மதுர்பாபு ஆகியோரின் அன்புக்குப் பாத்திரமான பலர் பணக்காரர்களாகி விட்டிருந்தனர். இவரோ அவர்களின்  பேரன்பிற்கு உரியவராகியும் தமது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இத்தகைய அவர் நல்லது கெட்டது அறிய முடியாத பைத்தியக்காரரைத் தவிர வேறு  என்னவாக இருக்க முடியும்? சாதாரண மக்கள் இவ்வாறுஎண்ணினாலும் ஒன்று மட்டும் அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது- உலகியல் விஷயங்களில்  ஒன்றும் தெரியாதவராக இருந்தாலும் இந்தப் பைத்தியக்காரரின் ஒளிபடைத்த கண்களில் நடையுடை பாவனையில் உள்ளம் கவரும் உயர் பண்பில் இனிமையான குரலில், அன்பு கனியும் பேச்சில், அற்புதமான சமயோசித அறிவில் ஒரு கவர்ச்சிகரமான சக்தி இருந்தது.
அதன் காரணமாக பிறர் அணுகுவதற்கும்  தயங்குகின்ற செல்வந்தர், உயர்ந்தவர், பண்டிதர் போன்றவர்களின் முன் எவ்விதத் தயக்கமும் இன்றி இவர் சென்று வெகு விரைவிலேயே அவர்களின் அன்பைப் பெற்றுவிடுவார்.
பொதுமக்களும் காளிகோயில் அதிகாரிகளும்குருதேவரைப் பற்றி இத்தகைய கருத்து கொண்டிருந்த போதும் மதுர்பாபு மட்டும் காளியின் அருளைப் பெற்றதாலேயே இவர் பைத்தியம் போல் தெரிகிறார்  என்று நினைத்தார்.
 ராணி காலமான சில நாட்கள் கழித்து குருதேவரின் வாழ்க்கையில் மேலும் ஒருகுறிப்பிடத்தக்க நிகழ்ச்சி நடைபெற்றது. காளிகோயிலுக்கு மேற்கே கங்கை கரையில் ஓர் அழகான நந்தவனம் இருந்தது.
அது நன்கு பராமரிக்கப்பட்டு வந்ததால் அங்கிருந்த மரங்கள் , செடிகொடிகள் யாவும் செழிப்பாக வளர்ந்திருந்தன. நந்தவனம்  அந்தப் பகுதியில் அழகுக்கு அழகு சேர்த்ததோடு அப்பகுதி முழுவதிலும் நறுமணத்தையும் பரப்பியது.அந்த நாட்களில் குருதேவர் தேவிக்கு பூஜை செய்யாதிருந்தாலும், அந்தத்தோட்டத்திலுள்ள மலர்களைக் கொய்து, அழகான மாலைகள் தொடுத்து அன்னைக்கு அணிவித்து மகிழ்வதுண்டு.
கங்கையிலிருந்து கோயிலுக்கு இந்த நந்தவனத்தின் வழியாக பாதை செல்கிறது. வடபகுதியில் கங்கையில் பெண்கள் நீராட செங்கற்களால் கட்டப்பட்ட படித்துறையும் நகபத்தும் அமைந்துள்ளன. படித்துறைக்கு மேற்கு பகுதியில் ஒரு பெரிய வகுளமரம் இருப்பதன் காரணமாக மக்கள் இதனை வகுளத்துறை(பகுல்காட்) என்று அழைக்கின்றனர்.
ஒரு நாள் காலையில் அந்தத்தோட்டத்தில் குருதேவர் மலர்கள் கொய்து கொண்டிருந்தபோது வகுளத்துறைக்கு படகு ஒன்று வந்து நின்றது.
காவி உடை உடுத்தி அவிழ்ந்த நீண்ட கூந்தலைத் தழையவிட்டிருந்த அழகிய தோற்றம் கொண்ட பைரவி ஒருத்தி அந்தப் படகிலிருந்து இறங்கி,அந்தத் துறைக்குத் தெற்கே இருந்த கோயில் முற்றத்தை நோக்கி நடந்து வந்தார்.
 நடுத்தர வயதைக் கடந்து விட்டிருந்த போதிலும் அவரது அழகும் இளமையும் தோற்றமும், யாரும் அவரை நடுத்தர வயதினர் என்று சொல்ல முடியாதபடி,ச் செய்திருந்தன.
அப்போது பைரவியின் வயது சுமார் நாற்பது இருக்கும் என்று குருதேவர் சொன்னார். நெருங்கிய உறவினரைக்கண்டதும் ஒருவர் எவ்வாறு கவரப்படுவாரோ, அவ்வாறே குருதேவர் அந்த பைரவியால் கவரப்பட்டார். உடனே அறைக்கு வந்து ஹிருதயரை அழைத்து, கோயில் முற்றத்திலிருந்த பைரவியை அழைத்து வரும் படிக்கூறினார். ஹிருதயருக்குக் குழப்பமாகி விட்டது. அவர் குருதேவரிடம் அந்தப் பெண்மணி முன்பின் தெரியாதவள்நான் அழைத்தால் அவள் ஏன் வர வேண்டும்? என்று தயங்கிய வாறே கேட்டார்.
அதற்கு குருதேவர் என் பெயரைச்சொன்னால் போதும் வந்து விடுவார் என்றார். முன்பின் தெரியாத ஒரு சன்னியாசியுடன் பேச குருதேவர் கொண்ட ஆர்வம் தன்னை மிகவும் வயப்பில் ஆழ்த்தியதாக ஹிருதயர் கூறினார். இதற்கு முன் ஒரு போதும் குருதேவர் இவ்வாறு நடந்து கொண்டதை ஹிருதயர் கண்டதில்லை.
எப்படியும் பைத்தியமாமாவின் கட்டளைக்கு கீழ்ப் படியாமல் இருக்க முடியாது என்பதை அறிந்திருந்த ஹிருதயர் தயங்கியபடியே மண்டபத்திற்குச்சென்றார்.
பைரவி அங்கே அமர்ந்திருந்தார். நேராக அவரது அருகில் சென்று, பக்தரான என் மாமா தங்களை தரிசிக்க விரும்புகிறார், என்று கூறினார்.
அதைக்கேட்டதும் பைரவி நடந்து கொண்ட விதம் ஹிருதயரை வியப்பில் ஆழ்த்தியது.ஏனெனில் எந்தக்கேள்வியும் எழுப்பாமல், எவ்விதத் தயக்கமும் இன்றி உடனே எழுந்து அவருடன் செல்லத் தொடங்கினார் பைரவி.
-
தொடரும்..

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-39

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-39

குருதேவர் கூறியதில் தாய்க்கும் தமையனுக்கும் அவ்வளவு நம்பிக்கையில்லை. எனினும் ஜெயராம்பாடிக்கு ஒருவரை அனுப்பி விசாரிக்கச் செய்தனர்.அவர் கூறியது உண்மையாக இருந்தது.
எல்லாம் பரவாயில்லை.ஆனால் பெண் மிகவும் சிறியவள் ஐந்தே வயது தான் . எனினும் இந்தப்பெண்ணை சந்திரா ஏற்றுக்கொண்டு, உடனே மகனுக்கு மணமுடிக்க இசைந்தாள்.
ஓரிரு நாட்களுள் பேச்சுவார்த்தைகள் முடிந்தன. ஒரு நல்ல நாளில் சுபமுகூர்த்த வேளையில் காமார்புகூருக்குமேற்கே நான்கு  மைல் தொலைவிலிருந்த ஜெயராம்பாடிக்கு ராமேசுவரர் கதாதரரை அழைத்துச்சென்று ராமசந்திரரின் ஒரே மகளைத் திருமணம் செய்து விட்டுத் திரும்பினார்.
வரதட்சணையாக முன்னூறு ரூபாய் பெண் வீட்டாருக்குக் கொடுக்கப்பட்டது.
இது நிகழ்ந்தது 1859, மே மாதத்திலாகும் அப்போது குருதேவருக்கு வயது இருபத்திநான்கு.
குருதேவரின் திருமணத்திற்குப் பின் சந்திரமணியின் கவலை பெருமளவிற்குக் குறைந்தது.
திருமண விஷயத்தில் மகன் தன் சொற்படி நடந்து கொண்டது இறைவனின் பேரருளால் தான் என்று மனநிறைவு எய்தினாள். அவள், எதிலும் பற்றற்ற மகன் திருமணம் செய்து கொண்டான், கௌரவமான குடும்பத்தைச்சேர்ந்த பெண் மருமகளாக வாய்த்துள்ளாள், பணக்கஷ்டமும் சமாளிக்கப்பட்டு விட்டது. சுருக்கமாகச் சொன்னால் மகன் உலகியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துவிட்டான், இறையருள் அன்றிவேறு எதனால் இத்தனையையும் சாதிக்க முடியும்? இதனை எண்ணியெண்ணி மகிழ்ந்தாள் சந்திரா.ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
மணமகளின் தந்தையை மகிழ்விக்கவும் ஆடம்பரத்திற்காகவும்  பல நகைகளை இரவல் வாங்கி மணமகளை அலங்கரித்திருந்தனர்.
புதிய மருமகளைச் சொந்த மகளாகவே பாவித்தாள் சந்திரா. எனவே நகைகளைத் திருப்பிக்கொடுக்க வேண்டிய நாள் வந்த போது மிகவும் வருந்தினாள்.ஆனால் தன் வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.தாயின் வருத்தத்தை குருதேவர் புரிந்து கொண்டார்.
தாய்க்கு ஆறுதல் சொல்லிவிட்டு உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் உடம்பிலிருந்து அவள் அறியாமல் நகைகளைக் கழற்றினார்.
புத்திமதியான அந்தச்சிறுமியோ விழித்தவுடன் என் உடம்பில் பல நகைகள் இருந்தனவே, அவை எங்கே? என்று கேட்டாள். சந்திராவின் கண்களில் நீர் ததும்பியது. மருமகளை மடிமீது அமர்த்திக்கொண்டு என் கண்ணே, இவற்றை விட எவ்வளவோ நல்ல நகைகளை கதாதரன் உனக்குக் கொடுக்கப்போகிறான். பாரேன், என்று ஆறுதல் கூறினாள்.
 பிரச்சனை இத்துடன் நிற்கவில்லை. மணப்பெண்ணின் சித்தப்பா அன்று அங்கு வந்திருந்தார். அவருக்கு விஷயம் தெரியவந்தது. ஆத்திமுற்ற அவர் மணமகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
சந்திராவுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி.தாயின் மனவருத்தத்தைப் போக்க குருதேவர், அவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லட்டும், செய்யட்டும் நடந்த திருமணத்தை யாராலும் மாற்ற முடியாது அல்லவா? என்று வேடிக்கையாகக் கூறினார்.
திருமணத்திற்குப் பின்னர் குருதேவர் பத்தொன்பது மாதங்கள்  காமார்புகூரில் தங்கியிருந்தார்.
பரிபூரணமாக மகனுக்கு மீண்டும் பத்திசுவாதீனம் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிய சந்திரமணி அவர் செல்ல  எளிதில் அனுமதிக்கவில்லை. மனைவி ஏழாவது வயதில் அடியெடுத்து வைத்தபோது, குடும்ப வழக்கப்படி மாமனார் வீட்டிற்குச் சென்று சிலநாட்கள் குருதேவர் தங்கினார்.
பின்னர் ஒரு சில நாளில் அவளுடன் காமார்புகூருக்குத் திரும்பினார். சில நாட்கள் கழித்து கல்கத்தாவிற்கு திரும்ப முடிவு செய்தார்.
சகோதரனும் தாயும் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கும்படி வற்புறுத்தினர். குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலையை உணர்ந்திருந்த குருதேவரின் கனிந்த மனம், மேலும் அவர்களுக்குச்சுமையாக இருக்க விரும்பவில்லை.
எனவே அவர்களது வேண்டுகோளை நிராகரித்து விட்டு கல்கத்தா திரும்பினார். மீண்டும் காளிகோயில் அர்ச்சகர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பூஜைப்பொறுப்பை ஏற்ற சில நாட்களில் குருதேவரின் மனம் அதில் லயித்து விட்டது. தாய், தமையன், மனைவி, இல்லறம், வறுமை எல்லாம் மூலையில் தள்ளப்பட்டுவிட்டன. எல்லா உயிர்களிலும் எப்போதும் அன்னை பராசக்தியைக் காண்பது என்ற ஒரே எண்ணம் மனத்தை முழுக்கமுழுக்க ஆட்கொண்டது.
 இரவு பகலாக இடையீடின்றி இறைவன் புகழ் பாடுதல், சிந்தனை, ஜபம், தியானம் என்று உயர்ந்த உணர்ச்சி வெள்ளங்களில் திளைத்ததால் அவரது மார்பு எப்போதும் சிவந்தே காணப்பட்டது. உலகியல் பேச்சுக்கள் அவரது காதுகளில் நாராசமாகஒலித்தன.
உடம்பின் பழைய எரிச்சல் மீண்டும் பற்றிக்கொண்டது.உறக்கம்  அடியோடு கண்களிடமிருந்து விடைபெற்று விட்டது போல் தோன்றியது. இத்தகைய நிலைகளை அவரது மனமும் உடலும் ஏற்கனவே அனுபவித்து இருந்ததால் இப்போது அவர் அதிகம் பாதிக்கப்படவில்லை.
மதுர்பாபுவின் கட்டளைப்படி பிரபல மருத்துவரான கவிராஜ் கங்காபிரசாதர் குருதேவரின் உறக்கமின்மை, வாய்வுக்கோளாறு, உடல் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்துவதற்காக அவருக்குச் சிகிச்சையளித்தார். உடனடியாகப்பெரிய நன்மை எதுவும் ஏற்படவில்லை எனினும் தாம் மனம் தளராமல் அடிக்கடி அவரைக் கல்கத்தாவிற்கு அழைத்துச்சென்று மருத்துவரிடம் காண்பித்துக்கொண்டிருந்ததாக ஹிருதயர் கூறினார். குருதேவரும் அதைப்பற்றிச்சொன்னதுண்டு. அ
வர் சொன்னார், ஒரு நாள் இவ்வாறு கங்காபிரசாதரின் மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன்.தன் சிகிச்சையால் முன்னேற்றம் எதுவும் இல்லாதது கண்டு கங்காபிரசாதர் மிகவும் வருந்தினார்.
மீண்டும்  சோதித்துப்பார்த்துவிட்டு புதிய மருந்துகளும் தந்தார். அன்று அவருடன் கிழக்கு வங்காளத்தைச்சேர்ந்த மருத்துவர் ஒருவரும் இருந்தார்.நோயின் அறிகுறிகளைப்பற்றி கவனமாகக்கேட்ட அவர், இவர் தீவிர தெய்வீக உணர்வால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்.
இது யோகப் பயிற்சியின் விளைவாக தோன்றிய நோய். இதனைமருந்தால் தீர்க்க முடியாது என்று சொன்னார்.
உடல் நோய் போன்று தோற்றமளித்த என் வியாதிக்கு உண்மையான காரணத்தைக்கூறிய முதல் மருத்துவர் அவர் தான். அப்போது இதனை யாரும் நம்பவில்லை.குருதேவரிடம் அக்கறை கொண்டிருந்த மதுர்பாபு போன்றவர்கள் அவரது நோயைக்கண்டு மனம் கலங்கி மருத்துவ முறைகளைத்தொடர்ந்து வந்தனர். ஆனால் நோய் குறைவதற்குப் பதில் அதிகரித்தது.
இந்தச் செய்தி காமார்புகூரை எட்டியது. வேறு வழியற்ற சந்திரா, மகன் குணமடைவதற்காக சிவபெருமானை் சன்னதியில் சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொள்வதான ஹத்யா விரதத்தைக் கடைப்பிடிக்க உறுதி பூண்டாள். காமார்புகூரில் குடிகொண்டுள்ள முதிய சிவபெருமான்” மிகவும் சக்திவாய்ந்தவர். அன்ன ஆகாரமின்றி அவரது திருமுன்னர் வீழ்ந்து கிடந்தாள். அங்கே” முகுந்த பூரிலிருக்கும் சிவபெருமானின் ”திருமுன்னர் இந்த விரதத்தை மேற்கொண்டால் உன் விருப்பம் நிறைவேறும்,என்ற அருளாணையைப்பெற்றாள்.
அதன்படி அங்குச்சென்று விரதத்தை மேற்கொண்டாள்.முகுந்தபூர் சிவாலயத்தில் இதற்குமுன் யாரும் இத்தகைய விரதத்தை மேற்கொண்டதில்லை. என்பது சந்திரமணிக்குத் தெரிந்திருந்தும், சிவபெருமானின் அருளாணையை ஏற்று அங்குச்சென்று விரதத்தை மேற்கொண்டாள். இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன.ஒரு நாள் வெள்ளியைப் பழிக்கின்ற வெண்மேனியனான எம்பெருமான்,புலித்தோல் உடுத்தி சடாமுடி ஒளியை அள்ளிவீச சந்திராமணியின் கனவில் தோன்றி, அஞ்சாதே! உன் மகன் பித்தன் அல்லன்.தெய்வீக உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால் தான் அவனுக்கு இத்தகைய நிலைஎற்பட்டுள்ளது என்று கூறியருளினார்.
இதனால் மனம் தெளிந்த சந்திராமணி சிவபெருமானுக்கு மனமார்ந்த வழிபாடுகள் செய்து வீடு திரும்பினாள். மகனின் மனஅமைதிக்காக குலதெய்வங்களான சீதளாவிற்கும், ஸ்ரீரகுவீரருக்கும் தொடர்ந்து சேவைகளைச் செய்வதில் ஈடுபட்டாள். சந்திரமணி பயன்பெற்றபின்னர் முகுந்தபூர் ஆலயத்தில் இவ்வாறு பிராத்தனை செய்து பலரும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொண்டுள்ளனர்.

அந்த நாட்களில் தமது இறைப்பித்து நிலையைப்பற்றி சம்பவங்களை நினைவுகூர்ந்து எங்களுக்கு அவ்வப்போது குருதேவர் சொல்வதுண்டு.
இத்தகைய தெய்வீக உணர்வுப்பெருக்கை சாதாரண மக்களின் உடலும் உள்ளமும் தாங்கமுடியாது. இந்த அனுபவத்தில் கால்பங்கு ஏற்பட்டால் கூட அவர்களின் உடல் அழிந்து விடும். இரவும் , பகலும் நாளில் பெரும்பகுதி நேரமும் நான் அன்னையின் ஏதோனும் ஒரு வகைக்காட்சியில் திளைத்திருப்பேன். அது தான் என்னைக் காப்பாற்றியது. இல்லையெனில் இந்தக்கூடு( தம் உடலைக்காட்டி) வாழ்ந்திருக்க முடியாது. நீண்ட ஆறு ஆண்டுகள் எனக்குத் தூக்கம் என்பது துளிகூட இல்லாமல் போயிற்று. இமைக்கும் சக்தியைக் கண்ணிமைகள் இழந்துவிட்டன. சிலவேளைகளில் நான் முயன்றாலும் கண்களை மூட முடியாது. காலம் எப்படிக்  கழிந்தது என்பதே எனக்குத்தெரியாது. உடலைக்காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மறந்து விட்டது. எப்போதாவது உடல் பற்றிய கவனம் திரும்பும்போது எனது நிலை எனக்கு புரியாது, எங்கே நான் பைத்தியக்காரன் ஆகிவிடுவேனோ என்ற அச்சம் என்னை வாட்டும். கண்ணாடியின் முன் நின்று என் விரலைக் கண்ணுக்குள் வைத்து இமைகள் மூடுகின்றனவா என்று பார்ப்பேன். ஆனால் அவை படபடக்கக்கூட இல்லை. பயத்தினால் அழுவேன், அன்னையிடம் அம்மா! உன்னிடம் பிராத்தித்ததன் பலன் இதுவா? உன்னையே நம்பியிருந்ததன் விளைவு இது தானா? என்று முறையிடுவேன்.
அடுத்த கணமே எதுவும் நேரட்டும் . என் உடம்புவேண்டுமானால் அழியட்டும். நீ மட்டும் என்னைக்கைவிட்டு விடாதே. உன் திருக்காட்சியை  எனக்குக்கொடுத்து உன் அருளைப்பொழிவாயாக! அம்மா, நான்  என்னை முழுவதுமாக உன்  திருப்பாதகமலங்களில் அர்ப்பணித்துவிட்டேன். உன்னையன்றி எனக்கு வேறுகதியில்லை, என்று விம்மிவிம்மி அழுவேன். உடனே மனம் லேசாகி சொல்லொணாத அருளானந்தத்தில் திளைக்கும். அப்போது உடம்பு பொருளற்றதாகத் தோன்றும். அன்னையின் திருக்காட்சியும் அபய மொழிகளும்  மனத்தில் சொல்லொணா சாந்தியை நிறைக்கும்.
இந்தச் சமயத்தில் தான் ஒரு நாள் மதுர்பாபு குருதேவரிடம் தெய்வீகத்தின் உன்னதமான வெளிப்பாட்டைக்கண்டார். எவ்வாறு அவர் அன்று குருதேவரிடம் சிவபெருமானையும் அன்னை காளியையும் கண்டு அவரை நடமாடும் பரம்பொருளாக வழிபட்டார் என்பதை வேறொரு பகுதியில் விளக்கியுள்ளோம். அன்றிலிருந்து மதுர்பாபு குருதேவரை உயர்ந்த கண்ணோட்டத்தில் தான் பார்த்தார். அவரது நம்பிக்கையும் பக்தியும் அசைக்க முடியாததாயிற்று. இந்த அபூர்வ நிகழ்ச்சிகளிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகின்றது. இனிமேல் நிகழவிருக்கும் குருதேவரின் சாதனை வாழ்க்கைக்கு மதுரின் உதவியும், உறுதுணையும்  இன்றியமையாதது என்பதால் அன்னை அவர்கள் இருவரையும் பிரிக்க முடியாதபடி அன்பென்னும் கயிற்றால் பிணைத்து வைத்தாள்.உலகாயதமும் நாத்திகமும் அவநம்பிக்கையும் மலிந்து கிடக்கும் இந்த உலகத்தில் தர்மத்தின் அழிவைத் தடுத்து ஆன்மீக சக்தியைப் பரப்புவதற்காக குருதேவரின் உடலையும் உள்ளத்தையும் அன்னை எவ்வளவு கவனமாகவும் அற்புதமானதொரு வழியைக் கடைப்பிடித்தும் கருவிகளாக உருவாக்கியுள்ளான்! இதனை அறியும் போது நாம் எத்தகைய பிரமிப்பில் ஆழ்ந்து விடுகிறோம்.
-
தொடரும்..

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-38

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-38

திருமணமும் தட்சிணேசுவரத்திற்குத் திரும்புதலும்
குருதேவர் பூஜைப் பொறுப்புகளிலிருந்து விலகிவிட்டார். என்ற செய்தி காமார்புகூரில் அவரது தாய். சகோதரர் ஆகியோர் செவிகளுக்கு எட்டியது. அது அவர்களை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியது. ராம்குமார் காலமாகி இரண்டாண்டுகள் கூட முடியவில்லை. அதற்குள் இளையமகனும் மூளைக்கோளாறு என்ற செய்தி கேட்டு, சந்திரமணி தேவியும், ராமேசுவரரும் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் கொண்டனர்.
துரதிஷ்டத்தால் வரும் துன்பங்கள் ஒருபோதும் தனியாக வருவதில்லை. அவை பல்வேறு திசைகளிலிருந்து பற்பல உருவங்களில் வந்து கவிந்து வாழ்க்கையையே இருள்மயமாக்கி விடும். சந்திரமணியின் வாழ்க்கையும் இப்போது இவ்வாறு தான் அமைந்துவிட்டது. அவளுக்கு மிகவும் காலந்தாழ்த்திப் பிறந்த பிள்ளை குருதேவர். அதனால் அவர்மீது அவள்  அளவு கடந்த அன்பு கொண்டிருந்தது இயல்பே.
ஆகவே சந்திரமணி அவரை உடனடியாகக் காமபர்புகூருக்கு அழைத்து வந்தாள். அவரது உதாசீனம், படபடப்பு, அம்மா அம்மா என்ற கதறல் எல்லாம் அவளை மிகவும் வேதனையுறச் செய்தன. அவரை குணப்படுத்த பலவகை மருத்துவ முயற்சிகளுடன் சாந்தி ஸ்வஸ்த்யயனம் போன்ற   சடங்குகளையும் செய்தாள். அது 1858-ஆம் ஆண்டில் கடைசிப்பகுதியாக இருக்கலாம்.
குருதேவர் வீட்டிற்கு வந்தபின் பொதுவாக முன்புபோல் இயல்பான வாழ்க்கை வாழ்ந்தாலும் சிலவேளைகளில் அவர் அம்மா அம்மா என்று மனஏக்கத்துடன் அழுவதும் பரசவப்பெருக்கினால் வெளியுணர்வை இழப்பதும் தொடரவே  செய்தது.
ஒரு கணம் சாதாரணமாக இருப்பார்.மறுகணம் எல்லாம் தலைகீழாகிவிடும். ஒரு புறம் உண்மை, எளிமை தெய்வபக்தி தாயன்பு நண்பர்களிடம் பிரியம், ஆகியவற்றில் ஈடுபாடு இருந்ததுபோல  மறுபுறம் உலகியல் விஷயங்களில் உதாசீனம், பிறரால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு குறிக்கோளை அடையவேண்டும். என்ற ஏக்கம், நாணமோ, அச்சமோ வெறுப்போ அற்ற மனத்துடன் அந்தக் குறிக்கோளை அடைவதற்கான விடாமுயற்சி இவையும் எப்போதும் அவரிடம் காணப்பட்டன. அவரிடம் ஏதோ உபதேவதையின் ஆவேசம் ஏற்பட்டிருக்கிறது.என்ற எண்ணத்தை இது மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது.
கள்ளங்கபடமற்ற சந்திரமணிதேவியின் மனத்தில் ஆரம்பத்திலேயே இந்த எண்ணம் அவ்வப்போது தோன்றியதுண்டு. இப்போது மற்றவர்களும் அவ்வாறு பேசியபோது அவளது எண்ணம் உறுதிப்பட்டது. எனவே மந்திரவாதி ஒருவரை அழைத்துச்சிகிச்சை அளிக்க எண்ணினாள். இது பற்றி குருதேவர் கூறினார், ஒரு நாள்  மந்திரவாதி ஒருவர் வந்தார். மந்திரம் ஜபித்த திரி ஒன்றைக்கொளுத்தி என்னை முகரச்செய்து , பேய் பிடித்திருந்தால் அது ஓடிவிடும் என்று சொன்னார். ஆனால் பயன் எதுவும் ஏற்படவில்லை. அதன்பின் ஒருநாள் இரவு கைதேர்ந்த மந்திரவாதிகள் பூஜை முதலியன செய்து சண்டனை அழைத்தனர். சண்டனும் வந்து பூஜை பலி முதலியவற்றை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன்  இவனைப்பேயும் பிடிக்கவில்லை. இவனுக்கு எவ்வித நோயும் இல்லை, என்று சொல்லிற்று, பின்னர் எல்லோர் முன்னிலையிலும் அது என்னிடம், கதாய் நீ ஒரு சாதுவாக விரும்புகிறாய், அதிகம் பாக்கு போடாதே.பாக்கு அதிகம் தின்றால் காமம் அதிகரிக்கும்! என்று சொல்லிற்று. உண்மையிலேயே பாக்கு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி பாக்கு போடுவேன். அன்று முதல் சண்டனின் சொற்படிநான் பாக்கு போடுவதை நிறுத்திவிட்டேன்.
அப்போது குருதேவருக்கு இருபத்துமூன்று வயது நிறைவு பெறும் காலம். காமார்புகூரில் சில மாதங்கள் தங்கியதில் அவர் ஏறக்குறைய பழைய நிலைமைக்கு வந்துவிட்டார். அன்னை காளியிடம் அற்புதமான காட்சியைப்பலமுறை பெற்றதால் தான் அவர் இப்போது சஞ்சலமின்றி சாந்தமாகக் காணப் பட்டிருக்க வேண்டும். இந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து அவரது உறவினர்களிடமிருந்து அறிந்ததிலிருந்து தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம். அதை இப்போது கூறுகிறோம்.
 அந்த நாட்களில் குருதேவர் பகலிலும் இரவிலும் அதிகநேரம் காமார்புகூருக்கு மேற்கிலும் வடகிழக்கிலும் இருந்த பூதிர்கால், பூதிமொரால் என்ற மயானங்களில் தன்னந்தனியாகக் கழித்தார். இச்சமயம் அவரிடம் இதுவரை கண்டிராத அபூர்வமான சக்தி இருப்பதை உறவினர்கள் அறிந்தனர். மயானங்களில்வாழும் நரிகளுக்கும், உறையும் உபதேவதைகளுக்கும் அவர் அவ்வப்போது பலி கொடுப்பதுண்டு. புதிய பானை ஒன்றில் இனிப்புப் பண்டங்களை எடுத்துக்கொண்டு அவர் அந்த மயானங்களுக்குச் செல்வார். உடனே நரிகள் கூட்டங்கூட்டமாக நாலா பக்கங்களிலிருந்தும் வந்து அவற்றை உண்ணும். உபதேவதைகளுக்கு உணவு ப் பண்டங்களைப் படைக்கும் போது அந்தப்பண்டங்கள் வைத்திருக்கின்ற பானையும் அப்படியே காற்றில் மிதந்து ஆகாயத்தில் மறைந்து விடுமாம்! அவர் அடிக்கடி இந்த உபதேவதைகளைக் கண்டதும் உண்டு.
சில நாட்கள் குருதேவர் நள்ளிரவுக்குப் பின்னும் வீடு திரும்பாதிருப்பார். அப்போது ராமேசுவரர் மயானத்திற்குச் சென்று கூப்பிடுவார். உடனே குருதேவர் இதோ வந்து விட்டேன் அண்ணா, நீ இன்னும் முன்னால் வந்து விடாதே! உபதேவதைகள் உனக்குத்துன்பம் விளைவிக்கக்கூடும். என்று உரக்கக்கூவி எச்சரிப்பார். இந்த நாட்களில் அவர் பூதிர் கால் அருகிலுள்ள மயானத்தில் தம் கைகளால் ஒரு வில்வச் செடியை நட்டார். அந்த மயானத்தின் நடுவில் நின்ற அரசமரத்தின் கீழ் நீண்டநேரம் அமர்ந்து ஜப , தியானங்களில் ஈடுபடுவதும் உண்டு. அவருக்குக் கிடைத்த சில மேலான இறைக்காட்சிகளாலும்  அனுபவங்களாலும், அன்னையின் காட்சிக்காக முன்பு அவர் ஏங்கித் தவித்த நிலை இப்போது நீங்கிற்று. வாளும் மனிதத் தலையும் ஏந்தி நிற்பவளும் வர அபய முத்திரைகளைத் தாங்கியவளும், சாதகர்களுக்கு அருள் பாலிப்பவளும் சின்மயியுமான உலக அன்னையை இப்போது அவர் எந்நேரமும் கண்டார் என்பதை இந்தக்காலகட்டத்தில் அவரது வாழ்க்கையைக்கவனிக்கும் போது அறிய முடிகிறது. அவரது கேள்விகளுக்கும் அன்னை காளி உடனுக்குடன் பதில் தந்தாள். அதற்கேற்ப தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார் அவர், இனி இடையீடின்றி அன்னையின் தொடர்ந்த காட்சி தமக்குக் கிடைக்கும் என்ற உறுதி இப்போதிலிருந்து அவரிடம் நிலைபெற்றது என்று தோன்றுகிறது.
எதிர்காலமறியும் ஆற்றல் இக்காலத்தில் குருதேவரின் வாழ்க்கையில் வெளிப்படுவதைக்காண முடிகிறது. ஹிருதயரும், காமார்புகூரையும் ஜெயராம்பாடியையும் சேர்ந்த பலரும் இதனை உறுதிப்படுத்தினர். குருதேவரும் அவ்வப்போது இது பற்றி சூசகமாகக்கூறியது உண்டு.
குருதெவரின் சற்றே அமைதியான போக்கும் செயல்களும் சந்திராவுக்கும் பிறருக்கும் சிறிது நம்பிக்கையை ஊட்டியது. தெய்வாதீனமாக அவரது பைத்தியம் தெளிந்து விட்டது என்று அவர்கள் ஆறுதல் அடைந்தனர். அவர் முன்பு போல் இப்போது ஏங்கி அழுவதில்லை. வேளாவேளைக்கு உணவு உட்கொள்கிறார். எல்லாச் செயல்களிலும் சாதாரண மக்களைப்போல் நடந்து கொள்கிறார். இவையனைத்தும் அவர்களுக்குப் பெரிதும் நிம்மதியை அளித்தது. எப்போதும் இறைவழிபாட்டில் ஈடுபடுவது மயானத்தில் அலைந்து திரிவது, சிலவேளைகளில் உடைகளின்றி பூஜை, தியானங்களில் ஈடுபடுவது யாருடைய குறுக்கீடுகளையும் பொருட்படுத்தாதது போன்ற சில செயல்கள் அசாதாரணமானவையாக இருந்தாலும், பொதுவாக அவர் சிறுவயதிலிருந்தே இவ்வாறு தான் நடந்து கொள்வார் என்ற காரணத்தால் இவற்றையாரும் பெரிதுபடுத்தவில்லை. எனினும் உலகியல் விஷயங்களில் சிறிதும் ஈடுபாடின்றி அவர் முற்றிலும் ஒதுங்கியிருப்பதும்  எப்போதும் சிந்தனையில்  ஆழ்ந்திருப்பதும் அவரது தாயையும் உறவினர்களையும் கவலையுறச் செய்தன. இந்த நிலை மாறி உலகியல் விஷயங்களில் கவனம் ஏற்பட்டாலன்றி அவர் முற்றிலும் குணமடைந்து விட்டதாகக் கருத முடியாதென்று அவர்கள் எண்ணினர். எப்போது வேண்டுமானாலும் அவர் மீண்டும் பாதிக்கப்படலாம். அவரை உலகியலுக்குத் திருப்ப ஒரே வழி திருமணம் தான் என்று அவரது தாயும் தமையனும் முடிவு செய்தனர். பண்புள்ள நல்ல மனைவியின் மீது அன்பு உண்டாகுமானால் அவரது மனம் வேறு எதனையும் நாடாமல் உலகியல் வாழ்க்கையில் ஆழ்ந்து ஈடுபடும் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.
திருமணத்தைப் பற்றி குருதேவர் அறிந்தால் மறுப்பு தெரிவிக்கக்கூடும் என்று சந்திராவும் ராமேசுவரரும் மணப்பெண் தேடும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டனர்.  குருதெவர் இதனை எப்படியோ அறிந்து கொண்டார். அதிசயமாக அவர் அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. வீட்டில் விழாவோ விசேஷமோ நடந்தால் குழந்தைகள் எப்படி குதூகலிக்குமோ அவ்வாறே திருமணம் பற்றிக்கேள்விப்பட்ட குருதேவரும்  மகிழ்ந்தார்.


ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-37

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-37

இந்தக் காலகட்டத்தில் தமது தூய மனமே குருவாகி தம்மை வழி நடத்தியதாக குருதேவர் கூறினார். எதைச்செய்வது, எதைச்செய்யக்கூடாது என்று கற்பித்ததுடன் அவரது மனம் சிலவேளைகளில் ஒரு மனித வடிவம் தாங்கி அவர்முன் தோன்றி சாதனைகளில் தீவிரமாக ஈடுபட்டு முன்னேறுமாறு உற்சாகப்படுத்தும்.
ஒரு குறிப்பிட்ட சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடாவிட்டால் அந்த உருவம் தோன்றி அந்த சாதனையில் எவ்வாறு ஆழ்ந்து ஈடுபடவேண்டும் என்றும் அதில் ஈடுபட்டால் கிடைக்கின்ற பலனைப் பற்றியும் எடுத்துக்கூறும். தியானத்தில் ஆழ்ந்து மூழ்காவிட்டால் தண்டனை தருவதாகப் பயமுறுத்தவும் செய்யும்.
அவர் தியானம் செய்ய அமரும் போது, ஒரு துறவி கையில் கூரிய திரிசூலத்துடன் வெளிவந்து, வேறு நினைவுகள் அனைத்தையும் விட்டு, இஷ்டதெய்வத்தை மட்டும்  நினைத்து தியானம் செய், இல்லையெனில் இந்த திரிசூலத்தால் உன் நெஞ்சைப் பிளந்து விடுவேன். என்று பயமுறுத்துவதும் உண்டாம்.
வேறொரு சமயம் தம் உடலிலிருந்து ஆசை, போகமயமான பாவபுருஷன் வெளிப்பட்ட போது இந்த இளம் துறவியும் உடனே வெளிப்பட்டு, அந்தப் பாவ புருஷனைக் கொன்றதை குருதேவர் கண்டார்.
தொலைதூரத்திலுள்ள கோவில்களுக்குச் செல்லவோ, எங்காவது நடைபெறும் பஜனை மற்றும் கீர்த்தனைகளில் கலந்து கொள்ளவோ  வேண்டுமென்ற ஆவல் குருதேவரிடம் தோன்றினால் அவருள், இருந்து அந்த இளம் துறவி வெளிப்பட்டு, ஒளிப் பாதையொன்றில் அந்த இடங்களுக்குச் சென்று சிறிது நேரம் ஆனந்தம் அனுபவித்து விட்டு, மீண்டும் அதே ஒளிப்பாதையில் திரும்பிவந்து குருதேவரின் உடலில் புகுந்து விடுவார்.
இது போன்ற பல தெய்வீகக் காட்சிகளைக் கண்டதுபற்றி குருதேவர் எங்களிடம் சொல்லி இருக்கிறார்.
சாதனையின் தொடக்கக் காலத்திலிருந்தே குருதேவர் இந்த இளம் துறவியின் தோற்றத்தைக் கண்ணாடியில் தெரிகின்ற பிம்பம் போலத் தம்முள் பார்த்திருக்கிறார்.
படிப்படியாக அந்தத் துறவியின் அறிவுரைக்கு ஏற்ப, எது செய்ய வேண்டும் , எது செய்யக்கூடாது என்பவற்றை எல்லாம் அவர் பின்பற்றியும் இருக்கிறார்.
ஒரு நாள் குருதேவர் எங்களிடம் கூறினார், என்னைப்போலவே தோற்றம் கொண்ட இளம் துறவி ஒருவர் என்னுள்ளிலிருந்து அடிக்கடி வெளிப்பட்டு எல்லா விஷயங்களிலும் எனக்கு அறிவுரை சொல்வதுண்டு.
அவர் வெளிப்படும்போது எனக்குச் சிலவேளைகளில் புறவுலக நினைவு  சிறிது இருக்கும். ஒரு சில நேரங்களில் முழுவதுமாக நினைவிழந்து ஜடம்போல் விழுந்து கிடப்பேன். அந்தத்துறவியின் செயல்களையும் சொற்களையும் மட்டுமே அப்போது என்னால் அறிய முடிந்தது. அவர் அப்போது எனக்கு போதித்ததையே பின்னர் வந்த பைரவி பிராம்மணி,தோதாபுரி ஆகியோரும் கற்பித்தனர்.
சாஸ்திர நியதிகளின் உண்மையை நிரூபிப்பதற்காகவே அவர்கள் குருவாக என் வாழ்வில் வந்து அமைந்தனர்.என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இல்லையெனில் தோதாபுரி முதலியவர்களை குருவாக எற்றுக் கொண்டதற்கு வேறு எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்கமுடியாது.
இந்த நான்காண்டு சாதனையின் நிறைவுப்பகுதியில் குருதேவர் காமார்புகூரில் இருந்தபோது மேற்கூரிய விஷயத்தைத் தெளிவாக்குவது போன்ற அசாதாரணமான காட்சி ஒன்று அவருக்கு கிடைத்தது.
அப்போது அவர் காமார்புகூரிலிருந்து ஹிருதயரின் ஊரான சிகோருக்குப்  பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். வழியெங்கும் இயற்கை தனது அற்புதங்களை எல்லாம் திரட்டி வைத்திருந்தது போல் தோன்றியது. நிர்மலமான நீலவானம் அதன் கீழே பச்சைப்பட்டு விரித்தாற்போன்ற நெல் வயல்கள், சாலையின் இருமருங்கிலும் உயர்ந்து வளர்ந்து நிழல் பரப்பி நின்ற ஆல அரச மரங்கள், அவற்றின் கிளைகளில் அமர்ந்து புள்ளினங்கள்  இசைத்தகானம். தேன் சிந்தும் வண்ண மலர்களைத் தாங்கி நின்ற செடிகள், மலர்கள் பரப்பிய நறுமணம் இவை அனைத்தையும் மெய்மறந்து அனுபவித்துக்கொண்டே பல்லக்கில் ஆனந்தமாகச் சென்று கொண்டிருந்தார் குருதேவர்.
அப்போது திடீரென்று அவரது உடலிலிருந்து அழகான இருசிறுவர்கள் வெளிவந்தனர். அவர்கள் சிறிது நேரம் சிற்றடி எடுத்து நடந்தனர். பின் இங்குமங்கும் ஓடி விளையாடினர். வயல் வெளிகளில் வெகுதொலைவு  சென்று காட்டுப் பூக்களைத்தேடினர். அதன் பின் பல்லக்கின் அருகில்  நடந்து வந்து சிரித்து மகிழ்ந்து வேடிக்கை பேசி, மகிழ்ந்து களித்தனர். இவ்வாறு  நெடுநேரம் சென்ற பின் குருதேவரின் உடலுள் புகுந்துவிட்டனர்.
இந்தக் காட்சி பெற்ற சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பைரவி பிரம்மாமணி தட்சிணேசுவரக்கோயிலுக்கு வந்தார். பேச்சுவாக்கில் ஒரு நாள் குருதேவர் இந்தக்காட்சியை ப் பற்றி அவரிடம் கூறினார். அதற்கு பிரம்மாமணி . குழந்தாய், நீ சரியாகத்தான் கண்டுள்ளாய். இப்போது நித்யானந்தரின் உடலில் சைதன்யர் தோன்றியுள்ளார். அதாவது நித்யானந்தரும் சைதன்யரும் ஒன்றாக வந்து உன்னுள் உள்ளனர், அதனால் தான் உனக்கு இத்தகைய காட்சி கிட்டியது. என்று சொன்னார். இவ்வாறு கூறிய பிராம்மணி சைதன்ய பாகவதத்திலிருந்து பின்வரும் இரண்டு பகுதிகளை மேற்கோள் காட்டியதாக ஹிருதயர் கூறினார்.
அவர் கூறியதாவது-
அத்வைத ஆசாரியரின் கழுத்தைக்
கைகளால் கட்டிக்கொண்டு
சைதன்யர் மீண்டும் மீண்டும்
சொல்வார்
நான் மீண்டும் ஒரு முறை திருவிளையாடல் புரிவேன்
அப்போது நான் இறைவன் நாமத்தைப்
பாடும்போது என் உருவம்
பரமானந்த வடிவாய் இருக்கும்.
இன்றைக்கும் சைதன்யர் தன் விளையாட்டை நடத்துகிறார்
மிகப்பெரும் பேறு பெற்றவர்களெ
அதனைக்காண முடியும்
ஒரு நாள் நாங்கள் குருதேவரிடம் அந்தக் காட்சியைப் பற்றிக்கேட்ட போது அவர், நான் அந்தக்காட்சியை க் கண்டது உண்மை. பிராம்மணி அதைக்கேட்டு இவ்வாறு சொன்னதும் உண்மை. அதன்  உண்மைப்பொருள் என்னவென்று நான் எப்படிச்சொல்ல முடியும்? என்று  கூறிவிட்டார். ஆதிகாலத்திலிருந்தே உலகத்துடன் தொடர்புள்ள ஓர் உன்னத
ஆத்மா ஒரு பெரிய நோக்கத்துடன்  தமது உடலில் உறைகின்றன என்பதை இந்தச் சமயத்திலிருந்து குருதேவர் அறிந்து கொண்டார் என்பதை நாம் ஊகிக்க முடியும்.
இவ்வாறு தம்மைப் பற்றிய தெய்வத் தன்மையின் அறிகுறிகளைக் கண்டது, காலப்.போக்கில் தாம் யார் என்பதை அவருக்குத் தெளிவுபடுத்தியது.
சென்ற யுகங்களில் தர்மத்தை நிலைநாட்ட அயோத்தியிலும் பிருந்தாவனத்திலும் ஜானகி மணாளரான ஸ்ரீராமராகவும் ராதாவல்லபரான ஸ்ரீகிருஷ்ணராகவும் யார் அவதரித்தாரோ அவரே இப்போது மறுபடியும் பாரதத்திற்கும் உலகிற்கும் புதிய ஆன்மீக லட்சியத்தை எடுத்துக்காட்ட புதிய உடல் தாங்கி ஸ்ரீராமகிருஷ்ணராக அவதரித்துள்ளார்.
யார் ராமராக அவதரித்தாரோ யார் கிருஷ்ணராக அவதரித்தாரோ அவரே இப்போது (தம் உடலைச் சுட்டிக்காட்டி) இந்த உறையில் வந்துள்ளார். சிலவேளைகளில் அரசர் மாறுவேடத்தில் நகர சோதனைக்குச் செல்வது போல அவரும் இம்முறை ரகசியமாக இவ்வுலகத்தில் அவதரித்துள்ளார். என்று குருதேவர் அடிக்கடி கூறுவதுண்டு.
குருதேவரின் இந்தக்காட்சி பற்றிய உண்மையை அறிவதற்கு அவர் தமது நெருங்கிய பக்தர்களிடம் கூறியுள்ளதை நம்புவதைத்தவிர வேறு வழி இல்லை. இந்தக் காட்சி ஒன்றை மட்டும் தவிர இந்தக் காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்திருந்த பிற காட்சிகள் உண்மை என்பதில் உறுதியான ஒரு முடிவுக்கு வர முடியும்.
 ஏனெனில் இத்தகைய காட்சிகள் நாங்கள் குருதேவரிடம் சென்ற காலத்தில் கூடத் தினமும் நிகழ்ந்ததை நாங்கள் அறிவோம். ஆங்கிலப் படிப்பின் காரணமாக சந்தேக இயல்பு கொண்ட சீடர்கள் அந்தக் காட்சிகளின் உண்மையைப் பரிசோதிக்கச் சென்றுதோற்றுப்போய், திகைத்து நிற்பது நாள்தோறும் நடைபெறும் ஒன்று.
இதனை உறுதிப்படுத்த ஏற்கனவே பல எடுத்துக்காட்டுகளை் வேறொரு பகுதியில் கொடுத்துள்ளோம்.ஒன்றை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறோம்.

பிரம்மசரியத்தை உறுதியாகக் கடைப்பிடித்ததால் தான் குருதேவருக்கு மூளைகுழம்பி இறை ஏக்கம் என்ற உருவத்தில் அது வெளிப்பட்டுள்ளது என்று ராணி ராசமணியும் மதுர்பாபுவும் குருதேவரின் முதல் நான்காண்டு சாதனைக்காலத்தில் ஒரு சமயம் கருத நேர்ந்தது.
குருதேவரின் பிரம்மசரியத்தைக் குலைத்து விட்டால் மறுபடியும் அவர் உடல் நலம் பெறக்கூடும் என்ற கற்பனையில் அவர்கள் லட்சுமிபாய், முதலான சில விலை மாதர்களை முதலில் தட்சிணேசுவரத்திலும் பின்னர் கல்கத்தாவிலும் மேசுவா பஜார் என்ற இடத்திலும் குருதேவரிடம் அனுப்பி வைத்து அவரது மனத்தைக் கலைக்க முயன்றனர். அந்த விலைமாதர்களிடம் அருள் மிக்க அன்னையையே கண்ட குருதேவர், அம்மா அம்மா என்று கூறிக்கொண்டே வெளியுலக நினைவை இழந்தார். அவரது உறுப்புக் கூடச்சுருங்கி, ஆமை தனது ஓட்டுக்குள் செல்வது போல உடலினுள் சென்றுவிட்டது.
அவரது சமாதி நிலையைக்கண்டும் குழந்தை போன்ற இயல்பான மனம் கவரப்பட்டும் அந்தப் பெண்களிடம் தாய்மையுணர்வு மேலெழுந்தது.குருதேவரின் பிரம்மசாரியத்திற்கு ஊறு விளைவிக்கமுயன்றது பெரும் பாவச்செயல் என்று எண்ணி கண்களில் நீர் ததும்ப அவர்கள் அவரிடம் மன்னிப்புக்கோரினர். மீண்டும் மீண்டும் அவரை வணங்கி கலங்கிய மனத்துடன் விடைபெற்றுச்சென்றனர்.
தொடரும்..

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-36

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-36

தட்சிணேசுவர ஆலயத்திற்கு வரும் ஏழைகளை  நாராயணனின் வடிவமாகவே குருதேவர் கருதினார்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் அவர்கள் உண்டது போக எஞ்சியதை த் தாம் உண்ணவும் செய்தார். இதனால் வெறுப்புற்ற ஹலதாரி குருதேவரிடம் , நீ உன் குழந்தைகளுக்கு எப்படித் திருமணம் செய்து வைக்கப்போகிறாய் என்பதை நான் பார்க்கிறேன், என்று சொன்னார்.
அறிவுச்செருக்கு மிக்க ஹலதாரியின் இந்தச்சொற்களால் ஆத்திரமுற்ற குருதேவர், மடையா, அங்கே சாஸ்திர விளக்கம் செய்யும் போது உலகம் பொய், அனைத்தையும் பிரம்மமாகக் காண வேண்டும். என்றெல்லாம் நீதானே நீட்டி முழக்கினாய்,?
நானும் உன்னைப்போல இந்த உலகம் பொய் என்று   சொல்லிக்கொண்டு, அதே சமயம் குழந்தைகளையும் பெற்றுக்கொள்வேன் என்றா நினைத்தாய்? உன் சாஸ்திர அறிவைக்குப்பையில் போடு என்று கடிந்து கொண்டார்.
குழந்தை உள்ளம் கொண்ட குருதேவர் சிலவேளைகளில் ஹலதாரியின் சாஸ்திர அறிவால் குழப்பம் அடைவதும் உண்டு. உடனே அவர் அன்னை காளியிடம் ஓடிச்சென்று தெளிவு பெற்றுவிடுவார். இவ்வாறு தான் ஒருமுறை, குருதேவர் உயர் உணர்வு நிலையில் பெற்ற இறை  அனுபவங்கள் அனைத்தையும் பொய் என்று சொல்லி அவரைக்குழப்பி விட்டார் ஹலதாரி. அது மட்டுமல்ல சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி, இறைவன் இத்தகைய அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று நிரூபிக்கவும் செய்து விட்டார்.
இது பற்றி குருதேவர் கூறினார், அப்படியானால் உயர் உணர்வு நிலையில் நான் கண்ட கடவுட்காட்சிகளும் , கேட்ட வார்த்தைகளும் வெறும் பொய்தானா,என்று ஐயம் என்னுள் எழுந்தது.
அன்னை உண்மையிலேயே என்னை ஏமாற்றி விட்டாளா? இந்த எண்ணம் தோன்றியதும் துயரம் என்னை ஆட்கொண்டு விட்டது.கதறி அழுதுகொண்டே நான் அன்னையிடம் அம்மா, நான் படிப்பறிவற்ற பாமரன் என்பதற்காக என்னை இவ்வாறு ஏமாற்ற வேண்டுமா? என்றுகேட்டேன். மனவேதனை தாளாமல் அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். சிறிது நேரம் ஆயிற்று. திடீரென என் முன்னே தரையிலிருந்து பனிப்புகை போன்ற படலம் தோன்றி அந்த இடம் முழுவதும் பரவிப்படர்ந்து அந்தப்புகை மண்டலத்தின் நடுவே மார்பளவு நீண்ட வெண்தாடி உடைய சாந்தமான தோற்றமுடைய ஒருவர் தோன்றினார்.
கருணை பொங்க அவர் என்னை உற்றுநோக்கி கம்பீரமான குரலில், நீ பாவமுகத்தில் இரு, பாவமுகத்தில் இரு, பாவமுகத்தில் இரு என்று மும்முறை கூறிவிட்டு அந்தப் பனிப்புகையில் கலந்து கரைந்து விட்டார்.
அந்தப்புகையும் எங்கேயோ மறைந்து விட்டது. இந்தக்காட்சி பெற்ற பின்னர் என் குழப்பம் நீங்கி மனம் தெளிவு ம் அமைதியும் பெற்றது.
ஒரு நாள் குருதேவரே இந்த நிகழ்ச்சியை சுவாமி பிரேமானந்தரிடம் சொன்னார், ஹலதாரி  கூறியதை நினைத்த குருதேவருக்கு வேறொரு சமயத்திலும் இத்தகைய ஐயம் எழுந்தது.குருதேவர்கூறினார், ஹலதாரியின் வார்த்தைகள் இன்னொரு முறையும் என்னிடம் குழப்பத்தை உண்டாக்கியது.
பூஜை வேளையில் அழுதபடியே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு  ஒன்றை அருளும்படி அன்னையிடம் வேண்டினேன். அன்னை இந்த முறை ரதியின் தாயைப்போல் பூஜாகலசத்திற்கு அருகில் தோன்றி, நீ பாவமுகத்தில் இரு, என்று சொன்னாள்.
 குருதேவருக்கு வேதாந்த ஞானத்தைப்புகட்டிய பரிவிராஜக குருவான தோதாபுரி, தட்சிணேசுவரத்திலிருந்து சென்ற பின்னர் குருதேவர் நிர்விகல்ப நிலையிலேயே தொடர்ந்து ஆறுமாதங்கள் இருந்தார்
அதன் முடிவில் மீண்டும் குருதேவர் தம் இதயத்துள்ளே அன்னை அசரீரியாக நீ பாவமுகத்தில் இரு, என்று சொல்லக்கேட்டார்.
ஹலதாரி தட்சிணேசுவரக்கோயிலில் சுமார் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தார். எனவே பேய் போல் திரிந்த பூரண ஞானி, பைரவி பிராம்மணி , ராமாயத் சாது, வான ஜடாதாரி, ஸ்ரீமத்தோதாபுரி, போன்றோர் தட்சிணேசுவரம் வந்ததையும், அவர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளையும் நேரில் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தது.
ஹலதாரியும் தோதாபுரியும் அவ்வப்போது  ஒன்றாக அமர்ந்து அத்யாத்ம ராமாயணம் போன்ற நூல்களைப் படித்தது பற்றி குருதேவர் சொல்லியிருக்கிறார்.
ஹலதாரியின் தொடர்புடைய மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தட்சிணேசுவரக்கோயிலில் அவ்வப்போது நிகழ்ந்தனவாகும்.
வாசகர்களின் வசதிக்காக அவற்றை இங்கே தொகுத்து வழங்கினோம்.
குருதேவரின் ஆன்மீக சாதனைகள் பற்றி இதுவரை சொல்லப்பட்ட செய்திகளிலிருந்து அந்நாளில் சாதாரண மக்கள் அவரைப் பித்தர் என்று எண்ணியிருந்தாலும், உண்மையில் அவர் பித்தர் அல்லர், அவருக்கு எவ்வகையான நோயோ மூளைக்கோளாறோ இல்லை. என்று உறுதியாகக்கூறலாம்.
கடவுளைக்காண வேண்டும் என்ற தீவிர தாகம் அவரிடம் இருந்தது. அந்த தாகத்தின் வேகத்தால் அவர் தம்மைப்பராமரித்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார்.
தன் தலைமுடி பற்றியெரியும் போது ஒருவனால் அமைதியாக இருக்க முடியுமா? அது போல இறைவனுக்காக அசாதாரணமான தீவிரத்துடன் மனம் ஏங்கி நின்றதால் உலக மக்களோடு சேர்ந்திருக்கவோ உலகியல் விஷயங்களில் ஈடுபடவோ அவரால் முடியவில்லை. மற்றவர்கள் இதனைப்பைத்தியம் என்று எண்ணிவிட்டனர். ஆனால் யாரால் அப்படியிருக்க முடியும்?
இதயத்தின் தீவிர வேதனை பொறுமையின் எல்லையை மீறும் போது பேச்சில் ஒன்றும் மனத்தில் வேறொன்றுமாக எல்லோருடனும் சேர்ந்து அவர்களைப்போல வாழ எல்லோராலும்  முடியாது.
பொறுமையின் எல்லை எல்லோரிடமும் ஒரே மாதிரி இல்லை. சிறுசிறு இன்பதுன்பங்களிலேயே சிலர் ஆடிப்போய் விடுகின்றனர். வேறு சிலரோ.  எந்த வேகத்தில் அவை பொங்கி வந்தாலும் அனைத்தையும், தாங்கிக்கொண்டு, கடல் போல் கலங்காமல் இருக்கின்றனர்.
குருதேவரின் பொறுமையின் எல்லையை நாம் எவ்வாறு அறிவது? இதற்கு அவரது வாழ்வே விடை. அவரது வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளைக்கூர்ந்து நோக்கினால்  அவை சாதாரணமானவை அல்ல என்பது நமக்குப்புரியும்.
நீண்ட பன்னிரண்டு ஆண்டுகள் சரியான உணவின்றியும், பட்டினியாகவும் , உறக்கம் இன்றியும் இருந்தும் அவரால் நிலைகுலையாமல் வாழ முடிந்தது.
இறை வாழ்வில் தடை என்பதற்காக, தம்மை நாடி வந்த அளவற்ற பெரும் செல்வத்தை எத்தனையோ முறை அவர் உதறித்தள்ள முடிந்தது.
இது போன்ற பல நிகழ்ச்சிகளைச்சொல்லிக்கொண்டே போகலாம்.அவரது உடலும் உள்ளமும் பெற்றிருந்த அசாதாரணமான பொறுமையைப்பற்றி எவ்வளவு தான் கூறுவது?
இந்த காலகட்டத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சிகளை ஆராயும்போது பெண்ணாசை பொன்னாசைகளில் கட்டுண்ட சாதாரண மனிதர்கள் மட்டுமே குருதேவரின் நிலை ஏதோ நோயின் விளைவு  என்று கருதியது தெரியவரும். மதுர்பாபு எப்படி எண்ணினார்? அறிவுபூர்வமாகச் சிந்தித்து குருதேவரின் மனநிலையை ஒரு சிறிதாவது புரிந்து கொள்ளும் திறன் வாய்ந்தவர்கள் மதுர்பாபுவைத் தவிர வேறு யாரும் தட்சிணேசுவரத்தில் அப்போது இல்லை.
குருதேவருக்கு மந்திரோபதேசம் அளித்தபின் கேனாராம் எங்கு சென்றார் என்பது யாருக்கும் தெரியாது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு  அவரைப்பற்றி ஹிருதயர் அல்லது வேறு யாரிடமிருந்தும் எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை. குருதேவரின் செயல்கள், மனநிலை ஆகியவைபற்றி அறிவற்ற ஆசைவயப்பட்ட சாதாரண ஆலயப் பணியாட்கள் கூறிய கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்க   முடியாது. ஆகவே அந்த நாட்களில்காளிகோயிலுக்கு வந்து சென்ற சித்தர்களும் சாதகர்களும் அவரைப்பற்றிச் சொல்லிச்சென்றது  ஒன்றுதான் இந்த விஷயத்தில் நம்பிக்கைக்குரிய பிரமாணம்
குருதேவரிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் இது தொடர்பாக அறிந்து கொண்டவற்றிலிருந்து அவர்கள், குருதேவரைப் பைத்தியம் என்று சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, அவரைப்பற்றி மிக உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தனர் என்பதும் தெரிகிறது.

தீவிர ஆன்மதாகத்தின்  காரணமாக  உடலுணர்வு இல்லாமல் கிடந்த நாட்களில் குருதேவர் தம் உடல்நலத்தைக் காப்பாற்றிக்கொள்ள யார் எந்த அறிவுரை கூறினாலும்அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டு பின்பற்றினார். இது குருதேவரின் சாதனைக்காலத்திற்குப்பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது தெரிகின்றது, சிகிச்சை செய்ய வேண்டுமென்று யாரோ சொன்னார்கள், அதற்கு இசைந்தார்.காமார் புகூருக்குத் தாயிடம் அழைத்துச்செல்ல வேண்டும் என்றார்கள், அதற்கு இசைந்தார். திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கும் மறுக்கவில்லை. இவற்றை எண்ணிப் பார்க்கும் போது அவரைப்பித்தன் என்று எவ்வாறு சொல்ல முடியும்?
இறைபித்துப் பிடித்திருந்த நாட்களில் உலகப்பற்றுக் கொண்டவர்களிடமிருந்தும் லௌகீக ஆசைகள் தொடர்பான வற்றிலிருந்தும் தம்மை விடுவித்துக்கொண்டு தனியாக இருக்கவே குருதேவர் முயன்றார்.
இருப்பினும் பலர் கூடி இறைவனை வழிபடுகின்ற இடங்களுக்குச் சென்று அந்த வழிபாட்டில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டியதை நாம் காண்கிறோம்.
வராக நகரிலிருந்த தசமகா வித்யை கோவில், மற்றும் காளிகட்டத்திலிருந்த காளிகோயில்களுக்குச் செல்வது ஒவ்வோர் ஆண்டும் பானிஹாட்டியில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வது போன்றவற்றிலிருந்து இது நன்கு விளங்கும்.
இந்த இடங்களில் பண்டித சாதகர்களை அவர் சந்தித்து உரையாடியதும் உண்டு. நாங்கள் அறிந்த வரையில் அந்த சாதகர்களும் குருதேவரை மிகவும் மதித்திருந்தனர்.
இந்த நான்காண்டுகாலத்தில் குருதேவர் பணத்தாசையை விடுவதற்காக சில நாணயங்களையும் மண்ணையும் ஒன்றாகக்கையில் எடுத்துக்கொண்டு இரண்டும் சமமதிப்பு உடையவை என்பதை அறியும் சாதனையில் ஈடுபட்டார். சச்சிதானந்த வடிவினனான இறைவனை அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளவன். மண்ணைப்போலவே பணத்திலிருந்தும் எந்த நன்மையையும் பெறுவதில்லை. அவனுக்கு மண், பணம், இரண்டும்  ஒன்றுதான். இந்த எண்ணத்தில் திடமான உறுதி உண்டாகஅவர், பணம்-மண், மண்-பணம் என்று திரும்பத்திரும்பச்சொல்லி அவற்றை கங்கையில் எறிந்தார். பிரம்மனிலிருந்து சிறு புல் வரை இவ்வுலகத்தில் அனைத்து உயிர்களும், அனைத்துப் பொருட்களும் அன்னையின் வெளிப்பாடே அவளது அம்சமே என்ற எண்ணத்தை  உறுதிப்படுத்த ஏழை, எளியவர்களின் எச்சில் உணவை அவர்கள் உண்ட இலைகளிலிருந்தே எடுத்துஉண்டார். அவர்கள் சாப்பிட்ட இடத்தைச்சுத்தம் செய்தார். சாதாரணமான மக்களால் வெறுக்கப்படுகின்ற தோட்டியைவிடத் தாம் எள்ளளவும் உயர்ந்தவன் அல்ல என்ற நம்பிக்கையை வலுப்படுத்தமிகவும் அசுத்தமான அருவருக்கத் தக்க இடங்களைத் தம் கையாலேயே சுத்தம் செய்தார். சந்தனம் முதல் மலம் வரை  எல்லாப்பொருட்களும் ஐம்பூதங்களின் வெவ்வேறு வடிவங்களே என்று அறிந்து விருப்பு வெறுப்பு களைத்துறக்க மற்றவர்களின்  மலத்தை நாக்கினால் எவ்வித வெறுப்புமின்றி தொட்டுப்பார்த்தார்.
இது வரை கேள்விப்பட்டிராத இத்தகைய சாதனைகளை குருதேவரின்வாழ்வில் நாம் காண்கிறோம். இவை இந்த நான்கு ஆண்டுகளுள் நிகழ்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் குருதேவர் மெற்கொண்ட சாதனைகளையும் அவருக்குக் கிடைத்த தெய்வீகக் காட்சிகளையும் நினைத்துப்பார்க்கும் போது, கடவுளைக் காண வேண்டும் என்ற ஓர் அசாதாரண தாகம் அவரை ஆட்கொண்டிருந்ததையும், அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அவர் சாதனையில் முன்னேறியதையம் தெளிவாக உணர முடிகிறது.
புற உதவி  எதுவும் இல்லாமல் ஆழ்ந்த மன ஏக்கம் ஒன்றினாலேயே அவர் அன்னையின் தரிசனம் பெற்றார். சாதனைகளின் முடிவான நோக்கம் அவருக்குக் கைகூடியது . தம் அனுபவங்களை குருவின் போதனைகளோடும் சாஸ்திரங்களுடனும் ஒப்பு நோக்கவும் அவர் தவறவில்லை.
தியாகத்தாலும் கட்டுப்பட்டின் மூலமும் ஒரு சாதகன் தன் மனத்தைத் தூய்மைப்படுத்தி விட்டால் அந்த மனமே அவனது குருவாக அமைகிறது என்று குருதேவர் கூறுவதுண்டு. இத்தகைய தூய மனத்திலிருந்து தோன்றும் உணர்வு அலைகள் சாதகனை எப்போதும் நல்வழியில் நடத்துகின்றன. விரைவில் லட்சியத்தை அடையும்படிச் செய்கின்றன. பிறப்பிலிருந்தே தூயதான குருதேவரின் மனம் குருவைப்போல் வழிகாட்டி, சாதனைக் காலத்தின் முதல் நான்கு ஆண்டுகளிலேயே அவர் இறைக்காட்சியைப்பெறச்செய்தது.

தொடரும்..

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-35

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-35

ஹலதாரியிடம் குருதேவர் கொண்ட தொடர்பில் ஓர் இனிமையான மறைபொருள் இருந்தது. ஹலதாரி குருதேவரின் சித்தப்பாவின் மகன் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். அவர் குருதேவருக்கு மூத்தவர். ஏறக்குறைய 1858-ஆம் ஆண்டில் அவர் தட்சிணேசுவரத்திற்கு வந்திருக்கக்கூடும். ராதாகோவிந்தர் ஆலய அர்ச்சகராக நியமிக்கப்பட்ட அவர் அந்தப் பொறுப்பை 1865- ஆம் ஆண்டு வரை வகித்தார். ஆகவே அவர் குருதேவரின் இரண்டாவது நான் காண்டு சாதனைக்காலத்தில் அதிகமாகவும், தட்சிணேசுவரத்தில் தங்கியிருக்க  வேண்டும். குருதேவரிடம் நெருங்கிப் பழகுகின்ற பேறு பெற்றிருந்தாலும் குருதேவரைப்பற்றி எந்தவித முடிவான கருத்தும் அவருக்கு ஏற்படவில்லை.
சாஸ்திரங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தவர் ஹலதாரி.ஆகவே குருதேவர் பரவச நிலையில் இருக்கும் போது அணிந்திருக்கின்றஉடை , பூணூல் முதலியவற்றைக் களைந்து எறிந்து விடுவது ஹலதாரிக்குப் பிடிக்கவில்லை.
தன் சகோதரன் ஒரு பைத்தியம் அல்லது சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவன் என்று நினைத்தார்.
ஹிருதயர் கூறினார்.சிலவேளைகளில் அவர் என்னிடம் ”ஹிருதய்! அவன் தனது ஆடை,பூணூல் முதலியவற்றைக் களைந்துவிடுகிறான். இது மிகவும் மோசம். முந்தைய பிறவிகளில் செய்த நற்கருமங்களின் காரணமாகவே அந்தணப் பிறவி வாய்க்கிறது. அதனைச் சாதாரணமாக எண்ணி” அந்த அபிமானத்தை விட்டுவிடநினைக்கிறானாம்.
அப்படியென்ன உயர்ந்த நிலை அவனுக்கு வந்துவிட்டது.?எதன் காரணமாக இப்படிச்செய்யத் துணிந்து விட்டான். ஹிருதய்! உன் வார்த்தைகளில் அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவன் இவ்வாறு செய்யாமல் பார்த்துக்கொள்வது உன் கடமை. இத்தகைய செயல்களைச் செய்யாமல் தடுப்பதற்காக அவனைக் கட்டிப்போட நேருமானால் அதைக்கூடச் செய்ய த் தயங்காதே“ என்று கூறுவார்.
அதே சமயம் கண்களிலிருந்து நீர் தாரைதாரையாகப் பெருகி வழிய குருதேவர் பூஜை செய்வது, மனமகிழ்ச்சி பொங்கி ப் பெருக அவர் இறைவனின் திருப்பெயரையும் புகழையும் பாடுவது, தீவிர மன ஏக்கத்துடன் இறைக்காட்சி பெறத்துடிப்பது ஆகியவை ஹலதாரியை பெருவியப்பில்  ஆழ்த்தாமலும் இருக்கவில்லை.
இவை கட்டாயமாக இறையருளினால் தான் ஏற்பட்டிருக்கவேண்டும். சாதாரண மனிதர்களிடம் இத்தகைய நிலைகள் ஒருபோதும் காணப்படுவது இல்லையே என்றும் எண்ணுவார்.
 சிலநேரங்களில் அவர் ஹிருதயரிடம் ஹிருதய்! அவனிடம் ஏதோவோர் அசாதாரணமான சக்தியிருப்பதை நீ உணர்ந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனுக்கு இவ்வளவு மனப்பூர்வமாக சேவை செய்ய முடியாது, என்றும் கூறுவதுண்டு.
பலவகை ஐயங்களால் குழம்பிய ஹலதாரியின்  மனம் குருதேவரின் உண்மை நிலையை அறிந்து கொள்ள இயலாமல் தடுமாறியது.

குருதேவர் கூறினார்,
நான்கோயிலில் ஸ்ரீஜை செய்வதைப்பார்த்து வியப்புடன் எத்தனையோ தடவை, ராமகிருஷ்ணா, இப்போது நான் உன்னை அறிந்து கொண்டேன், என்று சொல்வார்.
அதற்கு நான் கேலியாக அண்ணா. ஜாக்கிரதை!
மீண்டும் குழம்பிவிடாதீர்கள், என்று பதில் சொல்வேன்.
அவரும் விடாமல், நீ இனிமேலும் என் கண்களில் மண்ணைத்தூவ முடியாது, உன்னிடம் நிச்சயமாக தெய்வீக சக்தி உள்ளது. இந்ததடவை நான் அதனை முற்றிலுமாக அறிந்து கொண்டேன். என்பார்.
நல்லது, இந்த உறுதி எத்தனை நாள் பார்க்கலாம், என்பேன் நான், ஆனால் அவர் கோயிலில் பூஜையை முடித்துக்கொண்டு ஒரு சிட்டிகை பொடியை மூக்கில் இழுத்துக்கொண்டு பாகவதம் கீதை அத்யாத்ம ராமாயணம் போன்ற ஏதாவதொரு நுஸலைப்பற்றி விவரிக்கத் தொடங்குவாரோ இல்லையோ, ஆவணம் தலைக்கேறிவிடும்.முற்றிலும் வேறுபட்ட மனிதராக மாறிவிடுவார் அவர்
 .ஒரு நாள்  நான் அவரிடம் சென்று அண்ணா சாஸ்திரங்களில் நீங்கள் படித்த எல்லா நிலைகளையும் நான் உணர்ந்திருக்கிறேன். இவை அனைத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, என்று சொன்னேன்.
உடனே அவர், அடேய் நீ ஒரு முழுமுட்டாள்.நீயாவது இவற்றைப்புரிந்து கொள்வதாவது! என்று கூறிவிட்டார்.
நான் உண்மையில் சொல்கிறேன் .இதோ இதனுள்( தம் உடலைக்காட்டி) இருப்பவர் அனைத்தையும் எனக்கு விளக்கி க்  கூறுகிறார். என்னுள் தெய்வீக சக்தி இருப்பதாகச் சற்றுமுன் கூறினீர்களே, அந்த சக்தி தான் எனக்கு எல்லாவற்றையும் புரிய வைக்கிறது. என்றேன்.
இதைக்கேட்டது தான் தாமதம் , கொதித்தெழுந்துவிட்டார்.விலகிப்போ முட்டாளே! கலியுகத்தில் கல்கி அவதாரத்தைத் தவிரவேறு அவதாரம்  உண்டு என்று  எந்த சாஸ்திரம் சொல்கிறது? உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அதனால் தான் நீ இவ்வாறு நினைக்கிறாய்? என்று ஓங்கிய குரலில் கத்தினார்.
நான் சிரித்துக்கொண்டே இனிமேல், குழப்பமே வராது என்று சற்று முன்பு கூறினீர்களே! என்று கேட்டேன். அதனை யார் செவி கொடுத்துக்கேட்பது?
இது போல் ஒரு முறையல்ல. இருமுறையல்ல, பலமுறை நிகழ்ந்ததுண்டு.
ஒரு நாள் நான் பரவச நிலையில் மரக்கிளை ஒன்றில் ஆடையேதுமின்றி ஒரு சிறுவனைப்போல் அமர்ந்து சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததை ஹலதாரி கண்டார்.
 சந்தேகத்திற்கு இடமின்றி என்னை ஒரு பிரம்மதைத்யன் பிடித்துக் கொண்டதாக அன்றிலிருந்து ஹலதாரி முடிவு செய்து கொண்டார்.
ஹலதாரியின் மகன் காலமான செய்தியை முன்பே குறிப்பிட்டுள்ளோம். அந்த நிகழ்ச்சிக்குப் பின் ஹலதாரி காளியைத்தமோ குண தேவி என்று முடிவு செய்து கொண்டார்.
ஒரு நாள்  அவர் குருதேவரிடம் தமோ குண தேவியை வழிபடுவதன்  மூலம் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுமா? அத்தகைய தேவியை நீ ஏன் வழிபடுகிறாய், என்று கேட்டுவிட்டார். இதற்கு குருதேவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் இஷ்டதெய்வத்தை அவமதித்ததைக்கேட்டதால் புண்பட்ட மனத்துடன் காளி கோயிலுக்குச் சென்று அன்னை காளியிடம் கண்ணீருடன் அம்மா, சாஸ்திரங்களில் ஆழ்ந்த அறிவு பெற்றவர் ஹலதாரி, நீ தமோ குண வடிவினள், என்று    சொல்கிறாரே! உண்மையிலேயே நீ தமோ குண வடிவினள் தானா? என்று கேட்டார்.
அன்னை குருதேவருக்கு உண்மையை அறிவித்து அருளினாள். உடனே அவர் மட்டற்ற மகிழ்ச்சியுடன்  ஹலதாரியிடம் ஓடிச்சென்று, ஆனந்த மேலீட்டால் ஒரே தாவலில் அவரது தோளின் மீது எறி அமர்ந்து கொண்டு அன்னையையா தமோ குண வடிவினள் என்கிறீர்?
 அன்னையா தமோ  குண வடிவினள்.? அவளே அனைத்தும். முக்குணங்களில் திருவுருவம் அவளே! தூய சத்வ குண வடிவினளம் அவளே! என்று திரும்பத் திரும்ப உணர்ச்சி்ப் பெருக்குடன் கூறினார். பரவச நிலையிலிருந்த குருதேவரின் சொற்களாலும் ஸ்பரிசத்தாலும் ஹலதாரியின் அகக்கண் அப்போதைக்குத் திறந்தது போல் தோன்றியது!
ஹலதாரி  அப்போது பூஜை செய்து கொண்டிருந்தார்.குருதேவர் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி குருதேவரிடம் அன்னையின் வெளிப்பாட்டையும் கண்டார்.
சந்தனத்தையும் மலரையும் எடுத்து அவரது தாமரைத் திருவடிகளில் அர்ப்பணித்து வணங்கினார்.
சிறிது நேரம் கழித்து ஹிருதயர் அங்கே வந்து ஹலதாரியிடம், மாமா, அவரை ஏதோ பேய் பிடித்திருப்பதாக எல்லாம் கூறினீர்களே! இப்போது ஏன் வணங்குகிறீர்கள்? என்று கேட்டார். ஏனென்று எனக்கே தெரியவில்லை. காளி கோயிலிலிருந்து வந்த அவன் என்னை ஏதோ செய்து விட்டான் எல்லாமே எனக்கு மறந்துவிட்டது போல் தோன்றுகிறது. இறைவனின் சக்தி அவனிடம் மிளிர்வதை நான் கண்டேன்.
காளி கோளிலில் நான் ராமகிருஷ்ணனிடம் சொல்லும் போதெல்லாம் இத்தகைய உணர்வை என்னிடம் அவன் தோற்றுவிக்கிறான் .ஆகா! என்ன அற்புதம் இது! என்னால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லையே! என்று ஹிலதாரி பதிலளித்தார்.
இவ்வாறு ஹலதாரி குருதேவரிடம் தெய்வீக சக்தியைப் பன்முறை உணர்ந்தாலும், பொடிபோட்டுக் கொண்டு சாஸ்திர விளக்கம் சொல்ல அமர்ந்து விட்டால் எல்லாம் பறந்து விடும். கல்விச் செருக்கால் மதிமயங்கி மறுபடியும் தன் பழைய நிலைக்கே சென்றுவிடுவார்.
பெண்ணாசை, பொன்னாசை விடுபடும் வரை புறச்சடங்குகள் சாஸ்திர அறிவு ஆகியவற்றால் எந்த பயனும்  இல்லை. பரம்பொருளை உணர்வதும் இயலாது ஹலதாரியின் நடத்தையிலிருந்து இந்தக் கருத்துக்கள்  தெளிவாகின்றன.

தொடரும்..

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-34

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-34

தவம் செய்வதற்கு தகுந்த புனிதமான ஓர் இடம் தேவை. என்று உணர்ந்த குருதேவர் ஐந்து புனித மரங்கள் நடப்பட்ட புதிய பஞ்சவடி ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற தம் விருப்பத்தை ஹிருதயரிடம் வெளியிட்டார்.
ஹிருதயர் கூறினார்,
பஞ்சவடியின் அருகிலிருந்த சிறிய குளமான ஹம்ச புகூர் தூர்வாரப்பட்டு அந்த மண்ணைப் பழைய பஞ்சவடிக்கு அருகில் இருந்ததாழ்ந்த நிலத்தில் பரப்பி, அந்தப்பகுதி சமநிலமாக்கப்பட்டிருந்தது. எனவே குருதேவர் எந்த நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்வாரோ அந்த மரம் அப்போது இல்லை, அதனால் தற்போது சாதனைக்குடில் அமைந்திருக்கின்ற இடத்திற்கு மேற்கில் குருதேவர் தம் கைகளாலேயே ஓர் அரசமரத்தை நட்டார். ஆல், அசோக, வில்வ, நெல்லி மரங்களை ஹிருதயர் நட்டார். அந்த இடத்தைச்சுற்றி துளசி, அபராஜிதம், இன்னும் பல செடிகொடிகளும் நடப்பட்டன. ஆடு, மாடுகள் அந்த இளஞ்செடிகளை அழித்து விடாதிருக்க கோயில் தோட்டக்காரன் பர்தாபாரியின் உதவியுடன் வேலியும் அமைக்கப்பட்டது.
குருதேவரின் பராமரிப்பினால் துளசிச் செடியும் அபராஜிதக் கொடியும் வெகுவிரைவில் அடர்த்தியாக வளர்ந்தன. அங்கு அவர் தியானத்தில் அமரும் போது வெளியிலிருந்து யாரும் அவரைப்பார்க்க முடியாத அளவுக்கு அவை காடுபோல் வளர்ந்து விட்டிருந்தன.
காளிகோயிலைக் கட்டிய ராணி, அங்கு வந்துத் தங்கிச் செல்கின்ற யாத்திரிகர்களுக்கும் துறவிகளுக்கும் வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தார்.
 இதைப்பற்றிக்கேள்விப்பட்டவர்கள் புரி,கங்காசாகர், போன்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்கின்ற வழியில் அங்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கிச் செல்லலாயினர்.
மகான்களும், சிறந்த சாதகர்களும் தட்சிணேசுவரத்திற்கு வருவது வழக்கம் என்று குருதேவர் கூறியுள்ளார்.
இவர்களுள் ஒருவரின் அறிவுரைப்படி குருதேவர் பிராணாயாமம் போன்ற ஹடயோகப் பயிற்சிகளைச் செய்ததாக அறிகிறோம்.
ஒரு நாள் ஹிலதாரியைப் பற்றிப்பேசிக் கொண்டிருந்தபோது குருதேவர் இதைத் தெரிவித்தார். ஹடயோகத்தைப்பயின்று அதனால் ஏற்பட்ட விளைவுகளை அறிந்திருந்த அவர் எங்களை அந்தப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று தடுத்தார்.
சிலர் அவரிடம் ஹடயோகப் பயிற்சி பற்றி அறிவுரை கேட்பதற்காகச் சென்றபோது அவர், இக்காலத்திற்கு இந்தப் பயிற்சிகள் ஏற்றவையல்ல, கலியுகத்தில் வாழ்நாள் குறுகியது. வாழ்க்கையும் உணவை அடிப்படையாகக்கொண்டுள்ளது. அகவே ஹடயோகப் பயிற்சிகளில் ஈடுபட்டு உடம்பைத் தகுதியுடையதாக்கி, ராஜயோகத்தின் உதவியுடன் இறைவனை அழைப்பதற்கு நேரம் எங்கே உள்ளது? ஹடயோகப் பயிற்சிகளை ஒருவர் செய்ய விரும்பினால் யோகத்தில் நன்கு பயிற்சி பெற்ற குருவுடன் தங்கி நீண்ட நாட்கள் பயிற்சி பெற வேண்டும். உணவு போன்ற விஷயங்களில் அவரது உபதேசப்படி கடுமையான நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.
நியமங்களிலிருந்து சிறிது வழுவினால் கூட உடலில் நோய்கள் ஏற்படக்கூடும். ஏன், மரணமே நேரலாம். எனவே இந்தப் பயிற்சிகள் அவசியமில்லை.
மனத்தை அடக்குவதற்காகத்தானே மூச்சைக் கட்டுப்படுத்திப் பிராணாயாமம் செய்ய வேண்டியிருக்கிறது! ஆனால் பக்தியுடன் தியானம் செய்தால் அதன் மூலமாகவே படிப்படியாக மனம் மூச்சு இரண்டும் தானாகவே  கட்டுப்பட்டு விடுகின்றன.
கலியுகத்தில் மக்களின் வாழ்நாளும் குறைவு, ஆற்றலும் குறைவு. அதனால் தான் கடவுள் எல்லையற்ற கருணைகொண்டு தம்மை அடைவதற்கான வழியை எளிதாக்கி உள்ளார்.
மனைவியையோ மக்களையோ இழக்கும்போது உண்டாகும் துயரமும் ஏக்கமும் அவன் ஒரு நாள் முழுவதும் கடவுளுக்காக ஏற்கி அழுதால் இறைவன் அவனுக்குக்காட்சி அளித்தே தீருவான்.
ஸ்மிருதிகளைப் பின்பற்றுகின்ற பக்த சாதகர்களுள் பலரும் செயல்முறையில் தந்திர சாதனைகளிலேயே ஈடுபடுகின்றனர்.
வைணவப் பிரிவைச்சேர்ந்த அத்தகைய சில சாதகர்கள் பரகீய பிரேம சாதனைகளைச் செய்கின்றனர். வைணவ நெறியில் ஈடுபாடு கொண்ட ஹலதாரி, ராதாகோவிந்தர் ஆலய அர்ச்சகர் பொறுப்பை ஏற்ற சில நாட்களுக்குப்பின் ரகசியமாக பரகீய சாதனைகளில் ஈடுபட்டார்.
இந்த விஷயம் மெதுவாகப் பரவியது. பலரும் இது பற்றி ஒளிவுமறைவாகப்பேசத் தொடங்கினர். ஹலதாரிக்கு வாக்குசித்தியிருந்தது. அவர் எது சொன்னாலும் அப்படியே பலித்துவிடும். அப்படியொரு பிரசித்தி இருந்ததால் ஹலதாரி  யின் கோபத்திற்கு ஆளாக அஞ்சி, அவரது பரகீய சாதனை பற்றி அவரெதிரில் பேசவோ கேலிசெய்யவோ யாரும் துணிந்து முன்வரவில்லை.
நாளடைவில் ஹலதாரியின் விஷயம் குருதேவருக்குத் தெரியவந்தது.தங்களுக்குள் எதையெதையோ கற்பனை செய்து கொண்டு மக்கள் அவரைத்தூற்றுவதைக்கண்ட குருதேவர் ஹலதாரியிடம்,ஒன்றையும் மறைக்காமல் சொல்லிவிட்டார்.
ஹலதாரி அதற்கு விபரீதமாகப்பொருள் கொண்டு கடுங்கோபத்துடன் என்னைவிடச் சிறியவனான நீ என்னைப்பற்றி அவதூறு பேசுகிறாயா நீ ரத்தமாக வாந்தியெடுப்பாய் என்று சாபமிட்டார். தாம் அவ்வாறு சொன்னதற்கான காரணங்களை எடுத்துச்சொல்லி ஹலதாரியை அமைதிப்படுத்த குருதேவர் எவ்வளவோ முயன்றும் ஹலதாரியின் கோபம் தணியவில்லை.
ஒருசில நாட்களுக்குப் பிறகு இரவு சுமார் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு  குருதேவருக்குக் குமட்டல் ஏற்பட்டு அவர் ரத்தவாந்தி எடுக்க நேர்ந்தது.
இதைப்பற்றி குருதேவர் கூறினார், 
அந்த ரத்தத்தின் நிறம் அவரையிலைச் சாறு போன்று கறுப்பாக இருந்தது. வாயிலிருந்து கட்டியாக வெளிப்பட்ட அதன் ஒரு பகுதி கீழே விழுந்தது. இன்னொரு பகுதி உள்ளே சுற்றிக்கொண்டு ஆலம் விழுது தொங்குவது போல் முன்பல் அருகில் உதடுகளிலிருந்து வழிந்து தொங்கியது. துணியை வைத்து ரத்தம் வருவதைத்தடுக்க நான் முயன்றும் அது நிற்கவில்லை. எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. அக்கம்பக்கத்திலிருந்த எல்லோரும் ஓடி வந்தனர்.
ஹலதாரி அப்போது கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தார். விவரமறிந்து அவரும் விரைந்தோடி வந்தார். அவரைக் கண்டதும், நான் ”அண்ணா உங்கள் சாபத்தால் எனக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையைப் பாருங்கள் என்று கண்களில் நீர் ததும்பக்கூறினேன்.எனது பரிதாப நிலையைக் கண்டு அவரும் அழத்தொடங்கிவிட்டார்.
வயதான அனுபவம் மிக்க சாது ஒருவர் அன்று கோயிலுக்கு வந்திருந்தார். கூக்குரல் கேட்டு அவரும் என்னருகில் ஓடி வந்தார். ரத்தத்தின்  நிறத்தையும் ரத்தம் வெளிப்பட்ட இடத்தையும் உன்னிப்பாகக் கவனித்த அவர், அச்சம். வேண்டாம் ரத்தம் வெளியேறியது நல்லதாகப்போயிற்று. நீங்கள் யோகப் பயிற்சிகள் செய்துவந்தீர்கள் அல்லவா?
யோகப் பயிற்சிகளின் விளைவாக சுழுமுனை நாடி திறந்து தலையை நோக்கி ரத்தம் வேகமாகப்போகத் தொடங்கியது. அந்த வழியாக ரத்தம் மேலே போவதற்குப் பதிலாக பாதை மாறி வாய்வழியாக வந்தது நல்லதாயிற்று.
ஹடயோகத்தின் இறுதியில் ஒருவர் ஜடசமாதி நிலையை அடைகிறார். நீங்களும் அந்த நிலையைத்தான் நெருங்கிக் கொண்டிருந்தீர்கள். ரத்தம் மட்டும் உங்கள் தலையை அடைந்திருந்தால்  ஜடசமாதிநிலையிலிருந்து நீங்கள் திரும்பியிருக்கவே முடியாது. அன்னை உங்கள் மூலமாக ஏதோ ஒரு தலையாய பணியை நிறைவேற்ற எண்ணியிருக்கிறாள். அதனால் தான் உங்களைக் காப்பாற்றி இருக்கிறாள் என்று நினைக்கிறேன் என்றார்.
அந்த சாதுவின் சொற்களைக்கேட்ட பிறகு தான் எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது, குருவி உட்காரப் பனம்பழம் விழுந்தது போல் ஹலதாரியின் சாபமும் தற்செயலாக ஒரு பெரிய நன்மையில் முடிந்தது.

தொடரும்..

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-33

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-33

தமது சாதனையின் முதல் நான்கு ஆண்டுகளில் இறைவனை உணர்வதற்கு தணியாத ஆன்ம தாகம் ஒன்றையே குருதேவர் துணையாகக் கொண்டிருந்தார் என்று முன்பே கண்டோம். அந்தக் காலகட்டத்தில் சாஸ்திர விதிமுறைகளின்படி அவருக்கு யாரும் சாதனைகளைக் கற்பிக்கவில்லை.
எல்லா சாதனைகளுக்கும் இன்றியமையாத தான தீவிர ஆன்ம தாகம் ஒன்றுதான் அவருக்குத்துணையாக இருந்தது.
ஆன்ம தாகத்தால் மட்டுமே அவர் அன்னையின் தரிசனம் பெற்றதிலிருந்து, ஒரு சாதகன் மற்ற எதன் துணையும் இன்றி தீவிர மனஏக்கம் ஒன்றினாலேயே இறைக்காட்சி பெறமுடியும் என்பது உண்மையாயிற்று.
 ஆனால் எத்தகைய தீவிரமான மனஏக்கம் இதற்குத்தேவை என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம்.
 குருதேவரின்  வாழ்க்கையில் இந்தக் காலகட்டத்தை சற்றுக் கவனித்தால் இது நமக்குத் தெளிவாகும்.
 தீவிர மனஏக்கத்தின் விளைவால் அவரது உடலும் மனமும் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டதுபோலாகிவிட்டது.
உணவு, உறக்கம், வெட்கம், பயம் போன்ற நன்கு வேரூன்றிவிட்ட உணர்ச்சிகள் கூட அவரிடமிருந்து மறைந்தது. உயிர்தரிப்பதற்குத்தேவையான முயற்சிகளில் கூட ஈடுபடாத போது, உடல் நலம் பேணுவதைப் பற்றிய பேச்சே இல்லை. இவற்றில் அவர் எவ்வித கவனமும் செலுத்தவில்லை.
குருதேவர் கூறினார், உடலைச்சுத்தம் செய்யாததால் தலைமுடியில் தூசிபடிந்து, அது சடையாகி விட்டிருந்தது.
 தியானம் செய்ய அமரும் போது மனம் மிகவும் ஆழ்ந்து ஒருமைப்படுவதால் உடல் ஒரு மரக்கட்டையைப்போலச் செயலிழந்து விடும்.
உடலை ஏதோ ஜடம் என்று எண்ணிய பறவைகள் சிறிதும் பயமின்றி  என் தலையில் அமர்ந்து, அழுக்கும் தூசியும் மண்டிக்கிடந்த முடியில் ஏதாவது உணவுத்துணுக்குகள்  கிடைக்குமா என்று கொத்திக்கிளறும், இறைவனின் திருக்காட்சி கிடைக்காத ஏக்கத்தினால், பொறுமையிழந்து நான் என் முகத்தைத் தரையில் பலமாகத்தேய்த்துக் கொண்டதால் காயங்கள், ஏற்பட்டு ப் பல இடங்களில் ரத்தம் வழியும், நாள் முழுவதும் பிராத்தனை தியானம், பூஜை, சரணாகதி, என்று சாதனைகளிலேயே ஈடுபட்டிருந்ததால் நேரம் எவ்வாறு கழிந்தது என்பதே எனக்கு நினைவில்லை. கோயிலில் சங்கொலியும் மணியோசையும் கேட்கும் போது தான் பகல் கழிந்து விட்டது. என்பது நினைவுக்கு வரும்.
இன்னொரு நாளும் வீணாக முடியப்போகின்றதே, அன்னையின் திருக்காட்சி இன்னும் கிட்டவில்லையே, என்ற எண்ணம் அலைபோல் தொடர்ந்து வரும். இந்த எண்ணத்தின் எழுச்சியால் மனம்  பட்டபாட்டைச் சொல்லி முடியாது. ஏதோ உணர்ச்சிப் பிரவாகத்தில் அடித்துச்செல்லப்பட்டது போல் நிலைகுலைந்து அமைதி இழந்து தரையில் விழுந்து புரண்டு, அம்மா இன்னும் உன் தரிசனம் எனக்குக் கிட்டவில்லையே! என்று கதறுவேன்.என்கூக்குரல் நாலாபக்கமும் எதிரொலித்துப் பரவும். என்னைக் கண்டவர்கள், பாவம் தாளாத வயிற்றுவலி போலிருக்கிறது. அதனால் தான் இந்தப் பாடுபடுகிறார் என்று பேசிக்கொள்வார்கள்.
சாதனையின் போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பலமுறை குருதேவர் எங்களிடம் கூறியிருக்கிறார். ஆன்ம தாகத்தின் தேவையை எங்களுக்கு உணர்த்துவது தான் அவரது நோக்கம். மனைவி, மக்கள், உற்றார், உறவினர், இறந்து விட்டாலோ செல்வத்தை இழந்துவிட்டாலோ மக்கள் குடம்குடமாகக் கண்ணீர் விட்டு அழுவார்கள். இறைவனை அடைய முடியவில்லையே என்று யார் அழுகிறார்கள், சொல் பார்க்கலாம், நாங்களும் இறைவனிடம் எவ்வளவோ பிராத்தனை செய்து விட்டோம். ஆனால் அவன் இன்னமும் காட்சி தரவில்லை. என்று கூறுவதை மட்டும் அவர்கள்  விடுவதில்லை.
ஒரு முறையேனும் மனம் விட்டு ஏங்கி அழட்டும். அவன் எப்படிக்காட்சி தராமல் இருக்கிறான் என்று  பார்ப்போம் என்று உணர்ச்சிப்பெருக்குடன் கூறுவார்கள். இதய ஆழத்திலிருந்து வரும் இந்த வார்த்தைகள் எங்களை அப்படியே உறையச் செய்து விடும்! இந்த வார்த்தைகளின் உண்மையை அவர் தம் வாழ்க்கையில் உணர்ந்திருப்பதால் தான் இவ்வளவு ஆணித்தரமாகப்பேச முடிகிறது என்பது எங்களுக்குத் தெளிவாயிற்று.

முதல் நான்கு ஆண்டு சாதனையின் போது கூட அன்னையின் தரிசனத்தால் மட்டும் குருதேவர் திருப்தி அடைந்து  நின்றுவிடவில்லை.
பாவமுகத்தில் இருந்தபோது அன்னையின் தரிசனம் கிடைத்த பின்னர், குலதெய்வமான ஸ்ரீரகுவீரரின் காட்சியைப்பெற விழைந்தது குருதேவரின் மனம். அனுமன் கொண்டது போன்ற வேறெதையும் வேண்டாத பக்தியிருந்தால் மட்டுமே ஸ்ரீராமசந்திரரின் தரிசனம் கிடைக்கும். என்று உணர்ந்த அவர், தாச பக்தியின் மூலம்  இறைவனை அடைவதற்காக அனுமனின் அகவுணர்வுகளை மனத்தில் வரவழைத்துக்கொண்டு சில காலம் சாதனையில் ஈடுபட்டார்.
இடைவிடாது அனுமனைச் சிந்தித்ததன் பயனாக, அந்தக் காலகட்டத்தில் தன்னை அனுமனிலிருந்து வேறுபட்ட ஒரு தனிமனிதனாகக் காண அவரால் இயலாது போயிற்று.
அந்த நாட்களைப் பற்றி குருதேவர் கூறினார், அந்த நாட்களில் நான் அனுமனைப் போலவே நடந்தேன். உண்டேன், மற்ற செயல்களையும் செய்தேன். வேண்டுமென்று அவ்வாறு செய்யவில்லை. தானாகவே அவை நிகழ்ந்தன! இடுப்பை சுற்றி ஒரு துணியைக் கட்டி வால் போல் தொங்கவிட்டுக்கொண்டேன். குதித்துக்குதித்து நடந்தேன். பழங்களையும் கிழங்குகளையும் தவிர வேறெதையும்  உண்ணாதிருந்தேன்.  அவற்றைக்கூட த்தோல் உரித்து உண்ணத்தோன்றவில்லை. நாளின் பெரும்பகுதியை மரக்கிளையிலேயே  கழித்தேன். பக்தி மேலீட்டால் எப்போதும், ராமா, ராமா  என்று கூவிக்கொண்டிருந்தேன். வானரங்களைப்போலவே என் கண்களும்  எப்போதும் ஒரு பரபரப்பான பார்வையைப் பெற்றன. விந்தை என்னவென்றால் என் முதுகுத் தண்டின் கீழ்பகுதி ஓர் அங்குலத்திற்கும்மேலாக அப்போது வளர்ந்திருந்தது. இதைக்கேட்டதும் நாங்கள் குருதேவரிடம் இப்போதும் உங்கள் முதுகுத் தண்டின் கீழ்பகுதி அவ்வாறுதான் இருக்கிறதா?  என்று கேட்டோம். அதற்கு அவர் இல்லை, அந்த உணர்வில் நான் முழுமை பெற்று மனம் அதிலிருந்து விடுபட்ட பின்னர் அந்த வளர்ச்சி சிறிதுசிறிதாகக் குறைந்து முன்போலாகி விட்டது  என்றார்.....
குருதேவர் தாச பக்தி சாதனை செய்த நாட்களில் ஓர் அசாதாரணமான காட்சி கிடைத்தது.
முன்னர் கிட்டிய காட்சிகளிலிருந்து அது முற்றிலும் வேறுபட்ட புதுமையான அனுபவம். அது அவரது உள்ளத்தில் ஆழப்பதிந்து எப்போதும் நினைவில் நிலைபெற்றிருந்தது. அவர் கூறினார்,ஒரு நாள் பஞ்சவடியில் அமர்ந்திருந்தேன்.தியானம் எதுவும் செய்யவில்லை வெறுமனே உட்கார்ந்திருந்தேன்.அப்போது ஈடிணையற்ற பிரகாசம் பொருந்திய பெண் என் முன் தோன்றினாள்.
அவளது உடலிலிருந்து தோன்றிய ஒளியால் அந்தப்பகுதி முழுவதுமே ஒளி வெள்ளத்தில் ஆழ்ந்தது. நான் அந்தப் பெண்மணியை மட்டும் தான் கண்டேன் என்பதில்லை, பஞ்சவடியின் மரங்கள், கொடிகள், கங்கை என்று அனைத்தையும் அப்படியே கண்டேன். என் முன்தோன்றிய பெண்ணும் ஒரு மானிடப்பெண்ணாகவே தோன்றினாள். ஏனெனில் அவளுக்கு தேவதேவியரைப்போல் மூன்று கண்கள் இருக்கவில்லை. அனால் பொதுவாக தேவதேவியரின் முகத்தில் கூட காணப்படாத ஓர் அசாதாரணமான அன்பும், கனிந்த கருணையும், அளவற்ற பொறுமையும் ஆழ்ந்த துயரமும் அவளது திருமுகத்தில் பொலிந்தன.
கருணைத் திருநோக்கால் என்னைப்பார்த்த அவள் வடதிசையிலிருந்து என்னை நோக்கி  மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்து வந்தாள். அது யாராக இருக்கும் என்று நான் வியந்து நின்றபோது, எங்கிருந்தோ திடீ ரென்று குரங்கு ஒன்று தோன்றி கீச்கீச்சென்று ஒலி எழுப்பியவாறே அவளது திருவடியில் வீழ்ந்து வணங்கிற்று.  என் உள்ளம் ”சீதா, சீதா , துயரமே வடிவான சீதா ஜனகரின் மகள்  சீதா, ராமனையே உயிர்மூச்சாகக்கொண்ட சீதா” என்று கூவியது.
நான் மெய்மறந்து அம்மா அம்மா என்று அழைத்தபடியே அவளது திருவடிகளில் வீழ்ந்து வணங்க முற்பட்டேன்.
அதற்கு அவள் மிக விரைவாக நடந்து வந்து இதனுள் (தம் சரீரத்தைக்காட்டி) புகுந்து விட்டாள்!
வியப்பாலும் ஆனந்தத்தாலும் நான் சுயவுணர்வை இழந்து சாய்ந்தேன், இதற்கு முன் தியானம், சிந்தனை, எதுவும் செய்யாத நிலையில் இத்தகைய காட்சிகளை நான் கண்டதில்லை.துயரமே வடிவான சீதையை முதன்முதலில் கண்டதாலோ என்னவோ, அவளைப்போன்றே நானும் வாழ்க்கை முழுவதும் துயரங்களில் உழல வேண்டியதாயிற்று.

தொடரும்..

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-32

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-32


முதல் நான்கு ஆண்டு சாதனைகளின் நிறைவு

 குருதேவரின் சாதனைக் காலத்தைப்பற்றி அறிய அவரே அதனைப்பற்றிக்கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
குருதேவரின் சாதனைக்காலம்(தவ வாழ்க்கை) 1856-1867 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இந்தக் காலகட்டத்தை குருதேவரின் சாதனைக்காலம் என்று நாம் குறிப்பிடுகிறோம்.
இப்படி நாம் வரையறுத்தாலும் இந்தக் காலகட்டத்தின் நிறைவுப் பகுதியில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு அந்த இடங்களிலும், தட்சிணேசுவரத்திற்குத்  திரும்பிய பின்னரும் அவர் தமது சாதனைகளைத் தொடர்ந்தார் என்பதையும் நாம் பார்க்கப்போகிறோம். இந்தப் பன்னிரண்டு ஆண்டு காலத்தையும் நாம் மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக அறிய முற்படுவோம்.
முதல் நான்கு ஆண்டு காலத்தின்
(1856-1859) முக்கிய நிகழ்ச்சிகளை நாம் முன்னரே பார்த்தோம்.
அடுத்த பகுதி 1860 முதல் 1863 முடிய உள்ளதாகும்.
இப்பகுதியில் கடைசி இரண்டு ஆண்டுகளில் கோகுல விரதத்தில் தொடங்கி வங்கநாட்டின் புகழ்மிக்க அறுபத்துநான்கு தந்திரங்கள் கூறுகின்ற சாதனைகளையும் விதிப்படிச் செய்தார்
குருதேவர். 1864முதல் 1867 முடிய உள்ள மூன்றாவது பகுதியில் கீழ்காணும் சாதனைகளைப்புரிந்தார்.ராமாயத் பிரிவைச்சேர்ந்த ஜடாதாரி என்ற துறவியிடமிருந்து ராம மந்திர தீட்சையும், ராம்லாலா விக்கிரகமும் பெற்றார். பெண்ணுடை தரித்து ஆறு மாதகாலம் வைணவ நூல்கள் கூறுகின்ற மதுர பாவனை சாதனை செய்தார். தோதாபுரியிடமிருந்து துறவறம் ஏற்று நிர்விகல்ப சமாதி அனுபவம் பெற்றார். இறுதியாக கோவிந்தரிடமிருந்து இஸ்லாமிய சமய உபதேசம் பெற்றார். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் தான் வைணவ தந்திரங்கள் கூறுகின்ற சக பாவனை சாதனைகள் புரிந்தார். வைணவத்தின் துணைப் பிரிவுகளான கர்த்தாபஜா, நவரசிக் போன்றவற்றுடனும் இந்தக்காலத்தில் தான் தொடர்பு கொண்டார்.வைணவத்தின் எல்லா  பிரிவுகளுடனும் குருதேவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்பது, அந்தப் பிரிவுகளைச் சார்ந்த வைஷ்ணவகரண் கோசுவாமி போன்ற சாதகர்கள் தங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்காக அவரை நாடியதிலிருந்து தெரியவருகிறது.
சாதனைக்காலத்தை இவ்வாறு மூன்று பிரிவுகளாகப் பிரித்து அவற்றை ஆராயும் போது ஒவ்வொரு பிரிவும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட தொகுதியாக அமைந்திருப்பதைக் காணலாம்.
குருதேவர் தம் சாதனையின் ஆரம்பகாலத்தில் வெளியிலிருந்து பெற்ற ஒரே உதவி ஸ்ரீகேனாராம் பட்டாச்சாரியரிடம்  இருந்து மந்திரோபதேசம்  பெற்றதாகும்.
கடவுளைக் காணவேண்டும் என்ற தீவிரமான ஆன்மதாகமே இந்தக் காலகட்டத்தில் அவருக்கு ஊன்று கோலாக இருந்தது.
இந்த தாகம் விரைவில் அதிகமாகிக்கொண்டே போய் அவரது உடலிலும் மனத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இஷ்ட தெய்வத்திடம் எல்லையற்ற அன்பை உண்டாக்கியது. வைதீபக்தியைக் கடந்து ராகாத்மிக பக்திப்பாதையில் முன்னேற வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அன்னையின் ஒப்பற்ற அருட்காட்சியை நல்கி அவரை யோக சக்தி பெற்றவராக்கியது.
அப்படியானால் இனி சாதனைகள் எதற்கு? கடவுள் காட்சியும் யோக சித்தியும் பெற்றுவிட்ட குருதேவருக்கு வேறு சாதனைகள் எதற்கு? என்று ஒரு வேளை வாசகர்கள் கேட்கக் கூடும்.
இது ஒரு விதத்தில் உண்மையே. ஆயினும் மேற்கொண்டு அவருக்கு சாதனைகள் ஏன் தேவைப்பட்டது. என்பதை வாசகர்களுக்குக்கூற விரும்புகிறோம்.
இயற்கையின் நியதிப்படி மரங்களும் செடிகளும் முதலில் பூத்து பின்னர் காய்க்கின்றன. ஆனால் சில தாவரங்கள் முதலில்  காய்த்து பின்னர் பூக்கின்றன என்று குருதேவர் சொல்வதுண்டு. சாதனைகளைப்பொறுத்தவரை குருதேவரின் முன்னேற்றம் இரண்டாவதாகக்குறிப்பிட்டதான, முதலில் காய்த்து பின்னர் பூக்கின்ற தாவரங்களைப்போன்றதாகும்.
சாதனையின் ஆரம்பத்தில் குருதேவர் கடவுட்காட்சி போன்ற அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், தாம் கண்டவை உண்மையா, தமது குறிக்கோள் நிறைவேறியதா, என்பதைப் பற்றித் தெளிவான எந்த முடிவுக்கும் அவரால் வர இயலவில்லை. தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை சாஸ்திரங்களில் குறித்து வைக்கப்பட்டுள்ள மற்ற சாதகர்களின் அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே தெளிவான முடிவுக்கு வர முடியும் என்று அவர் கருதினார்.
தீவிர ஆன்ம தாகம் ஒன்றினால் மட்டுமே எந்த உண்மையைக் கண்டறிந்தாரோ, அதே உண்மையை சாஸ்திரங்கள் காட்டுகின்ற வழிகளைப் பின்பற்றியும் அதாவது சாஸ்திரங்கள் கூறுகின்ற சாதனைகளைச் செய்தும் கண்டறியவேண்டும். இந்தக் காரணத்திற்காகவும் குருதேவருக்கு சாதனைகள் அவசியமாயிற்று, குருவிடமிருந்து கேட்ட அனுபவங்கள் காலம் காலமாக சாஸ்திரங்களில் குறித்து வைக்கப்பட்டுள்ள  எண்ணற்ற சாதகர்களின் அனுபவங்கள், இவற்றுடன் சொந்த அனுபவங்களையும் தெய்வீகக் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்காதவரை ஒரு சாதகன் தனது அனுபவங்களின் உண்மையை அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இவ்வாறு ஒப்புநோக்கி, அவை ஒன்றையொன்று ஒத்திருக்கின்றன என்று கண்ட மாத்திரத்தில் அவனது ஐயங்கள் யாவும் அகன்று மனம் எல்லையற்ற அமைதியை அடைகிறது.
எடுத்துக்காட்டாக வியாசரின் புதல்வரும் பரமஹம்சர்களுள் மிக உயர்ந்தவருமான சுகதேவரின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றைக்குறிப்பிடலாம். மாயையின் கட்டுக்குள் அகப்படாதவராக இருந்த அவர் பிறப்பிலிருந்தே பல தெய்வீகக் காட்சிகளையும் அனுபவங்களையும் பெற்றார்.பூரண ஞானம் பெற்றதால் தான் தமக்கு இத்தகைய அனுபவங்கள் உண்டாகின்றன என்பது அவருக்குப் புரியவில்லை. அதனால் வேதங்களை நன்கு கற்றுணர்ந்த தம் தந்தை வியாசரின்  துணையுடன் வேதங்களையும் பிற சாஸ்திரங்களையும் கற்றார். பின்னர் வியாசரிடம் அப்பா” பிறந்ததிலிருந்தே சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள எல்லா ஆன்மீக நிலைகளையும் அனுபவித்து வருகிறேன். ஆனால் இவைதான் இறுதியான ஆன்மீக உண்மைகளா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இது பற்றித் தாங்கள் அறிந்தவற்றை எனக்குக்கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார். பேரறிவாளரான வியாசர் தமக்குள், நான் ஆன்மீக வாழ்வின்  அனுபவங்களையும்முடிவான உண்மைகளையும் இவனுக்கு நன்றாகக் கற்பித்திருக்கிறேன் . ஆனாலும் இவனது மனத்தில் இன்னமும் ஐயங்கள் நீங்கவில்லை. பூரண ஞானம் கிட்டிவிட்டால் உலகியல் வாழ்வைத் துறந்துவிடுவான் என்ற புத்திரபாசத்தினால் அல்லது வேறு ஏதோ காரணத்தினால் நான் அவனுக்கு முழு உண்மையையும் கற்பிக்கவில்லை என்று என் மகன் நினைக்கிறான். வேறொரு மகானிடமிருந்து இது பற்றி அவன் அறிந்து கொள்வது நல்லது என்று எண்ணினார். எனவே சுகரிடம், என்னால் உனது ஐயங்களைப்போக்க இயலாது. மிதிலை மாமன்னராகிய ஜனகர் சிறந்த ஞானி என்பது உனக்குத் தெரிந்தது தான். அவரிடம்  சென்று உன் ஐயங்களைப்போக்கிக்கொள் என்று சொன்னார். சுகதேவரும் தந்தையின் அறிவுரைப்படி உடனே மிதிலைக்குச் சென்று ராஜரிஷியாகிய ஜனகரைச் சந்தித்தார். அவர் சுகருக்கு பிரம்ம ஞானிகளின் அனுபவத்தை எடுத்துக்கூறினார். குருவின் போதனை, சாஸ்திரங்களில்கூறப்பட்டுள்ள கருத்துக்கள், சொந்த அனுபவம் ஆகியவற்றுக்கிடையே முழு ஒருமைப்பாடு இருப்பதை அறிந்து தெளிவும் அமைதியும் பெற்றார் சுகதேவர்.
குருதெவர் மீண்டும் சாதனைகளில் ஈடுபட்டதற்கு முக்கியமான வேறு சில காரணங்களும் உண்டு.
அவற்றை  இங்கு மிகச் சுருக்கமாகக்கூறுவோம். தமது வாழ்வில் அமைதியைப்பெறுவது மட்டும் குருதேவரது சாதனையின்நோக்கம் அன்று. அன்னை பராசக்தி குருதேவரை உலகநன்மைக்காக உடல்தரிசிக்கும் படிச் செய்திருக்கிறாள். அதற்காகத் தான் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல்வேறு சமயநெறிகளின் சாதனைகளை மேற்கொண்டு அவற்றுள் உண்மை எது, போலி எது என்பதைக் காட்டுவதற்கான பெருமுயற்சி அவரது வாழ்வில் நடைபெற்றது.
எல்லா சமய நெறிகளையும் அவை கூறும் சாதனை முறைகளையும் அவற்றின் முடிவுகளையும் தாமே கண்டறிந்தால் மட்டும் தான் உலக குருவாகப் பரிணமிக்க முடியும். எனவே பல்வேறு சமய சாதனைகளை மேற்கொள்வது அவருக்கு அவசியமாயிற்று.
அது மட்டுமன்று களங்கம் சிறிதும் அற்ற, பரந்த மனப்பான்மை  உடைய குருதேவரின் சாதனைகள் வாயிலாக சாஸ்திரங்களில் கூறப்பட்ட ஆன்மீக நிலைகளை வெளிக்கொணர்ந்து, இந்த நவீன யுகத்திற்கு வேதங்கள், புராணங்கள், பைபிள், குரான் போன்ற சமய நூல்களில் உள்ள உண்மைகைளை நிரூபித்துக் காட்டினாள். அன்னை!
ஆன்மீக அனுபூதி பெற்ற பின்னரும் குருதேவர் சாதனைகளைத் தொடர்ந்து செய்ய முயன்றதன் காரணம் இதுதான்.
மேற்சொன்ன நோக்கங்களை நிறைவேற்றவே உரிய காலத்தில் பல்வேறு சமயப் பிரிவுகளைச்சேர்ந்த ஞானிகளையும் பண்டிதர்களையும் கொண்டுவந்து சேர்த்து, அந்தப் பிரிவுகளின் சாதனைகளைப் பற்றிய கருத்துக்களை அவர்களிடமிருந்தே நேரடியாகக்கேட்டு குருதேவரை அறிய வைத்தாள்.
இந்த அற்புதமான வாழ்க்கையைத் தொடர்ந்து படிக்கும்போது இந்த உண்மைகளை நாம் புரிந்து கொள்வோம்.

தொடரும்