Sunday, 4 December 2016

ராஜயோக வகுப்புகள்-பகுதி3

சுவாமி விவேகானந்தரின் ராஜயோக வகுப்புகள்-பகுதி3
---
ராஜயோகத்தைப் பயில நீண்ட காலமும் நீடித்த பயிற்சியும் சார்ந்தது. ஆனால் பெரும்பகுதி மனத்தைச் சார்ந்தது. மனம் எந்த அளவிற்கு நெருக்கமாக உடலுடன் தொடர்புள்ளது என்பதைப் பின்னர் காண்போம். 
-
மனம் என்பது உடலின் ஒரு நுண்பகுதி மட்டுமே என்பதையும் மனம் உடலின்மீது செயல்படுகிறது என்பதையும் நாம் நம்புவதானால் உடலும் மனத்தின்மீது செயல்படுகிறது என்று கொள்வது நியாயமானது.
-
உடல் நோயுற்றால் மனமும் சஞ்சலமடைகிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனமும் நலமாக வலிமையாக இருக்கிறது. கோபம் வரும்போது மனம் சஞ்சலமடைகிறது. அது போலவே மனம் கலங்கினால், உடல்நலமும் கெடுகிறது.
-
மக்களுள் பெரும்பாலோரைப் பொறுத்தவரை மனம் ஏறக்குறைய உடலின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அவர்களின் மனம் மிகக்குறைவாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறது. அவர்கள் விலங்குகளிலிருந்து மிகச் சிறிது மட்டுமே வேறுபட்டுள்ளனர். அது மட்டுமல்ல. அவர்களுள் பலருக்கும் கட்டுப்பாட்டு ஆற்றல், தாழ்ந்த விலங்குகளைவிடச் சிறிதளவே அதிகமாக உள்ளது. 
-
நமக்கு நம் மனத்தின்மீது மிகச் சிறிதளவே கட்டுப்பாடு உள்ளது. அந்தக் கட்டுபாட்டைக் கொண்டுவருவதற்கு, உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்துவதற்கு உடலைச் சார்ந்த சில உதவிகள் வேண்டும். போதிய அளவிற்கு உடம்பை அடக்கியபின், மனத்தை வசப்படுத்த முயலலாம். மனத்தை வசப்படுத்தினால் அது நமது கட்டுப்பாட்டிற்குள் வரும். அதன்பின்னர் நாம் விரும்புவதுபோல் அதனை வேலை செய்ய வைக்கலாம். அதைக் கட்டாயப்படுத்தி, நாம் விரும்புவதுபோல் அதன் ஆற்றல்களை ஒருமைப்படுத்தலாம். 
--
அகவுலகம் அல்லது நுண்ணுலகின் தூல வடிவமே புறவுலகம் என்கிறான் ராஜயோகி. சூட்சுமமாக இருப்பது தான் எப்போதும் காரணமாகவும் 
தூலம் எப்போதும் காரியமாகவும் இருக்கும். எனவே புறவுலகம் காரியம்; அகவுலகம் காரணம். 
--
அதுபோலவே அகத்தில் உள்ள நுண்ணிய சக்திகளின் தூலப் பகுதிகளே புறசக்திகள், இந்த அகசக்திகளைக் கண்டுபிடித்து அவற்றைக் கையாள்வது எப்படி என்று அறிந்துகொண்டவனுக்கு இயற்கை முழுவதுமே வசமாகும். 
--
பிரபஞ்சம் முழுவதையும் கட்டுப்படுத்த முனைகிறான் யோகி. அதற்குக் குறைந்த எதையும் அவன் நாடுவதில்லை. இயற்கைநியதிகள் என்று நாம் அழைக்கிறோமே, அவை தன் மீது எந்த ஆதிக்கமும் செலுத்தாத, அவை அனைத்தையும் கடந்த ஒரு நிலையை அடைய அவன் விரும்புகிறான். அக மற்றும் புற இயற்கை அனைத்திற்கும் அதிபதியாக விழைகிறான்.
--
மனித இனத்தின் முன்னேற்றம். நாகரீகம் என்பதெல்லாம் இயற்கையை அடக்கி ஆள்வதைத்தான் குறிக்கும். 
--
இயற்கையை ஆள வெவ்வேறு இனத்தினர் வெவ்வேறு வழிகளில் முயன்றனர். ஒரு சமுகத்தில் சிலர் புற இயற்கையையும், வேறு சிலர் அக இயற்கையையும் அடக்கியாள முயல்வதுபோல் இனங்களுள்ளும் சிலர் புற இயற்கையையும் சில அக இயற்கையையும் கட்டுப்படுத்த விரும்புகின்றனர். அக இயற்கையையும் கட்டுப்படுத்தவதால் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம் என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்களோ புற இயற்கையைக் கட்டுப்படுத்துவதால் நாம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர். இரண்டு கூற்றுகளின் எல்லைவரை சென்றோமானால் இரு சாரார் கூறுவதும் சரியே, ஏனெனில் இயற்கையில் அகம், புறம் என்ற பாகுபாடு இல்லை. இவை கற்பனையில் மட்டுமே காணப்படுகின்ற பொய்யான வரம்புகள். தத்தம் ஞானத்தின் எல்லையை அடையும் போது இரு சாராரும் ஒரு மையத்தில் சந்தித்தே தீர வேண்டும். 
--
ஒரு பவுதீக விஞ்ஞானி வெளியுலக விஞ்ஞான அறிவை அதன் கடைசி எல்லைக்குக் கொண்டு போகும்போது அது தத்துவத்தில் கரைவதைக் காண்கிறான். அதேபோல், உள்ளது ஒன்றே, மனம் என்றும் ஜடப்பொருள் என்றும் அவன் கருதுகின்ற வேறுபாடு உண்மையில் இல்லாதது என்பதையும் காண்கிறேன்
--
--தொடரும்---

No comments:

Post a Comment