Monday 19 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-8

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-8
(சுவாமி விவேகானந்தர்)
-
மாயை பற்றிய கோட்பாடு என்ன என்று புரிந்துகொள்வோம்-3
-
முழுவதும் நன்மை அல்லது தீமை மட்டுமே நிறைந்த உலகம் ஒன்று இருக்க முடியாது. அப்படி இருக்கிறது என்று சொல்வதே முரண்பாடானது. நன்மை, தீமை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரான, தனித்தனியான குணங்கள் அல்ல என்ற உன்னதமான ரகசியத்தை இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எதையுமே முற்றிலும் நல்லது என்றோ, முற்றிலும் தீயது என்றோ நம்மால் சொல்ல முடியாது. இன்று நல்லது என்றுபடுவது நாளைக்குத் தீமையாகப் படலாம். ஒருவனுக்குத் துன்பத்தை அளிக்கின்ற அதே பொருள் மற்றொருவனுக்கு இன்பத்தை அளிக்கலாம்.
-
ஆகவே தீமையை ஒழிக்க ஒரே வழி நன்மையையும் ஒழிப்பதே ஆகும். இதைத் தவிர வேறு வழியே இல்லை. மரணத்தைத் தடுக்க வேண்டுமானால் வாழ்வையும் தடுத்தாக வேண்டும். மரணமற்ற வாழ்வு, துன்பமற்ற இன்பம் என்பவை முரண்பாடுகள். இவற்றுள் எதையும் தனித்துக் காண முடியாது. ஏனெனில் இவை ஒரே தத்துவத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகள்.
-
தீமை செய்யாமல் நன்மை செய்ய முடியாது என்பதும், இன்பத்தை உண்டாக்க முயலும்போது துன்பமும் கூடவே தோன்றும் என்பதும் உண்மையானால், நல்ல காரியங்களைச் செய்வதால் என்ன பயன்? என்று கேட்கலாம். முதலாவதாக, நாம் இன்பமாக இருப்பதற்கு ஒரே வழி துன்பத்தைக் குறைப்பதற்குப் பாடுபடுவதே. இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் புரிந்துகொள்கிறோம். அறிவாளிகள் சீக்கிரமாகவும், மந்தமானவர்கள் சற்றுத் தாமதமாகவும் புரிந்து கொள்கிறார்கள். மந்தமானவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்த பின்னர் இதை உணர்கிறார்கள்.
-
எப்போதாவது ஒரு துளி இன்பத்தைப் பெற நாம் போராடினால், மலை போன்ற துன்பம் வந்து நம்மேல் விழுந்து அழுத்துகிறது. இது எவ்வளவு பரிதாபத்திற்கு உரியது! இதை நினைத்துப் பார்க்கும்போது, எல்லாமே மாயை என்ற இந்தச் சித்திரம் ஒன்றுதான் சிறந்த ஒரே விளக்கமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.
-
இந்த உலகத்தில்தான் எவ்வளவு துன்பம் நிறைந்திருக்கிறது! பல நாடுகளையும் சுற்றிப் பார்த்தீர்களானால் இந்தத் துன்பங்களை ஒழிப்பதற்கு ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான முயற்சியைச் செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பல இனத்தினர் தீமையைப் போக்குவதற்கு முயல்கிறார்கள். பல வழிகளில் இந்தத் தீமையைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேல் கொள்ளப்பட்டாலும், எந்த நாடும் இதுவரை வெற்றி பெறவில்லை. ஓர் இடத்தில் தீமை குறைந்தால், மற்றோர் இடத்தில் அதிகமாகத் தலைதூக்குகிறது. இப்படியே நடந்து கொண்டிருக்கிறது.
--
--
--தொடரும்--
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3பக்கம்.230
-
--விவேகானந்தர் விஜயம்--சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment