Monday, 19 December 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 59

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 59
---
ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களாலும்,சுவாமிஜியின் சேவை-தர்மக் கருத்துக்களாலும் கவரப்பட்ட சில இளைஞர்கள் காசியில் “ஏழைகள் நிவாரண சங்கம்“ என்ற ஒன்றை 1900 ஜுன் மாதம் நடத்திவந்தார்கள்.அவர்களின் பணி சுவாமிஜியை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த காலத்தில் மனிதர்களுக்கு சேவை செய்வதன் மூலம் இறைவனை அடையமுடியும் என்ற கருத்தை யாரும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை. மனித சமுதாயத்தை விட்டு விலகி தெனிமையான வாழ்க்கை வாழ்வதே ஆன்மீக வாழ்க்கை என்றுபலரும் கருதி வந்தார்கள். 1900 ஆண்டுகளில் வாழ்ந்த பரம்பரை துறவிகள் சுவாமிஜியின் இந்த கருத்தை எதிர்த்தார்கள். அது மட்டுமல்ல சுவாமிஜியின் சொந்த மாநிலமான வங்கத்திலும் இந்த கருத்து பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அவரது கருத்தை ஏற்று சேவை-தர்மத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், இல்லறத்தார்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு மந்திரதீட்சை வழங்கினார்.அப்போது அவர்களிடம் சேவை தர்மத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்
சுவாமிஜி..கதியற்றவர்களைக் கடவுளாகக்கண்டு அவர்களில் உறைகின்ற கடவுளுக்குச் சேவை செய்வது மனித வாழ்க்கையின் அறுதி லட்சியம் ஆகும். அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு நாம் யார்( காசியில் இயங்கிய அந்த சங்கம்,ஏழைகள் நிவாரணம் என்ற பெயரில் இயங்கியது) நிவாரணம் என்பதை விட சேவை என்ற பெயரே ஏற்புடையது. எல்லா அகங்காரத்தையும் விட்டு,எல்லா ஆசைகளையும் ஒழித்து,உண்மையின் பாதையில்,அன்பின் பாதையில் செல்லுங்கள்.மனிதர்களை தெய்வமாக எண்ணி சேவை செய்யுங்கள். உங்கள் செயல் முறையில் கருணை என்தற்கு இடம் அளித்திருக்கிறீர்கள்.ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு கருணை காட்ட முடியும் என்று பெருமை கொள்வது தகாது. எல்லா உயிர்களுக்குள்ளும் உயிராக இருக்கின்ற கடவுள் மட்டுமே கருணை காட்ட முடியும். உயர்ந்த நிலையில் இருவர் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவருக்கு உதவி செய்வதே கருணை. ஆனால் அவ்வாறு கருணை காட்டுவது அகங்காரத்தையே குறிக்கிறது. தன்னை உயர்ந்தவர் என்று கருதும் மனப்பான்மையை அது வளக்கிறது. ஆனால் சேவை என்பது எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரே இறைவனே உறைகிறான் என்ற எண்ணத்தில் மனிததெய்வங்களுக்கு சேவை புரிவதை குறிக்கிறது.பணியே மதம்,மதமே பணி. பணி ஒரு மனிதனை கடவுளிடம் அழைத்துச்செல்கிறது.
சுவாமிஜியின் கருத்தை புரிந்து கொண்ட பின் சேவை-தர்ம கருத்தை ஆதரித்து பல அமைப்புகள் உருவாக ஆரம்பித்தன.
--
ஒருநாள் சுவாமிஜி கூறினார். வேலை செய்வதற்கு இனியும் இந்த உடம்பு பயன்படாது.இதைவிட்டுவிட்டு புதிய உடம்பு பெற்றுவரவேண்டும்.இன்னும் பல வேலைகள் பாக்கியுள்ளன என்றார்.மற்றொருநாள், நான் முக்தியை விரும்பவில்லை.எல்லா உயிர்களுக்கும் முக்தி கிடைக்கும்வரை நான் மீண்டும் மீண்டும் வந்தேயாக வேண்டும் என்றார்.
இந்தியாவைப்பற்றி சுவாமிஜி கூறினார்.இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெறும்.ஆனால் பொதுவாக நாடுகள் சுதந்திரம் பெரும் வழியில் இந்தியா சுதந்திரம் பெறாது. இன்னும் 20 ஆண்டுகளில் ஒரு போர் நிகழும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மேலைநாடுகளைப்போல் பொருள்குவிப்பதை லட்சியமாகக்கொண்டு,புராதன பாரம்பரிய பெருமைகளை இழந்துநிற்கும்.அதே வேளையில் அமெரிக்கா முதலிய வளர்ந்த நாடுகள் ஆன்மீகமயமாகும்.பொன்னும் பொருளும் இன்பத்தை தரஇயலாது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.
--
தொடரும்....
-
----விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment