இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-23
(சுவாமி விவேகானந்தர்)
-
யோகம்-தியானம்-சமாதி-பாகம் .5
-
மற்றொரு தியானமும் கூறப்படுகிறது. உங்கள் இதயத்தில் ஒரு வெளி இருப்பதாக நினையுங்கள். அதில் சுடர் ஒன்று ஒளிவிடுகிறது. அது உங்கள் ஆன்மா. அதனுள், உங்கள் ஆன்மாவிற்கு ஆன்மாவாகிய கடவுள் ஒரு பேரொளியாக இருப்பதாக எண்ணுங்கள். அதனை உங்கள் இதயத்தில் தியானம் செய்யுங்கள்.
-
பிரம்மச்சரியம், அஹிம்சை, மிகக் கொடிய எதிரியடமும் இரக்கம், உண்மை, இறை நம்பிக்கை இவை எல்லாம் வெவ்வேறான விருத்திகள், நீங்கள் இவற்றில் நிறைநிலை அடையவில்லையென்று அஞ்ச வேண்டாம். முயற்சி செய்யுங்கள் அனைத்தும் கைகூடும்.
-
எல்லா பற்றும், எல்லா பயமும், எல்லா கோபமும் விட்டவன், தன்னை முழுவதுமாக இறைவனுக்கே அர்ப்பணம் செய்து அவரிடமே சரண்புகுந்தவன். மனம் தூய்மையடையப் பெற்றவன். இவர்கள் எந்த ஆசையுடன் இறைவனை அணுகினாலுள் அதை அவர்களுக்கு அருள்கிறார் அவர். எனவே ஞானம், பக்தி அல்லது தியாகம் இவற்றால் அவரை வழிபடுங்கள்.
-
யாரையும் வெறுக்காதவன், அனைவரிடமும் நட்பு பூண்டவன். எல்லாவற்றிடமும் கருணை உடையவன். அகங்காரம் விட்டவன். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய்க் கருதுபவன். பொறுமையுடையவன். எப்போதும் திருப்தியுற்றவன். எப்போதும் யோகத்தில் நிலை பெற்றவனாய் செயல்புரிபவன், தன்னைக் கட்டுப்படுத்தியவன், திட சங்கல்பம் உடையவன். மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவன். இத்தகையவனே எனது பக்தன்.
-
யார் பிறரைத் துன்புறுத்துவதில்லையோ, யாரைப் பிறரால் துன்புறுத்த முடியாதோ, யார் மகிழ்ச்சி, கோபம், பயம், மனக்கிளர்ச்சி இவற்றிலிருந்து விடுபட்டவனோ இத்தகையவனே எனக்குப் பிரியமானவன்.
-
எதையும் சார்ந்திருக்காதவன், தூயவன், சுறுசுறுப்பு உடையவன், துன்பமோ இன்பமோ எது வந்தாலும் பொருட்படுத்தாதவன். ஒருபோதும் துயரப்படாதவன், தனக்கான எல்லா முயற்சிகளையும் விட்டவன். புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாகக் கொள்பவன். அமைதியாக இருப்பவன். ஆழ்ந்த சிந்தனையுடையவன். சிறிதே கிடைத்தாலும் அதில் திருப்தி கொள்பவன். உலகே தன் வீடாக இருப்பதால் தனக்கென்று வீடு இல்லாதவன். தனது கொள்கைகளில் உறுதி படைத்தவன். இத்தகையவனே எனது அன்பிற்குரிய பக்தன். இத்தகையோரே யோகிகள் ஆவார்கள்.
--
தொடரும்
-
--விவேகானந்தர் விஜயம்--
No comments:
Post a Comment