Saturday, 31 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-21

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-21
(சுவாமி விவேகானந்தர்)
-
யோகம்-தியானம்-சமாதி-பாகம் .3
-
4.அடுத்தது பிராணாயாமம், பிராணன் என்பது உடம்பில் உள்ள உயிர்ச்சக்திகள், ஆயாமம் என்றால் அடக்குதல், இதில் மூவகை உண்டு. 1Aசாதாரணமானது, 1B நடுத்தரமானது, 1C உயர்ந்தது,
-
பிராணாயாமத்தில் மூன்று பகுதிகள் உண்டு. உள்ளிழுத்தல்(பூரகம்), அடக்கல்(கும்பகம்), வெளிவிடல் (ரேசகம்) பன்னிரண்டு நொடியுடன் ஆரம்பிப்பது சாதாரண வகை. இருபத்தி நான்கு நொடியுடன் ஆரம்பிப்பது நடுத்தரமானது. முப்பத்தாறு நொடியுடன் ஆரம்பிப்பது உயர்ந்த வகையானது. சாதாரண பிராணாயாமத்தில் உடல் வியர்க்கும். நடுத்தரமானதில் உடல் நடுங்கும். உயர்ந்த பிராணாயாமத்தில் உடல் ஆந்தரத்தில் மிதக்கும், பேரானந்தம் பிறக்கும்.
-
வேதங்களில் காயத்ரீ என்ற மந்திரம் உள்ளது. அது மிகப் புனிதமான மந்திரம். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த பரம்பொருளின் மகிமையை நாம் தியானிப்போம். அவர் நமது மனங்களை ஒளி பெறச் செய்யட்டும். ஓங்காரத்தை இந்த மந்திரத்தின் முதலிலும் முடிவிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பிராணாயாமத்தில் மூன்று முறை காயத்ரியை உச்சரியுங்கள். பூரகம், கும்பகம், ரேசகம் என பிராணாயாமம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக எல்லா நூல்களும் கூறுகின்றன.
-
5.புலன்களின் கருவிகளான இந்திரியங்கள் புறப்பொருட்களுடன் தொடர்புகொண்டு புற நாட்டம் கொள்கின்றன. அவற்றைச் சுயேச்சையால் கடடுப்படுத்துவது அல்லது அவற்றைத் தன்னை நோக்கிக் குவிப்பது பிரத்யாஹாரம்.
-
6.மனத்தை இதயக் கமலத்தில் அல்லது சஹஸ்ராரத்தில் நிறுத்தி வைப்பது தாரணை.
-
7.மனம் ஓரிடத்தில் நிலைப்படும்போது அந்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட விதமான மன அலைகள் எழுகின்றன. இவை மற்ற மன அலைகளால் மூழ்கடிக்கப்படாமல் படிப்படியாக முன்னணிக்கு வருகின்றன. அப்போது மற்றவை பின்வாங்கி இறுதியில் மறைந்துவிடுகின்றன. பின்னர் இந்தப் பல்வேறு அலைகளும் ஒன்றாகி ஓர் அலை மட்டும் மனத்தில் எஞ்சும், இதுவே தியானம்.
-
8.அடிப்படை எதுவும் இல்லாமல், மனம் முழுவதும் ஒரே அலையாக, ஒரே வடிவமாக ஆவது சமாதி, சமாதியில் இடங்கள், மையங்கள் இவற்றின் எந்த உதவியும் இன்றி எண்ணத்தின் கருத்து மட்டுமே இருக்கும்.
-
மனத்தை ஒரு மையத்தில் பன்னிரண்டு நொடிகள் நிறுத்தினால் அது தாரணை, பன்னிரண்டு தாரணைகள் ஒரு தியானம். பன்னிரண்டு தியானங்கள் ஒரு சமாதி.
-
தொடரும்
-
--விவேகானந்தர் விஜயம்--

-

No comments:

Post a Comment