Monday, 19 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-9

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-9
(சுவாமி விவேகானந்தர்)
-
மாயை பற்றிய கோட்பாடு என்ன என்று புரிந்துகொள்வோம்-4(last part)
-
தங்கள் இனத்தில் உயர்ந்த கற்புநெறியை நிலைப்படுத்துவதற்காக, இந்துக்கள் இளமை மணத்தை அனுமதித்தனர். நாளடைவில் இந்தப் பழக்கம் அவர்கள் இனத்திற்கே தாழ்வை உண்டாக்கிவிட்டது. இளமை திருமணம் இல்லாத இங்கிலாந்திலுள்ள நீங்கள் எந்த விதத்தில் முன்னேறியிருக்கிறீர்கள்? எவ்விதத்திலும் இல்லை.கற்புநிலையிலிருந்து வீழ்ச்சியடைந்திருக்கிறீர்கள். கற்புதான் ஒரு நாட்டின் உயிர்நிலை.
ஒரு நாட்டின் வீழ்ச்சிக்கு முதல் அறிகுறி கற்புநெறி நிலைபிறழ்தலே என்பதை வரலாறு காட்டவில்லையா?
-
மனிதர்கள் எல்லோரும் நல்லவர்களாகிவிட்டதாக வைத்துக்கொள்வோம். அந்த இடைக்காலத்தில் மிருகங்களும் செடிகொடிகளும் பரிணாம வளர்ச்சியால் மனிதர்களாக மாறியிருக்கும். முன்பு மனிதர்கள் தீயவர்களாக இருந்தபோது இருந்த நிலையை இவை கடக்க வேண்டியிருக்கும். ஆகவே உலகத்தின் போக்கு எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
-
எனவே வேதாந்தத்தின் நிலை, இன்பநோக்கோ துன்பநோக்கோ அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்ல நான் விரும்புகிறேன். உலகம் முழுவதுமே தீமையானது என்றோ, இல்லை, உலகம் முழுவதுமே நன்மையானது என்றோ அது சொல்லவில்லை. நமது நல்ல தன்மைகளைவிடத் தீய தன்மைகள் குறைந்த மதிப்பு உள்ளவை அல்ல தீய தன்மைகளைவிட நல்ல தன்மைகள் அதிக மதிப்பு உள்ளவை அல்ல என்கிறது வேதாந்தம். அவை ஒன்றோடொன்று பின்னப்பட்டிருக்கின்றன.
-
இதுதான் உலகம், இதைத் தெரிந்துகொண்டு, நாம் பொறுமையாக வேலை செய்ய வேண்டும்.
-
இந்த மாயை எங்கும் நிறைந்திருக்கிறது. இது மிகவும் பயங்கரமானது. அதற்கிடையில்தான் நாம் இயங்கியாக வேண்டும். உலகம் முழுவதும் நன்மையால் நிறைந்த பிறகுதான் நான் வேலை செய்வேன்; இன்பம் அடைவேன் என்று ஒரு மனிதன் சொல்வதாக வைத்துக் கொள்வோம். கங்கைக் கரையில் அமர்ந்துகொண்டு கங்கை முழுவதும் கடலை அடைந்த பிறகுதான் நான் அதைக் கடந்து போவேன் என்று சொல்வதைப் போன்றதுதான் அது.அது ஒருபோதும் நடக்காது.
-
நமது வழி மாயையை அனுசரித்துப் போவதல்ல. அதை எதிர்த்துப் போவதே. இதுவும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றோர் உண்மையாகும். இயற்கைக்குத் துணைபுரிய நாம் பிறக்கவில்லை இயற்கையுடன் போட்டியிடவே நாம் பிறந்திருக்கிறோம். நாம் இயற்கையின் எஜமானர்கள்; ஆனால் இயற்கைக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறோம்.
-
இந்த வீடு எப்படி இங்கு வந்தது? இயற்கை இதைக் கட்டவில்லை. போ, போய் காட்டில் வாழ் என்றுதான் இயற்கை சொல்கிறது. ஆனால் மனிதனோ, நான் ஒரு வீட்டைக் கட்டி, இயற்கையுடன் போராடுவேன் என்கிறான்; அப்படியே செய்யவும் செய்கிறான்; மனித வரலாறே இயற்கையின் விதிகள்என்று கூறப்படுபவைகளோடு, மனிதன் நடத்தும் தொடர்ந்த போராட்டம்தான், கடைசியில் மனிதனே வெல்லவும் செய்கிறான்.
-
அகவுலகிற்கு வந்தால், அங்கேயும் போராட்டமே நடந்துகொண்டு இருக்கிறது. மிருக மனிதனுக்கும் ஆன்மீக மனிதனுக்கும், இருளுக்கும் ஒளிக்கும் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. இங்கும் மனிதன்தான் வெற்றி பெறுகிறான். இயற்கையின் வழியாகவே பாதையை ஏற்படுத்தி அவன் முக்தி பெற்று விடுவது போலுள்ளது.
-
ஆகவே மாயைக்குக் கட்டுப்படாமல் மாயையைக் கடந்து நிற்கும் ஏதோ ஒன்றை வேதாந்தத் தத்துவ ஞானிகள் உணர்ந்திருக்கிறார்கள். நாமும் அந்த நிலையை அடைய முடிந்தால், மாயையில் கட்டுப்பட மாட்டோம்.
--
--
--தொடரும்--
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3பக்கம்.237
-
--விவேகானந்தர் விஜயம்--சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment