Friday, 30 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-17

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-17
(சுவாமி விவேகானந்தர்)
-
கடவுள் என்பவர் யார்? பாகம்-1
-
யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ அவரே கடவுள், அவர் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், கருணை வடிவினர், குருவிற்கெல்லாம் குருவானவர், எல்லாவற்றிற்கும் மேலாக ! ஈச்வர அநிர்வசனீய ப்ரேம ஸ்வரூப அந்த இறைவன் சொல்லுக்கு அடங்காத அன்பு வடிவினன்
-
இந்த விளக்கங்கள் நிச்சயமாக நிர்குண கடவுளுக்கானவை அல்ல,சகுணக் கடவுளுக்கானவை. அப்படியானால் இரண்டு கடவுள்கள் இருக்கிறார்களா?
-
தத்துவ ஞானியின் இதுவல்ல, இது வல்ல என்ற சச்சிதானந்தக் கடவுள் (உருவமற்ற நிர்குணகடவுள்)
-
பக்தனின் அன்பே வடிவான கடவுள் (அனைத்து குணங்களுடன் கூடிய சகுணகடவுள்)என்று இரண்டு கடவுளரா?
-
இல்லை சச்சிதானந்தப் பொருள் எதுவோ அதுவே அன்பு மூர்த்தியும், நிர்க்குணமும் சகுணமும் ஒருவரே, பக்தன் வழிபடும் சகுணக் கடவுள், பிரம்மத்திலிருந்து வேறானவரோ,. வேறுபாடு உள்ளவரோ அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.
-
எல்லாமே இரண்டற்ற ஒன்றேயான பிரம்மம்தான், ஒருமையாகவும் தனிமையாகவும் உள்ள பிரம்மம், மனத்தால் உணர முடியாதபடி மிகமிக நுண்ணியதாக இருப்பதால் நம்மால் அன்பு செலுத்தவோ வழிபடவோ இயலாதபடி விளங்குகிறது. எனவே பக்தன் பிரம்மத்தை குணங்களோடு கூடிய நிலையில் அதாவது உலகங்கள் அனைத்தையும் ஆள்பவராகிய இறைவனாகக் கொள்கிறான்.
-
இதை ஓர் உவமை வாயிலாக விளக்கலாம். களி மண் ஒன்று தான் ஆனால் அதிலிருந்து செய்யப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் வேறு, வேறு.
களிமண்ணாகப் பார்க்கும்போது எல்லாமே ஒன்றுதான். ஆனால் உருவத்தில், புறத்தோற்றத்தில் அவை பலவேறாக உள்ளன. களிமண் சுண்டெலி ஒருநாளும் களிமண் யானையாக முடியாது.
-
பிரம்மத்தின் மிகவுயர்ந்த வெளிப்பாடு குணங்களோடு கூடிய இறைவன், இன்னும் தெளிவாகச் சொல்வதானால், பிரம்மத்தைப்பற்றி மனித மனத்தினால் உணரமுடிந்த மிகவுயர்ந்த கருத்து குணங்களோடு கூடிய இறைவன். படைப்பு அனாதி காலந்தொட்டு என்றும் இருந்து வருவது, இறைவனும் அப்படியே
--
மோட்சத்தை அடைந்த பிறகு, முக்த ஆன்மா பெறுகின்ற ஏறக்குறைய எல்லையற்ற ஆற்றலையும் அறிவையும் பிரம்ம சூத்திரம் நான்காம் அத்தியாயத்தில், நான்காம் பாதத்தில் வியாச பகவான் குறிப்பிடுகிறார். ஆனால் பிரபஞ்சத்தைப் படைத்தல், காத்தல், ஒடுக்குதல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கான ஆற்றலை வேறு யாரும் பெற முடியாது. அது இறைவனுக்கே
உரியது என்று தொடர்கின்ற மற்றொரு சூத்திரத்தில் கூறுகிறார்.
-
தொடரும்

-

No comments:

Post a Comment