Tuesday, 13 December 2016

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-26-29

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-26
-
ஈட்டிக்காரர்களின் கொடுமையால் மேலை நாடுகள் துடிக்கின்றன. கீழை நாடுகள் பூஜாரிகளின் கொடுமையால் துடிக்கின்றன. இரண்டும் ஒன்றை ஒன்று தடுத்துக் காக்க வேண்டும்.
-
இவற்றுள் ஒன்று மட்டுமே உலகிற்கு உதவிசெய்ய வேண்டுமென்று நினைக்காதீர்கள் .பாரபட்சமற்றவரான இறைவன் தன் படைப்பில் ஒவ்வொரு துகளையும் கூட சமமாகவே படைத்திருக்கிறான் 
-
மிக மோசமான, அரக்கத்தனமான ஒருவனிடம் மகானிடம்கூடஇல்லாத உயர்ந்த குணங்கள் இருக்கலாம்.
-
ஏழைத் தொழிலாளி ஒருவனை எடுத்துக் கொள்ளுங்கள் அவனுக்கு வாழ்வில் இன்பம் மிகக் குறைவே. உங்களைப் போன்ற அறிவு அவனிடம் இல்லை. வேதாந்தத் தத்துவங்களை அவனால் புரிந்துகொள்ள முடியாது என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் உடம்பை அவனது உடம்போடு ஒப்பிட்டுப் பாருங்கள்.அவனது உடம்பு உங்கள் உடம்பைப்போல், அவ்வளவு சீக்கிரமாக நோய்க்கும் வலிக்கும் இடம் தருவதில்லை. அவனது உடம்பில் ஆழமான வெட்டுப்பட்டால்கூட அந்தக்காயம் உங்கள் உடம்புகளை விட விரைவில் ஆறிவிடுகிறது. அவன் அவற்றின் மூலமே மகிழ்ச்சி அடைகிறான்.
-
லௌகீக அடிப்படையில் ஆகட்டும், அறிவு அல்லது ஆன்மீக அடிப்படையில் ஆகட்டும், இறைவன் பாரபட்சமின்றி, ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றை ஒவ்வொருவருக்கும் அளித்து எல்லோரையும் சமமாகவே வைத்திருக்கிறார். எனவே நாம் தான் உலகத்தைக் காப்பவர்கள் என்று நினைக்கத் தேவையில்லை.
-
நாம் உலகத்திற்குப் பல நல்லவற்றைப் போதிக்கலாம். அதேவேளையில் நாமும் உலகத்திடமிருந்து நல்லவை பலவற்றைக் கற்றுக் கொள்ளமுடியும். உலகத்திற்கு எது தேவையோ அதைத்தான் நாம் கற்பிக்க முடியும்.
-
ஆன்மீக அடிப்படை மட்டும் இல்லாமல் போனால், மேலை நாகரீகம் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் தூள்தூளாகச் சிதறிவிடும் மனித குலத்தை வாளால் ஆள நினைப்பது முழுக்க முழுக்கப் பயனற்ற வீண் முயற்சி. அத்தகைய வன்முறையின் மூலம் உருவாக்கப்பட்ட அரசாங்கங்கள் எல்லாம் நாசமடைந்து , மிக விரைவில் தன் நிலையிழந்து உருத்தெரியாமல் மறைந்து போயிருப்பதை நீங்கள் காணலாம்.
-
பௌதீக ஆற்றலின் நிலைக்களனான ஐரோப்பா தன் நிலையை மாற்றி, ஆன்மீகத்தைத் தன் அடிப்படையாகக் கொள்ளாமல் போகுமானால் இன்னும் ஐம்பது ஆண்டிற்கு அது நொறுங்கிச் சுக்கலாகச் சிதறிவிடும். அந்த ஐரோப்பாவை எது காக்க முடியும் தெரியுமா ? உபநிடதங்கள் கூறுகின்ற ஆன்மீகம் மட்டுமே..
--
சுவாமி விவேகானந்தர் பரமக்குடியில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-27
-
--
பல்வேறு மதப் பிரிவுகளும் தத்துவங்களும் சாஸ்திரங்களும் இருந்தாலும் இவை அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு கருத்து, ஒரு கொள்கை உள்ளது. அது மனிதனின் ஆன்மாவில் நம்பிக்கை .
-
இந்தக் கருத்தினால் உலகின் போக்கையே மாற்ற முடியும். ஆன்மா எல்லா சக்திகளும் நிறைந்தது என்ற கருத்து, இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் என்றில்லாமல் இந்தியா முழுவதுமே உள்ளது.
-
நீங்கள் ஆற்றலையோ, தூய்மையையோ, முழுமையையோ வெளியேயிருந்து பெற முடியாது. அனைத்தும் உங்களுக்கு உள்ளேயே இருக்கிறது என்றே இந்தியத் தத்துவங்கள் கூறுகின்றன. இது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
-
தூய்மையற்ற தன்மை என்பது நம் மீது திணிக்கப்பட்டது மட்டுமே, அதனால் உங்களுடைய உண்மை இயல்பு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான நீங்கள் ஏற்கனவே முழுமையாகவும் வலிமை வாய்ந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்களை ஆள்வதற்கு உங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம். உங்களை ஆள்கின்ற சக்தி ஏற்கனவே உங்களிடம் உள்ளது. அதை நீங்கள் அறியவில்லை, அவ்வளவுதான்
-
--
சுவாமி விவேகானந்தர் பரமக்குடியில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-28
-
--
மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில், மகானுக்கும் பாவிக்கும் இடையில் வேற்றுமையை உண்டாக்குவது எது? அவித்யை, அதாவது அறியாமை.
-
மிக உயர்ந்த மனிதனுக்கு அவன் காலடியில் நெளிகின்றன சாதாரண புழுவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அறியாமை. அதுதான் எல்லா வித்தியாசங்களையும் உண்டாக்குகிறது. நெளிகின்ற அந்தச் சிறு புழுவிற்குள் எல்லையற்ற ஆற்றலும் அறிவும் தூய்மையும் இறைவனின் எல்லையற்ற தெய்வீகமும் உள்ளது. அது வெளிப்படவில்லை, அது வெளிப்பட வேண்டும்.
-
மகத்தான இந்த உண்மையைத்தான் இந்தியா உலகிற்குப் போதிக்க வேண்டும் . ஏனெனில் அது வேறெங்கும் இல்லை . அந்த உண்மையே ஆன்மீகம், ஆன்மாவையும் பற்றிய உண்மை.
-
ஒரு மனிதனை நிமிர்ந்தெழுந்து செயல்புரிய வைப்பது எது? பலம். பலமே நன்மை, பலவீனம்தான் பாவம்.. அச்சமின்மை என்பதே இப்போது போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம். உலக வாழ்விலும் சரி மத வாழ்விலும் சரி அச்சம்தான் எல்லா அழிவுகளுக்கும் பாவங்களுக்கும் மறுக்க முடியாத காரணமாக இருக்கிறது. அச்சம்தான் துன்பத்தைக் கொண்டு வருகிறது. அச்சம் தான் சாவைக் கொண்டு வருகிறது. அச்சம்தான் தீமைகளைப் பெருக்குகிறது.
-
சுவாமி விவேகானந்தர் பரமக்குடியில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-29
-
அச்சம் எதனால் உண்டாகிறது? நம் சொந்த இயல்பை அறியாததால் தான் வருகிறது. நாம் ஒவ்வொருவரும் அரசர்களுக்கெல்லாம் பேரரசரின் வாரிசுகள். நாம் கடவுளின் அம்சமே, அல்ல அல்ல வேதாந்தத்தின் படி நாம் கடவுளே. சிறிய மனிதர்களாக நம்மை நினைத்து, அதனால் சொந்த இயல்பை மறந்திருந்தாலும் நாம் கடவுளே.
-
நாம் கடவுள் என்ற அந்த இயல்பு நிலையிலிருந்து வழுவி விட்டோம். அதனால் நான் உன்னைவிடச் சிறிது மேலானவன் அல்லது நீ என்னை விட மேலானவன் என்றெல்லாம் வேற்றுமைகளைக் காண்கிறோம். இந்த ஒருமைக் கருத்துதான் இந்தியா உலகிற்குத் தர வேண்டிய மகத்தான பாடம்
-
நன்றாக கவனியுங்கள் இந்தக் கருத்தைப் புரிந்து கொண்டால் பொருட்களின் தன்மையையே இது மாற்றிவிடும். ஏனெனில் அப்போது நீங்கள் உலகத்தை இதுவரை பார்த்துவந்த கண்ணோட்டத்தில் இருந்து வேறான கண்ணோட்டத்தில் பார்ப்பீர்கள்.
-
பிறந்து பிறருடன் போராடி வலிமையானவன் வெல்லவும் வலிமையற்றவன் சாவதற்கும் அமைந்த போர்களம் அல்ல இந்த உலகம் என்பது தெரியும் .அப்போது இந்த உலகம் ஒரு விளையாட்டுமைதானமாகிவிடும். சிறு குழந்தைபோல் இறைவன் அங்கே விளையாடுவார். நாம் அவருடன் ஆடிக்களித்துக் செயல்புரிவோம். எவ்வளவு பயங்கரமாகவும் கொடூரமாகவும் ஆபத்தானதாகவும் காணப்பட்டாலும், இவையாவும் வெறும் விளையாட்டே. அதன் உண்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம்.
-
நீ என்ன செய்தாலும் நீ இறைவன் தான் உன் இயல்பைக் மாற்ற உன்னால் முடியாது. இயற்கையே இயற்கையை அழிக்க முடியாது. உங்கள் இயல்பு தூய்மை. அது லட்சக்கணக்கானயுகங்களாக மறைக்கப்பட்டு இருக்கலாம்.ஆனால் இறுதியில் அது வென்று மேலே வந்தே தீரும்.
--
சுவாமி விவேகானந்தர் பரமக்குடியில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---


-

No comments:

Post a Comment