Monday, 19 December 2016

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-18

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-18
-
கேள்வி...சாதாரண மனிதர்களுக்கு எழும் மிகப்பெரிய கேள்வி என்ன வென்றால். ஒவ்வொரு புராணங்களிலும், இதிகாசங்களிலும், ஒவ்வொரு மதத்திலும் கடவுளை பற்றி பல விதமாக விளக்கப்பட்டுள்ளது. பழைய காலத்து கடவுள் வழிபாட்டு முறைகள் பலவேளைகளில் அச்சுறுத்துவதாக உள்ளது. இதை எவ்வாறு புரிந்துகொள்வது? இந்து மதத்தில் இதற்கான தீர்வு இருக்கிறதா?
-
சுவாமிஜி... பிறருடைய தெய்வங்களை நமது தெய்வங்களை வைத்தும், பிறருடைய லட்சியங்களை நமது லட்சியங்களை வைத்தும், பிறருடைய நோக்கங்களை நமது நோக்கங்களை வைத்தும் எடைபோடுவதுதான். நம்மிடையே நிலவுகின்ற பெருமளவு சண்டைகளுக்கும் காரணம் என்றே நான் எண்ணுகிறேன்.
-
கிரேக்கர்கள், ஹீப்ரூக்கள், பாரசீகர்கள் முதலிய எல்லோருடைய புராணங்களிலும், அவரவர்களுடைய தெய்வங்கள் செய்திருப்பதாகச் சொல்லப்படும் செயல்கள் நமக்கு மிகவும் அருவருப்பையும் திகிலையும் தருவனவாக இருக்கின்றன. ஆனால் இந்தக் கதைகளைப் படிக்கும்போது, நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பதையும், இந்தத் தெய்வங்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முற்பட்டவர்கள் என்பதையும் நாம் மறந்துவிடுகிறோம்.
-
நாம் எப்படி நம்முடைய முன்னோர்களின் மதம் மற்றும் தெய்வக் கருத்துக்களைப் பார்த்துச் சிரிக்கிறோமோ, அதேபோல் நம் சந்ததியினரும், நமது மதம் மற்றும் தெய்வக் கருத்துக்களைக் கேலி செய்து சிரிப்பார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.
-
பழைய யூதர்கள் புதிய, நாகரீகம் வாய்ந்த, அறிவுமிக்க யூதர்களாகவும், பழைய ஆரியர்கள் அறிவுக்கூர்மை மிக்க இந்துக்களாகவும் பரிணமித்துள்ளனர். அது போலவே அவர்கள் வழிபட்டு வந்த கடவுள் கருத்தும் வளர்ச்சியடைந்துள்ளது
வழிபாடு செய்யும் மக்கள் அறிவுரீதியாக வளர்ச்சியடைந்திருப்பது போல, கடவுள் பற்றிய கருத்தும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது 
-
கடவுள் வளர்ச்சியடைகிறார் என்றால் உங்களுக்கெல்லாம் வேடிக்கையாக இருக்கும். அவர் வளர முடியாது. அவர் மாற்றமில்லாதவர். அதேநோக்கில் உண்மையான மனிதனும் ஒருபோதும் வளர்வதில்லை. ஆனால் மனிதர்கள் கடவுளைப்பற்றிக் கொண்டிருக்கும் கருத்துக்கள், தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்றன, விரிவடைந்து கொண்டிருக்கின்றன
-
ஆரம்பக்கால மக்களுடைய தெய்வங்களும் இவ்வாறு இயல்புணர்ச்சியின்படி நடப்பவர்களாகவே இருந்தார்கள். இந்திரன் வருகிறான். அசுரப்படைகளை அழிக்கிறான். பல அக்கிரமங்களைச்செய்கிறான்.ஜெஹோவாவுக்கு ஒருவரைப் பிடிக்கிறது. ஒருவரைப் பிடிப்பதில்லை. அது ஏன் என்பது யாருக்கும் தெரியாது, யாரும் அதைக் கேட்பதில்லை. ஆராய்ச்சி என்ற ஒன்று அப்போது தோன்றாததால் ஜெஹோவா செய்ததெல்லாம் சரியென்றே அவர்களுக்குப் பட்டது. நன்மை தீமைகளைப் பற்றிய கருத்தே அப்போது இல்லை
-
நீதிநெறிக் கருத்துக்களின் முன்னேற்றத்திற்குப் பிறகுதான் சண்டையே தொடங்கியது.
-
முதலில் அன்பு என்பது ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கிடையில் மட்டுமே பரவியிருந்தது. ஒவ்வொர் இனத்தையும் காப்பாற்ற ஒவ்வொரு தெய்வம் இருந்தார். இந்தத் தெய்வங்கள் தங்கள் இனத்திடம் மட்டுமே அன்பு செலுத்தினர். மனிதர்கள் பிற இனத்தினரிடம் சண்டையிட்டது போலவே,அவர்களது தெய்வமும் பிற இனத்தினரிடம் சண்டையிட்டது.
-
இந்த இனக் கருத்துக்கள் வளரத் தொடங்கியவுடனே சிறிதளவு அன்பும் பிறந்தது. மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்ற உணர்வு தோன்றியது. ஒருவாறான சமூக அமைப்பு உருவாகியது. பிறகு இயற்கையாகவே பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லாமல் நாம் எப்படி ஒன்றுசேர்ந்து வாழ்வது என்ற கருத்துத் தோன்றியது
-
மனித இனங்களின் அன்புணர்வு வளர ஆரம்பித்த பிறகு, தாங்கள் வழிபட்டு வந்த கடவுள் செயல்கள் ஆராயப்பட்டன
முன்னோர் வழிபட்ட பழைய தெய்வங்கள் மூர்க்கத்தனமானவர்களாக இருந்தனர். தங்களுக்குள் சண்டையிட்டனர். குடித்துக் கும்மாளமிட்டனர். மாட்டிறைச்சி உணர்டனர்,. எரிகின்ற மாமிசத்தின் வாசனையிலும் மதுபானங்களிலும் இன்பம் கண்டனர். இவர்கள் பொருந்தாதவர்களாக மனித மனத்திற்குப் பட்டது. –
-
ஆகவே தெய்வங்களும் ஆராய்ச்சிக்கு உட்பட்டாக வேண்டியிருந்தது. தெய்வங்களின் செயல்களுக்குக் காரணம் கேட்டான் மனிதன். சரியான காரணங்கள் கிடைக்கவில்லை. எனவே தெய்வங்களை விட்டுவிட்டான். தெளிவாகச் சொல்வதானால், தெய்வங்களைப் பற்றிய இன்னும் உயர்ந்த கருத்துக்களை வளர்த்துக் கொண்டான்
-
கடவுள்கருத்து இன்னும் பூர்த்தியாக வில்லை. தெய்வத்தின் தார்மீக முக்கியத்துவத்தை அதிகரித்தனர். ஆற்றலை உயர்த்தினர். தெய்வம் பிரபஞ்சத்திலேயே மிகவுயர்ந்த தர்மவானாக, ஏறக்குறைய எல்லாம் வல்லவராக ஆனார்.ஆனால் இன்னும் பூர்த்தியாகவில்லை
-
பிரபஞ்சத் தலைவனான கடவுளை விளக்குவதில் இருந்த கஷ்டங்களே அதிகமாக இருந்தன. இன்றும் இந்தப் பிரச்சினை நீடிக்கிறது. எல்லாம் வல்ல, எல்லாரையும் நேசிக்கின்ற கடவுளின் ஆட்சியில் ஏன் காட்டுமிராண்டித் தனம் நிறைந்திருக்க வேண்டும்? இன்பத்தைவிடத் துன்பமே அதிகமாக இருப்பது ஏன்? நன்மையைவிடத் தீமையே ஏன் மிக அதிகமாக இருக்கிறது?தினம் தினம் லட்சக்கணக்கான உயிர்கள் மடியவது ஏன்?
-
நம்மீது எப்போதும் அன்பு செலுத்துகின்ற, சிறிதும் சுயநலம் இல்லாத, சர்வ வல்லமையுள்ள, பிரபஞ்சத்தை ஆள்கின்ற ஒரு கடவுள்கருத்து எடுத்தஎடுப்பிலேயே நமக்குத் திருப்தி அளிக்கவில்லை. நியாயமான, கருணையுள்ள கடவுள் எங்கிருக்கிறார் என்று தத்துவவாதி கேட்கிறார். மிருகங்களும் மனிதர்களுமான அவரது பல கோடிக் குழந்தைகள் அழிந்து கொண்டிருப்பதை அவர் பார்க்கவில்லையா? பிறரை அழிவுக்கு உள்ளாக்காமல் ஒருவர் ஒரு கணமேனும் வாழ முடியுமா? பல்லாயிரம் உயிர்களை அழிக்காமல் நாம் ஒருமுறையாவது மூச்சை உள்ளே இழுக்க முடியுமா? . மனிதர்கள் இறக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைவிடப் பல்லாயிரம் மடங்கு துன்பத்தை, மிருகங்கள் இறக்கும்போது அனுபவிக்கின்றன. இறைவனின் படைப்பில் இவை ஏன் இறக்க வேண்டும்?
-
உபநிடதங்களை எழுதியவர்கள் மிகுந்த ஆராய்ச்சி மனப்பான்மை உடையவர்கள். கடவுளைப் பற்றிய பழைய கருத்துக்கள், புதிய, முன்னேற்றமடைந்த தார்மீகக் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.
-
இதன் பலனாக அவர்கள் கண்டுகொண்டது தான் வேதாந்தத் தத்துவம், பழைய, பல்வேறு தெய்வங்கள், பிரபஞ்சத்தை ஆளும் ஒரே தெய்வம் போன்ற கருத்திலிருந்து, இறுதியாக நிர்க்குண பிரம்மம் என்ற மிக உயர்ந்த கருத்தை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பிரபஞ்சம் முழுவதிலும் ஒருமை நிறைந்திருப்பதைக் கண்டு பிடித்தார்கள்.
-
--
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்252

No comments:

Post a Comment