Friday 30 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-16

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-16
(சுவாமி விவேகானந்தர்)
-
நமது அறிவு எல்லாமே அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. (யூகித்தறிதல்)அனுமான அறிவிற்கும் அனுபவமே அடிப்படை. அனுமான அறிவில், நாம் சாதாரண அறிவிலிருந்து பொது அறிவிற்கோ பொது அறிவிலிருந்து விசேஷ அறிவிற்கோ செல்கிறோம்.
--
விஞ்ஞானம் என்று அழைக்கப்படுபவற்றுள் உள்ள உண்மையை மக்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம். ஏனெனில் அது ஒவ்வொருவருடைய தனி அனுபங்களை ஒத்திருக்கிறது.
--
தான் கூறும் எதையும் நம்புமாறு விஞ்ஞானி சொல்வதில்லை. அவன் தனது சொந்த அனுபவங்களிலிருந்து சில முடிவுகளைக் கண்டறிந்துள்ளான். ஆராய்ந்த பின்னரே அவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு அவன் கூறுகிறான். அவனது முடிவுகள் உலகம் முழுவதிலுள்ள மனித அனுபவங்களுடன் ஒத்திருக்கின்றன.
---
மதத்திற்கு இத்தகைய ஓர் அடிப்படை உண்டா இல்லையா என்பதுதான் கேள்வி. அதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் நான் விடை தர வேண்டியுள்ளது.
--
உலகம் முழுவதும் பொதுவாக உபதேசிக்கப்பட்டு வருவதான் மதம் என்பதன் அடிப்படை நம்பிக்கை, முழு நம்பிக்கை என்று கூறப்படுகிறது.
-
பல மதங்கள் வெறும் பல்வேறு கொள்கைளை மட்டுமே கொண்டவையாக உள்ளன. அதனால்தான் மதங்களுக்கிடையே பூசலை நாம் காண்கிறோம். இந்தக் கொள்கைகளும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவையே.
--
மேகங்களுக்கு மேலே அமர்ந்து பிரபஞ்சம் முழுவதையும் ஆள்கின்ற ஒரு மாபெரும் தெய்வம் இருப்பதாக ஒருவர் கூறுகிறார். தாம் கூறுவதை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, நானும் அதை நம்ப வேண்டும் என்று என்னிடம் சொல்கிறார். எனக்கும் அதுபோலவே சொந்தக் கருத்துக்கள் இருக்கலாம். அவற்றை நம்புமாறு மற்றவர்களைக் நானும் கூறலாம். அதற்கு யாராவது காரணம் கேட்டால் எந்தக் காரணத்தையும் என்னால் கொடுக்க முடியாது. இதனால்தான் தற்காலத்தில் மதமும் தத்துவ ஞானமும் கெட்ட பெயரைச் சம்பாதித்து வருகின்றன.
--
ஓ இந்த மதங்களில் வெறும் கொள்கைகள் மட்டுமே மூட்டைமூட்டையாக உள்ளன இவற்றை நிர்ணயிக்க ஓர் அளவுகோலும் இல்லை. ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த கருத்துக்களைப் பரப்புகிறார்கள். என்றே படித்தவர்கள் கூறுவதுபோல் தோன்றுகிறது.
-
ஆனால் மதத்திலுள்ள உலகம்தழுவிய நம்பிக்கைக்கு ஓர் அடிப்படை உள்ளது. அந்த அடிப்படையே, வெவ்வேறு கொள்கைகளையும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளின் வேறுபட்ட கருத்துக்களையும் கட்டுப்படுத்துகிறது. அவற்றை அலசிப் பார்த்தால், அவை உலகம்தழுவிய அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளதாக் காணலாம்.
--
உலகிலுள்ள பல்வேறு மதங்களை ஆராய்ந்தால் அவை சாஸ்திரங்கள் உடையவை. சாஸ்திரங்கள் இல்லாதவை என்று இருவகைப்படும். சாஸ்திரங்கள் உடையவை வலிமை மிக்கவை. அவற்றைப் பலர் பின்பற்றவும் செய்கின்றனர். சாஸ்திரங்கள் இல்லாதவை அனேகமாக மறைந்துவிட்டன. புதிதாகத் தோன்றிய ஏதோ சில மதங்களைச் சிலர்தான் பின்பற்றுகின்றனர். ஆனாலும் அவை அனைத்திலும் ஒரு விஷயத்தில் கருத்து ஒற்றுமையைக் காணலாம்; தாங்கள் போதிக்கும் உண்மைகள், குறிப்பிட்ட மனிதர்களின் அனுபவங்களின் விளைவுகள் என்று அவை எல்லாமே கூறுகின்றன.
--
இந்துக்களின் சாஸ்திரங்களை எழுதியவர்கள் ரிஷிகள். இவர்களும் தாங்கள் சில உண்மைகளை அனுபவித்ததாகவும் அவற்றையே உபதேசிப்பதாகவும் கூறினார்கள். ஆகவே உலகிலுள்ள மதங்கள் எல்லாமே, நம் அறிவு அனைத்திற்கும் அடிப்படையானதும் உலகம் தழுவிய தும் உறுதிமிக்கதுமான அனுபூதி அல்லது நேரடி அனுபவத்தின்மீதே அமைக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது.
--
--தொடரும்---

No comments:

Post a Comment