Saturday, 31 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-33


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-33
(சுவாமி விவேகானந்தர்)
-
வேதாந்தத்தில் நாம் மூன்று முக்கியமான வேறுபட்ட கோட்பாடுகளைக் காண்கிறோம். 
-
ஒரு விஷயத்தை அவர்கள் எல்லோருமே கடவுளை நம்புகிறார்கள். மேலும், வேதங்கள் இறைவனால் வெளியிடப்பட்டவை என்றும் நம்புகிறார்கள். ஆனால் இது கிறிஸ்தவர்களோ முஸ்லீம்களோ தங்கள் நூல்களைப் பற்றி நம்புவதுபோல் அல்லாமல், சற்று மாறுபட்ட, தனிப்பட்ட கருத்தாக இருக்கிறது.
-
வேதங்கள் கடவுளைப் பற்றிய அறிவை வெளிப்படுத்துபவை. கடவுள் நிரந்தரமானவர், ஆதலால் அவரைப் பற்றிய அறிவும் அவரிடம் நிரந்தரமாக உள்ளது. எனவே வேதங்களும் நிரந்தரமானவை என்பது வேதாந்திகளின் கருத்து.
-
வேதாந்திகளிடம் மற்றொரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது. படைப்பு சுழற்சியாக நடைபெறுகிறது என்பதே அது.
-
படைப்பு முழுவதுமே தோன்றி மறைகிறது. அது தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, சிறிதுசிறிதாகத் தூலத் தன்மை பெற்று(கண்களால் காணும் நிலை), கணக்கிட முடியாத காலத்திற்குப் பிறகு, சிறிதுசிறிதாக நுட்பத்தன்மை அடைந்து(கண்களால் காண முடியாத நிலை), கடைசியில் மறைந்து ஒடுங்கிவிடுகிறது.
-
அந்த ஒடுங்கிய நிலையிலேயே சிலகாலம் இருக்கிறது. பின்னர் மறுபடியும் இதே சுழற்சி நடைபெறுகிறது.
-
ஆகாசம், பிராணன் என்ற இரண்டு தத்துவங்களை அவர்கள் கற்பித்துக் கொள்கிறார்கள்.
-
இதில் ஆகாசம் என்பது ஏறுக்குறைய விஞ்ஞானிகள் கூறும் ஈதர் போன்றது.. பிராணன் என்பது ஒரு சக்தி. இந்தப் பிராணனின் அதிர்வினால்தான் பிரபஞ்சம் தோன்றுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.
-
ஒரு சுழற்சி முடிந்தவுடனேயே, இயற்கையின் எல்லா வெளிப்பாடுகளும் சிறிதுசிறிதாக நுட்பத்தன்மை அடைந்து ஆகாசத்தில் கரைந்துவிடுகின்றன. ஆகாசத்தைப் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் இந்த ஆகாசத்திலிருந்துதான் எல்லாமே தோன்றுகின்றன.
-
இயற்கையின் பலவித சக்திகளான ஈர்ப்புசக்தி, விலக்கும் சக்தி, சிந்தனை, உணர்ச்சிகள், நரம்புகளின் இயக்கம் எல்லாமே பிராணனில் ஒடுங்குகின்றன.
-
அப்போது பிராணனின் அதிர்வும் நின்றுவிடுகிறது. அடுத்த சுழற்சி ஆரம்பிக்கும் வரையில் பிராணன் அதே நிலையில் இருக்கிறது.
-
மறுபடியும் பிராணன் அதிரத் தொடங்குகிறது. அந்த அதிர்வு ஆகாசத்தின்மீது செயல்படுகிறது. பிரபஞ்சத்திலுள்ள உருவங்கள் அனைத்தும் ஒழுங்குமுறையுடன் அதிலிருந்து வெளிவருகின்றன.
-
தொடரும்...
-
-- விவேகானந்தர் விஜயம் --

No comments:

Post a Comment