இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-27
(சுவாமி விவேகானந்தர்)
-
இந்துக்களின் உருவ வழிபாடு
-----
🌿 நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பலசுவையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் இடையில் நான் உங்கள் விக்கிரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்து விடும்? என்று கேட்டார்.
அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல் உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்? என்று கேட்டார்,' இறந்தாலும் நீ தண்டிக்கப்படுவாய் என்று பதிலளித்தார் பாதிரி. ' அப்படியே எங்கள் விக்கிரமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திரும்பிச் சொன்னார் அந்த இந்து!
----
🌿 மூடநம்பிக்கை மனிதனின் பெரும் பகையாகும். ஆனால் சமயவெறி அதைவிட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான் ? சிலுவை ஏன் புனிதமானது ? பிராத்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும் ? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்த்தனை செய்யும் போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?
---
🌿 என் சகோதரர்களே சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாதது போல் உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி. நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. தொடர்பு விதியின்படி புற உருவம் அகக் கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவு படுத்துகிறது.
அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச் சின்னத்தைப் பயன்படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான்
---
🌿 அந்த உருவம்கடவுள் அல்ல அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப்போல் அவனுக்கும் தெரியும்
🌿 ' எங்கும் நிறைந்தது என்று சொல்லும்போது பெரிதாக என்னதான் புரிந்துகொள்ள முடியும்? அது ஒரு சொல் சின்னம் மட்டுமே . இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமாஎன்ன? எங்கும் நிறைந்தவர்என்று நாம் திரும்பத்திரும்பச் சொல்லும் போது, மிஞ்சிப் போனால் விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம் அவ்வளவுதான்.
---
🌿 சிலர் சர்ச்சியின் உருவ வழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக்கொண்டு அதற்குமேல் வளராமல் நின்று விடுகிறார்கள் அவர்களைப் பொறுத்தவரை சமயம் என்றால் சில கோட்பாடுளை ஒப்புக்கொள்வது. பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான்.
---
🌿 இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து மனிதன் தெய்வமாக வேண்டும்.
---
🌿 இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவுபடுத்திப் பேசுவதில்லை எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை .அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான் .
---
🌿 குழந்தை மனிதனின் தந்தை குழந்தை பருவம் பாவமானது அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?
---
🌿 ஒரு விக்கிரகத்தின் மூலமாக தனது தெய்வீக இயல்பை ஒருவன் உணர முடியும் என்றால் , அதைப் பாவம் என்று கூறுவது சரியா? அந்த நிலையைக் கடந்த பிறகு அவனே அதைப் பிழை என்று கூறலாமா?
---
🌿 இந்துவின் கொள்கைப்படி மனிதன் தவறிலிருந்து உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையிலிருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலைக்கு உண்மைக்கு பயணம் செய்கிறான். அவனைப் பொறுத்தவரை மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம்பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள்
---
🌿 வேறுபாட்டில் ஒருமைதான் இயற்கையின் நியதி அதை இந்து உணர்ந்துள்ளான். பிற சமயங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகின்றன;. ஒரே ஒரு சட்டையைவைத்துக்கொண்டு சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான் ,ஹென்றி எல்லோருக்கும் அந்த ஒரு சட்டை பொருத்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ ஹென்றிக்கோ சட்டை பொருந்தாவிட்டால் அவர்கள் சட்டையில்லாமல் தான் இருக்கவேண்டும்.
---
🌿 திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் ஆணிகளே என்பதை இந்துக்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல ஆனால் தேவைப்படாதவர்கள் அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அல்ல.
---
🌿 இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள். இந்து சமய வெறியன் தன்னைத் தீயில் கொளுத்திக் கொள்வானே தவிரப் பிறரையல்ல.
--
🌿 இந்துக்கள் மட்டுமே காப்பாற்றபடுவார்கள். , மற்றவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று சம்ஸ்கிருதத் தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன்
---
🌿 சுவாமி விவேகானந்தர்
No comments:
Post a Comment