Sunday, 4 December 2016

ராஜயோக வகுப்புகள்-பகுதி2

சுவாமி விவேகானந்தரின் ராஜயோக வகுப்புகள்-பகுதி2
---
மனத்தின் ஆற்றல்களை எல்லாம் ஒருமுகப்படுத்தியதால்தானே உலகிலுள்ள அறிவை மனிதன் பெற்றான், எவ்வாறு தட்ட வேண்டும், தேவையான <உந்துதலை எப்படி அளிப்பது என்பது மட்டும் நமக்குத் தெரியுமானால் உலகம் தனது ரகசியங்களை அளிக்கத் தயாராக இருக்கிறது. அதற்கான வலிமையும் வேகமும் ஒருமைப்பாட்டின் மூலமே கிடைக்கிறது.
--
மனித மனத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. எவ்வளவுக்கு அதை ஒருமைப்படுத்துவீர்களோ, அந்த அளவிற்கு ஆற்றலை ஒரு மையத்தில் குவிக்க உங்களால் முடியும். இதுதான் ரகசியம்.
--
மனத்தைப் புறப்பொருட்களின்மீது குவிப்பது எளிது. இயல்பாகவே மனம் வெளிநோக்கு கொண்டது. ஆனால் மத ஆராய்ச்சி, மனஇயல், தத்துவம் இவற்றில் அவ்வாறு இல்லை. ஏனெனில் இங்கே அறிபவனும் அறியப்படும் பொருளும் ஒன்றே. அறியப்படும் பொருளான மனம் உள்ளே இருக்கிறது. இந்த மனத்தை ஆராயவும் மனம்தான் வேண்டும்.
--
மனமே மனத்தை ஆராய்கிறது. மனத்திற்குத் தன்மையே நோக்கும் தன்மை உண்டு என்பது நமக்குத் தெரியும் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அதேவேளையில் ஏதோ ஓர் இரண்டாம் மனிதனைப்போல் தனியாக நின்று, நான் பேசுவதை அறியவும் கேட்கவும் செய்கிறேன். ஒரே நேரத்தில் நீங்கள் வேலை செய்யவும் சிந்திக்கவும் செய்கிறீர்கள். அப்போது மனத்தின் ஒரு பகுதி விலகி நின்று நீங்கள் சிந்திப்பதை நோக்குகிறது. மனத்தின் ஆற்றல்களைக் குவித்து அதன் மீதே திருப்ப வேண்டும்.
--
இந்த ஒருமுகப்பட்ட மனமும் தன் ஆழங்களிலுள்ள ரகசியங்களில் ஊடுருவிச் செல்கிறது. இவ்வாறு நாம் நம்பிக்கையின் அஸ்திரவாரத்திற்கு, உண்மையான, சரியான மதவுணர்விற்கு வருகிறோம்.
--
நமக்கு ஆன்மா உண்டா, இல்லையா? வாழ்வு என்பது ஐந்து நிமிடத்திற்கா அல்லது என்றென்றைக்குமா? பிரபஞ்சத்தில் ஒரு கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்பவற்றையெல்லாம் நமக்கு நாமே உணர்ந்துகொள்வோம். அவையெல்லாம் நமக்கு வெளிப்படுத்தப்படும். இதைக் கற்பிக்கிறது ராஜயோகம்.
-
எப்படி மனத்தை ஒருமைப்படுத்துவது, நமது சொந்த மனங்களின் அடியாழத்திலுள்ள அறைகளை எப்படிக் கண்டுபிடிப்பது, பிறகு அங்குள்ள எண்ணத் திரள்களைப் பொதுமைப்படுத்தி அவற்றிலிருந்து எப்படி நமக்கென்று முடிவுகளைக் காண்பது என்பவற்றைக் கற்பிப்பதே ராஜயோகத்தின் நோக்கம்.
-
ஆதலால் அது நமது மதத்தைப் பற்றியோ, நாம் ஆத்திகர்களா, நாத்திகர்களா, கிறிஸ்தவர்களா, யூதர்களா, பவுத்தர்களா என்றெல்லாம் கேட்பதில்லை. நாம் மானிடர், அது போதும் ,
-
மதத்தைத் தேடும் உரிமையும் ஆற்றலும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. காரணம் என்ன என்று கேட்கும் உரிமையும், விடையைத் தானே காணும் <உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் அதற்காக அவன் சிறிது பாடுபட வேண்டும்.
-
இதுவரை நாம் பார்த்ததிலிருந்து ராஜயோகப் பயிற்சிக்கு எந்தவிதமான நம்பிக்கையும் தேவையில்லை என்பது தெளிவாகிறது. நீங்களே கண்டறியாததுவரை எதையும் நம்பாதீர்கள். இதுதான் ராஜயோகம் போதிப்பது.
--
--தொடரும்---

No comments:

Post a Comment