Monday, 19 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-7

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-7
(சுவாமி விவேகானந்தர்)
-
மாயை பற்றிய கோட்பாடு என்ன என்று புரிந்துகொள்வோம்-2
-
இந்தப் பிரபஞ்சத்திலுள்ள நிஜங்களின் ஒரு சித்திரமே மாயை. இது போன்ற விஷயங்களைச் சொன்னாலே மனிதர்களுக்குப் பயம் ஏற்படுகிறது. நாம் தைரியத்தைக் கைவிடக் கூடாது. நிஜங்களை மறைப்பது தீர்வு காணும் வழியல்ல. நாய்கள் ஒரு முயலைத் துரத்தும்போது முயல் தன் முகத்தைத் தரையோடு தரையாக வைத்துக் கொண்டு, தான் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறது. மனிதர்கள் இன்ப நோக்குக் கொண்டவர்களாக இருக்கும்போது, இந்த முயலைப் போலவே இருக்கிறார்கள். ஆனால் அது ஒரு பரிகாரம் ஆகாது.
-
மிருகங்கள் தாவரங்களை அழித்து வாழ்கின்றன. மனிதர்கள் மிருகங்களை அழித்து வாழ்கிறார்கள். இன்னும் மோசமானது எதுவென்றால் வலியவர் எளியவரை அழித்து வாழ்வதுதான். இது உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இதுதான் மாயை.
-
இந்தப் பிரச்சினைக்கு நீங்கள் என்ன தீர்வு காண்கிறீர்கள்? காலப்போக்கில் எல்லாம் நன்மையாகவே இருக்கும் என்றெல்லாம் எத்தனையோ விளக்கங்கள் தினந்தோறும் நம் காதில் விழுகின்றன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லை. இதுதான் மாயை
-
எந்திரங்கள் பொருட்களை மலிவாக்குகின்றன. முன்னேற்றத்திற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் இவை உதவுகின்றன. ஒருவன் பணக்காரனாவதற்குக் கோடிக் கணக்கானோர் நசுக்கிப் பிழியப்படுகிறார்கள். ஒருவன் பணக்காரனாகும் அதேசமயத்தில், பல்லாயிரக்கண்கானோர் ஏழைகள் ஆகிறார்கள்; பல்லாயிரக் கணக்கானோர் அடிமைகளாக்கப் படுகிறார்கள்; இப்படித் தான் உலகம் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் மாயை.
-
இவ்வாறு நாம் புலனின்பங்களிலிருந்து விடுபட்டு, உயர்ந்த இன்பங்களை அனுபவிக்கும் சக்தியைப் பெறும் பொழுது, அதே விகிதத்தில் துன்பங்களை அனுபவிக்கும் சக்தியையும் பெற வேண்டியுள்ளது. நம் நரம்புகள் நுண்மை பெறுந்தோறும் அவை துன்பத்தை அனுபவிக்கும் அளவும் அதிகமாகிறது. எந்தச் சமுதாயத்தில் ஆனாலும், கல்வியறிவற்ற பாமரனை எவ்வளவு திட்டினாலும் அவன் அதிகமாக உணர்ச்சிவசப் படுவதில்லை. ஆனால் அவனை நையப்புடைத்தால் வேதனையடைகிறான். பண்பட்ட மனிதனால், ஒரு சாதாரண வசை மொழியைக் கூடப் பொறுக்க முடியாது, அவனுடைய நரம்புகள் அவ்வளவு நுண்மையாகிவிட்டன. அவனுடைய இன்ப அனுபவம் அதிகரித்துவிட்டதால், துன்ப அனுபவமும் அதிகரித்துவிடுகிறது. இதுதான் மாயை.
-
நன்மையைத் தவிர தீமையே இல்லாத, சிரிப்பைத் தவிர அழுகையே இல்லாத ஓர் இடம் இருப்பதாக நாம் வேண்டுமானால் கற்பனை செய்து கொள்ளலாம். இயற்கையில் அப்படி இருக்கவே முடியாது. ஏனெனில் இவற்றை உண்டுபண்ணும் சூழ்நிலைகள் ஒன்றாகத் தான் இருக்கின்றன. சிரிப்பை உண்டுபண்ணும் சக்தி எங்கே இருக்கிறதோ, அங்கே அழுகையை உண்டாக்கும் சக்தியும் மறைந்திருக்கிறது. இன்பத்தை உண்டாக்கும் சக்தி இருக்குமிடத்தில் துன்பத்தை உண்டாக்கும் சக்தியும் இருக்கிறது.
-
இவ்வாறு, வேதாந்தத் தத்துவம் இன்பநோக்கு, துன்பநோக்கு இரண்டுமே அற்றதாக இருக்கிறது; இரண்டு நிலைகளையும் பற்றிப் பேசுகிறது. உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்கிறது. நன்மை, தீமை இன்பம், துன்பம் இவற்றின் கலப்பே உலகம் என்பதையும் ஒன்று அதிகரித்தால் இன்னொன்றும் அதிகமாகியே தீரும் என்பதையும் வேதாந்தம் ஒப்புக்கொள்கிறது
--
--தொடரும்--
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3பக்கம்.230
-
--விவேகானந்தர் விஜயம்--சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment