Tuesday, 13 December 2016

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-21-25

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-21
-
இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்புடன் இந்தியா உருவாகிக் கொண்டிருக்கறது என்பதில் சந்தேகமில்லை. 
-
பழங்கால ரிஷிகள்அனைவரை விடவும் மகத்தான ரிஷிகள் தோன்றப் போகின்றனர். மற்ற உலகங்களில் வாழ்கின்ற உங்கள் முன்னோர்கள் தங்கள் வழித்தோன்றல்களாகிய உங்களின் புகழையும் கீர்த்தியையும் கண்டு திருப்தி மட்டும் அடையவில்லை, பெருமையும் அடைவார்கள் என்பதை நான் காண்கிறேன்.
-
என்சகேதரர்களே, நாம் எல்லோரும் கடுமையாக உழைப்போம். தூங்குவதற்கு இது நேரமில்லை எதிர்கால இந்தியா நம்முடைய உழைப்பைப் பொறுத்தே அமையப் போகிறது.
-
இப்போது இந்தியத் தாய் தயாராகக் காத்திருக்கிறாள். தூக்கத்தில் இருக்கிறாள் , அவ்வளவுதான். எழுந்திருங்கள், விழித்திருங்கள். அழியாத தன் அரியாசனத்தில் புத்திளமையோடும் முன்பு எப்போதும் இல்லாத பெருமையோடும் அவள் வீற்றிருப்பதைக் காணுங்கள்.
-
கடவுளைப் பற்றிய கருத்து நமது தாய்த்திருநாட்டில் வளர்ந்துள்ளது போல் வேறெங்கும் இவ்வாறு முழுமையாக வளரவில்லை ஏனென்றால் கடவுளைப் பற்றிய இந்தக் கருத்து உலகில் வேறெங்கும் இருக்கவேயில்லை நான் இவ்வாறு உறுதியாகச் சொல்வதைக் கேட்டுநீங்கள் திகைக்கலாம். ஆனால் பிற மத சாஸ்திரங்கள் எவற்றிலேனும் கடவுளைப் பற்றிய நமது கருத்துக்களுக்குச் சமமான கருத்துக்கள் இருந்தால் காட்டுங்கள்.
-
பிற மதத்தினரின் தெய்வங்கள் எல்லாம் ஒவ்வொரு குழுக்களுக்கு உரியவர்கள்; யூதர்களின் தெய்வம், அரேபியரின் தெய்வம் அந்த இனத்தின் தெய்வம் இந்த இனத்தின் தெய்வம் என்றிப்படி உள்ளவர்கள் எல்லாம் இன தெய்வங்கள்
-
ஆனால் எல்லோருக்கும் நன்மை தருகின்ற, மிகுந்தகருனை வாய்ந்த நம் தந்தையாகவும் ,தாயாகவும், நண்பனாகவும் நண்பனுக்கும் உற்ற நண்பனாகவும் ஆன்மாவின் ஆன்மாவாகவும் உள்ள கடவுள் கருத்து இங்கு இங்கு மட்டுமே உள்ளது.
-
சைவர்களுக்கு சிவபெருமானாகவும் வைணவர்களுக்கு விஷ்ணுவாகவும், கர்ம நெறியினருக்கு கர்மமாகவும், பௌத்தர்களுக்கு புத்தராகவும் சமணர்களுக்கு அருகராகவும் கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் ஜெஹோவாவாகவும் முகமதியர்களுக்கு அல்லாவாகவும் ஒவ்வோர் இனத்திற்கும் ஒவ்வொரு தெய்வமாகவும், வேதாந்திகளுக்கு பிரம்மமாகவும் இருக்கின்ற, அந்த ஒரே கடவுளே எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற உண்மையும் அந்த இறைவனின் பெருமையும் இந்த நாட்டிற்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.
-
அவர் நம்மை ஆசீர்வதிப்பாராக, உதவுவாராக! இந்தக் கருத்தினைச் செயல்படுத்த அவர் வலிமையும் ஆற்றலலும் தருவாராக.
--
-
சுவாமி விவேகானந்தர் ராமநாதபுரத்தில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

-
மிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-22
-
-
நீங்கள் என்னைப் பேரன்புடன் வரவேற்றாலும் சரி அல்லது இந்த நாட்டைவிட்டு உதைத்துத் துரத்தினாலும் சரி,என் நாட்டின் மீது எனக்குள்ள அன்பு ஒன்று போலவே இருக்கும் . கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், வேலைக்காகவே வேலை செய்ய வேண்டும், அன்பிற்காகவே அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
-
மேலை நாடுகளில் என்னால் செய்யப்பட்டிருக்கும் வேலை மிகவும் சிறியது. நான் செய்ததைப்போல் மேலை நாட்டில் நூறு மடங்கு வேலை செய்ய இங்குள்ள ஒவ்வொருவராலும் முடியும். இந்தியாவின் காடுகளிலிருந்து தோன்றிய, இந்திய மண்ணுக்கும் மட்டுமே சொந்தமான ஆன்மீகம் ,தியாகம் ஆகியவற்றை உலகம் முழுவதற்கும் தயாரான, வெல்ல முடியாத ஆன்மீக ஆற்றலோடு கூடிய மனிதர்கள் தோன்றும் நாளை நான் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்
-
சுவாமி விவேகானந்தர் பரமக்குடியில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-23
-
உலக வாழ்வில் ஒருவிதமான சோர்வினால் பீடிக்கப்படுவது போன்ற சில காலகட்டங்களை உலக நாடுகள் ஒவ்வொன்றும் சந்திப்பதை மனிதகுல வரலாற்றில் நாம் காண்கிறோம். அப்போது அவர்களுடைய திட்டங்கள் எல்லாம் கைநழுவிப் போகின்றன, அவர்களுடைய சமுதாய அமைப்புகளும் தூள்தூளாகிப் புழுதியில் வீழ்கின்றன, அவர்களுடைய நம்பிக்கையெல்லாம் இருண்டு போகின்றன, எல்லாமே சூன்யமாகின்றன.
-
சமுதாய வாழ்வை உருவாக்க இந்த உலகத்தின் இரண்டு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஓன்று , மதத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று சமுதாயத் தேவையை அடிப்படையாகக் கொண்டது ; ஒரு முயற்சி ஆன்மீகத்தின் மீது எழுப்பப்பட்டது; மற்றொன்று காணும் இந்த உலகத்தை ஆதாரமாகக் கொண்டது.
-
ஒன்று, போகப் பொருட்களால் ஆன இந்தச் சின்னஞ்சிறிய உலகத்திற்கு அப்பால் துணிச்சலாகப் பார்ப்பதும் அங்கேயும் அதற்கு அப்பாலும் வாழ்க்கையைத் துவக்குவதும் ஆகும்;மற்றொன்று, உலகப் பொருளிலேயே திருப்தி அடைந்து விடுவதும் அங்கேயே நிலைத்து வாழ நினைப்பதும் ஆகும்.
-
ஆச்சரியப்படும் வகையில் சில வேளைகளில் ஆன்மீகமும், சில வேளைகளில் லௌகீகமும் உச்சத்திற்கு வருகின்றன. இரண்டும் அலையலையாக ஒன்றையொன்று தொடர்வது போல் உள்ளது . ஒரே நாட்டில் இத்தகைய பல்வேறு அலைகள் நிலவும்.
-
ஒரு சமயம் லௌகீக அலை அடித்துப் பரவும்; அப்போது அதிக இன்பமும் அதிக உணவும் தருகின்ற செல்வம், அத்தகைய கல்வி போன்ற இந்த வாழ்க்கையைச் சேர்ந்த அனைத்தும் பெருமை பெறும்.
-
பின்னர் கீழான நிலைக்குச் சென்று இழிநிலையை அடைந்துவிடும். செல்வத்தின் வளர்ச்சியோடு மனித இனத்துடனேயே தோன்றிய எல்லா வகையான பொறாமைகளும் வெறுப்புகளும் உச்சநிலையை அடையும்.
-
. அப்போது ஆன்மீகம் வந்து மூழ்குகின்ற அந்த உலகிற்கு உதவிக்கரம் நீட்டி அதனைக் காப்பாற்றவில்லை எனில் உலகமே அழிந்து போய்விடும்.
-
அதன்பிறகு உலகம் புதிய நம்பிக்கையைப் பெறும்; புதிய வாழ்க்கை முறைக்கான புதிய அடித்தளத்தைக் காணும்.
-
சுவாமி விவேகானந்தர் பரமக்குடியில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

--
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-24
-
ஆன்மீகத்தின் உச்சநிலையை அடைந்த பிறகு நாடு படிப்படியாக மீண்டும் அழிவை நோக்கி செல்ல தொடங்குகிறது.
-
சில விசேஷ ஆற்றல்களுக்குத் தனிப்பட்ட உரிமை கொண்டவர்களான ஒரு பிரிவினரை ஆன்மீகம் உருவாக்குகிறது. இதனுடைய உடனடி விளைவு என்னவென்றால் லௌகீகத்தை நோக்கி மீண்டும் செல்லுதல். இது அந்தப் பிரிவினர் இன்னும் பல்வேறு தனிப்பட்ட உரிமைகளைப் பெற வழிவகுக்கும். 
-
காலப் போக்கில் அந்த இனத்தின் எல்லா ஆன்மீக ஆற்றல்கள் மட்டுமல்லாமல், பௌதீக அதிகாரங்களும் சலுகைகளும் அந்தச் சிலரின் ஆளுகைக்கு உட்பட்டுவிடும் இந்தச் பாமர மக்களின் தோள்மீது ஏறிக்கொண்டு அவர்களை அடக்கியாள விரும்புவார்கள்.
-
இப்போது சமூகம் தனக்கு தானே உதவிக் கொண்டாக வேண்டும் இந்த நிலையில் லௌகீகம் வந்து உதவிக்கரம் நீட்டும்.
--
நமது தாய்நாடான இந்தியாவை பார்த்தால் இத்தகையதொரு நிலைமையைத்தான் காண்கிறீர்கள் . -
ஐரோப்பாவிற்குச் சென்று வேதாந்தத்தைப் போதித்த ஒருவனை இப்போது வரவேற்கிறீர்கள். ஐரோப்பாவில் பௌதீக வாழ்க்கை அதற்கான வழியைத் திறந்து விட்டிருக்காவிட்டால் என்னை நீங்கள் வரவேற்பதென்பது முடியாத காரியம்.
-
பௌதீகம் ஒருவிதத்தில் இந்தியாவைக் காப்பாற்றியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அது வாழ்க்கையின் கதவுகளை எல்லோருக்கும் திறந்து விட்டிருக்கிறது; ஜாதிச் சலுகைகளை எல்லோருக்கும் திறந்து விட்டிருக்கிறது; ஜாதிச் சலுகைகளை அழித்திருக்கிறது ;பயன்படுத்துவதற்கு மறந்துபோய் ஒரு சிலரிடம் மறைக்கப்பட்டுக் கிடந்த விலைமதிப்பற்ற புதையல்களை, விவாதிப்பதற்காகத் திறந்து வைத்திருக்கிறது.
-
சுவாமி விவேகானந்தர் பரமக்குடியில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

--
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-25
-
இந்த நாட்டின் அருமையான ஆன்மீகப் புதையல்களுள் பாதி திருடப்பட்டுவிட்டது, நாம் அவற்றை இழந்துவிட்டோம்.மறு பாதியோ, தானும் தின்னாமல் ,பசுவையும் தின்ன விடாமல் வைக்கோற்போரைக் காவல் செய்யும் நாய்களைப் போன்ற சிலரிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது.
-
இனி மற்றொரு புறம், ஜரோப்பாவில் பல காலமாக இருந்து வருவதும் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டும் குறைபாடுகளுடன் கூடியதாகவே இருப்பதுமான அரசியல் அமைப்புகளை இந்தியாவில் கொண்டு வரத் துடித்துக் கொண்டிருக்கிறோம். அரசியலோடும் அரசாங்கத்தோடும் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளும் வழிமுறைகளும் எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாகச் சோதித்துப் பார்க்கப்பட்டுவிட்டன. எனவே செல்லும் திசையறியாமல் ஐரோப்பா குழம்பிக்கொண்டிருக்கிறது.
-
பொருளாதாரக் கொடுங்கோன்மை அங்கே பயங்கரமாக உள்ளது.வேலை செய்யாத, ஆனால் லட்சக்கணக்கான மக்களின் உழைப்பை உறிஞ்சுகின்ற சில மனிதர்களின் கையில் நாட்டின் செல்வமும் அதிகாரமும் கட்டுண்டு கிடக்கின்றன. இந்த அதிகாரத்தின் மூலம் பூமி முழுவதையும் அவர்கள் ரத்த வெள்ளத்தில் நனைக்க முடியும். மதமும் மற்ற எல்லாமுமே அவர்களின் காலடியில் கிடக்கின்றன. அவர்களே ஆள்கிறார்கள் , எல்லாவற்றிக்கும் மேலானவர்களாகக் காட்சியளிக்கிறார்கள் .
-
மேலை நாடுகள் ஒரு சில ஈட்டிக் காரர்களால் தான் ஆளப்படுகின்றன. சட்டரீதியான அரசாங்கம், சுதந்திரம் ,உரிமை பாராளுமன்றம் என்றெல்லாம் நீங்கள் கேள்விப்படுகிறீர்களே, அவையெல்லாம் வெறும் வேடிக்கைச் சத்தங்கள் மட்டுமே
-
சுவாமி விவேகானந்தர் பரமக்குடியில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

-


No comments:

Post a Comment