Saturday, 31 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-28



இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-28
(சுவாமி விவேகானந்தர்)
-
உலகத்தை துறந்து செல்வது எப்படி?
----
🌿 உலகத்தைத் துறப்பது என்பதை, அதனுடைய பழைய வளர்ச்சியுறாத பொருளில் புரிந்துகொண்டால், அது இப்படித்தான் இருக்கும்: வேலை செய்யக் கூடாது; சோம்பேறிகளாக இருக்க வேண்டும்; எதையும் சிந்திக்காமல், எதையும் செய்யாமல், பிடித்துவைத்த களிமண் போல் இருக்க வேண்டும்; விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதன் கைதியாக இருக்க வேண்டும்; இயற்கையின் விதிகளால் இடத்திற்கு இடம் பந்தாடப்பட வேண்டும். இதுதான் பொருள்.
---
🌿 உலகத்தைத் துறப்பது என்பதற்கு அது பொருளல்ல. நாம் வேலை செய்ய வேண்டும். பொய்யான ஆசைகளால் அலைக்கழிக்கப்படுகின்ற சாதாரண மனித குலத்திற்கு செயல் என்பதுபற்றி என்ன தெரியும்? உணர்ச்சிகளாலும் புலன்களாலும் ஆட்டி வைக்கப்படுகின்ற மனிதனுக்குச் செயல் என்பதுபற்றி என்ன தெரியும்? சொந்த ஆசைகளால் தூண்டப்படாதன்தான், சுயநலம் துளியும் இல்லாதவன் தான் செயல்புரிய முடியும். தனக்கென்று சுய நோக்கம் எதுவும் இல்லாதவன் தான் வேலை செய்ய முடியும். லாபம் கருதாதவன்தான் வேலை செய்ய முடியும்.
---
🌿 ஓவியத்தை ரசிப்பது யார்? விற்பவனா, பார்க்க வந்தவனா? விற்பவன், அந்தப் படத்தை விற்பதால் தனக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று கணக்கு வழக்குகளில் மூழ்கிக் கிடக்கிறான்; அதை ஏலத்திற்கு விடலாமா, விலை எப்படி ஏறுகிறது, எந்த இடத்தில் மூன்றாம் தரம் கூறினால் லாபம் அதிகமாகும் என்பதில் கவனமாக இருக்கிறான். அவனது மனம் முழுவதிலும் அந்த எண்ணமே நிறைந்திருக்கிறது. அந்தப் படத்தை வாங்கும் எண்ணமோ விற்கும் எண்ணமோ இல்லாமல் அங்கே போயிருக்கும் ஒருவன் தான் அந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியும். அவனே அந்தப் படத்தை அனுபவிக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறான்.
---
🌿 இந்தப் பிரபஞ்சமே ஓர் ஓவியம். ஆசைகள் மறையும் போது மனிதன் உலகை அனுபவிக்கிறான். வாங்குவது, விற்பது, சொந்தம் கொண்டாடுவது போன்ற முட்டாள்தனமான கருத்துக்கள் எல்லாம் அப்போது மறைந்து விடுகின்றன. கடன் கொடுப்பவன், வாங்குபவன், விற்பவன் எல்லோரும் மறைந்து, உலகம் மட்டுமே ஒரு சித்திரமாக ஓர் அழகிய ஓவியமாக எஞ்சி நிற்கிறது.
---
🌿 ஆசைகளை ஒழித்தால்தான் இறைவனின் இந்த அழகிய பிரபஞ்சத்தை புரிந்துகொண்டு, அதில் நாம் ஆனந்தமாகத் திளைக்க முடியும். அப்போது எல்லாம் தெய்வீகமாகிவிடும். மூலைமுடுக்குகள் மற்றும் தீய, தூய்மையற்ற இடங்களும்கூட தெய்வீகமாகிவிடும். எல்லாமே அவற்றின் உண்மை இயல்பை வெளிப்படுத்தும். நமது அழுகையும் கதறலும் எல்லாமே குழந்தைத்தனமானவை. நாம் இவற்றிற்கெல்லாம் வெறும் சாட்சியாக மட்டுமே இருந்து வந்திருக்கிறோம் என்பதை அப்போது புரிந்துகொள்வோம், நம்மைப் பார்த்து நாமே சிரித்துக் கொள்வோம்.
---
🌿 ஆகவே உங்கள் வேலையைச் செய்யுங்கள் என்கிறது வேதாந்தம். எப்படி வேலை செய்வது என்பதை அது முதலில் போதிக்கிறது. எப்படி?
துறப்பதன் மூலம், பொய்த் தோற்றமான இந்த உலகை விட்டுவிடுவதன்மூலம். இதன் பொருள் என்ன? எங்கும் இறைவனைக் காணல் என்பது தான். அப்படித்தான் நாம் செயல்புரிய வேண்டும்.
---
🌿 நூறுவருடங்களாக வாழ ஆசைப்படலாம். விரும்பினால் எல்லா உலக ஆசைகளுக்கும் நம் மனத்தில் இடம் கொடுக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் தெய்வீமாக்கி விடுங்கள், சொர்க்கமாக்கிவிடுங்கள், அவ்வளவுதான். பிறருக்கு உதவி செய்துகொண்டு ஆனந்தமான நீண்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்று நாம் ஆசைப்படலாம். இவ்வாறு செயல்புரிந்தபடிதான் முக்திக்கான வழியைத் தேட முடியும். இதைத் தவிர வேறு வழியே இல்லை.
---
🌿 உண்மையை அறிந்துகொள்ளாமல், ஒருவன் உலக போகங்களில் முட்டாள்தனமாக மூழ்கினால் அவ்ன வழிதவறிவிட்டான், அவனால் லட்சியத்தை அடைய முடியாது. இனி, உலகைச் சபித்துக்கொண்டு அதை விட்டு விட்டுக் காட்டிற்குப்போய், உடலை ஒடுக்கி, பட்டினியால் உடலை அணு அணுவாகக் கொன்று, நெஞ்சை ஈரமற்ற கல்லாக்கிக் கொண்டு, கடின சித்தமுள்ளவனாக ஆகின்றவனும் வழி தவறியவனே. இவை இரண்டும் இரண்டு துருவங்கள். இரண்டுமே தவறான நோக்குடையவை. இருவரும் வழி தவறியவர்களே. இருவரும் லட்சியத்தை அடைய முடியாது.
---
🌿 எனவே எல்லாவற்றிலும் இறைவனை இணைத்துச் செயல்புரியுங்கள் என்று வேதாந்தம் சொல்கிறது. வாழ்க்கையைத் தெய்வீகமாக்கி, தெய்வமாக ஆக்கி, இடைவிடாமல் வேலை செய்யுங்கள். நாம் செய்ய வேண்டியதும், கேட்டுப் பெற வேண்டியதும் இவ்வளவுதான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எங்கும் இறைவன் இருக்கிறார். அவரைத் தேடி நாம் எங்கே போவது? ஒவ்வொரு செயலிலும் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வோர் உணர்ச்சியிலும் அவர் ஏற்கனவே உள்ளார். இதை உணர்ந்து செயல்புரிய வேண்டும். அது ஒன்றுதான் வழி. வேறு வழியே இல்லை. அப்போதுதான் நமது கர்மபலன்கள் நம்மைக் கட்டுப்படுத்தாது.
---
சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment