Monday, 19 December 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 62

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 62
---
சுவாமிஜி குழந்தையாக இருந்தபோது அவரது தாயார் புவனேசுவரி தேவி, “நரேன் நோயிலிருந்து மீண்டால் காளிதேவிக்கு விசேச பூஜைகள் செய்வேன்“ என்று வேண்டுதல் செய்திருந்தார்.பிறகு அதை மறந்துவிட்டார்
-
. இப்போது சுவாமிஜி பல நோய்களால் அவதிப்படுவதை கண்ட அவரது தாயார்,வேண்டுதலை நிறைவேற்றாததால் தான் தேவி இவ்வாறு தண்டிக்கிறாள் என நினைத்து பயந்தார். எனவே வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என சுவாமிஜியிடம் தெரிவித்தபோது, சுவாமிஜியும் ஒப்புக்கொண்டார்.
-
ஒரு நாள் காளிகட்டிலுள்ள காளிகோவிலுக்கு தனது தாயாருடன் சென்றார். கோவிலுக்கு ஈரத்துணியுடன் சென்று அங்க பிரத்ட்சிணம் செய்தார்.அங்கே காளிவழிபாடு பற்றி ஒரு சொற்பொழிவாற்றினார்.
-
ஒருமுறை சுவாமிஜி தனது துறவி சீடர் ஒருவருக்கு கூறினார்..இதோ பார் நிச்சயா,ஒரு துறவி ஒருபோதும் பிறருக்கு சுமையாக இருக்கக் கூடாது. நீ ஒருவரிடமிருந்து உணவை ஏற்றுக்கொண்டால்,ஏதாவது ஒரு விதத்தில் அதை திருப்பிக்கொடுக்க வேண்டும்.அடுத்தவர்கள் தரும் உணவை சாப்பிட்டு சாப்பிட்டு துறவியர் சமுதாயமே சோம்பேரிகூட்டம் ஆகிவிட்டது. அடுத்தவனை சார்ந்து வாழ்வதால்,அவர்கள் ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கு பதிலாக கீழ்நிலைக்குப்போகிறார்கள். நீ ஒருபோதும் அப்படி இருக்கக்4டாது.பெரிதாக உன்னால் எதையும் செய்ய முடியாவிட்டால் சிறிதாவது செய். பிச்சையெடுத்து கொஞ்சம் பணம்பெறு,அதில் ஒரு மண்பானை வாங்கு.அதில் தண்ணீரை வைத்துக்கொண்டு,நடைபாதையில் உட்கார். பயணிகளுக்கு அந்தத் தண்ணீரைக்கொடு.தாகத்தில் வாடுபவனுக்கு தண்ணீர் கொடுப்பது ஒரு புண்ணியச்செயல். சோம்பேரியாக உட்கார்ந்து பிறர் கொடுக்கும் உணவை உண்பது கண்டனத்திற்குரியது.
-
சுவாமிஜியின் இந்த வார்த்தையைக்கேட்ட துறவி,( பெயர் சுவாமி நிச்சயானந்தர்) ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்வது என தீர்மானித்துக்கொண்டார்.தினமும் 56 கி.மீ நடந்து சென்று வழில் உள்ள ஏழைகளுக்கெல்லாம் உதவி செய்தார்.பிறகு பிச்சைஏற்று உணவை உண்பார்.வெளிலோ மழையோ அவரது பணி நிற்கவில்லை .இவ்வாறு தன் இறுதி மூச்சு இருக்கும் வரை ஏழைகளுக்காக உழைத்து சுவாமி விவேகானந்தர் காட்டிய லட்சியதுறவியாக திகழ்ந்தார். 
-
சுவாமி விவேகானந்தரின் தோற்றம் பற்றி அவரது சீடர் சுவாமி விரஜானந்தர் எழுதுகிறார். ”அமெரிக்க செய்தித்தாள்கள் எழுதியதுபோல் அவரது கண்கள் காண்போரை சுண்டி இழுப்பவையாக இருந்தன.அவரது திருமேனி முழுவதும் ஒளிர்வது போல் இருந்தது. அழகு,ஆற்றல்,அமைதி அனைத்தும் திரண்ட ஓர் உருவம் கொண்டவர் அவர் .அவரது கண்களை நேராக பார்க்க பயமாக இருக்கும். என் கண்கள் எரிந்துபோகுமோ என்று தோன்றும். சிந்தனையில் ஆழ்ந்தபடி அங்குமிங்கும் நடப்பதை ப்பார்த்தால் ஒரு சிங்கம் நடப்பது போல இருக்கும்.சில வேளைகளில் வெறும் கைளபீனம் மட்டுமே உடுத்தியிருப்பார். அவரிடம் ஒரு பேராற்றல் செயல்பட்டுக்கொண்டிருக்கும். அவரது பாதம் பட்ட பூமி நடுங்குவதுபோல அவரது நடை இருக்கும்.
-
சுவாமிஜியின் உயரம் 5 அடி 8.5 அங்குலம். சிறம் சாதாரண சிவப்பு.சுவாமிஜியின் தோற்றத்தில் முதலில் சுண்டியிழுப்பது அவரது விசாலமான கண்கள்.அந்த கண்களைக்கண்டே அவருக்கு சீடரானேன் என்று அவரது முதல் சீடர் சுவாமி சதானந்தர் கூறுவார்.யோகியின் கண்கள் என்று தேவேந்திரநாத் தாகூர் கூறினார். அவரது கண்களை தாமரை மலருடன் ஒப்பிட்டு குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.
சுவாமிஜியின் குரல் கம்பீரமாக,பிசிறு இல்லாததாக,வெண்கல மணியின் நாதத்தில் ஒலிக்கும் என்று அவரது பேச்சை கேட்போர் கூறுவார்கள்.
-
சுவாமிஜி மிக எளிமையான ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார்.எந்தவித குறிப்பும் இல்லாமல் பேசுவார்.அவரது சொற்பொழிவுகளை கேட்பவர்கள் அது ஒரு இனிமையான இசைபோல இருந்ததாக உணர்ந்தனர்.ஆங்கிலத்தில் புலமை பெற்ற பலர் அவரது ஆங்கில உச்சரிப்பை பாராட்டினார்கள். ஆனால் பல்கலைக்கழகத்தில் அவர் படிக்கும்போது ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்கள் 100க்கு 47 மட்டுமே
-.
அவர் மேடையில் ஏறி பேசும் போது ,அவரது உடல்,குரல் எல்லாம் மாறிவிடும்,அவரது தோற்றம் வேறுமாதிரி இருக்கும்,அவருக்குள் இருந்து இன்னொரு மனிதன் வெளிவந்து பேசுவதுபோல் இருக்கும்.இந்த உலகத்தை மறந்து வேறு எங்கோ சஞ்ரிப்பது போல இருக்கும்.
-
1902 ஆம் ஆண்டு ஸ்ரீராமகிருஷ்ணரின் ஜெயந்திவிழா மார்ச்16 ஆம் நாள் வந்தது. சுவாமிஜியால் எழுந்து நடக்க முடியாத அளவு உடல் சோர்வுற்று படுக்கையில் இருந்தார். அவரது கால்கள் வீங்கியிருந்தன.தூக்கம் அவரைவிட்டு அகன்றுவிட்டது.ஆயிரக்கணக்கானோர் சுவாமிஜியைக்காண மடத்திற்கு வந்திருந்தார்கள். ஆனால் சுவாமிஜியால் படுக்கையைவிட்டு எழ முடியவில்லை.
தம்மை காண வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பக்கூடாது என்று, மெதுவாக எழுந்து ஜன்னல்கம்பியை பிடித்து நின்றார்.கீழே பக்தர்கள் கூட்டமாக நின்றார்கள்.சிறிது நேரம் நின்று அவர்களை கண்டு தம் அன்பை வெளிப்படுத்தினார்.
--
--தொடரும்....
-
----விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment