Friday 30 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-18

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-18
(சுவாமி விவேகானந்தர்)
-
கடவுள் என்பவர் யார்? பாகம்-2
-
(ஆன்மீக சாதனைகளில் ஈடுபடும் சாதகர்கள் அடையும் முக்தி இரண்டு வகைப்படும்.
-
1.உருவமற்ற குணங்களற்ற இறைவனுடன் ஒன்று கலப்பது ஒருவகை. 
2.அனைத்து உருவங்களையும் உள்ளடக்கிய அனைத்து குணங்களுடன் கூடிய இறைவனுடன் ஒன்று கலப்பது இன்னொருவகை
-
படைப்பு செயல் நடைபெறாத நிலையில் அவரை நிர்குண பிரம்மம் என்றும் படைப்பு செயலில் ஈடுபட்டிருக்கும் போது இறைவனை சகுணபிரம்மம் என்றும் அழைக்கிறோம்
-
நிர்குணபிரம்த்தில் ஒன்று கலப்பவர்களின் உடல்,மனம் முற்றிலும் அழிந்துவிடுகிறது.அவர்கள் நிர்குணபிரம்மமாக மாறிவிடுகிறார்கள்.
-
சகுண பிரம்மத்தில் ஒன்று கலப்பவர்கள், உடல் முற்றிலும் அழிவதில்லை, சூட்சும உடலோடு அவர்கள் வாழ்கிறார்கள்.அவர்கள் உலகையும் உலக இயங்கங்களையும் காண்பதில்லை மாறாக நிர்குணபிரம்மத்தை தியானிப்பதிலேயே ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.)
-
எப்போதும் இறைவனை சார்ந்தே விளங்கும் இயல்புடைய ஜீவன், தனித்தலைமையுடைய இறைவனின் எல்லையற்ற ஆற்றலையும், முழுச் சுதந்திரத்தையும் ஒருபோதும் பெற இயலாது. 
-
இங்கு கேள்வி எழுப்பப்படுகிறது: 
-
1.முக்தி பெற்ற ஜீவன்கள் பல்வேறு ஆற்றல்களைப் பெறுகின்றன. இறைவனுக்கே உரிய பிரபஞ்சப் படைப்பு முதலான சிறப்புச் சக்தியும், எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரே அதிபதியாக இருப்பதும் இவற்றுள் அடங்குமா? அல்லது அவை எதுவுமின்றி, முக்தி பெற்றவர்களின் பெருமையெல்லாம் அந்தப் பரம்பொருளை நேராகக் காண்பதுடன் நின்றுவிடுமா?
-
2.இதைத் தொடர்ந்து பின்வரும் வாதத்தை நாம் காண்கிறோம். முக்தி பெற்றவன் அனைத்து உலகங்களையும் இயக்கியாளும் தலைமையை எய்துகிறான் என்பது அறிவுபூர்வமானதே. ஏனெனில் சாஸ்திரங்களும், பரம்பொருளின் மேலான அதே நிலையை அவனும் அடைகிறான். அவனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன. என்றே கூறுகின்றன. எனவே முக்தி பெற்றவனின் விருப்பங்கள் நிறைவேறுகின்றன. அவன் மேலான நிலையில் இறைவனோடு ஒன்றியிருக்கிறான் என்னும்போது, உலகங்களை இயக்கியாளும் ஆற்றலையும் பெறுகிறான் என்பதை ஏற்றுக்கொண்டுதானே தீர வேண்டும்!
--
இதற்கு நாம் தரும் பதில் இதுதான் 
-
உலகை ஆள்வது என்பது உயிருள்ளவை, உயிரற்றவை ஆகியவற்றின் உடல், வாழ்க்கை, விருப்பங்கள் அனைத்தையும் வழிநடத்துவதைக் குறிப்பதாகும். முக்தி பெற்றவர்களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. அவர்களின் ஆன்ம சொரூபத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரைகள் அகன்றுவிடுவதால், நிர்குணபிரம்மத்தின் தடையற்ற காட்சியில் எப்போதும் ஆழ்ந்து மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். 
-
பின்வரும் சாஸ்திர மேற்கோளால் இது நிரூபிக்கப்படுகிறது 
-
யாரிடமிருந்து இந்த அனைத்துப் பொருட்களும் தோன்றியுள்ளனவோ, பிறந்தவை அனைத்தும் யாரால் வாழ்கின்றனவோ, இறந்தபின் அனைத்தும் யாரிடம் ஒடுங்குகின்றனவோ அவரே பிரம்மம்
-
பின்வரும் சாஸ்திரப் பகுதிகளில் பிரம்மத்தைப் பற்றிய பகுதியையும் பார்ப்போம்.
-
என் அருமை மாணவனே! ஆரம்பத்தில் இரண்டற்ற ஒரே பொருள்தான் தன்னந்தனியாக இருந்தது. அது சிந்தித்தது. பின்னர் பலவற்றைத் தோற்றுவிப்பேன். என்றது அதிலிருந்து சூடு உண்டாயிற்று.
-
உண்மையில் பிரம்மம் ஒன்றே ஆரம்பத்தில் இருந்தது. அது பரிணமித்தது. அது க்ஷத்திரம் என்ற புண்ணிய வடிவினைத் தோற்றுவித்தது. 
-
உண்மையில் ஆன்மா ஒன்றே ஆரம்பத்தில் இருந்தது. வேறு எதுவும் இயங்கவில்லை. ஆன்மா உலகைப் படைக்க எண்ணம் கொண்டது, பிறகு உலகைத் தோற்றுவித்தது.
-
முக்தி பெற்ற பிறகும் தங்கள் ஜீவாத்ம உணர்வை இழந்து விடாமல் தனித்து வேறாக இருக்க விரும்புபவர்கள், தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள எல்லா வாய்ப்புகளையும் பெறுவதோடு, குணங்களோடு கூடிய பிரம்மத்தின் பேரருளையும், பேரானந்தத்தையும் அனுபவிக்கின்றனர். 
-
அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு பெருநிலையை அத்வைதம் கூறுகிறது. 
-
அந்த நிலையில் படைப்பு, படைக்கப்படும் பொருள், படைப்பவர் என்று எதுவும் இல்லை. காண்பவன், காணப்படும் பொருள், காட்சி என்றில்லை. நான், நீ, அவன் என்பவை இல்லை. செய்பவன், செய்யப்படும் பொருள் , தொடர்பு எதுவும் இல்லை. அங்கே யார் யாரைக் காண்பது? இத்தகைய பெருநிலையை அடைந்தவர்கள் எல்லாவற்றையும் கடந்துவிடுகின்றனர். வாக்கும் மனமும் போக முடியாத நிலையை அடைகின்றனர். இதுவல்ல, இதுவல்ல என்று வேதங்கள் கூறுகின்ற இடத்தை எட்டிவிடுகின்றனர். 
-
இந்தப் பெருநிலையை அடையாதவர்களுக்கும், அடைய இயலாதவர்களுக்கும், (இரண்டாவது நிலையில் இருப்பவர்கள்)பிரகிருதி, ஆன்மா, இந்த இரண்டையும் காப்பவனும் அவையிரண்டினுள் ஊடுருவியிருப்பவனும் ஆகிய இறைவன் இந்த மூன்றின் பிரிக்கவொண்ணா பிணைப்பாகிய பிரம்மத்தின் காட்சி கட்டாயமாகக் கிடைக்கிறது.
-
எனவேதான் பிரகலாதன் தன்னை மறந்தபோது உலகையோ, அதன் மூலகாரணத்தையோ காணவில்லை. அவன் கண்டதெல்லாம் பெயரும் உருவமுமற்ற, பிரிக்க முடியாத, எல்லையற்றதான ஒன்றைத்தான், ஆனால், தான் பிரகலாதன் என்ற நினைவு எழுந்தபோது அவன் கண்முன் உலகம் விரிந்து, கூடவே உலகின் தலைவனான அனந்த கல்யாண குணங்களின் இருப்பிடமான இறைவனும் தோன்றினார்.
-
நாம் ஆசாரிய சங்கரரிடம் திரும்புவோம் அவர் கூறுகிறார்- சகுண பிரம்மத்தை வழிபடுவதன் மூலம் தனிமுதல் தலைவனாகிய இறைவனுடன் இணைகின்றனர்(சகுணபிரம்மத்தில்). அதேவேளையில் தங்கள் சொந்த மனத்தையும் தக்க வைத்துக் கொள்கின்றனர்(சூட்சும உடலோடு வாழ்கிறார்கள்),. இவர்களின் பெருமை எல்லைக்கு உட்பட்டதா, எல்லையற்றதா? 
-
இந்தச் சந்தேகத்திற்கு விடையாக ஒரு வாதம் வருகிறது. அவர்களுடைய பெருமை எல்லையற்றதாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் சாஸ்திரங்கள் தங்களுக்குரிய அரசை அவர்கள் பெறுகிறார்கள். எல்லா தேவதைகளும் அவர்களை வழிபடுகின்றனர். எல்லா உலகங்களிலும் அவர்களின் ஆசைகள் நிறைவேறுகின்றன. என்றே கூறுகின்றன. 
-
இதற்கு, விடைபோல் வியாசர் உலகை ஆளும் ஆற்றலைத் தவிர என்று எழுதுகிறார்.
-
தொடரும்
-
--விவேகானந்தர் விஜயம்--

No comments:

Post a Comment