Tuesday 13 December 2016

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-11-15

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-11
-
--- 
மதம் வாழ்வது அன்பில் , இதயத்தின் தூய்மையான உண்மையான அன்பில்தானே தவிர சடங்குகளில் அல்ல. உடலாலும் மனத்தாலும் தூய்மையாக இல்லாமல் ஒருவன் கோயிலுக்கு வருவதும் சிவ பெருமானை வழிபடுவதும் பயனற்றது. உடம்பாலும் மனத்தாலும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால் தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்து கொண்டு பிறருக்கு மத போதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியையே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே. அக வழிபாடும் தூய்மையும்தான் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படுகின்ற புற வழிபாடு பயனற்றது. இதனை மனதில் பதித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
-
சுவாமி விவேகானந்தர் ராமேசுவரம் கோயிலில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-12
-
தாங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், பிறகு ஒரு தீர்த்தத் தலத்திற்குச் சென்றால் அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டனர்.
-
தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்கின்ற ஒருவன் ஏற்கனவே இருக்கின்ற தன் பாவங்களுடன் மேலும் ஒன்றைக் கூட்டுகிறான், புறப்பட்டபோது இருந்ததைவிட மோசமானவனாக வீடுதிரும்புகிறான்
--
மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும் ,அந்த இடங்கள் தீர்த்தத் தலங்களே. நூறு கோயில்கள் இருந்தாலும் அங்கே புனித மற்றவர்கள் இருப்பார்களானால் தெய்வீகம் மறைந்துவிடும்.
-
தீர்த்தத் தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான காரியம் . சாதாரன இடங்களில் செய்யப்படும் பாவங்களை எளிதாக நீக்கிக் கொள்ள முடியும். ஆனால் தீர்த்தத் தலங்களில் செய்யப்படும் பாவத்தை நீக்கவே முடியாது.
--
-
சுவாமி விவேகானந்தர் ராமேசுவரம் கோயிலில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-13
-
மனத் தூய்மை பிறருக்கு நன்மை செய்வது- இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழையிடமும் பலவீனரிடமும் நோயுற்றோரிடமும் சிவ பெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான்.
-
விக்கிரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது. 
-
ஒரே ஓர் ஏழைக்காயினும், அவனது ஜாதி, இனம் மதம் போன்ற எதையும் பாராமல், அவனிடம் சிவபெருமானைக் கண்டு அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் சிவ பெருமான் மிகவும் திருப்தி கொள்கிறார்; கோயிலில் மட்டுமே தம்மைக் காண்பவனைவிட , இவனிடம் அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.
-
சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்களை சிவபெருமான் விரும்புவதில்லை
-
ஏழைகளான, பலவீனர்களான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவருடைய படைப்பு அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரித்து அன்புசெலுத்துபவர்களையே சிவபெருமான் விரும்புகிறார்
---
சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள் அவரது பிள்ளைகளாகிய இந்த உலகஉயிர்கள் அனைத்திற்கும் முதலில் சேவை செய்ய வேண்டும். கடவுளின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே அவரது மிகச் சிறந்த தொண்டர்கள் என்று சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை மனதில் கொள்ளுங்கள்.
--
-
சுவாமி விவேகானந்தர் ராமேசுவரம் கோயிலில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-14
-
மனத்தூய்மையுடன் இருங்கள், உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நற்கர்மம் இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மை பெறும். எல்லோரிலும் உறைகின்ற சிவ பெருமான் வெளிப்பட்டுத் தோன்றுவார்
-
அவர் எல்லோரது இதயத்திலும் எப்போதும் இருக்கிறார். அழுக்கும் தூசியும் படிந்த கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்க்க முடியாது. அறியாமையும் தீய குணங்களுக்க நம் இதயக் கண்ணாடியில் படிந்துள்ள தூசியும். அழுக்கும் ஆகும்
-
-
சுவாமி விவேகானந்தர் ராமேசுவரம் கோயிலில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---.

-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-15
-
தனது நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள். அனைத்திலும் முதற்பாவமாகும்.
-
நானே முதலில் உண்பேன் . மற்றவர்களைவிட எனக்கு அதிகமான பணம் வேண்டும் , எல்லாம் எனக்கே வேண்டும் மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி. 
-
சுயநலமற்றவனோ, நான் கடைசியில் இருக்கிறான். சொர்க்கம் செல்வதைப்பற்றி எனக்குக் கவலைலயில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் அதற்கும் தயாராக இருக்கிறேன் என்கிறான். இத்தகைய சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மீகவாதி, அவனே சிவ பெருமானுக்கு அருகில் இருக்கிறான் . அவன் படித்தவனாக இருந்தாலும் படிக்காதவனாக இருந்தாலும் அவன் அறிந்தாலும் அறியவில்லை என்றாலும் அவனே மற்ற அனைவரையும் விட சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.
-
சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும் சிறத்தைதயப்போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவ பெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்
-
-
சுவாமி விவேகானந்தர் ராமேசுவரம் கோயிலில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

-

No comments:

Post a Comment