Saturday 31 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-25



இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-25
(சுவாமி விவேகானந்தர்)
-
கடவுளை மனத்தால் அறிய முடியுமா?
-----
🌿 நாம் சாதாரணமாக அறிவு என்று சொல்வதற்கு என்ன பொருள்?
--
🌿 அறிவு என்பது, நம் மனத்தின் எல்லைக்கு உட்பட்டது, நாம் அறிவது.
--
🌿 அறிவு மனத்தைக் கடந்ததாக இருக்கும்போது அதை அறிவு என்று சொல்ல முடியாது. மனத்தின் எல்லையை கடந்து இருப்பதை மனத்தால் அறிய முடியாது
--
🌿 பரம்பொருள், மனத்தின் எல்லைக்குள் வந்து விட்டால் அது பரம்பொருளாக இருக்க முடியாது, எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிடும்.
--
🌿 மனத்தால் அறியக்கூடியது,மனத்தினால் கட்டுப்பட்டது எதுவுமே எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிடுகிறது.
---
🌿 மனத்தின் எல்லையை கடந்து இருக்கும் பரம்பொருளை மனத்தால் எப்படி அறிய முடியும்?
---
🌿 ஆகவே பரம்பொருளை அறிவது என்று சொல்வதே முரணானது. அதனால்தான் இந்தக் கேள்விக்கு ஒரு போதும் பதிலே கிடைக்கவில்லை.
--
🌿 கடவுளை அறிய முடியுமானால் அவர் கடவுள் அல்ல; அவரும் நம்மைப்போல் எல்லைக்கு உட்பட்டவராக ஆகிவிடுகிறார். அவரை அறிந்து கொள்ள முடியாது. அவர் அறிந்து கொள்ள முடியாதவராகவே என்றும் இருக்கிறார்.
--
🌿 மனத்தால் அறிந்துகொள்ள முடியாத கடவுளை அறியவே முடியாதா?
--
🌿 அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் நாம் இந்த நாற்காலியையே அறிய முடிகிறது இந்த உலகை பார்க்க முடிகிறது. அவர் சாட்சிப் பொருள், எல்லா அறிவுக்கும் நிரந்தர சாட்சியாக அவர் இருக்கிறார். நாம் அறிவதையெல்லாம் அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் அறிய முடியும்.
---
🌿 நமது சொந்த ஆன்மாவின் சாரமாக இருப்பவர் அவர். நான் உணர்வின் சாரமாக இருப்பவரும் அவரே. இந்த நான்- உணர்வின் உள்ளேயும் மூலமாகவும் அல்லாமல் நாம் எதையும் அறிய முடியாது.
---
🌿 அவர் அறியக் கூடியவரும் அல்ல; அறியப்பட முடியாதவரும் அல்ல. இந்த இரண்டு நிலைகளையும்விட எல்லையற்ற மடங்கு உயர்ந்த நிலையில் அவர் இருக்கிறார்.
---
🌿 அவரே நமது ஆன்மா. அந்தப் பரம்பொருள் நிறைந்திருக்காவிட்டால், இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு கணம்கூடயாரால் வாழ முடியும்? யாரால் மூச்சுவிட முடியும்?
--
🌿 ஏனென்றால் அவருள்ளும் அவர் மூலமாகவும் தான் நாம் மூச்சுவிடுகிறோம். அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் வாழ்கிறோம்.
--
🌿 அவர் எங்கேயோ நின்றுகொண்டு என் உடலில் ரத்தத்தை ஓடச் செய்கிறார் என்பது பொருளல்ல. எல்லாவற்றின் சாரமாகவும் ஆன்மாவின் ஆன்மாவாகவும் அவர் இருக்கிறார் என்பதே பொருள்.
---
🌿 எந்தக் காரணத்தைக் கொண்டும் கடவுளை அறிவதாக நாம் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது அவரைத் தாழ்த்திப் பேசுவதே ஆகும்.
---
🌿 நாம் நம்மை விட்டு வெளியே குதிக்க முடியாது. அதுபோல் நாம் கடவுளை அறியவும் முடியாது.
---
🌿 அறிவு என்றால், ஒன்றை நம்மிலிருந்து வேறுபடுத்தி அறிவது உதாரணமாக, நாம் ஒன்றை நினைக்க வேண்டுமானால் அதை மனத்திற்கு வெளியே கொண்டுவந்து, அதாவது அதை மனத்திலிருந்து வேறுபடுத்திதான் பார்க்க முடியும்.
கடவுள் விஷயத்தில் இம்மாதிரி செய்ய முடியாது. ஏனெனில் அவர் நம் ஆன்மாவின் சாரமாக இருப்பவர். அவரை நமக்கு வெளியே கொண்டு நிறுத்த முடியாது.
---
🌿 வேதாந்தத்திலுள்ள மிக உன்னதமான கருத்துக்களில் ஒன்று இதோ இருக்கிறது. உன்னுடைய ஆன்மாவின் சாரமாக இருப்பவரே மெய்ப்பொருள். அவரே பரமாத்மா. நீயே அது. நீயே கடவுள் என்பதன் பொருள் இதுவே.அஹம் பிரம்மாஸ்மி. நான் கடவுளாக இருக்கிறேன்
--
🌿 நம் ஆன்மாவின் சாரமாகவும் மெய்ப்பொருளாகவும் இருப்பவரை, நம்மிலிருந்து நாம் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்?
--
🌿 கடவுள் நம்மோடு இரண்டறக் கலந்தவர். நம்மோடு இரண்டறக் கலந்து நாமாகவே இருப்பவர் . நம்மை நாமே புறத்தில் கொண்டுவந்து பார்க்க முடியாது. நம்மை வெளியே கொண்டு வந்து அறிய முடியாது. ஏனெனில் நாமே அதுவாக இருக்கிறோம். அதிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.
--
🌿 நாம் நம்மைவிட நன்றாக வேறு எந்தப் பொருளையும் அறிந்திருக்க முடியாது, நமது அறிவின் மையமே நாம்தானே.-
----
🌿 சுவாமி விவேகானந்தர் 🌿

No comments:

Post a Comment