Saturday, 31 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-32


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-32
(சுவாமி விவேகானந்தர்)
-
மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியச் சிந்தனையில் பல பிரிவுகள் இருந்திருக்கின்றன. இன்ன பிரிவினர் இன்ன கோட்பாட்டை நம்ப வேண்டும் என்றெல்லாம் வகுத்துத் தருவதற்கான அத்தாட்சி பெற்ற எந்தச் சங்கமோ அமைப்போ இல்லாததால், மக்கள் தங்களுக்குப் பிடித்த மதப் பிரிவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தங்களுக்கென்று சொந்தமாக ஒரு தத்துவத்தையும் மதப்பிரிவையும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் சுதந்திரம் இருந்தது. 
-
எனவே மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியா மதப் பிரிவுகளால் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். இப்போதுகூட எத்தனை நூறு மதப் பிரிவுகள் இந்தியாவில் இருக்கின்றன என்பதோ, ஆண்டுதோறும் எத்தனை புதிய பிரிவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன என்பதோ எனக்குத் தெரியாது. இந்தியாவின் மதப் பேரூற்று வற்றாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.
-
இந்தப் பல பிரிவுகளையும் இரண்டு தலைப்புகளின் கீழே கொண்டு வந்துவிடலாம். ஒன்று வைதீகம், மற்றொன்று அவைதீகம், அதாவது வைதீகம் அல்லாதது.
-
இந்துமத சாஸ்திரங்களான வேதங்கள் நிலையான அருள் வெளிப்பாடுகள் என்று நம்பும் பிரிவுகள் வைதீகமானவை. வேதங்களை மறுத்து, வேறு பிரமாணங்களைக் கொள்கின்ற பிரிவுகள் அவைதீகமானவை.
-
தற்கால அவைதீகப் பிரிவுகளில் முக்கியமானவை சமண மதமும் புத்த மதமுமே.
-
வைதீகப் பிரிவினருள் சிலர், பகுத்தறிவைவிட வேதங்களே உயர்ந்த பிரமாணங்கள் என்கிறார்கள். வேறு சிலர், சாஸ்திரங்களில் அறிவுபூர்வமானவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை விட்டுவிட வேண்டும் என்கிறார்கள்.
-
வைதீகப் பிரிவுகளுள் சாங்கியம், நையாயிகம், மீமாம்சகம் அல்லது வேதாந்தம் என்பவை முக்கியமான மூன்று ஆகும். இவற்றுள் முதலிரண்டும் தத்துவங்களுடன் நின்று விட்டனவே தவிர எந்த நெறிகளையும் அவை படைக்கவில்லை.
-
மீமாம்சகர் அல்லது வேதாந்திகளே இப்போது உண்மையில் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்ற ஒரே பிரிவினர். அவர்களுடைய தத்துவமே வேதாந்தம்.
-
இந்து மதத்திலுள்ள எல்லாத் தத்துவப் பிரிவுகளும் வேதாந்தம் அல்லது உபநிடதங்களிலிருந்தே தொடங்குகின்றன.
-
ஆனால் அத்வைதிகள் தங்களுக்கு, அந்தப் பெயரை ஒரு சிறப்புப் பெயராக வைத்துக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் வேதாந்தத்தைத் தவிர வேறு எந்த அடிப்படையிலும் அமைக்க விரும்பவில்லை. காலப்போக்கில் வேதாந்தம் மட்டும் வேரூன்றிவிட்டது.
-
இப்போது உள்ள இந்து மதப் பிரிவுகள் எல்லாமே வேதாந்தத்தின் ஏதாவது ஒரு நெறியுடன் தொடர்பு உடையனவாகவே இருக்கின்றன. இருந்தாலும் இந்தப் பிரிவுகளின் கருத்துக்களெல்லாம் ஒருமித்ததாக இல்லை.
-
தொடரும்...
-
-- விவேகானந்தர் விஜயம் --

No comments:

Post a Comment