Sunday 4 December 2016

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-11மாமிசம் உண்ணலாமா?

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-11
--
கேள்வி..... இறைவனை வழிபடும் பக்தர்கள் மாமிசம் உண்ணலாமா? சிலர் மாமிசம் உண்ணகூடாது என்கிறார்கள்.சிலர் மாமிசம் உண்ணலாம் என்கிறார்கள்.
---
சுவாமிஜி....குறிப்பிட்ட சில வகை உணவுகள் மனத்தில் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சில வகை உணவுகள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.நாளடைவில் மனத்தையும் பெருமளவு பாதிக்கின்றன.இதை நாம் அன்றாடம் காண்கிறோம்.நமது துன்பங்களில் கணிசமான அளவு,நாம் உண்ணும் உணவின் காரணமாகவே வருகிறது.
-
உணர்ச்சிகளை தூண்டக்கூடிய உணவை தவிர்க்க வேண்டும்.உதாரணமாக இறைச்சியை சொல்லலாம்.இயற்கையாகவே அது அசுத்தமானது.எனவே அதை உண்ணக்கூடாது.இன்னோர் உயிரைக் கொன்று தான் இறைச்சியைப்பெறுகிறோம்.உண்கின்ற அந்த ஒரு கணத்திற்கு நமக்கு இன்பம் கிடைக்கிறது.நமது இந்த கணநேர இன்பத்திற்காக ஒரு பிராணி தன் உயிரையே விட வேண்டியிருக்கிறது.கடின உழைப்பாளிகள் இறைச்சி உண்ணலாம், பக்தர்களாக விரும்புபவர்கள் இறைச்சி உண்ணக்கூடாது.
-
(குறிப்பு..பக்தர்கள் என்பவர்கள் சதாசர்வகாலமும் இறைவனை பற்றி மட்டுமே நினைப்பவர்கள்.எப்போதோ ஒரு நாள் இறைவனை நினைப்பவர்கள் பக்தர்கள் அல்ல)
-
complete works of swami vivekananda (தமிழ்) புத்தகம் 1.பக்கம் 242
-
கேள்வி... இறைச்சி உண்ணாமல் இருந்தால் போதுமா? அவனால் இறைவனை கண்டுவிட முடியுமா?
-
சுவாமிஜி.... பசு எங்கேயும் இறைச்சி சாப்பிடுவதில்லை,ஆடும் மாமிசம் சாப்பிடுவதில்லை,அதனால் அவைகள் யோகியாகிவிடுமா?அல்லது அகிம்சைவாதிகளாகிவிடுமா?
அதேபோல் இலை தளை காய்கறிகளை உண்டு வாழ்கின்ற மனிதன் மிருகங்களைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவனாகிவிட மாட்டான். மற்றவர்களை ஏமாற்றி,பணத்திற்காக எதையும் செய்ய துணிகின்ற ஒருவன் புல்லை மட்டுமே உண்டு வாழ்ந்தாலும் அவன் கொடிய மிருகத்தைவிட கேவலமானவன். 
--
மனத்தாலும் கூட யார் மற்றவர்களுக்கு தீங்கு செய்வதில்லையோ,பகைவனின் வளர்ச்சியை கண்டும் யார் மகிழ்கிறாறோ அவனே பக்தன்.அவன் அன்றாடம் பன்றி இறைச்சியை தின்று வாழ்ந்தாலும் அவனே அனைவருக்கும் குரு.
---
எனவே அகத்தூய்மை தான் முக்கியம்,உண்மையான ஆன்மீக சாரத்தை மறந்து,புறப்பழக்கங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு,எந்திரகதியில்,உணர்ச்சியில் செத்து,இரக்கமற்று வாழும் மனிதனின் நிலையும்,அவன் வாழும் நாடும் அய்யோ பாவம்!. உங்கள் புறபழக்கங்களால் அகவாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படாவிட்டால் அவற்றை இரக்கமின்றி அழித்துவிடுங்கள்.
-
சீடர்.., இறைச்சியையும் மீனையும் உண்டு வாழ்ந்தால் பாவம் வராதா? 
--
சுவாமிஜி..வேண்டிய அளவு சாப்பிடு என் மகனே! அதனால் பாவம் ஏதாவது வருமானால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். உன் நாட்டு மக்களை ஒருமுறை உற்றுப்பார்.அவர்கள் முகத்தில் எவ்வளவு வேதனையின் கீற்றுகள். நெஞ்சில் உரமோ துணிவோ இல்லாத நிலை! வயிறு மட்டும் பெரிதாக உள்ளது. கைகால்களிலோ பலம் இன்றி கிடக்கிறது. கோழைகள், ஆண்மையற்றவர்கள்.
---
சீடர்..இறைச்சியையும் மீனையும் சாப்பிடுவதால் நன்மை வருமானால் புத்த மதமும், வைணவமும் கொல்லாமை மிகச்சிறந்த பண்பு என்று ஏன் போதிக்கின்றன?
---
சுவாமிஜி....வைணவமும் பௌத்தமும் வெற்வேறு அல்ல.புத்தமதம் அழிந்துகொண்டிருந்த போது அதிலிருந்து இந்துமதம் சில முக்கிய கொள்கைகளை எடுத்துக்கொண்டது.அதில் கொல்லாமையும் ஒன்று. கொல்லாமை மிகச்சிறந்த பண்பு என்பது நல்லது தான். ஆனால் மக்களின் தகுதியை பார்க்காமல் எல்லோரும் இதை கடைபிடிக்கவேண்டும் என்று சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தியதால் இந்தியாவே நாசமாகிவிட்டது. விளைவு? அந்த தார்மீக கொக்குகள்(கொக்குகள் அஹிம்சாவாதிகள் போல் தண்ணீரில் ஒற்றைகாலில் நிற்கும்,சிறிய மீன்களை கண்டுகொள்ளாது,ஆனால் பெரிய மீன்களை லபக் என்று பிடித்துக்கொள்ளம்) நாள்தோறும் எறும்புகளுக்கு சர்க்கரை வைப்பார்கள்,அதே நேரத்தில் பணத்திற்காக சொந்த சகோதரனையே அழிக்க தயங்க மாட்டார்கள்.
---
சீடர்....வேதங்களிலும்,மனு போன்ற சாஸ்திரங்களிலும் மீனையும்,இறைச்சியையும் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதே!
---
சுவாமிஜி..ஆமாம்.சாப்பிடுவதற்கு மட்டுமல்ல,கொல்வதற்கும் தடை உள்ளது.
---
சீடர்..இப்போதெல்லாம் ஆன்மீக வாழ்வு என்று ஆரம்பித்த உடனே மீனையும் இறைச்சியையும் விட்டுவிடுகிறார்கள். பலருக்கு இவற்றை சாப்பிடுவது.விபச்சாரம் போன்ற பாதகங்களை விட மகாபாவமாக தெரிகிறது.இத்தகைய கருத்துக்கள் எங்கிருந்து தோன்றியது?
---
சுவாமிஜி..அவை எங்கிருந்து வந்தது என்று அறிந்துகொள்வதால் என்ன லாபம்? அத்தகைய கருத்துக்கள் நம் நாட்டையும் சமுதாயத்தையும் நாசமாக்கிக்கொண்டிருப்பதை நேரடியாகக் காண்கிறாயே!. கிழக்கு வங்காளத்தில் மீன் இறைச்சி,ஆமை முதலியவற்றை உண்கிறார்கள்,அதனால் மேற்கு வங்காளத்தை விடமக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.கிழக்கு வங்காளத்தில் அஜீரணகோளாறு இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
---
சீடர்..ஆம் சுவாமி எங்கள் பகுதியில்(கிழக்கு வங்காளத்தில்,தற்போது பங்ளாதேஷ்)அஜீரண நோய் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.இங்கே வந்த பிறகு தான் அதை பார்க்கிறேன்.நாங்கள் காலையிலும் இரவிலும் மீனும் சோறும் தான் சாப்பிடுவோம்.
---
சுவாமிஜி..நன்றாக சாப்பிடு, வெறும் காய்கறிகளை உண்டு,வயிற்று நோய் பிடித்த பாபாஜிக்கள் இந்த நாட்டில் பெருகிவிட்டார்கள். இது சத்வ குணத்தில் அடையாளம் அல்ல,மிதமிஞ்சிய தமோ குணத்தின் அடையாளம்.சோம்பல்,தூக்கம்,மந்தநிலை,மோகம் இவை தமோ குணத்தின் அடையாளங்கள்
---
சீடர்..மீனும் இறைச்சியும் மனிதனிடம் ரஜோ குணத்தை அதிகமாக்காதா?
(ரஜோ குணம் என்பது தீவிரமாக செயல்புரியும் மனநிலை)
---
சுவாமிஜி..நீங்கள் எல்லாம் அந்த ரஜோ குணத்தை பெற வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.இப்போது ராஜசம் தான் தேவைப்படுகிறது. சாத்வீக குணம்(அமைதியான மனநிலை) என்று நீ யாரையெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறாயோ அவர்களுள் தொண்ணுறு சதவீதம் பேர் ஆழ்ந்த தமோ குணத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள். இந்த நாடு முழுவதும் தமோ குணத்தில் மூழ்கிக்கிடப்பதை நீ பார்க்கவில்லையா?. இந்த நாட்டு மக்களை மீனும் இறைச்சியும் உண்ண வைத்து அவர்களை விழித்தெழ செய்ய வேண்டும், செயல்வீரர்களாக்க வேண்டும். இல்லையென்றால் ஜடங்களை போல மாறிவிடுவார்கள்.ஆகவே மகனே மீனையும் இறைச்சியையும் நன்றாக சாப்பிடு.
---
சீடர்..சத்வகுணம் முழுமையாகத் தோன்றுமானால் ஒருவரால் மீனையும் இறைச்சியையும் விரும்ப முடியுமா?
---
சுவாமிஜி..முடியாது. விரும்ப முடியாது. உண்மையான சாத்வீக குணம் தோன்றும் போது மீன் இறைச்சி இவைகள் மீது உள்ள ஆசைகள் எல்லாம் மறைந்துவிடும். ஆனால் சத்வகுணம் தோன்றும் போது பிறருக்காக அனைத்தையும் தியாகம் செய்தல், காமம் மற்றும் பணத்தாசை முற்றிலும் இல்லாதிருத்தல்,கர்வமின்மை,அகங்காரமின்மை ஆகியவை உண்டாகியிருக்கும். இதையும் நீ கவனிக்க வேண்டும். இத்தகைய குணங்கள் இல்லாமல் அஹிம்சை அஹிம்சை என்று ஒருவன் சொல்லித்திரிந்தால் அவன் அயோக்கியன்,ஏமாற்றுக்காரன் என்று தெரிந்துகொள். நீயும் சத்தவகுணம் நிறைந்தவனாகும்போது மீனும் இறைச்சியும் சாப்பிடுவதை முழுமையாக விட்டுவிடு.
--
complete works of swami vivekananda (தமிழ்) புத்தகம் 6.பக்கம் 173
----
முடிவு....சுவாமிஜி இங்கு கூறிய கருத்தின் சாரம் இது தான். இறைவனை நோக்கி செல்பவர்களை இரண்டாக பிரிக்கிறார். ஒரு பிரிவினர் உடலுக்கு தீங்குவிளைவிக்கும் இறைச்சி உட்பட சில உணவுகளை தவிர்ப்பதிலிருந்து தங்கள் பயணத்தை தொடங்குகிறார்கள்.முதலில் உடல்தூய்மை அடுத்தது மனத்தூய்மை. இரண்டாவது வகையினர் முதலில் மனத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள்.இவர்கள் ஆரம்பத்தில் இறைச்சி உட்பட எந்த உணவையும் தவிர்க்கவில்லை,ஆனால் மனத்தை பண்படுத்துகின்றனர்,மனத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறார்கள்,படிப்படியாக ராஜச உணவான இறைச்சியை விட்டுவிட்டு உடலை தூய்மைப்படுத்தும் சாத்விக உணவை உட்கொள்கிறார்கள்...மகான்களைப்பொறுத்தவரை இறைச்சியை உண்டு வாழ்ந்தவர்களும் மகான்களாகியிருக்கிறார்கள்(ராமகிருஷ்ணர்,விவேகானந்தர் இன்னும் பலர்).இறைச்சியை உண்ணாதவர்களும் மகான்களாகியிருக்கிறார்கள்.(பலரை சொல்லலாம்)
--
---விவேகானந்தர் விஜயம்--- சுவாமி வித்யானந்தர் 97 89 37 41 09

No comments:

Post a Comment