Monday, 19 December 2016

வேதாந்த விளக்கம்-சுவாமி விவேகானந்தர்-பகுதி-23

வேதாந்த விளக்கம்-சுவாமி விவேகானந்தர்-பகுதி-23
-
ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா....(சுவேதாஸ்வதர உபநிடதம்.2.5,3.8)
-
” மரணமிலாப் பெருநிலையின் குழந்தைகளே உயர்ந்த உலகங்களில் வசிப்பவர்களே! கேளுங்கள். நான் வழியைக் கண்டுபிடித்துவிட்டேன். இருளுக்கு அப்பால் ஒளிவீசும் அவனை அறிவதன் மூலம் மரணத்தை நாம் வென்றுவிடலாம்”
-
ஏறக்குறைய மதங்கள் எல்லாமே இந்த இயற்கையைக் கடந்து செல்லும் முயற்சிதான். அவை வளர்ச்சி அடையாதவையாகவோ மிகவும் வளர்ச்சி அடைந்தவையாகவோ இருக்கலாம். 
-
அறிந்தோ அறியாமலோ தான் கட்டுப்பட்டிருப்பதை மனிதன் உணர்கிறான். அவன் என்னவாக இருக்க விரும்புகிறானோ, அப்படி அவன் இல்லை. தன்னைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கிய உடனேயே, அது அவனுக்குத் தெரிந்துவிடுகிறது. அந்தக் கணத்திலேயே தான் கட்டுப்பட்டிருப்பதை அவன் உணர்கிறான், தன் உடல் போக முடியாத எல்லையற்ற நிலைக்கு, தனக்கு உள்ளே உள்ள ஏதோ ஒன்று பறந்து போக விரும்புகிறது என்பதையும் அதன்கூடவே உணர்கிறான். அந்த ஏதோ ஒன்று, உடல் என்ற எல்லைக்குள் உட்பட்டிருப்பதும் அவனுக்குத் தெரிகிறது. 
-
முன்னோர் வழிபாடு உள்ளது. அதனுடன் ஆவி வழிபாட்டையும் காண்கிறோம். ஆவிகள் மிகவும் கொடூரமானவை, தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை. உற்றார் உறவினரின் வீடுகளை எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பவை, ரத்தத்தையும் மதுவகைகளையும் மிகவும் விரும்புபவை என்றெல்லாம் கருதி, அவற்றையும் வழிபட்டனர். மதக் கருத்துக்களில், மிகத் தாழ்ந்த இவற்றில் கூட முக்தி, சுதந்திரம் பெறுவது என்ற நோக்கமே அடிப்படையாக இருப்பதை நாம் காண்கிறோம்.
-
தேவதைகளை வழிபட விரும்பும் மனிதன், தன்னைவிட அந்தக் தேவதைகள் அதிக சுதந்திரம் பெற்றிருப்பதைக் காண்கிறான். மூடிய கதவுகளும் சுவர்களும்கூட அவர்களைத் தடை செய்ய முடியாது என்று கருதுகிறான். 
-
சுதந்திரத்தைப் பற்றிய கருத்து வளர்ந்து கொண்டே போய் சகுணக்கடவுள் லட்சியத்தில் நிறைவடைகிறது. இயற்கையின் எல்லைகளைக் கடந்து நிற்பவர், மாயைக்கு அப்பாலுள்ள ஒருவர் அவரே சகுனக் கடவுள். 
-
இந்தியாவின் அடர்ந்த காடுகளுக்கு நடுவே பழங்கால ரிஷிகள் இந்தப் பிரச்சினையை அலசி ஆராய்வதை என் கண்முன் காண்பதுபோல் காண்கிறேன். அப்படிப்பட்ட ஓரிடத்தில், கூடியிருந்த ரிஷிகள் கூட்டத்தில், மிகவும் வயதானவர்களாலும் புனிதமானவர்களாலும்கூடக் கண்டுபிடிக்க முடியாத தீர்வை ஓர் இளைஞன் கண்டுபிடித்து விடுகிறான். 
-
அவன் எழுந்து
” மரணமிலாப் பெருநிலையின் குழந்தைகளே உயர்ந்த உலகங்களில் வசிப்பவர்களே! கேளுங்கள். நான் வழியைக் கண்டுபிடித்துவிட்டேன். இருளுக்கு அப்பால் ஒளிவீசும் அவனை அறிவதன் மூலம் மரணத்தை நாம் வென்றுவிடலாம் ”என்று முழங்குகிறான்.
-
இயற்கைக்குத் துணைபுரிய நாம் பிறக்கவில்லை இயற்கையுடன் போட்டியிடவே நாம் பிறந்திருக்கிறோம். நாம் இயற்கையின் எஜமானர்கள்; ஆனால் இயற்கைக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறோம். 
-
இந்த வீடு எப்படி இங்கு வந்தது? இயற்கை இதைக் கட்டவில்லை. போ, போய் காட்டில் வாழ் என்றுதான் இயற்கை சொல்கிறது. ஆனால் மனிதனோ, நான் ஒரு வீட்டைக் கட்டி, இயற்கையுடன் போராடுவேன் என்கிறான்; அப்படியே செய்யவும் செய்கிறான்; மனித வரலாறே இயற்கையின் விதிகள் என்று கூறப்படுபவைகளோடு, மனிதன் நடத்தும் தொடர்ந்த போராட்டம்தான், கடைசியில் மனிதனே வெல்லவும் செய்கிறான். 
-
அகவுலகிற்கு வந்தால், அங்கேயும் போராட்டமே நடந்துகொண்டு இருக்கிறது. மிருக மனிதனுக்கும் ஆன்மீக மனிதனுக்கும், இருளுக்கும் ஒளிக்கும் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. இங்கும் மனிதன் தான் வெற்றி பெறுகிறான். இயற்கையின் வழியாகவே பாதையை ஏற்படுத்தி அவன் முக்தி பெற்று விடுகிறான். 
-
ஆகவே மாயைக்குக் கட்டுப்படாமல் மாயையைக் கடந்து நிற்கும் ஏதோ ஒன்றை வேதாந்தத் தத்துவ ஞானிகள் உணர்ந்திருக்கிறார்கள். நாமும் அந்த நிலையை அடைய முடிந்தால், மாயையில் கட்டுப்பட மாட்டோம்.
-
--
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்249

No comments:

Post a Comment