Tuesday, 13 December 2016

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-1-5

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-1
-
தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது. இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது.ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி கொள்கைவெறியை வளர்க்கிறது, சில நேரங்களில் அந்த வெறி எல்லை கடந்து போய்விடுகிறது. மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-
மூட நம்பிக்கை நிறைந்த பழமையான வைதீகமாகிய மலைக்கும், உள்ளீடற்ற, சீர்திருத்தம் என்று சொல்லப்படுகின்ற, மேலை நாட்டு வளர்ச்சியின் அடித்தளம் முழுவதிலும் ஊடுருவிப் பாய்ந்திருடக்கின்ற ஐரோப்பாவின் உலகாயதம் என்னும் ஆழ்கடலுக்கும் இடையே நமக்குரிய பாதையை நாம் கண்டாக வேண்டும்.
-
சுவாமி விவேகானந்தர் மதுரையில் பேசியது

--
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-2
-
ஒவ்வொரு சின்னஞ்சிறு கிராம தேவதைகளையும், மூடநம்பிக்கையில் தோய்ந்த சாதாரணமான பழக்க வழக்கங்களையும்தான் நாம் மதம் என்று அழைத்து பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. வட்டாரப் பழக்கங்கள் கணக்கற்றவை, ஒன்றுக்கொன்று முரணானவை. இவற்றுள் நாம் எதை ஏற்றுக் கொள்வது, எதை தள்ளுவது? உதாரணமாக, ஒரு பிராமணன் இறைச்சி உண்பதைக் கண்டால் தென்னிந்திய பிராமணன், குலைநடுங்கிப் போய்விடுவான், ஆனால் அதையே வட இந்திய பிராமணன் மிகவும் பெருமைக்குரியதாக, புனிதமானதாகக் கருதுகிறான் - யாகத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகளைப் பலியிடுபவன் அவன். இப்படி உங்கள் பழக்கம் சிறந்தது என்று நீங்கள் சொன்னால், தங்கள் பழக்கங்களே சிறந்தவை என்று காட்ட பலர் தயாராக உள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள பழக்க வழக்கங்கள் பல்வேறானவை. ஆனால் அவை வட்டார வழக்கங்களே. இந்த வட்டார வழக்கங்கள்தாம் நமது மதத்தின் சாரம் என்றே பாமர மக்கள் எண்ணிவருகிறார்கள். இது பெருந்தவறாகும்
--
சுவாமி விவேகானந்தர் மதுரையில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

--
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-3
-
நமது சாஸ்திரங்கள் இரண்டு வகையான உண்மைகளைக் கூறுகின்றன.
-
ஒன்று, மனிதனின் அழியாத இயல்பை அடிப் படையாகக் கொண்டது; இறைவன் ஆன்மா, இயற்கை - இவற்றுக்கிடையிலான மாறாத உறவைப்பற்றி ஆராய்கிறது. 
-
மற்றொன்று, வட்டாரச் சூழ்நிலைகள், காலச் சூழ்நிலைகள், குறிப்பிட்ட அந்தக் காலத்தின் சமுதாய அமைப்புகள் முதலியவற்றைப் பற்றிய தாக உள்ளது.
-
முதல்வகை உண்மைகள் பெரும்பாலும் நமது சாஸ்திரங்களான
வேதங்களில் கூறப்பட்டுள்ளன.
-
இரண்டாவது வகை, ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும் கூறப்படுகின்றன.எல்லா காலங்களுக்கும் வேதங்களே இறுதியான லட்சியம், முடிவான அதிகாரம் உள்ளவை என்பவை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எதிலாவது புராணங்கள் வேதங்களிலிருந்து மாறுபடுமானால் புராணத்தின் அந்தப் பகுதியை இரக்கமின்றி ஒதுக்கிவிட வேண்டும்.
-
மனிதனின் இயல்பை அடிப்படையாகக் கொண்ட ( வேதங்கள்) இந்த நிரந்தர உண்மைகள் மகத்தான கொள்கைகளுள் ஒன்றாகும். மனிதனின் இயல்பை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் மனிதன் வாழும்வரை இந்த உண்மைகளும் மாறவே மாறாது. அவை எல்லா காலங்களுக்கும் உரியவை, எல்லா இடங்களுக்கும் பொதுவானவை, உலகம் தழுவியவை.
-
ஆனால் ஸ்மிருதிகள் பொதுவாக வட்டாரச் சூழ்நிலைகளையும், அங்கு நிலவுகின்ற பல்வேறான சூழ்நிலைகளின் காரணமாக எழுகின்ற கடமைகளைப் பற்றியுமே கூறுகின்றன. இவை கால ஓட்டத்தில் மாறுதல்களுக்கு உள்ளாகின்றன. ஆனால் ஏதோ ஒரு சிறிய சமுதாய வழக்கம் மாறுவதால் உங்கள் மதமே அழிந்துவிடப் போவதில்லை, அப்படி ஒரு போதும் நடக்காது. இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
--
--
சுவாமி விவேகானந்தர் மதுரையில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

--
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-4
-
மாட்டிறைச்சி தின்னாத பிராமணன், பிராமணனே அல்ல என்று கருதப்பட்ட காலம் ஒன்று முன்பு இதே இந்தியாவில் இருந்தது. சன்னியாசியோ அரசனோ அல்லது யாராவது மகானோ வீட்டுக்கு வந்தால் ஆடும் காளையும் கொல்லப்பட்ட விவரங்களையும், ஆனால் பயிர்த்தொழில் செய்யும் இனமாகிய நாம், மிகச்சிறந்த காளைகளைக் கொல்வது இறுதியில் நம் இனத்தின் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதைக் காலப்போக்கில் உணர்ந்து கொண்டதையும் நாம் வேதங்களில் படிக்கிறோம். எனவே பசு வதைக்கும் எதிராகக் குரல்கள்எழுந்தன ; அந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.
-
கொடிய வழக்கங்கள் என்று இப்போது நாம் கருதுகின்ற பல பழக்கங்கள் முன்பு சமுதாயத்தில் நிலவியதையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் பார்க்க முடிகிறது. காலப்போக்கில் வேறு விதிகளை உருவாக்க நேர்ந்தது. இந்த விதிகளும் காலப்போக்கில் மறையும். உடனே புதிய விதிகள் தோன்றவும் செய்யும்.எனவே ஸ்மிருதிகள் காலத்திற்குக் காலம் மாறுபவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்
-
காலம் செல்லச்செல்ல ஸ்மிருதிகளில் கூறப்பட்ட விதிகள் மறைந்து கொண்டே போகும். மகான்கள் வருவார்கள்.அவர்கள் சமுதாயத்தை மாற்றி,இன்னும் நல்ல பாதைகளிலும் காலத்திற்குத் தேவையான கடமைகளிலும் வழிகளிலும் சமுதாயத்தைச் செலுத்துவார்கள். இத்தகைய நிலை இல்லையெனில் சமுதாயம் வாழ்வது என்பது முடியாமல் போய்விடும்
--
சுவாமி விவேகானந்தர் மதுரையில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

--
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-5
-
கொள்கைவெறியரின் தீவிரமும் லௌகீகரின் பரந்த நோக்கும் வேண்டுமென்று விரும்புகிறேன். கடல்போல் ஆழ்ந்து, எல்லையற்ற வானம் போல் விரிந்துள்ள இதயமே நமக்கு வேண்டும். உலகிலுள்ள வேறெந்த நாட்டினரைவிடவும் முற்போக்குடன் இருப்போம்; அதேவேளையில் நாம் நமது பரம்பரைப் பண்பில் நம்பிக்கையுடனும் பற்றுடனும் மாறாமல் நிலைத்தருப்போம். எவ்வாறு இப்படி இருப்பது என்பது இந்துக்களுக்குத் தான் தெரியும்.
-
இதை தெளிவான வார்த்தைகளில் சொல்வதென்றால், நாம் ஒவ்வொன்றிலும் முக்கியம் மற்றும் முக்கியமற்ற பகுதிகளுக்கு இடையிலுள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமானவை என்றும் இருப்பவை. முக்கியமற்றவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுபவை; அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நீக்கப்பட்டு, முக்கிய மானவற்றால் நிரப்பப்படவில்லை என்றால், கட்டாயமாக அவை ஆபத்தானவையாகிவிடும்.
-
உடனே நீங்க ளெல்லாம் எழுந்து நின்று, உங்கள் பழங்கால வழக்கங்களையும் அமைப்புகளையும் தூற்ற வேண்டும் என்று நான் சொல்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள்.நான் சொல்வது அது அல்லவே அல்ல. அவற்றுள் மிகவும் தீய ஒன்றைக் கூட நிந்திக்காதீர்கள், எதையும் தூற்றாதீர்கள்
-
இன்று மிகக் கொடிய ஒன்றாகத் தோன்றுகின்ற பழக்கங்கள், கடந்த காலத்தில் வாழ்வை வளப்படுத்திய பழக்கங்களாக இருந்திருக்கும். அவற்றை நாம் நீக்க நேருமானால் கூட சபித்துக் கொண்டே நீக்கக் கூடாது. நம் இனம் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக, கடந்த காலத்தில் அவை செய்த மகத்தான காரியங்களுக்காக அவைகளை வாழ்த்தியும் அவைகளிடம் நன்றியுணர்வுடனும் நீக்க வேண்டும்.
-
சுவாமி விவேகானந்தர் மதுரையில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---


--

No comments:

Post a Comment