Monday, 19 December 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 60

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 60
---
ஒரு நாள் சுவாமி விவேகானந்தரும்,சுவாமி சிவானந்தரும்(சகோதர துறவி) ஒரு பெரிய கொசுவலையினுள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
-
தூக்கத்தின் இடையில் சிவானந்தர் கண்விழித்து பார்த்தபோது கொசுவலைக்கு வெளியே சிவபெருமானைப்போன்ற தோற்றம் கொண்ட சிறிய உருவத்தில் பலர் தியானத்தில் அமர்ந்திருந்தார்கள்.அவர்கள் கையில் திரிசூலம் இருந்தது. அவர்கள் உடம்பிலிருந்தும் திரிசூலத்திலிருந்தும் ஒளிவெள்ளம் பாய்ந்து பரவியிருந்தது.இது ஏதோ பிரம்மையாக இருக்கும் என்று சிவானந்தர் நினைத்து,கண்களை கசக்கிப்பார்த்தார்.இல்லை.இது பிரம்மை இல்லை.அவர்கள் உண்மையிலேயே அமர்ந்திருப்பதை பார்த்தார்.அவர்கள் யார் ஏன் இவ்வாறு இங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் சுவாமி விவேகானந்தரை எழுப்பினார்.அவர்களை சுட்டிக்காட்டினார்.ஆனால் சுவாமிஜி அந்த நிகழ்ச்சியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.பதில் ஏதும் கூறாமல் திரும்பிப்படுத்தார்.சிவானந்தரையும் படுக்கும் படி சைகைகாட்டி படுத்துக்கொண்டார்.இவர்களை பற்றிய சிந்தனையில் இரவு முழுவதும் சிவானந்தர் விழித்திருந்தார்.
-
காலையில் மீண்டும் சுவாமிஜியிடம் இது பற்றி கேட்டார். சுவாமிஜி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.அவர்களா! அவர்கள் பைரவர்கள்,சிவபெருமானின் பாதுகாவலர்கள்.சிறுவயதிலிருந்து இவர்கள் இவ்வாறு என்னை காத்துவருகிறார்கள் என்றார்.
-
ஒரு நாள் அதிகாலையில் சுவாமிஜி ஸ்ரீராமகிருஷ்ணரின் கோவிலுக்கு அருகில் நடந்துகொண்டிருந்தார்.ஆஞ்சநேயரைப்பற்றிய ஒரு ஸ்லோகத்தின் கர்ஜந்தம் ராமராமேதி...என்ற வரியை மென்மையான குரலில் கூறியபடியே நடந்துகொண்டிருந்தார்.அப்போது அவரே ராமரையும் சீதையையும் காக்கும் ஆஞ்சநேயரைப்போல தன்னை நினத்துக்கொண்டார். இந்த நிகழ்வுகளை மன்மதநாத் கங்குலி என்னும் பக்தர் கவனித்துக்கொண்டிருந்தார்.
-
சிறிது நேரத்தில் சுவாமிஜியின் நடையில் வேகம் கூடியது.மூச்சு மிகவும் கனமாக வந்தது. கைகளை கட்டிபடியே அவர் அதே வேகத்தில் நடந்துகொண்டிருந்தார். திடீரென்று இரண்டு கைகளையும் உயர்த்தி, “என்னால் சூரிய சந்திரர்களின் பயணத்தை தடுத்துவிட முடியும்” என்று உரத்த குரலில் கூறினார்.
அது ஒரு அற்புதமான காட்சி சுவாமிஜி நினைத்தால் அவரால் எதுவும் செய்ய முடியும் என்று தனது குறிப்பேட்டில் மன்மதநாத் கங்குலி எழுதினார்.
-
தொடரும்....
-
----விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment