Monday, 19 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-2


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-2
(சுவாமி விவேகானந்தர்)
-
நாம் பிறந்த இந்து மதத்தின் பொது அடிப்படைகளைப் பார்ப்போம்.
-
1.வேதங்கள்
-
எந்த மதத்திற்கு, தனக்கென ஒன்றோ,பலவோ சாஸ்திரங்கள் அடிப்படையாக உள்ளனவோ,அது விரைவாக வளர்ச்சி காண்கிறது.இன்றளவும் நிலைத்து நிற்கிறது.
-
கிரேக்க மதம் ஒருகாலத்தில் எவ்வளவோ சிறப்புடையதாக இருந்தது.ஆனால் அதற்கென்று மதசாஸ்திரங்கள் இல்லாததால் அழிந்து போனது. யூதர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தாலும்,அவர்களுக்கென்று இருக்கும் பழையஏற்பாடு அவர்களை ஒன்றிணைக்கிறது.
-
இந்து மதத்திற்கும் மிகப்பழைய சாஸ்திரமான வேதங்கள் இருக்கின்றன. இந்துமதத்தை இன்றளவும் வாழவைத்துக்கொண்டிருப்பது வேதங்களே.(வேதம் என்றால் அறிவு என்று பொருள்)
-
வேதங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று கர்மகாண்டம் மற்றொன்று ஞானகாண்டம். கர்மகாண்டம் இன்று இந்தியாவில் திருமணம்,சிரார்த்தம் போன்ற சில நிகழ்வுகளில் கடைபிடிக்கப்பட்டாலும்,முன்பு போல அதன் ஆதிக்கம் இல்லை.
-
வேதங்களின் ஞான காண்டம் உபநிடதங்களைக்கொண்டது. இது வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. நமது ஆச்சார்யர்கள் வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டும்போது உபநிடதங்களையே கையாண்டிருக்கிறார்கள். தற்போது இந்த உபநிடதங்களே அதாவது வேதாந்தமே இந்துக்களின் மதம். நமது மதப்பிரிவுகள் அனைத்தும் இந்த வேதாந்தத்திற்குள் அடங்கிவிடுகிறது.
-
வேதங்கள் மனிதர்களால் என்றோ ஒருநாள் எழுதப்பட்ட நூல்கள் அல்ல. அவை எல்லையற்ற ஞானத்தின் தொகுப்பு. அவை சிலகாலம் வெளிப்படும் சிலகாலம் வெளிப்படாமலும் இருக்கும். இறைவன் வேதங்களின் துணையாலேயே பிரபஞ்சத்தை படைத்தார்.பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பே வேதங்கள் இருக்கின்றன. வேதங்கள் முழுவதையும் யாராலும் தொகுக்க முடியாது. அவை எல்லையற்றவை. ரிஷிகள் என்பவர்கள் வேத மந்திரங்களை கண்டுபிடித்தவர்கள்.
-
ரிஷிகள் எல்லையற்ற காலம் முதல் இருந்துவரும் வேதங்களை நேருக்கு நேராக உணர்ந்தவர்கள் அவ்வளவுதான். ரிஷிகள் வேதங்களை உருவாக்கவில்லை,
-
ரிஷிகள் என்பவர்கள் யார்? இறைவனை நேருக்கு நேர் கண்டவர்கள்,தர்மத்தின் நேரடி அனுபவம் பெற்றவர்கள் ரிஷி. ரிஷிகள் ஜாதி,இனம் போன்ற குறுகிய எல்லைகளை கடந்தவர்கள்.
வேதத்தின்மீது எல்லோருக்கும் சம உரிமை உள்ளது.(சுக்லயஜுர்வேதம்26.2)வேதம் ஒரு குறிப்பிட பிரிவினருக்கு மட்டும் உரிமையானது என்று சொல்வது தவறு.
-
தொடரும்..
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்5பக்கம்423
--விவேகானந்தர் விஜயம்--சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment