Saturday, 31 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-34



இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-34
(சுவாமி விவேகானந்தர்)
-
வேதாந்தம் மூன்று படிகளை உடையது 
-
1.துவைதம்,2.விசிஷ்டாத்வைதம்,3.அத்வைதம்
துவைதம் எனப்படுகின்ற வேதாந்தப் பிரிவைப் பற்றித் தான் நான் முதலில் உங்களிடம் பேசப் போகிறேன்.
-
பிரபஞ்சத்தைப் படைத்து அதை ஆள்பவரான கடவுள், இயற்கையிலிருந்தும் மனித ஆன்மாவிலிருந்தும் என்றென்றைக்குமாக வேறுபட்டவர் என்று துவைதிகள் நம்புகிறார்கள்.
-
கடவுள் என்றென்றும் இருப்பவர், இயற்கையும் என்றென்றும் இருப்பது, ஆன்மாக்களும் அப்படியே.
-
இயற்கையும் ஆன்மாக்களும் தங்களை வெளிப்படுத்துகின்றன. மாற்றமடைகின்றன. ஆனால் கடவுள் மாறுவதில்லை; எப்போதும் ஒருபோலவே இருக்கிறார்.
-
கடவுள் சகுணமானவர்(சகலகுணங்களும் உள்ளவர்); ஆனால் உடல் உள்ளவர் என்பதல்ல.(மனிதனைப்போல உடல் உள்ளவரல்ல)
-
அவருக்கு மனிதக் குணங்களெல்லாம் உள்ளன. அவர் கருணைமயமானவர், நியாயமானவர், சக்தி வாய்ந்தவர், சர்வ வல்லமை படைத்தவர், அவரை நாம் அணுக முடியும், பிரார்த்தனை செய்ய முடியும், அவரிடம் அன்பு செலுத்த முடியும், பிரதியாக அவரும் நம்மீது அன்பு செலுத்துகிறார் என்பனவெல்லாம் துவைதிகளின் கடவுள் பற்றிய கருத்துக்களாகும்.
-
ஒரே வார்த்தையில் சொல்லப்போனால், அவர் மனிதக் கடவுள். ஆனால் மனிதனைவிடப் பன்மடங்கு உயர்ந்தவர்.
-
மனிதர்களிடமுள்ள தீய குணங்கள் எதுவும் அவரிடமில்லை. எல்லையற்ற நற்குணக் களஞ்சியமே கடவுள் என்பதுதான் கடவுளைப்பற்றி துவைதிகளின் விளக்கம்.
-
(ஒரு பொருளை உருவாக்க மூலப்பொருள் ஏதாவது வேண்டும். அதேபோல் பிரபஞ்சத்தை படைக்க மூலப்பொருள் தேவை. ஒன்றும் இல்லாத சூன்யத்திலிருந்து எதையும் உருவாக்க முடியாது.இது தற்கால விஞ்ஞானம்)
-
மூலப் பொருட்கள் இல்லாமல் அவரால் படைக்க முடியாது. அந்த மூலப்பொருள் இயற்கை. அதைக்கொண்டே அவர் பிரபஞ்சம் முழுவதையும் படைக்கிறார்.
-
வேதாந்தத் துவைதிகளின் கருத்துப் படி, வேறுபாடில்லாமல், எங்கும் ஒரே போல் இருக்கும் இயற்கையிலிருந்துதான் கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார்.
-
இந்தியர்களில் பெரும்பான்மையோர் துவைதிகளே. சாதாரணமாக மனித இயல்பு உயர்ந்த எதையும் புரிந்து கொள்ளாது. மத நம்பிக்கை உள்ள உலக மக்களுள் நூற்றுக்குத் தொண்ணூறுபேர் துவைதிகளாக இருப்பதையே காண்கிறோம்.
-
தொடரும்...
-
-- விவேகானந்தர் விஜயம் --

No comments:

Post a Comment